வெள்ளி, 17 டிசம்பர், 2021
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ எண்கள் இவை..
வெள்ளி, 3 டிசம்பர், 2021
சிறுநீரகக் கற்கள்மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (42)
சிறுநீரகக் கற்கள்
(KIDNEY STONES)
மரு.இரா.கவுதமன்
அறுவை மருத்துவம்: பல நேரங்களில் அறுவை மருத்துவம் மூலமே, கற்களை நீக்க வேண்டிய நிலையும் உண்டாகும். மருந்துகளால் வெளியேற்ற முடியாத நிலையில் அறுவை மருத்துவம் தேவையானதாகும். சிறு நீரகத்திலோ, சிறு நீர்க் குழாய்களில் உள்ள கற்கள், சிறுநீரில் வெளியேறாவிட்டாலும், அளவில் மிகவும் பெரியதாக இருந்தாலும், வலி திடீரென உண்டாகி, மிகவும் அதிகமாக இருந்தாலும், கற்கள் சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதித்தாலும், சிறியதாக உருவான கற்கள், பெரிதாகும் வாய்ப்பு இருப்பின் அறுவை மருத்துவம் தேவையாகும். சிறுநீர்க் குழாயில் கற்கள் அடைத்துக் கொள்ளும் நிலை சில நேரங்களில் தோன்றக் கூடும். அதனால் சிறுநீர் வெளியேறாமல் அடைத்துக் கொள்ளும். அப்பொழுதும் அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இருக்கும்.
அதிர்வலை உடைப்பு (Shock Wave Lithotripsy):
சிறுநீரகத்திலோ, சிறுநீர்க் குழாய்களிலோ உருவாகி உள்ள பெரும் கற்களை, ஊடுகதிர் மூலமோ, மீள் ஒலிப்பதிவு மூலமோ துல்லியமாகக் கண்டறிந்து அதிர்வலைகளை கற்கள் மேல் பாய்ச்சுவர். அதனால் பருமனான கற்கள் சிறிய அளவாகி விடுவதால் சிறுநீரில் எளிதாக வெளியேறிவிடும். கற்களின் அளவு பெரிதாக இருந்தாலும், மிகக் கடினமான, (உடைக்க முடியாத) கற்களையும், அதிர்வலை உடைப்புக்காகக் கொடுக்கும் மருந்துகளால் மூச்சுத் திணறல் உண்டானாலும் இவ்வகை மருத்துவம் செய்ய முடியாது.
அதிர்வலை உடைப்பு மிகவும் எளிதான, பயனுள்ள மருத்துவமாகும். மருத்துவம் முடிந்த அன்றே வீட்டுக்குச் சென்றுவிடலாம். வழமையான பணிகளில் இரண்டு, மூன்று நாள்களில் ஈடுபடலாம். மருத்துவர்கள் சிறுநீரை சிறிய குடுவையில் பிடிக்கச் சொல்வர். அதன்மூலம் கற்கள் வெளியேறுவதை அறிய முடியும். அக்கற்களை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யும் வாய்ப்பு இதன்மூலம் ஏற்படும்.
அதிர்வலை உடைப்பு மருத்துவம் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பினும் சிலருக்கு, சில நேரங்களில், சில நாள்கள் வரை சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும். பெரும்பாலும் வெற்றிகரமான மருத்துவ முறையாக இது இருந்தாலும், சில நேரங்களில் கற்கள் முழுமையாக உடையாமல், அளவு முழுமையாகக் குறையாமல் அடைப்பை உண்டாக்கிவிடும். அந்த நேரங்களில் மீண்டும் ஒரு முறை மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
சிறுநீர்க்குழாய் உள்நோக்கி (Urethroscopy):
சிறுநீரகக் கற்களையும், சிறுநீர்க் குழாயில் உள்ள கற்களை அகற்றவும் சிறுநீர்ப்பை (Bladder) வழியே சிறுநீர்க் குழாய் வரை செலுத்தி, அதன்மூலம் கற்களை அகற்றுவர். சிறுநீர்க் குழாய் முடிவில் சிறுநீர்ப் பையின் அருகில் இருக்கும் கற்கள் சற்றே கடினமான குழாய்மூலமும், சிறுநீர்க் குழாயின் மேற்பகுதியிலும், சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை மென்மையான குழாய் மூலமும் மருத்துவர்கள் அகற்றுவர். உள்நோக்கி மூலம் கற்களைக் கண்டறிந்து அதை சிறிய பிடிப்பான் மூலம் அகற்றிவிடுவர். சற்றே பெரிய கற்களை உடைத்து உள்நோக்கிக் குழாய் மூலமே அகற்றிவிடுவர். இம்மருத்துவம் முடிந்ததும், சிறுநீர்க் குழாயில் ஓர் உறைக்குழாயைப் (Stent) பொருத்திவிடுவர். இதன்மூலம் சிறுநீர் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி, சிறுநீர்ப் பைக்கு வந்து சேரும். வெளிப்புற சிறுநீர்க் குழாய் பொருத்துதல் இதன்மூலம் தவிர்க்கப்படுகிறது. இம்மருத்துவம் முடிந்ததும் அன்றே வீட்டுக்குச் செல்லலாம். ஆனால், உறைக் குழாய் ஒருவாரம் முதல் பத்து நாள்கள் வரை அதே இடத்தில் இருக்கும். பிறகு மருத்துவர் அதை எடுத்து விடுவார். அந்த உறைக் குழாயோடு ஒரு மெல்லிய நூலிழை இருக்கும். அதன்மூலம் நோயாளியே அதை எடுக்கும் வசதியும் உண்டு. நீண்ட நாள்கள் அவ்வுறைக் குழாயை எடுக்காமல் விட்டுவிட்டால் நோய்த் தொற்று ஏற்படக்கூடும்.
தோல்வழியாக சிறுநீரகக் கற்கள் அகற்றுதல்:
இம்மருத்துவ முறை மற்ற முறைகளில் செய்ய முடியாத நிலையில் செய்யப்படும் அறுவை மருத்துவம். இம்முறையில் தோல் வழியே, நேரடியாக, ஒரு குழாயைச் சிறுநீரகத்தில் செலுத்தி, கற்களை அகற்றுவார்கள். பெரும்பாலும் மற்ற வகையில் அகற்ற முடியாத அளவில் பெரிய கற்களை இம்முறை மூலம் அகற்றுவார்கள். மருத்துவமனையில் இரண்டு, மூன்று நாள்கள் இருந்து மருத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பக் காலங்களில் மிகவும் சவாலாக இருந்த சிறுநீரகக் கற்கள் அகற்றும் மருத்துவம் இன்று மிகவும் எளிமையான ஓர் அறுவை மருத்துவ முறையாக மாறிவிட்டது. முன்-பெல்லாம் தோலைக் கீறி, சிறுநீரகம் சென்று அகற்றப்பட்ட கற்கள், குழாய்கள் மூலம் அகற்றப்பட்டன. ஆனால், வலியற்ற, மருத்துவ-மனையில் தங்கக் கூட தேவையற்ற எளிதான மருத்துவமாக இன்று சிறுநீரகக் கற்கள் அகற்றும் மருத்துவம் மாறியிருப்பது புதிய மருத்துவத் துறை சாதனையன்றோ!
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்கும் வழிமுறைகள்:
அதிக அளவு குடிநீர் குடிப்பது, மிகவும் நல்ல உணவுப் பழக்கம் இதன்மூலம் தேவையற்ற கழிவுகள் கரைக்கப்பட்டு சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்பட வாய்ப்பு ஏற்படும்.
அதிக அளவு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.
முட்டை, இறைச்சி உணவு வகைகள் யூரிக் அமிலம் உண்டாக்கும் தன்மை உடையதால் அவற்றைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
ஆரம்ப நிலை மருத்துவம் _ சிறந்த பலனைத் தரும்.ஸீ
-உண்மை இதழ், நவம்பர் 16-30.2021
வெள்ளி, 22 அக்டோபர், 2021
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை!
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி
அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில்
மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது.
அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள்
பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.
பன்றியின் சிறுநீரகம் அவரின் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு,
உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால்
உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது.
சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று
ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.
மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும்,
கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர்,
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும்,
லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில்,
உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது,
வியாழன், 7 அக்டோபர், 2021
பெண்களின் மாதாந்திர பிரச்சினைக்குத் தீர்வு!
பெண்களின் மாதாந்திர பிரச்சினை மாதவிலக்கு. சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்...
* முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம் இதனால் வயிற்றுவலி குறையும்.
* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும். சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.
* வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
அது என்ன ஆன்டி ஆக்சிடன்ட்?
உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று ஆன்டி ஆக்சிடென்ட். இது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் மற்றும் செல்களில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும். சேதமடைந்த செல்களுடன் போராட உடலுக்கு உதவுகிறது. உடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் செய்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் கேன்சர் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. செல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றது. வைட்டமின் ஏ, இ, சி நிறைந்துள்ள உணவுகளில், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளும்போது நமக்கு அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சி டென்ட்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
கேரட், கீரை, ப்ரக்கோலி, முட்டை, பட்டாணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும் போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டை தருகிறது.
புதன், 1 செப்டம்பர், 2021
கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை... தவிர்க்க வேண்டிய உணவுகள்...
நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.
கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த சிவப்பு அணுக்கள் உடைந்துபோகும்போது மஞ்சள் நிறமியான பிலிரூபின் வெளியாகுவது மஞ்சள் நிற மாற்றத்திற்கு காரணமாகும். இது கல்லீரலின் ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறியாகவும் அமையும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் மருந்து மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் மஞ்சள் காமாலையை குணப்படுத்திவிடலாம். வேறு சில நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.
கொழுப்பு: மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணெய் சேர்க்கப்படாத உணவை உட்கொள்வது நல்லது. ஏனெனில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச்செய்துவிடும். குறிப்பாக வெண்ணெய், பால் பொருட்கள், இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்பு கலந்த உணவுகள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானவை. அதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் மஞ்சள் காமாலை இருக்கும்போது குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.
சர்க்கரை: இனிப்பு பிரியர்களுக்கு மஞ்சள் காமாலை கடினமான காலகட்டமாகவே அமையும். ஏனெனில் அந்த சமயத்தில் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்யும். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும். ஆதலால் எந்தவகையிலும் சர்க்கரை கலக்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.
உப்பு: உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் அது உடலில் உள்ள நீரில் படிந்துவிடும். கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதில் இருக்கும் சோடியம்தான் அதற்கு காரணம். ஆதலால் கல்லீரலை பாதுகாக்க உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக வெங்காய தூள், பூண்டு தூள் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.
இரும்பு: மஞ்சள் காமாலை இருக்கும்போது உடலில் இரும்புச்சத்து அதிகரிப்பது கல்லீரலுக்கு மோசமானது. இரும்புச்சத்து முக்கியமானது என்றாலும் இந்த காலகட்டத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதத்தில் இரும்புச்சத்து கலந்திருக்கும். ஆதலால் புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
காய்கறிகள்: கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலி பிளவர், பிராக்கோலி, எலுமிச்சை, கீரை, பீன்ஸ், பூண்டு, மஞ்சள், அவகொடோ, ஆப்பிள், வால்நெட் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
தைராய்டு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின் பின்னால் ஓடி, பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்களைக் கைவிட்டதன் விளைவாக ஆரோக்கியம் இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல நூறு நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று.
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.
இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்று நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள அய்போதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம்.
உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தைராய்டு பாதிப்பு வராமல் தடுக்க, சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால் தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.



