மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (106)
மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்
இயல்பான நிலையில் மகப்பேறு நாள், பெண்கள் கருவுற்ற 280 நாள்களில் வரும். மாதவிலக்கம் நின்ற நாளிலிருந்து இந்நாள்கள் கணக்கிடப்படும். 15 நாள்கள் முன்னோ, அல்லது பின்போ மகப்பேறு நிகழும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் மூன்றாம் மூன்று மாதப் பருவத்தின் கடைசிப் பகுதிகளில் மகளிர் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைப் பிறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு. பெண்கள் அதை நினைத்து மனத் தளர்ச்சியோ (Depression), பயமோ (Fear) கொள்ளத் தேவையில்லை. மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும், செவிலியர்களும் இதை வெகு இயல்பாகக் கையாளுவார்கள். அதனால் கவலைப்படாமல் தாயாகப் போகிறோம்’’ என்று பெருமையுடன் குழந்தைப் பிறப்பை எதிர் கொள்ள வேண்டும்.
பொதுவாக குழந்தைப் பிறப்பு மூன்று நிலைகளில் நிகழும். குழந்தைப் பிறப்பின் பொழுது தாய் அதை எளிமையாக நிகழ்த்திக் கொள்ளவும், அதிகம் தொல்லைப் படாமல் இருக்கவும் மருத்துவர்களின் அறிவுரைகளும் செவிலியர்கள் உதவியும் மிகவும் உதவும். பேறுகால நிகழ்வு என்பது ஒரு தனித்துவமான (Unique) அனுபவம். சில நேரம் இந்நிகழ்வு சில மணி நேரம் நீடிக்கும். குறிப்பிட்ட நேரம் என பொதுவாகக் கணிக்க முடியாது. குழந்தைப் பிறப்பு என்பதும், அதை எளிமையாக நிகழ்த்துவதற்கு பெண்ணின் உடல் உறுதியும், மன உறுதியும் மிகவும் இன்றியமையாதவை. சில நேரங்களில் குழந்தைப் பிறப்பு விரைவாகவும் நிகழும் வாய்ப்பும் உண்டாகும். பொதுவாக முதல் பேறு காலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்கு பின் வரும் குழந்தைப் பிறப்பு எளிதாகவும், விரைவாகவும் நிகழும் நிலை இருக்கும்.
குழந்தைப் பிறப்பின் முதல் நிலை: (State I, Early Labor and Active Labor)
கருப்பையில் இருந்து குழந்தை வெளியேறும் செயல்பாடு, கருப்பை தொடர்ச்சியாகச் சுருங்குவதால் ஆரம்பமாகிறது. மெதுவாகத் துவங்கும் இந்தச் சுருங்கல், நேரம் செல்லச் செல்ல அதிகமாகும். கருப்பை சுருங்குவதால் பெண்ணின் அடிவயிற்றில் வலி ஏற்படும். இதையே பேறுகால வலி என்கிறோம். கருப்பை சுருங்குவது தொடர் நிகழ்வாகும் பொழுது வலியும் தொடர்ச்சியாக ஏற்படும். தொடர் நிகழ்வு பலமானதாகவும் அடிக்கடியும், விட்டு விட்டும் வரத் துவங்கும். கருப்பை சுருங்கும் நிலை தொடர்ச்சியாக, அதிகமாக ஏற்படும் பொழுது கருப்பைக் (கழுத்து) வாய் (Cervix) திறக்கும். கருப்பைக் கழுத்து மென்மையாகவும், மெலிந்தும், குறுகலாகவும் மாறி, குழந்தை கீழ்நோக்கி நகரத் துவங்கும். கருப்பை சுருங்குவதால் குழந்தையின் நகர்தல் தொடர்ச்சியாக நிகழத் துவங்கும் முதல் நிலை, பேறு காலத்தில் நீண்ட நேரம் நகரும். முதல் நிலை, இரண்டு கட்டங்களாக நகரும். முதல் கட்டம் “ஆரம்ப நிலை’’ (Early Labor) என்றும், வேகமான நிலை (Active Labor) என்றும் இரண்டு கட்டங்களாக நிகழும்.
ஆரம்ப நிலை: ஆரம்ப நிலையில் கருப்பை மெதுவாகச் சுருங்கத் தொடங்கும். கருப்பைக் கழுத்து மெலிதாகும் (Effaces), கருப்பைக் கழுத்து திறக்கும். கருப்பை சுருங்குவதால் இடுப்பு வலி துவங்கும். ஒவ்வொரு முறையும் கருப்பை சுருங்கும் நிலையிலும் வலி வந்து, வந்து போகும். கருப்பைக் கழுத்துப் பகுதி திறக்கும் பொழுது, லேசான இரத்தம் கலந்த, திரவம் வெளிப்படும். இது கருப்பை வாயில் மூடியுள்ள சளி போன்ற சவ்வாகும். இது கிழிவதால் மேல் குறிப்பிட்ட திரவம் வெளிப்படும். ஆரம்ப நிலை எவ்வளவு நேரம் நீடிக்கும் என அறுதியிட்டுக் கூற முடியாது. முதல் பேறுகாலத்தில் மணிகளில் துவங்கி நாள்களில் கூடத் தொடரும். அடுத்த மகப்பேறுகளின் இந்த ஆரம்ப நிலை விரைவில் முடிந்து விடும். பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை சுருங்குதல் மெதுவாக நடப்பதால் அதிகத் தொல்லை இருக்காது.
ஆனால், சிலருக்கு வேகமாக இந்தச் சுருங்குதல் அடிக்கடி நிகழும் நிலையில் வலி அடிக்கடி ஏற்படும். மனம் தளராமல், இந்த நிலையில் பெண்கள் இருக்க வேண்டும். மனம் தளர்வடையாமல் இருக்க கீழ்கண்ட செயல்பாடுகள் உதவும்.
* மெதுவான நடைப்பயிற்சி மேற்-கொள்ளலாம்.
* வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
* மெல்லிய இசையைக் கேட்கலாம்.
* மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இப்பயிற்சியை செவிலியர்கள் பெண்களுக்குச் சொல்லித்தருவர்.
* இருக்கின்ற நிலையில் (Position) இருந்து வசதியான நிலைக்கு மாறி இருக்கலாம்.
சிக்கல்கள் ஏதும் இல்லாத மகப்பேறானால், மருத்துவமனையில் உடனே சேர வேண்டிய தேவை இருக்காது. வலி அதிகமாகும் பொழுது, கருப்பை சுருங்குதல் அதிகமாவது போல் தெரிந்தால் மருத்துவமனையில் சேர்த்து விடலாம். உடனிருக்கும் செவிலியரோ, செவிலிய உதவியாளரோ வீட்டில் உள்ள வயது மூத்த அனுபவம் வாய்ந்த பெண்கள் தகுந்த நேரமறிந்து பேறுகாலம் எதிர் நோக்கும் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க உதவுவர். பிறப்புறுப்பில் இருந்து சிறுநீர் கழிப்பது போல் உணர்வுடன் தண்ணீர் வெளியேறினாலோ, லேசான இரத்தப் போக்கு ஏற்பட்டாலோ உடனே மருத்துவமனைக்குச். செல்ல வேண்டும்.
வேகமான நிலை: (Active Labor): வேகமான நிலையில் கருப்-பைக் கழுத்து வேகமாகத் திறக்கும். 6 செ.மீ.லிருந்து, 10 செ.மீ. வரை திறக்கும் கருப்பை வலிவோடு, சீராகவும், அடிக்கடியும் சுருங்கத் துவங்கும். கால்களில் தசைப்பிடிப்பு (Cramps) எற்படக்கூடும். லேசான குமட்டல் ஏற்படும். பனிக்குடம் உடைந்து, நீர் வெளியேறும். முதுகுப் பகுதியில் அழுத்தமும், வலியும் உண்டாகும். இந்த நிலை வரை மருத்துவமனைக்குச் செல்லாமலிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் இருக்கும் உணச்சிவயப்படும் நிலை, குழந்தை இறங்க, இறங்க மாறிவிடும். உடல்வலி அதிகமாகிவிடும், வலி மாத்திரைகள் சற்று வலியைக் குறைக்க உதவும். பேறு-காலத்தில் செவிலியர்களும், மற்றவர்களும் உதவினாலும் இடுப்பு வலியும் மற்ற பேறு காலத் தொல்லைகளையும் குழந்தை பெறும் பெண்தான் தாங்க வேண்டும். (“அழுதாலும்“ பிள்ளை அவள்தான் பெறவேண்டும்’’ என்ற சொலவடை கிராமங்களில் சொல்வதைக் கேட்டுள்ளோம்). வேகமான இந்தப் பேறுகால நிலை, 4 முதல் 8 மணிநேரம் (முதல் பேறு-காலத்தில்) நீடிக்கலாம்.
கருப்பைக் கழுத்து ஒரு மணிக்கு ஒரு செ.மீ மட்டுமே திறந்து கொடுப்பதால் இவ்வளவு நேரம் பிடிக்கும். பேறுகால உதவியாளர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். வாய்விட்டு நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வது பெண்ணின் வசதிக் குறைவை எளிதாக்கும். செவிலிய உதவியாளர்கள் அறிவுரைப்படி, வசதிக் குறைவான நிலையிலிருந்து, வசதியான நிலைக்கு திரும்பிப் படுக்கலாம். வாய்ப்பிருப்பின் ஒரு குளியல்கூட போடலாம்.
வலி வராத நேரங்களில் நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும். வலிகளுக்கு இடையே வயிறுப் பகுதியில் தடவிக்கொடுக்கும் வேலையை (Massage) பேறுகால உதவியாளர்-கள் செய்வர். வேகமான நிலையில் வலி அடிக்கடி ஏற்படும். கருப்பை சுருங்குதல் 60 முதல் 90 விநாடிக்கு ஒருமுறை ஏற்படும். அடி முதுகிலும், மலக் குடலிலும் அழுத்தம் ஏற்படும். தாய்க்கு, இயல்பாகவே முக்கி, குழந்தையை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு துவங்கும். ஆனால். இடுப்பு வலி வராத நிலையில் முக்கக் கூடாது. கருப்பைக் கழுத்து முழுமையாகத் திறக்காத நிலையில் வேகமாக முக்கினால் கருப்பைக் கழுத்தில் வீக்கம் ஏற்பட்டு குழந்தை பிறக்கும் நேரத்தை அதிகரிக்கச் செய்யும். தாய்க்குக் களைப்பையும் ஏற்படுத்தும். இந்த நிலை சுமார் 15 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை நீடிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக