மரு.இரா.கவுதமன்
சிக்கல்கள் (Complications):
இரைப்பை அழற்சியில், மருத்துவம் சிறந்த பயனைத் தரும். மருத்துவம் செய்யாமல் புறக்கணித்தால்தான் பலவிதச் சிக்கல்கள் ஏற்படும். அழற்சி அப்படியே நீடித்தால் நாளடைவில் இரைப்பையில் புண்கள் (Ulcers) ஏற்படும். அந்தப் புண்களிலிருந்து இரத்தக் கசிவு உண்டாகும். அழற்சியினால் உண்டாகும் வாந்தியோடு இரத்தம் வரும் (Hematemesis). உணவோடு இரத்தமும் கலந்து, சிறு குடலுக்குச் செல்வதால், உணவு செரித்த பின், மலமாக மாறி வெளியேறும்பொழுது, மலம் கருமையாக வெளியேறும். நாளடைவில் புண்கள், இரைப்பைப் புற்று நோயாக மாறும் நிலையும் ஏற்படும். அதுபோன்ற நிலையில் உணவு முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. இரைப்பைச் சுவர்கள் மிகவும் மெலிதாகி விடும். நொதியச் சுரப்பிகள் சிதைந்து விடும். உணவு சரியாகச் செரிக்காது. உணவும், உடல் செயல்பாட்டிற்குத் தேவையான அளவு கிடைக்காத நிலையில் உடலின் எல்லா உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, செயல்திறன் குறைபாடு ஏற்படும். அதனால் உடல் நலிவுறும், மெலியும். இதனால் களைப்பு, நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration) போன்றவை ஏற்பட்டு முழுமையாக இயக்கம் குறைந்துவிடும். நோயாளியை இந்த நிலையில் சீராக்கி, இயல்பு நிலைக்குத் திரும்பக் கொண்டு வருதல் இயலாத நிலையை உண்டாக்கிவிடும். மிகவும் வலியும், தொல்லையும் கூடிய மரணமே முடிவாகிவிடும்.
நோயறிதல்: பெரும்பாலும் அறிகுறிகளை வைத்தே, மருத்துவர்கள் நோயையும், அதன் நிலைப்பாட்டையும் எளிதில் கண்டுவிடுவர். ஆனால், மேலும் துல்லியமாகச் சில சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்துவர்.
¨ ஹெச். பைலோரி (H.Pylori) சோதனை: இந்த நுண்கிருமி உள்ளதா எனும் அறியும் சோதனை இது. இரத்தப் பரிசோதனை, மலப் பரிசோதனை, மூச்சுப் பரிசோதனை மூலம் இக்கிருமிகளின் இருப்பை எளிதில் அறியலாம். (மூச்சுப் பரிசோதனையில் நீரில், ஊடுகதிர் கரி (Radio active carbon) கலந்து குடிக்கச் செய்வர். ஹெச். பைலோரி கிருமிகள் கரியைத் தனியே பிரித்துவிடும். அது காற்று வழியே வெளியேறும். நோயாளி ஒரு பையில் மூச்சை வெளியிட வேண்டும். அதில் ஊடுகதிர் கரி இருக்கும். அப்படி இருப்பின் ஹெச். பைலோரி கிருமிகள் இருப்பு உறுதி செய்யப்படும்.
உள்நோக்கி சோதனை (Endoscopy):
வாய் வழியே ஒரு சிறிய குழாய் தொண்டை வழியே செலுத்தப்படும். அக்குழாயில் ஒரு சிறிய விளக்கும், படம் எடுக்கும் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். உணவுக்குழாய், இரைப்பை, மேல் சிறுகுடல் போன்ற உறுப்புகளை முழுமையாக உள்நோக்கி மூலம் காண முடியும். உணவுக்குழாய் சுருக்குத் தசை (Sphincter)கள், இரைப்பைச் சுவரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புண்கள், கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகிவற்றை தெளிவாகக் காணலாம். எந்தப் பகுதியிலாவது, புற்றுநோயைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டால், சிறிதளவு சதையைக் கூட சோதனை செய்ய இக்கருவி மூலமே எடுக்க முடியும்.
பேரியம் (Barium) படப்பிடிப்பு:
இயல்பாக ஊடுகதிர் நிழற் படங்களில் தசைகள் தெரியாது. எலும்புகளை மட்டுமே பார்க்க முடியும். அதனால் ‘பேரியம்’ என்னும் தனிமத் தூளை நீரில் கரைத்து, குடிக்கச் செய்வர். பிறகு நிழற்படம் எடுப்பர். உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் வரை பேரியம் செல்லும். உணவுப் பாதையில் எங்காவது குறைபாடு இருப்பின் நிழற்படத்தில் தெளிவாகத் தெரியும். இரைப்பையில் புண்கள் இருந்தால், இரைப்பைச் சுவர்களில் மென்மையாக இல்லாமல், அரித்து இருப்பது போலத் தோன்றும். கட்டிகளோ, புற்றுக் கட்டிகளோ இருந்தால் பேரியம் நிரம்பும்; குறைபாடு (Filling defect) தெரியும்.
பொதுவாக மேற்கண்ட சோதனைகள் மூலம், நோயின் அளவு, தன்மை, பாதிப்பு ஆகியவற்றைத் துல்லியமாக அறிய முடியும். இச்சோதனையின் தன்மைக்கேற்ப, மருத்துவம் செய்யும் முறைகளை மருத்துவர்கள் முடிவு செய்வர்.
மருத்துவம்:
இரைப்பை அழற்சிக்கான மருத்துவம் நோயின் அறிகுறிகளையும், நோயின் தீவிரத்தையும் பொறுத்தே அமையும். பெரும்பாலான நோயாளிகள் மருந்துக் கடைகளிலேயே மருந்து வாங்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். இது மிகவும் தவறான பழக்கம். மருத்துவர்கள் அறிவுரையின்படியே மருந்துகள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள்தான் நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றை அறிந்து, அதற்கேற்ப மருத்துவம் செய்வர்.
1. உணவுக் கட்டுப்பாடு: காரமான உணவுகளை அறவே தவிர்க்கவும். அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
2. புகைப் பிடித்தலை முழுமையாக நிறுத்த வேண்டும்.
3. மதுப் பழக்கத்தையும் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
4. இரைப்பையில் அழற்சி ஏற்படுத்தும், லேக்டோஸ் உள்ள உணவுகளையும், ‘குளுடென்’ உள்ள உணவுப் பொருள்கள் (கோதுமை) தவிர்த்தல் நலம்.
5. உணவு உண்ணும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
6. எக்ஸ்ரே கதிர் வீச்சு, நச்சுப் பொருள்கள், வேதிப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
7. அமிலத் தன்மை கூட்டும் உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
(எ.கா: எலுமிச்சைச் சாறு)
8. வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்.
9. மன உளைச்சல் (Stress) ஏற்படாமல், மன நலம் காக்க வேண்டும்.
10. உணவுப் பழக்க மாறுபாடுகள், இரைப்பை அழற்சியை தவிர்க்கும். இஞ்சித் தேநீர், தேனுடன் கலந்து உண்பது நலன் பயக்கும். வெங்காயம், பூண்டு, ஆப்பிள் போன்றவை, எச்.பைலோரி நுண்ணுயிர் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். தயிர், கேரட் சாறு, தேங்காய் தண்ணீர், பச்சைக் காய்கறிகள், பழச்சாறுகள் ஆகியவையும் இரைப்பை அழற்சியைத் தவிர்க்க உதவும்.
11. வலி மாத்திரைகளின் நீண்ட நாள் பயன்பாடு இரைப்பை அழற்சியை உண்டாக்கினால் அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். இரைப்பை அழற்சி ஏற்படுத்தாத வலி மாத்திரைகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
உணவுக் கட்டுப்பாடுகளால் சீராகாத இரைப்பை அழற்சி பெரும்பாலும் மருந்துகளால் சீராக்க முடியும். முன்பெல்லாம் அழற்சியின் விளைவாக, வயிற்றுப் புண் ஏற்பட்டு, நாளடைவில் அதுவே வயிற்றுப் புற்று நோயாக மாறும் நிலை இருந்தது. இதனால் அதிகம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. அந்த நேரங்களில் இரைப்பையின் பாதிக்கப்பட்ட பகுதியையோ அல்லது முழு இரைப்பையையோ (Partial gastrectomy, total gastrectomy) எடுத்துவிடும் நிலை கூட இருந்தது. இரைப்பை அழற்சி தடுப்பான் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் இந்த நிலை வெகுவாக மாறிவிட்டது. அதுபோலவே அழற்சியிலிருந்து, புண்ணாக மாறும் நிலை குறைந்துவிடும் வாய்ப்பால், இரைப்பைப் புற்று நோயும் குறைந்துவிட்டது. புற்றுநோய் ஏற்படும் நேரங்களில் மேற்சொன்ன அறுவை மருத்துவத்தோடு, புற்றுநோய் முறிப்பான்களை (Anti-Metabolites)யும், ஊடுகதிர் மருத்துவமும் (Radiation) செய்வது தேவையான இருக்கும்.
பொதுவாக இரைப்பை அழற்சிகளுக்கு, அமில முறிப்பான்களை (Antacids) பயன்படுத்தலாம். எச். பைலோரி நோய்த் தொற்றுக்கு, உயிர்க் கொல்லி (Anti-biotics)கள் மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இரத்தச் சோகையினால் ஏற்படும் அழற்சி, பி12 ஊசி மருந்துகள், மாத்திரைகளால் எளிதில் கட்டுக்குள் வரும். எச்-2 தடுப்பான்கள் (Pantaprazole) போன்ற மருந்துகளும் சிறந்த பயனைத் தரும்.
எந்த நோயும் ஆரம்ப நிலையில் கவனித்து, மருத்துவம் செய்தால் சிறந்த பலனைத் தரும். நோயும் முழுமையாக நன்றாகும். உணவுக் கட்டுப்பாடுகள் நோய் வருவதைத் தடுக்கும். ஆரம்ப நிலை அழற்சி, மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக