வியாழன், 15 பிப்ரவரி, 2018

50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!  


அய்ம்பது வயதுக்குப் பிறகு சிலருக்கு நினைவுத் திறன் குறைந்துவிடுவது ஏன்?

ஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும். இதை சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சினைகள் அல்லது அல்னசிர்  எனப்படும் ஞாபக மறதி பிரச்சினையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்தகைய ஞாபக மறதி ஏற்படலாம்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் செய்யும் வேலைகளில் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்தால் மறதியை கட்டுக்குள் வைக்கலாம். உதாரணமாக ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து முடித்து விடுவது நல்லது. பொருட்களையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த வேலையைச் செய்து முடித்ததும் அதில் ஒரு டிக் போடுங்கள்.

உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வைக்க வேண்டும். செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மை யாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலை நிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

போதுமான தூக்கத்தை பெறவில்லையெனில் மறதி அதிகரிக்கும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது.

சத்தான காய்கறிகள், பழங்கள், வால்நட், பாதாம் பருப்பு போன்றவை நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

- விடுதலை நாளேடு, 5.2.18

சிறுநீரக நோய்கள் யாரை அதிகம் பாதிக்கும்?


ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் 150 கிராம் எடை உடையது. அவரை விதை வடிவத்தில் உள்ள சிறுநீரகமானது உடலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும் இதன் முக்கியப் பணிகளாகும்.

சீறுநீரகத்தின் 
செயல்பாடுகள்

உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல்

நீர்நிலை சமப்படுத்துதல்

உப்பைச் சமப்படுத்துதல்

அமிலத்தன்மையை சமப்படுத்துதல்

ரத்தக் கொதிப்பை சீர் செய்தல்

தெரியுமா?

சிறுநீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன் ரத்த உற்பத்திக்கு காரணமாகிறது. வைட்டமின் டியின் உதவியால் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது

சிறுநீரகக் கோளாறின் 
அறிகுறிகள்

முகத்தில் வீக்கம்,  சிறுநீர்க் குறைவு

கால்களில் வீக்கம், சிறுநீரில் ரத்தம்

சிறுநீர் கழிப்பதில் சிரமம், பசியின்மை

வாந்தி, உடல் அழற்சி, தூக்கமின்மை

அரிப்பு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

பரிசோதனைகள்

மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் சில உங்களுக்கு இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி முதலில் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மருத்துவரின் பரிந்துரையின் படி மேற்கொள்ளவும்.

இதற்கான பரிசோதனைகள் சுலபமானது. குறைந்த செலவில் செய்து கொள்ள முடியும்.

யாரை அதிகம் 
பாதிக்கும்?

சர்க்கரை நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது வரும் வாய்ப்பு அதிகமுள்ளது.

தற்காப்பு

சீரான உணவு முறை சிறுநீரகப் பராமரிக்கு அனுகூல மானதாகும்

புகை பிடிப்பதை நிறுத்தவும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சுய மருத்துவம் ஒருபோதும் செய்யாதீர்கள். குறிப்பாக வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

உணவில் உப்பை குறைத்து சாப்பிடுங்கள்.

தினமும் நடப்பதோ அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்.

உங்கள் கவனத்துக்கு

ரத்த கொதிப்பு 120 / 180 வரை இருக்கலாம்

வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரை 110 /க்கு குறைவாக இருக்க வேண்டும்

ரத்தத்தில் கிரியாடினின் அளவு 0.6 - 1.2 / இருக்க வேண்டும்.

மருத்துவர் என்ன செய்வார்?

உங்களுக்கு சிறுநீரக கோளாறு வர வாய்ப்பு உள்ளதா என்று கூறுவார்.

ஆரம்ப நிலையில் நோயை கண்டுபிடிப்பார்.

சிறுநீரகங்களைப் பாதுகாக்க மருந்துகளை அளிப்பார்.

நோயை தடுக்கவும் பல நாட்களுக்கு தவிர்க்கவும் ஆலோ சனை அளிப்பார்கள்.

சிறுநீரகம் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், இலவசமாக கவுன்சிலிங் மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை செய்து கொள்ளவும் அம்பத்தூரில் இயங்கிவரும் டாங்கர் விழிப்புணர்வு அமைப்பை அணுகலாம். தொலைபேசி 044 - 2625 0727 / 4231 5115

- விடுதலை நாளேடு,5.2.18

வியாழன், 1 பிப்ரவரி, 2018

குதிகால் வலி ஏற்படுவது ஏன்?

தரையில் கால் வைக்கவே பயப்படும் அள வுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை

மிதித்ததுபோல் சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம் கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!
ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு பிளான் டார்ஃபேசியைட்டிஸ்  என்று பெயர்.

என்ன காரணம்?

குதிகால் எலும்பிலிருந்து பிளான்டார் அப்போ நீரோசிஸ் எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க பர்சா  எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு கால்கேனி யல்ஸ்பர் என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.
சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங் களாலும் இது வரலாம்.

யாருக்கு வருகிறது?

முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண் களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியான வர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிற வர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி வார்ம்அப் பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ஷாக் அப்சார்பர் வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் ( ஹவாய் செருப்புகள் ) இதற்கு உதவும்.

இன்றைய பெண்களில் பலரும் ஹைஹீல்ஸ் செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயர மான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டு களில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.அய். ஸ்கேன், யூரிக் அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப் பிடலாம்.
- விடுதலை நாளேடு, 29.1.18

பாதங்களில் வரும் பித்த வெடிப்புக்கு காரணமென்ன?

பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்த வெடிப்புகளைப் பித்த வெடிப்புகள் என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும்.

பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணி களை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்த வெடிப்பை வரவேற்கும்.

காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான்.

இந்தக் காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்துவிட்டால், பித்த வெடிப்புகளும் விடைபெற்றுவிடும்.

பித்த வெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால், விரைவில் குணமாகும். காலம் தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்றுவிடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அப்போது வலி ஏற்படும். காய்ச்சல், நெறி கட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிக மாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்தவெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும்.
- விடுதலை நாளேடு,29.1.18

மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவுகள்!



மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மார டைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் உணவில் அவ்வளவாக கவனம் செலுத்தி யிருக்க மாட்டோம். ஆயுளில் பாதியைக் கழித்து விட்டோம். இனிமேல் வாழ்க்கை முறையை மாற்றி என்ன செய்யப் போகிறோம்? என்று அலுத்துக்கொண்டே சாப்பிட்டிருப்போம். மாரடைப்பு வந்த பின்னர் உயிர் பயம் வந்திருக்கும். அப்போது கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு சாப்பிடுவோம். அவ்வளவுதான் வித்தியாசம்!

இதயம் காக்கும் உணவு வகைகள்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப் பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய் கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண் டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக் கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.

அசைவம் விரும்புபவர்கள் தோல் நீக் கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெய்யில் பொரிக் காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.

தினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.

எண்ணெய் விசயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.

வேண்டாம் என சொல்லுங்கள்!

பாமாயில், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை, பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள், ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

உப்பின் அளவு எச்சரிக்கை!

உணவில் உப்பின் அளவு முக்கியம். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும். நாம் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக உப்பு நம் உடலுக்குள் சேர்வதைவிட, பல உணவு வகைகளில் மறைந்திருக்கும் உப்பு நமக்கே தெரியாமல் சேர்வதுதான் அதிகம். முக்கிய மாக, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப் படும் உணவுகள் போன்றவற்றில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் உப்பு உள்ளது. இவற்றைத் தவிர்க்க வேண்டும். தவிரவும் ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு மிகுந்த உணவைக் குறைத்துக்கொள்வதும் நல்லது.

- விடுதலை நாளேடு,29.1.18

திங்கள், 22 ஜனவரி, 2018

இளமையில் முடி உதிர்தல்- நரை வருவது ஏன்?


இளம் வயதிலேயே முடி உதிர்வதற்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். அதைச் சரிப்படுத்தினால் முடி உதிர்வது நின்றுவிடும். உங்கள் வயதில் முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்களைப் பார்ப்போம்.

முடி வளர்வதற்குப் புரதச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, துத்தநாகச்சத்து, அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயோட்டின் மற்றும் வைட்டமின்  சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதே னும் ஒரு சத்து குறைந்தாலும் முடி உதிரத் தொடங்கி விடும். அதிலும் இரும்பும் புரதமும் உடலின் தேவைக்கு இல்லையென்றால், முடி உதிர்வது உறுதி.

ஈஸ்ட்ரோஜன், தைராக்சின் போன்ற ஹார் மோன்களின் குறைபாடுகளால் தலைமுடி உதிர் கிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைமுடி உதிரும். சமீபத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை நோய் போன்றவை பாதித்தி ருந்தால் தலைமுடி உதிரலாம். முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு முக்கியக் காரணம்தான்.
குளித்தபின் ஈரம் காய்வதற்குள் தலைவாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்பு களைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலை முடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதை ஊக்குவிக்கின்றன.

இளநரை விழுவது ஏன்?

இளநரைக்கு வம்சாவளி ஒரு முக்கியக் காரணம். உங்களுக்கு இந்த மாதிரி இளநரை வந்திருக்கு மானால், அதற்குச் சிகிச்சை பயன் தராது. தலைச் சாயம்தான் தீர்வு. ஆனால், வைட்டமின் குறைவு, தாதுச்சத்துக் குறைவு, பிட்யூட்டரி பிரச்சினை, தைராய்டு பிரச்சினை போன்றவை காரணமாக இளமையில் நரை ஏற்பட்டிருந்தால், அதைக் குணப் படுத்த முடியும். பயாட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் பென்டோதினேட், பி.ஏ.பி.ஏ , துத்தநாகம் போன்ற பல சத்துகள் கலந்த மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டுவர, இளநரை மறையும். தைராய்டு பிரச்சினை உள்ளதா எனப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் கால் மணி நேரமாவது வெயிலுக்குச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் படுங்கள்.

நீங்கள் தற்போது சாப்பிட்டு வரும் மாத்திரை களால் பக்கவிளைவுகள் ஏற்படாது. அதிக குளோ ரின் கலந்த தண்ணீரிலோ உப்புநீரிலோ குளித்தால், முடி உதிர வாய்ப்புண்டு. மென்மையான தண்ணீரில் குளித்தால் நல்லது.

- விடுதலை நாளேடு, 22.1.18

வாய்ப்புண்ணுக்கு காரணம் என்ன?


வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களை முதலில் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள், ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.

எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

நீங்கள் வேறு ஊருக்கு மாறிச் செல்லும் பொழுது அங்குள்ள சுற்றுப்புறத்திலிருந்து சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், அமிலம் கலந்த புகைகள், தொழிற்சாலை நுண்துகள்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தாக்கும் வாய்ப்பிருந்தாலும் வாயில் புண் வர வாய்ப்பிருக்கிறது.

சரியான உறக்கம் இல்லையென்றாலும், அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். கவலை, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். அந்த அதீத அமிலம் உறக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாக, செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்கன்னத்தைக் குத்திப் புண் உண்டாக வாய்ப்பு உண்டு.

அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். வலிப்பு நோய் மாத்தி ரைகள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. திடீரென உடல் எடையைக் குறைத் தாலும் வாய்ப்புண் வர வாய்ப்பிருக்கிறது. மூட்டுவலி, சுயத்தடுப்பாற்றல் நோய், ஹார் மோன்களின் மாற்றம் ஆகிய காரணங் களாலும்

வாய்ப்புண் ஏற்படுவது உண்டு.

உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாயில் புண் வருகிறது என்று தெரிந்து சிகிச்சை பெறுங்கள்.

வாய்ப்புண்ணில் சில வகைகள் உள்ளன. அதன் வடிவத்தைப் பார்த்தே பெரும்பாலான வாய்ப்புண்களுக்குக் காரணத் தைச் சொல்லி விடலாம். இதற்கு மருத்துவரின் நேரடிப் பரிசோதனைதான் உதவ முடியும்.

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகிவிடும். அதே நேரத் தில் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறு வதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, வாய்ப்புண் தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

என்ன சிகிச்சை?

மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்
டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். சோடியம் லாரில் சல்பேட்  கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

இந்த உணவுகள் முக்கியம்!

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல் லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகிய வற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படு வதை நிச்சயம் தடுக்கலாம்.

- விடுதலை நாளேடு, 22.1.18