வயிற்றில் வலி வந்தால், அது அல்சராகத்தான் இருக்குமா? இப்படிச் சொல்வது சரியில்லை. வயிற்றில் வலி வருவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக வருவது அல்சர் எனும் இரைப்பைப் புண். ஆனால், அடிக்கடி வயிற்றில் வலி வந்தால், என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதித்துத் தெரிந்து கொள்வது நல்லது.
எது அல்சர்?
அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசி இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். சில நேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். நோயின் அடுத்த கட்டத்தில், வயிற்று வலியும் வாந்தியும் வரும்.கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால் பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக் கவ்வி பிடிக்கும். சாப்பிட்டதும் வலி அதிகமாகும். டியோடினல் அல்சராக இருந்தால் சாப்பிட்டதும் வயிற்று வலி குறையும். அல்சர் கடுமையாகி விட்டது என்றால் ரத்த வாந்தி வரும். மலம் கறுப்பாகப் போகும்.
என்னென்ன பாதிப்புகள்?
வயிற்றில் எந்தப் பகுதியில் வலி வந்தால் என்ன பாதிப்பு என்பதைத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம்.
வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.
மேல்வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.
மேல் வயிற்றின் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரலில் பிரச்சினை இருக்கலாம்.
வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.
வலது பக்கத்தில் வலி என்றால், வலது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.
நடு வயிற்றின் மத்தியப் பகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்சினை என்று யூகிக்கலாம்.
அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல்வால் அழற்சி, வலது சிறுநீர்க் குழாய் கல், கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள்.
அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பைக் கோளாறு காரணமாகும்.
அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க் குழாய் கல் / இறங்கு குடல் கோளாறு இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.
எச்சரிக்கை: நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி ஏற்படவேண்டும் என்ற அவசியமில்லை. பதிலாக, நெஞ்சு எரிவது போலிருக்கும் அப்போது அதை அல்சர் வலியாக எண்ணிப் பலரும் அலட்சியப்படுத்திவிடுவார்கள். இவர்கள் நெஞ்சில் எந்த ஓர் அசவுகரியம் ஏற்பட்டாலும், உடனே மருத்துவரைப் பார்த்து விடுவது நல்லது.
முதுமையில் ரத்த அழுத்தம்
பொதுவாக, வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 160-க்கு அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 80-லிருந்து 90-க்குள்ளும் இருக்கும். இதற்கு தனித்த சிஸ்டாலிக் உயர் ரத்தஅழுத்தம் என்று பெயர். காரணம், வயதாக ஆக ரத்தக் குழாய்கள் கடினமாகி, தடிமனாகின்றன. ரத்த ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப அவை விரிந்து சுருங்கச் சிரமப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாயின் உள் அளவு குறைந்துவிடுகிறது. இப்படிக் குறைந்த இடைவெளி வழியாக ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு, இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்கிறது. இதனால், சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரிக்கிறது.
எல்லா வயதினருக்கும் 140 என்பதுதான் சிஸ்டாலிக் அழுத்தத்தின் எல்லை. ஏற்கெனவே இதயப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்றவை உள்ளவர்களுக்குச் சிஸ்டாலிக் அழுத்தம் 130 என்பதுதான் அதிகபட்ச அளவு. இந்த எல்லையைத் தாண்டினால் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்க வேண்டும். இப்படியே அழுத்தத்துடன் அது துடித்துக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் இதயச் சுவர் பலவீனம் அடைந்து, வீங்கிவிடும். அப்போது உடலுக்குத் தேவை யான ரத்தத்தை இதயத்தால் உட்செலுத்த முடியாது. முக்கியமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, கிறுகிறுப்பு, மயக்கம், நினைவு இழத்தல், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இந்த நிலைமை தொடர்ந்தால், இதயம் செயலிழக்கத் தொடங்கிவிடும். மாரடைப்பும் வரலாம். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். இந்த ஆபத்துகளைத் தவிர்க்கத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்.
ஸ்டெம் செல் விழிப்புணர்வு தேவை!
குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து பெறப் படும் ஸ்டெம்செல்களை சேமித்தல், சோதனை நடத்துதல் மற்றும் பாதுகாத்து வைப்பதற்கு உதவும் வகையில் சமூக ஸ்டெம்செல்வங்கித் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் இயக்குநரான மயூர் அபயா கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பெற் றோருக்கு மருத்துவ சிகிச்சையின்போது தேவைப் படும் பொருத்தமான ஸ்டெம்செல்களை உடனடி யாகவும், எளிதாகவும் பெறும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமே பயன்பெறுவதோடு சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கும்.
இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பிரசவத்தின்போதும் குழந்தைகளின் தெப்புள் கொடியினை சேகரித்து, பாதுகாப்பதற்கான வசதிகள் நம்மிடையே இல்லை. முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஸ்டெம்செல்கள் கிடைக்கக்கூடும்.குழந்தைகளின் ஸ்டெம்செல்களைத் கொடை அளிப்பது குறித்து தற்போதுதான் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை அதி கரிக்கும் வகையில் ஸ்டெம்செல்லின் தேவைகள் மற்றும் அவசியம் குறித்த பார்வையை பொது மக்களிடம் உண்டாக்க வேண்டும். அதற்குத் தேவையான, பாதுகாப்பதற்கான வசதிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் உலக அளவில் அதிகமான ஸ்டெம்செல் வழங்கும் நாடாக இந்தியா மாறும்.
இது உலக அளவில் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள், குடும்பத்தினர், சமூகத்தினர் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை பெறும் வாய்ப்பினையும் அதிகப்படுத்தும் என்றார்.
வெந்தயம்: மருத்துவ குணங்கள்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் அதிகம் பயிரிடப்படும் பயிராக வெந்தயம் விளங்குகிறது. சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ள வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது, மலத்தை இளக்குந்தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்குந்தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத் தையும், உஷ்ணத்தையும் போக்கக்கூடியது, வறட்சித் தன்மையை அகற்றக்கூடியது, காம உணர்வைப் பெருக்கக்கூடியது, அகட்டு வாய்வு அகற்றி, டானிக் போல உடலுக்கு உரமாவது!
வெந்தயத்தின் விதைகள் பசியின்மையையும், வயிற்று உப்பசத்தையும் போக்கவல்லது, பித்தத் தைச் சமன்படுத்தக்கூடியது, வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப்போக்கையும் போக்கக்கூடியது, சீத பேதியை நிறுத்தவல்லது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் கண்டவிடத்து அந்த வீக்கத் தைத் தணிக்கவல்லது, தாய்ப்பாலைச் சுரக்கச் செய் வது, குழந்தை பெற்ற இளந்தாய்மார்களுக்கு ஊட்டம் தரும் வகையில் டானிக்காகவும் அமை கிறது.
வெந்தயம் ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது, சீழ் பிடிப்பதைத் தடுக்கக்கூடியது என்பதை ஜெர்மானிய வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.ஆங்கில மூலிகை மருத்துவ அகராதி வெந்தயம் உள்ளழலை ஆற்றவல்லது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைக் குறைக்கவல்லது என்றும் பரிந்துரை செய்கிறது. சர்க்கரை நோய்க்கு ஒரு துணை மருந்தாகிறது, உணவு ஏற்றுக்கொள்ளாமை, கொழுப்புச்சத்து மிகுதல் ஆகியவற்றுக்கு மருந்தா கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது. வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், வயிற்றினை நிரப்பிய வாயு, நெஞ்சுச்சளி, நம்மைப் போராடச் செய்கிற குத்திருமல், வறட்டிருமல், சுவையின்மை, பசியின்மை இவை அனைத்தும் குணமாக்கும். உடலில் ஆரோக்கியத்தை அதி கரிக்கச் செய்வதால் வாழ்நாளை நீட்டிக்கும். ரத்தத் தில் உள்ள பித்தத்தைப் போக்கும், அகலாது நின்று துன்பந் தருகிற உடற்சூட்டினையும் தணிக்கும். எலும்பைப் பற்றிய காய்ச்சல் போகும், நாவறட்சி அகன்று போகும். புத்தியைத் தடுமாறச் செய்யும் குத்திருமல், வறட்டிருமல், கக்குவான் இருமல் ஆகியவற்றைத் தணிப்பதோடு கபத்தையும் வெளி யேற்றும் தன்மை கொண்டது.
-விடுதலை,29.5.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக