மருத்துவம்:
– மருத்துவர் இரா. கவுதமன்
ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ஏற்பட்டு விட்டாலோ மரணம் நிகழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்வர். பொதுவாக முன்பெல்லாம் இதயமும், நுரையீரலும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டாலே மரணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ‘மூளை’ செயல்பாட்டை இழந்துவிட்டால் மட்டுமே மரணம் நிகழ்ந்துவிட்டதாகவும், அதுவே மீண்டும் உடல் உறுப்புகள் இயக்கத்தை நிறுத்தி, செயல்படாத நிலையை (Irreversible) அடைந்து விட்டதையே மரணம் என்றும் இன்றைய மருத்துவம் விளக்குகிறது. இன்றைய நிலையில் ‘இழப்பு’ அல்லது மரணம் என்பது சுற்றமும், நட்பும் வருந்தக்கூடிய ஒரு நிகழ்வாக மட்டும் இல்லை. மருத்துவ முன்னேற்றம் உறுப்புகள் கொடை, உடற்கொடை, சமூகவியல், சட்டம் சார்ந்த பல கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது.
இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal code) 46ஆவது பிரிவு _ உயிரோடு இருக்கும் மனிதர், எந்தவித உயிர் இயக்கமும் இல்லாமல் முழுமையாகச் செயலிழப்பதை மரணம் (“The permanent disappearance of all evidence of life at any time after live-birth has taken place)” என்று விளக்குகிறது. இன்றைய நிலையில் மூளைச் சாவையே மரணம் என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.!
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, இதயமும், மூச்சும் செயலிழப்பதையே ‘மரணம்’ என்று மருத்துவ நிலையிலும், சட்டத்தின் நிலையிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிலைப்பாடுதான் நிலவியது. ஒருவர் இறந்து விட்டதை, அவரது நாடித் துடிப்பு நின்று விட்டதை வைத்தும், மூச்சு நின்று விட்டதையும், மூக்கின் அருகே ஒரு கண்ணாடி வைத்து, அதில் படியும் (மூச்சு வெளிப்படும் பொழுது) படிவு (Condensation) மூலமும், கண்ணின் “பாப்பா (Pupil) சுருங்கி, விரியும் தன்மை நின்று விடுவதையும் வைத்து மரணம் நிகழ்ந்ததை மருத்துவர் உறுதி செய்வார். ஆனால், இதயம் செயல்பாட்டை, இதய அறுவை மருத்துவம் செய்யும் பொழுது ஈறத்தாழ 40 நிமிடங்கள் வரை மருத்துவர்கள் நிறுத்தி விடுகின்றனர். இதய மாற்று அறுவை மருத்துவம் (Heart Transplantation), இதயத்தைத் திறந்து செய்யும் (Open Heart Surgery) அறுவை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளில் இதயம் நிறுத்தப்படுகிறது. மிகச் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இதயத்தமனி மாற்றுவழி மருத்துவத்தில் (Coronary Artery Bye pass Grafling – CABG) கூட இதயம் நிறுத்தப்பட்டே செய்யப்பட்டது. (இப்பொழுது இதயத் துடிப்பைக் குறைத்து, இதயத்தை நிறுத்தாமலேயே (Beating heart Surgery) இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது). இதயம் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் உடலின் இரத்தக் குழாய்கள் இதய, நுரையீரல் பொறியில் (Heart lung Machine), இணைக்கப்பட்டு, நோயாளி உயிரோடு இருக்க வகை செய்யப்படுகிறது.
மாறிவரும் மருத்துவத்தில் இன்று இதயச் செயலிழப்பு மரணம் இல்லை என்று நிறுவப்பட்டுவிட்டது. அதே போல் மூச்சு விடும் நிலை நின்று விடாமல் தடுக்க மருத்துவ உதவிகள் இன்று வந்து விட்டன. நுரையீரல் பாதிப்பால் செயலிழந்து விடும் நுரையீரல்கள், முழுமையாக மாற்றிப் பொருத்துவதும் இன்று வந்துவிட்டது. வேறு நுரையீரல் கிடைக்கும் வரை, நோயாளி, மரணம் அடையாமல் தவிர்க்க செயற்கை மூச்சுக் கருவியின், (Ventilator) மூலம் பாதுகாக்கப்படுவார். இதுபோன்ற மருத்துவ அறிவியல் முன்னேற்றங்களால், இதயமோ, நுரையீரலோ செயலின்மை (Cardio-Pulmonary failure) மரணம் என்று கூறப்படுவதில்லை.
1960களில் “மரணம்” என்பதற்கு மருத்துவ முறைகளில் முற்றிலும் மாறான விளக்கம் கொடுக்கப்பட்டது. இதைச் சட்டமும் ஏற்றுக் கொண்டது. ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம், மாறிவரும் மருத்துவ வளர்ச்சியை மனதில் கொண்டு மரணம்’ என்பதற்குப் புதிய விளக்கம் கொடுத்தது, அதை அனைத்து மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டது. மூளை முழுமையாகச் செயலின்மை (Permanently non-functioning Brain) அடைந்தால், அதை முழு உணர்விழந்த மயக்க நிலை (Irreversible Coma) என்று மருத்துவம் விளக்கியது.
இந்த நிலைக்கே நாளடைவில் “மூளைச் சாவு” (Brain Death) என்று பெயரிடப்பட்டது. முழுமையான உணர்வின்மை, முழுமையான செயலின்மை (Unreceptivity and responsivity), இயல்பாக மூச்சுவிட முடியாமை, உடல் அசைவின்மை (No Movements),, மூளை மின்னலைப் பதிவில் (Electro encephatogram) மூளையின் செயல்பாடின்மை போன்றவை ஒரு நோயாளிக்கு ஏற்பட்டால் அதுவே “மூளைச்சாவு” என்றழைக்கப்பட்டது. ஆனால் “மூளைச்சாவு” என்றழைக்கப்பட்டு, அவர்கள் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, மற்றவர்களுக்குப் பொருத்தும் நிலைகளில் பல சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்காக ஓர் ஆய்வுக் குழு, அமெரிக்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டது.
மருத்துவ, சட்ட, சமூகவியல் அறிஞர்கள் அடங்கிய இந்தக் குழு அனைவருக்கும் பொதுவான, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விளக்கத்தை “மரணத்திற்கு” அளித்தது. “மூளையின் முழு நிலைப்பாடு’’ (Total brain standard) என்று பெயரிடப்பட்ட இந்த நிலையை இன்று மருத்துவத்துறையும் நீதித்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளன.
பண்டைய காலங்களில் மரணத்திற்குப் பின்னும் உயிர் இருக்கும் என்ற நம்பிக்கையில்
பல நாட்கள் உடல்கள் வைக்கப்பட்டு, அழுகிப்போயின. இறந்தபின் உயிர் வராது என்பது மனித அறிவுக்கு எட்டுவதற்கே பல காலம் தேவைப்பட்டது. எகிப்து நாட்டில் மீண்டும் உயிர் வரும் என்ற நம்பிக்கையிலேயே, அரச, அரசி உடல்கள் பிரமிடுகள் என்று கல்லறைக்குள் வைக்கப்பட்டன. உடலோடு, நகைகள், உணவுகளுடன், அவர்களின் பணிப் பெண்களையும் (உயிரோடு) சேர்த்தே பிரமிடுகளில் வைத்து மூடும் பழக்கம் எகிப்தில் நிலவியது.
மனித இனம் அறிவியல் பாதையில் பயணம் செய்யத் தொடங்கிய பின்னர்தான் மரணம் என்பது ஒரு மீள முடியாத நிலை என்பதை மனிதன் உணர்ந்தான்.உடல் உறுப்புக் கொடை மருத்துவத் துறையால் செய்யத் துவங்கிய இந்தக் காலகட்டத்தில், சட்டமும், நீதியும் அதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டமும், நீதியும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு முறையில் இருந்ததால், மரணத்தை விளக்குவதில் பலவகைக் குழப்பங்கள் நிலவின. முடிவாக, ஒரு வழியாக உடல் உறுப்புக் கொடைக்குப் பல சட்டங்கள் இயற்றப்பட்டு, மூளைச் சாவே (Brain Death) ‘மரணம்’ என்று உலகம் ஒத்துக்கொள்ளக் கூடிய நிலை இன்று அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக