ஞாயிறு, 11 ஜூன், 2023

மரணத்திற்குப் பின் வாழ்க்கை…

 

மரணத்திற்குப் பின் வாழ்க்கை… – மருத்துவர் இரா. கவுதமன்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15,2023

மரணம் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. உயிருள்ள அனைத்தும் ஒரு நாள் மரணமடைந்தே தீரும். உயிருள்ள ஒவ்வொரு உயிரிகளும் மரணமடையாமல் இருக்க முடியாது. ஆத்திகர்கள் நாம் செய்யும் “புண்ணியங்கள்’’ நம்மை வாழ வைக்கும் என்று கூறுவதை பலமுறை நாம் கேட்டிருக்கிறோம் மரணத்திற்குப் பின் நாம் செய்யும் நல்ல செயல்கள் நம்மைப் பற்றிய நினைவுகளை மனங்களில் தங்க வைக்கும் என்பதைத் தவிர, பகுத்தறிவுக்கு ஒவ்வாத எண்ணங்கள்தான் இவை.

நம் இதயம் தொடர்ச்சியாகச் செயல்படுகிறது. மூளையும் அவ்வாறே செயல்படுகிறது. இரத்த ஓட்டம் நிற்காமல் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. காதுகள் கேட்கின்றன. கண்கள் பார்க்கின்றன. மூக்கு மூலம் உள் செல்லும் காற்றால், நுரையீரல்கள் உயிர்காற்றை நாள் முழுதும் இடைவிடாமல் உறிஞ்சி உடல் செல்களுக்கு அனுப்புகின்றன. உடலில் ஏற்படும் நச்சுகளை சிறு நீரகங்கள் இடைவிடாமல் வடிகட்டி வெளியேற்றுகின்றன. உண்ணும் உணவில் இருக்கும் சத்துகளை குடல் உறுப்புகள் உறிஞ்சி இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் செலுத்துகின்றன. ஒரு பெரிய தொழிற்சாலையில் பல பகுதிகள் செயல்பட்டு, ஒரு முழுமையான பொருளை உருவாக்குவது போல், நம் உடல் எனும் இயந்திரத்தில் பல உறுப்புகள் செயல்பட்டு, நம்மை இயக்குகிறது. இதையே நாம் “உயிர்’’ என்கிறோம். உடலின் பொறிகள் சரியாகச் செயல்படாத நிலையையே நோய் என்கிறோம்.

எப்படி தொழிற்சாலையில் உள்ள ஒரு பொறி பழுதானால் அதை சரியாக்கி மீண்டும் இயங்க வைக்கிறோமோ. அதேபோன்று நோயினால் உடலில் ஏற்படும் பழுதுகளை மருத்துவத்தால் சீராக்குகிறோம். பொறிகள் பலவும் ஒருங்கிணைந்து தொழிற்சாலை இயங்குவது போலவே உடல் உறுப்புகள் பலவும் இணைந்து செயல்பட்டே நம் உடலுக்கு இயக்கத்தைக் கொடுக்கின்றது. பழுதைச் சீராக்க முடியாத நிலையில் தொழிற்சாலை இயங்க முடியாத நிலை ஏற்படுவது போல், சீராக்க முடியாத பழுதுகள்(நோய்கள்) ஏற்பட்டால் உடல் இயக்கம் முழுமையாக நின்றுவிடுகிறது. இதையே “உயிர்’’ போய்விட்டது. என்றும் “மரணம்’’ என்று கூறுகிறோம்.

எனவே “உயிர்’’ என்று உருவகப்படுத்தப்படுவதற்கு தனியான குணநலன் கொண்டதாகவோ, அருவமாகவோ, ஆன்மாவாகவோ, ஆவியாகவோ, பேயாகவோ, கடவுளாகவோ மாறுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. மேலே கூறிய அனைத்தும் நம் கற்பனைகளால் உருவகப்படுத்தப்பட்டவையே. நம் உடல் இயக்கத்தையே நாம் “உயிர்’’ என்கிறோம். இயக்கத்தை நம் உடல் நிறுத்திவிட்டால் “உயிர் போய்விட்டது’’ என்கிறோம். இதைத் தவிர உயிருக்கு வேறு எந்த விதமான மறு சுழற்சி கிடையாது என்பதே உண்மை. ஆதலால், “உயிர்’’ போன பின்பு ஆவி, பேய், கடவுள், மறு பிறவி என்று கூறுவதெல்லாமே அறிவியல் அடிப்படையற்ற, கற்பனையாக உருவகப்படுத்தப்பட்டவையே! இவையனைத்தையும் பாமர மக்களிடம் பரப்பியவர்கள், தங்களின் சுய நன்மைக்கும், பொருளீட்டவும் இதை ஒரு வாய்ப்பாக்கி வருமானம் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

மனித உயிர் போன பின்பு இத்தனை வகையில் மீண்டும் அவை இருப்பதாகக் கூறுபவர்கள் இறந்த மற்ற உயிரினங்களுக்கு இதுபோன்ற நிலைகள் வருகிறதா என்று ஏன் கூறுவதில்லை? ஒரு பசு (கோமாதா) கடவுளாகவோ, ஒரு எருமை மாடு (எமனின் வாகனம்), ஒரு நாய்(பைரவர்), ஒரு பன்றி(வராகமூர்த்தி) போன்றவை ஆவியாகவோ, பேயாகவோ அலைவதாக யாருமே கூறுவதில்லை. அப்படிக் கூறினால் அதை நாம் நம்புவோமா? அதென்ன, மனித உயிர்களுக்.கு மட்டும் மரணத்திற்குப் பின் இத்தனை கற்பனைகள்? இத்தனை கற்பனைகளை மரணத்திற்குப்பின் இருப்பதாகக் கூறுபவர்கள் உண்மையில், எப்பொழுதாவது கடவுளையோ, பேய்களையோ, ஆவிகளையோ நேரில் பார்த்ததாக அறிவியல் முறையில் உறுதி செய்திருக்கிறார்களா? இல்லை என்பதே விடையாக இருக்கும்.

“மரணத்திற்கு பின் வாழ்வு’’ என்பது ஆவியாகவோ, பேயாகவோ, கடவுளாகவோ, மறு பிறவியாகவோ இல்லை. பின் எப்படி இந்தத் தலைப்பு என்று வியக்கிறீர்களா? ஆம், மரணத்திற்குப் பின் நாம் வாழ முடியும். மருத்துவ அறிவியல் அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. மூளைச் சாவு என்று மரணத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டபின் நம் “உடல் உறுப்புகள் கொடை’’யாக மற்றவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாம் வாழ முடியும். மூளை மீண்டும் செயல்படாத மூளைச்சாவு ஏற்பட்டவரை, மருத்துவர்கள் இதயத்துடிப்பை செயல்பாட்டிலேயே வைத்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர்.

மூளைச்சாவு அடைந்துள்ள ஒருவரின் உறவினர்களின், இரத்தச் சொந்தங்களின் அனுமதியுடன் அவரின் இதயத்தை வேறு ஒருவருக்குப் பொருத்தி அவரை வாழ வைக்கலாம். அவரின் நுரையீரலை பழுதானவருக்குப் பொருத்தி அவருக்கு உயிரூட்ட முடியும். சிறுநீரகச் செயல்பாட்டை இழந்த இரண்டு பேருக்கு, மூளைச் சாவு அடைந்தவரின் சிறு நீரகங்களைப் பொருத்துவன் மூலம் அவர்களுக்கு வாழ்வளிக்க முடியும். குடிபோதையாலோ, நோய்களாலோ ஒருவரின கல்லீரல் செயலிழந்திருந்தால் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல், அவரின் வாழ்வை மீட்டுத் தரும். அவர் உயிரோட்டம் நின்றுவிட்டால் அவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் அவருடைய இரண்டு கண்களைக் கொடையாக வழங்குவதன் மூலம், இருவருக்குப் பார்வை வழங்க முடியும். மரணமடைந்தவர் கண்கள் மூலம், பார்வை இழந்த இருவர் உலகைப் பார்க்க முடியும்.

இப்பொழுது இரத்த சேமிப்பு வங்கிகள் போல் “எலும்பு சேமிப்பு வங்கிகள்’’(Bone Back) செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. மரணமடைந்தவரின் எலும்புகளைக் கூட இன்று மீண்டும் பயன்படுத்த முடியும் என்ற நிலை இன்று வந்துவிட்டது. மூளைச்சாவு அடைந்த ஒருவர் உறுப்புகளைக் கொடையாக அளிப்பதன் மூலம் அவர் உறுப்புகளைப் பெற்றவர்கள் மூலம் உலகைப் பார்க்க முடியும் நோயாளிகளாக மாறி வாழ்விழந்து மரணமடையும் நிலையில் உள்ள அய்ந்து பேர்களை மூளைச்சாவடைந்தவர் வாழ வைக்க முடியும். மூளைச்சாவுதான் “மரணம்’’ என்று நிலை ‘நாட்டப் பட்டபின், “மரணத்திற்குபின் வாழ்வு’’ என்பதை மருத்துவத்துறை தன் அறிவுக்கொடையாக மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.

மரணம் நிகழ்ந்த பின் கண்களைக் கொடை-யாக வழங்குவது போல், மருத்துவக் கல்லூரிகளுக்கு நம் உடலைக் கொடையாக வழங்குவதன் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் கல்விக்கு நாம் உதவ முடியும். எரியூட்டப்பட்டு சாம்பலாவதாலோ, புதைத்து அழுகுவதாலோ யாருக்கும் பயனின்றிப் போகும் நம் உடல், உடற்கொடை கொடுப்பதன் மூலம், மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்கு நாம் பயன்பட முடியும். “கடவுளை மற, மனிதனை நினை’’ என்ற தந்தை பெரியார் கூற்றுக்கேற்ப மரணமடைந்தவர்கள் கடவுள்களாகிறார்கள், அவர்களை வணங்க வேண்டும் என்பதெல்லாம் மறந்து (கடவுளை மறந்து) மரணமடையும் நிலையில் உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடுக்கும் மனித நேயச் (மனிதனை நினைத்து) செயல்பாட்டின் மூலம் மரணத்திற்குப் பின்னும் நாம் வாழ முடியும்.

(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக