திங்கள், 5 ஜூன், 2017

இவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்


பெண்களுக்கு மாரடைப்பும் இதயக் கோளாறுகளும் ஏற் படும் வாய்ப்புகள் குறைவு என்பது அந் தக் காலம். இளவயது மெனோபாஸ், அதீதமன அழுத்தம் போன் றவற்றின் காரணமாக பெண் களுக்கும் அதிலும் இள வயதிலேயே மாரடைப்பும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.

மாரடைப்பு என்பது நேரடியாக நெஞ்சில் வலியாகவோ, மூச்சு விடுவதில் சிரமமாகவோதான் அறிகுறியைக் காட்டும் என்றில்லை.

மறைமுகமான அறிகுறி களையும் காட்டலாம். நீங்கள் தான் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.  அப்படிச் சில மறைமுக அறிகுறிகளையும் பட்டியலிடலாம்.

வீடு, வேலை என பெரும்பாலான பெண்கள் இரட்டைச் சுமை சுமக் கிறார்கள். சக்திக்கு மீறி உழைக்கிறார்கள். வீட்டிலுள்ள எல் லோர் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுகிறார்கள். வேலையிடத்தில் நல்ல பெயரை வாங்க உழைக்கிறார்கள். உடலும் மனமும் சேர்ந்து களைத்துப் போவதில் அடிக்கடி பலவீனமாக உணர்கிறார்கள்.

களைப்பு என்பது அவர்களது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் என நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் காரணம் தவிர்த்து வேறு சில காரணங்களாலும் அப்படி அதீத களைப்பு தோன்றலாம்.

1. சின்னச்சின்ன வேலைகளால்கூட களைப் படைகிறீர்களா? உதாரணத்துக்கு காய்கறி நறுக்குவது, துணிகளை மடிப்பது போன்ற அதிக உடலுழைப்பு தேவைப் படாத வேலைகளால்கூட களைப் படைகிறீர்களா? எப்போதும் செய்கிற உடற்பயிற்சிகள் தான்... ஆனாலும் திடீரென ஒருநாள் அது உங்களுக்கு ஒருவித அசவுகரியத்தைக் கொடுக்கிறதா? திடீரென நெஞ்சு பாரமாக அழுத்துவது போல உணர்கிறீர்களா? அதீத களைப்பு மட்டுமின்றி, தூக்கமின்மையாலும் சேர்ந்து அவதிப்படுகிறீர்களா?

2. வயதான காரணத்தினாலும் உடற் பயிற்சியோ உடலுழைப்போ இல்லாத காரணத் தினாலும் பெண்களுக்கு வியர்வை அதிகம் வெளிப்படலாம். மாதவிடாய் நின்று போகும் மெனோபாஸ் காலத்திலும் இப்படி வியர்க்க லாம். ஆனால், இப்படி எந்தக் காரணங்களுமே இல்லாமல் திடீரென வியர்ப்பது. கடினமான வேலைகளைச் செய்த பிறகு மூச்சு வாங் குவது தாண்டி, நீண்ட நேரத்துக்கு அது தொடர்வது. படுத்துக்கொண்டிருக்கும்போது மூச்சு முட்டுகிற மாதிரி உணர்வது. திடீரென அதிகம் வியர்ப்பது, கூடவே மூச்சுத் திணறல், நெஞ்சு பாரமாக அழுத்துவது போன்ற உணர்வுகளும் சேர்ந்து கொள்வது.

3. உடலில் ஏற்படுகிற அசாதாரண வலி யையும் பெரும்பாலான பெண்கள் உழைப்பு மற்றும் ஓய்வின்மையின் விளைவுகளாவே நினைத்து அலட்சியப்படுத் துவார்கள். அதைத் தாண்டி, ஒரு கையிலோ, இரண்டு கைகளிலுமோ திடீரென காரணமே இல்லா மல் ஒருவித வலியை உணர்வது. குறிப்பாக தோள்பட்டையின் அருகில் உணர்கிற வலி.

அடி மற்றும் மேல் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நெஞ்சுப் பகுதிக்குப் பரவுவது. களைப்பு அல்லது அதிகம் வேலை பார்த் ததன் விளைவாக இல்லாமல் திடீரெனக் கடுமையாக தாக்கும் வலி.

குறிப்பாக இரவில் பாதித்தூக்கத்தில் ஏற்படுகிற இப்படிப்பட்ட வலி. தாடைப் பகுதியில் உணர்கிற வலி. அதன் பின்னணியில் வாய் மற்றும் பல் பிரச்னைகள் எதுவும் இருக்கத் தேவை யில்லை. மேலே குறிப்பிட்ட இந்த மூன்று முக்கிய அறிகுறிகளையும் அடிக்கடி உணர்கிற பெண்கள், உடனடியாக இதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

உங்களுடைய உடலில் ஏற்படுகிற அசவு கரியங்களையும் திடீர் மாறுதல்களையும் உங்களால் மட்டுமே பிரித்துப் பார்த்து உணர முடியும். அவை பிரச்னைக்குரியதாக இருக்க வாய்ப்பில்லை என நீங்கள் அலட் சியம் செய்யலாம். ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியவர் மருத்துவர். எனவே, இந்த மறைமுக அறிகுறிகள் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரப் போவதை முன்கூட்டியே உணர்த்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டு கவனமாக இருங்கள்!

-விடுதலை,22.5.17

வயிற்றுவலி என்றாலே அல்சரா?



வயிற்றில் வலி வந்தால், அது அல்சராகத்தான் இருக்குமா? இப்படிச் சொல்வது சரியில்லை. வயிற்றில் வலி வருவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக வருவது அல்சர் எனும் இரைப்பைப் புண். ஆனால், அடிக்கடி வயிற்றில் வலி வந்தால், என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

எது அல்சர்?

அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசி இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். சில நேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். நோயின் அடுத்த கட்டத்தில், வயிற்று வலியும் வாந்தியும் வரும்.கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால் பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக் கவ்வி பிடிக்கும். சாப்பிட்டதும் வலி அதிகமாகும். டியோடினல் அல்சராக இருந்தால் சாப்பிட்டதும் வயிற்று வலி குறையும். அல்சர் கடுமையாகி விட்டது என்றால் ரத்த வாந்தி வரும். மலம் கறுப்பாகப் போகும்.

என்னென்ன பாதிப்புகள்?

வயிற்றில் எந்தப் பகுதியில் வலி வந்தால் என்ன பாதிப்பு என்பதைத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம்.

வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.

மேல்வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.
மேல் வயிற்றின் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரலில் பிரச்சினை இருக்கலாம்.

வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.

வலது பக்கத்தில் வலி என்றால், வலது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.

நடு வயிற்றின் மத்தியப் பகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்சினை என்று யூகிக்கலாம்.

அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல்வால் அழற்சி, வலது சிறுநீர்க் குழாய் கல், கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள்.

அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பைக் கோளாறு காரணமாகும்.

அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க் குழாய் கல் / இறங்கு குடல் கோளாறு இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.

எச்சரிக்கை: நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி ஏற்படவேண்டும் என்ற அவசியமில்லை. பதிலாக, நெஞ்சு எரிவது போலிருக்கும் அப்போது அதை அல்சர் வலியாக எண்ணிப் பலரும் அலட்சியப்படுத்திவிடுவார்கள். இவர்கள் நெஞ்சில் எந்த ஓர் அசவுகரியம் ஏற்பட்டாலும், உடனே மருத்துவரைப் பார்த்து விடுவது நல்லது.

முதுமையில் ரத்த அழுத்தம்

பொதுவாக, வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 160-க்கு அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 80-லிருந்து 90-க்குள்ளும் இருக்கும். இதற்கு தனித்த சிஸ்டாலிக் உயர் ரத்தஅழுத்தம் என்று பெயர். காரணம், வயதாக ஆக ரத்தக் குழாய்கள் கடினமாகி, தடிமனாகின்றன. ரத்த ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப அவை விரிந்து சுருங்கச் சிரமப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாயின் உள் அளவு குறைந்துவிடுகிறது. இப்படிக் குறைந்த இடைவெளி வழியாக ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு, இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்கிறது. இதனால், சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரிக்கிறது.

எல்லா வயதினருக்கும் 140 என்பதுதான் சிஸ்டாலிக் அழுத்தத்தின் எல்லை. ஏற்கெனவே இதயப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்றவை உள்ளவர்களுக்குச் சிஸ்டாலிக் அழுத்தம் 130 என்பதுதான் அதிகபட்ச அளவு. இந்த எல்லையைத் தாண்டினால் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்க வேண்டும். இப்படியே அழுத்தத்துடன் அது துடித்துக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் இதயச் சுவர் பலவீனம் அடைந்து, வீங்கிவிடும். அப்போது உடலுக்குத் தேவை யான ரத்தத்தை இதயத்தால் உட்செலுத்த முடியாது. முக்கியமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, கிறுகிறுப்பு, மயக்கம், நினைவு இழத்தல், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இந்த நிலைமை தொடர்ந்தால், இதயம் செயலிழக்கத் தொடங்கிவிடும். மாரடைப்பும் வரலாம். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். இந்த ஆபத்துகளைத் தவிர்க்கத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஸ்டெம் செல் விழிப்புணர்வு தேவை! 



குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து பெறப் படும் ஸ்டெம்செல்களை சேமித்தல், சோதனை நடத்துதல் மற்றும் பாதுகாத்து வைப்பதற்கு உதவும் வகையில் சமூக ஸ்டெம்செல்வங்கித் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் இயக்குநரான மயூர் அபயா கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பெற் றோருக்கு மருத்துவ சிகிச்சையின்போது தேவைப் படும் பொருத்தமான ஸ்டெம்செல்களை உடனடி யாகவும், எளிதாகவும் பெறும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமே பயன்பெறுவதோடு சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கும்.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பிரசவத்தின்போதும் குழந்தைகளின் தெப்புள் கொடியினை சேகரித்து, பாதுகாப்பதற்கான வசதிகள் நம்மிடையே இல்லை. முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஸ்டெம்செல்கள் கிடைக்கக்கூடும்.குழந்தைகளின் ஸ்டெம்செல்களைத் கொடை அளிப்பது குறித்து தற்போதுதான் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை அதி கரிக்கும் வகையில் ஸ்டெம்செல்லின் தேவைகள் மற்றும் அவசியம் குறித்த பார்வையை பொது மக்களிடம் உண்டாக்க வேண்டும். அதற்குத் தேவையான, பாதுகாப்பதற்கான வசதிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் உலக அளவில் அதிகமான ஸ்டெம்செல் வழங்கும் நாடாக இந்தியா மாறும்.

இது உலக அளவில் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள், குடும்பத்தினர், சமூகத்தினர் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை பெறும் வாய்ப்பினையும் அதிகப்படுத்தும் என்றார்.

வெந்தயம்: மருத்துவ குணங்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் அதிகம் பயிரிடப்படும் பயிராக வெந்தயம் விளங்குகிறது. சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ள வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது, மலத்தை இளக்குந்தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்குந்தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத் தையும், உஷ்ணத்தையும் போக்கக்கூடியது, வறட்சித் தன்மையை அகற்றக்கூடியது, காம உணர்வைப் பெருக்கக்கூடியது, அகட்டு வாய்வு அகற்றி, டானிக் போல உடலுக்கு உரமாவது!

வெந்தயத்தின் விதைகள் பசியின்மையையும், வயிற்று உப்பசத்தையும் போக்கவல்லது, பித்தத் தைச் சமன்படுத்தக்கூடியது, வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப்போக்கையும் போக்கக்கூடியது, சீத பேதியை நிறுத்தவல்லது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் கண்டவிடத்து அந்த வீக்கத் தைத் தணிக்கவல்லது, தாய்ப்பாலைச் சுரக்கச் செய் வது, குழந்தை பெற்ற இளந்தாய்மார்களுக்கு ஊட்டம் தரும் வகையில் டானிக்காகவும் அமை கிறது.

வெந்தயம் ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது, சீழ் பிடிப்பதைத் தடுக்கக்கூடியது என்பதை ஜெர்மானிய வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.ஆங்கில மூலிகை மருத்துவ அகராதி வெந்தயம் உள்ளழலை ஆற்றவல்லது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைக் குறைக்கவல்லது என்றும் பரிந்துரை செய்கிறது. சர்க்கரை நோய்க்கு ஒரு துணை மருந்தாகிறது, உணவு ஏற்றுக்கொள்ளாமை, கொழுப்புச்சத்து மிகுதல் ஆகியவற்றுக்கு மருந்தா கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது. வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், வயிற்றினை நிரப்பிய வாயு, நெஞ்சுச்சளி, நம்மைப் போராடச் செய்கிற குத்திருமல், வறட்டிருமல், சுவையின்மை, பசியின்மை இவை அனைத்தும் குணமாக்கும். உடலில் ஆரோக்கியத்தை அதி கரிக்கச் செய்வதால் வாழ்நாளை நீட்டிக்கும். ரத்தத் தில் உள்ள பித்தத்தைப் போக்கும், அகலாது நின்று துன்பந் தருகிற உடற்சூட்டினையும் தணிக்கும். எலும்பைப் பற்றிய காய்ச்சல் போகும், நாவறட்சி அகன்று போகும். புத்தியைத் தடுமாறச் செய்யும் குத்திருமல், வறட்டிருமல், கக்குவான் இருமல் ஆகியவற்றைத் தணிப்பதோடு கபத்தையும் வெளி யேற்றும் தன்மை கொண்டது.  

-விடுதலை,29.5.17

செவ்வாய், 9 மே, 2017

ஓசூர் சிறுவனின் உலகச் சாதனை! திடீர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி!



அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack) மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது!

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சடைக்கும். சுருண்டு விழுவார்கள், இதயம் நின்றுவிடும், உயிர் பிரிந்துவிடும்.

எந்தச் சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ, நோபல் விருது பெற்றவரோ இல்லை. நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன்.

‘‘எங்க தாத்தா ரொம்ப ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு டயபெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனால், ரொம்ப கன்ட்ரோல்ல வச்சிருந்தார். திடீர்னு ஒரு நாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனார். நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன்னாங்க.’’

‘‘அது என்னான்னு படிக்க ஆரம்பிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்குப் போய் இதயம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் படிக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்கே வரும். எல்லாவற்றையும் படித்தேன். இப்பொழுது எனக்கு 15 வயது. ஆனால், டாக்டர்களுக்கு ஹார்ட்பற்றி வகுப்பு எடுக்கிற அளவுக்குப் பேச முடியும்.

ரத்தத்திலே இருக்கிற FABP3  என்கிற ஒரு புரோட்டீன் அதிகமாகும்போது சைலன்ட் அட்டாக் வருகிறது என்று தெரிந்தது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால், பாசிட்டிவ் புரதம் மூலமாக அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்தில் இழுத்து அடையாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்குப் பின்னால் ஒட்டிக்கொள்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேட்ஜ் தயாரித்தேன்.

அதை ஒட்டிக்கிட்ட உடனே அதிலே இருந்து பாசிட்டிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி, ரத்த நாளங்களில் ஊடுருவும். அங்கே நெகடிவ் புரதம், அதாவது, FABP3 இருந்தா, உடனே பேட்ஜ் அதனை இழுக்கும். அது எந்த அளவு இருக்குன்னு அந்த பேட்ஜ் காட்டிக் கொடுக்கும். அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகிறது என்று அர்த்தம். உடனே, டாக்டரை பார்க்கணும்‘’ என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்தக் கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனைக் கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்கத் தயாராக இருக்கும் நிலையில்,

‘‘எனக்குப் பணம் பெரிதல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கக் கூடாது. அதனால், மத்திய அரசு மூலமாக மலிவான விலையில் இதை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் அதுதான் என்னுடைய ஆசை’’ என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிகான் பேட்ஜ் எட்டியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும், பாராட்டுப் பத்திரமும் அளித்திருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தயாராக இருக்கிறது.

வாழ்க அந்த மனோஜ்!

வெல்க அவரது மனிதநேயம்!!

(ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து)

 உண்மை இதழ்,1-15.4.17


 


 


ஆரோக்கியம் காக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்!



நம் உடல் செல்களால் ஆனது. இரண்டு செல்கள் இணைந்து இணையாக இருக்கும். ஒரு இணையில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். ஒரு எலெக்ட்ரானை இழந்த நிலையில், அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, ஈடுகட்டும். இவ்வாறு பாதிப்பைச் ஈடு செய்யும்  நுண்ணூட்டச் சத்துகளைத்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம்.

ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதை ஈடுசெய்ய முடியும். அவ்வாறு ஈடு செய்யாவிட்டால், இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளவை: பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ‘ஏ, சி, இ’ இவற்றுடன் துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்கள் அதிகமாக உள்ளன.

பீட்டாகரோட்டின் உள்ள பொருள்கள்:

புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், மக்காச்சோளம், மாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை, பீச், தக்காளி போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘இ’ உள்ள பொருள்கள்:

பப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை, அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது.

வைட்டமின் ‘சி’ உள்ள பொருள்கள்:

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

துத்தநாகம், செலினியம் உள்ள பொருள்கள்:

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளன.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, சிறுதானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

-உண்மை இதழ்,16-31.3.17

திங்கள், 8 மே, 2017

வலிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை



வலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி போன்ற ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுகிறார்கள். இப்படிச் சொல்வது சரியா? சரியில்லை. சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர் களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.

மூடநம்பிக்கை

இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக் காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப் பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்து விட்டது. பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானா கவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொ ருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகு மல்லவா? இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் விதம்: மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல் பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

என்ன காரணம்: தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற வையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக் கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக பொய் வலிப்பு  வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு: குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்: ஒருவருக்கு வலிப்பு வந்து விட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்:

# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள் சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்ற வற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய் யுங்கள்.

# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள். உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

# ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?

# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.

# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.

# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
-விடுதலை,8.5.17