வியாழன், 22 ஜூன், 2017

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது..

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார்.

நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

*ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R  அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*

*TALK (பேச சொல்வது),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* 👆இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.

அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 👍🙋🏼‍♂

வெள்ளி, 16 ஜூன், 2017

மரபணு மாற்றம் மூலம் புற்றுநோயை சரி செய்யலாம்: 

லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு



புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை மரபணுவை மாற்றும் முறை மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

உடலின் எந்தப் பாகத்தில் வரும் புற்றுநோயாக இருந்தாலும் அதன் முக்கிய கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கக் கூடிய மரபணுவை மாற் றுவது, மேற்கொண்டு புற்றுநோய் கட்டி உருவாவதை தடுக்கும். முதற்கட்டமாக எலிகளின் மீது இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டதில், இது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று உறுதிபடுத்த பட்டுள்ளது.

கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியரான ஜூஸ்ஸி டைபல் இதைப்பற்றிக் கூறுகையில், சாதாரண மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான உயிரணுக்கள் தனித்தனியே வளர்கிறது என்று நாங்கள் கண்டுபிடித்தவுடன் புற்றுநோய்க்கான மர பணுவை மட்டும் மாற்றுவது சாதாரண உயிரணுக் களின் வளர்ச்சிக்கு எந்த அபாயமும் விளை விக்காததோடு, புற்றுநோயைத் தடுக்கவும் செய்யும் என்று தெரியவந்துக் கொண்டோம் என்றார்.

மேலும் இது மிகவும் குறைவான நச்சுத்தன்மை வாய்ந்த தாகவும் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோயின் சிகிச்சைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வில் மார்பக, பெருங்குடல், சிறுநீரக பை, தைராய்டு புற்றுநோய்கள் மற்றும் நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியா மற்றும் மைலோமா போன்ற பல வகையான புற்றுநோய் களுக்கு இத னால் தீர்வு காணமுடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-விடுதலை,8.6.17

வியாழன், 15 ஜூன், 2017

கழுத்து வலிக்குத்  தலையணை வைத்துப் படுக்கலாமா?



சுகமான உறக்கத்துக்குப் படுக்கையும் தலையணையும் சரியாக அமைய வேண்டும். முக்கியமாக, கழுத்து எலும்புகளையும் நரம்புகளையும் வளைவுகளையும் சரியான உயரத்திலும் கோணத்திலும் தாங்கும் வகையில் தலையணை இருக்க வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும். அவரவர் விருப்பத்துக்குத் தலையணை வைத்துக்கொண்டால், உறக்கம் வராமல் தவிப்பதற்கு தலையணையும் ஒரு காரணமாகிவிடும்.

பொதுவாக, ஒரு டர்க்கி டவல் அளவுக்கு மென்மை யான துண்டை, நான்காக மடித்தால் வரும் உயரம் போதும். இன்னும் தேவைப்பட்டால், சிறிய துண்டு ஒன்றைத் தலையணையின் மேல் விரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு கையை மடக்கித் தலையணையில் வைத்துக் கொள்ளலாம்.

மிருதுவான தலையணையைப் பயன்படுத்த வேண் டியது முக்கியம். இரண்டு தலையைணைகளை வைத்துக் கொள்வது, உயரம் அதிகம் கொண்ட தலையணை அல்லது கெட்டியான தலையைணையைப் பயன்படுத்துவது போன் றவற்றால் மட்டுமே பிரச்சினைகள் ஏற்படும்.

சிறு குழந்தைகளுக்கு எலும்புகள் மென்மையாக இருக்கும். இவர்களுக்கு உயரமான தலையணையும் ஆகாது. கரடுமுரடான தலையணையும் கூடாது. மிகவும் குறைந்த உயரமுள்ள இலவம் பஞ்சுத் தலைணையைப் பயன்படுத்தினால் நல்லது.

கழுத்துவலி உள்ளவர்கள் தலையணையைத் தவிர்ப் பதே நல்லது. இது எல்லோருக்குமான பொதுவான ஆலோசனை. இதைப் பின்பற்ற முடியாதவர்கள், சிறிய தலையணையைக் கழுத்துக்கு வைத்துக் கொள் வதோடு, சிறிது இறக்கி, தோள்களுக்கும் சேர்த்து வைத்துக் கொண்டால், கழுத்துத் தசைகளுக்கு முழுவதுமாக ஆதாரம் கிடைக்கும். இதனால், கழுத்து வலி குறைய வாய்ப்புண்டு. செர்விகல் தலையணை  என்ற பெயரில் சிறப்புத் தலை யணை உள்ளது. மருத்துவர் ஆலோசனைப்படி அதையும் பயன்படுத்தலாம்.

கழுத்துவலி உள்ளவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால் கழுத்துத் தசைகளுக்கு அழுத்தம் அதிகரித்து கழுத்துவலி கடுமையாகிவிடும். காற்றடைத்த தலையணைகளைக்  கழுத்துவலி உள்ளவர்கள் கண்டிப் பாகப் பயன்படுத்தக்கூடாது. அடுத்து, கழுத்துவலி உள்ள வர்களுக்கு முதுகுவலியும் இருக்குமானால், முழங்காலுக்கு அடியில் சிறு தலையணை ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.

உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.

இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது; கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம்.

உடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலை யணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபட லாம். இதனால் உறக்கம் கெடலாம்.

குறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும் புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது. மற்றவர்கள் தலையணையைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை.

-விடுதலை,12.6.17

நடைப்பயிற்சியால் நல்ல கொழுப்பு கூடுமா?



உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை; இது புரதத்துடன் இணைந்து கொழுப்புப் புரதமாக’   மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும்; அதிகரித்தால், ஆபத்து காத்திருக்கும்.

கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல்.  என மூன்று வகைப்படும்: இவற்றில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. ரத்தத்தில் எல்.டி.எல். 100 மி.கி./ டெ.லி.க்குக் குறைவாகவும், வி.எல்.டி.எல். 25 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். அளவு அதிகரித்தால், இவை இரண்டும் கல்லீரலிலிருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் கெட்ட கொழுப்பு’ என்கிறோம்.

அதேவேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. எப்படி? இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத்துச் சென்று கரைத்துவிடுகிறது. இதன்மூலம் இதயத் தமனியைக் கொழுப்பு அடைப்பதைத் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாப்பு தருகிறது. ஆகவே, இதற்கு நல்ல கொழுப்பு’ என்று பெயர். இது ரத்தத்தில் ஆண்களுக்கு 40 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 55 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

கொழுப்பு என்றாலே அது இதயத்தை மட்டும் தாக்கும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. அது மூளையைத் தாக்கிப் பக்கவாதத்தை ஏற்படுத்தும்; சிறுநீரகத்தைப் பாதிக்கும்; கல்லீரலைக் கெடுக்கும்; கை, கால் ரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டால், கை, காலை அகற்ற வேண்டிவரும். எனவே, ரத்தக் கொழுப்பைக் குறைத்தால், இதயம் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கு முதல் வழி தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தினமும் 45 நிமிடங்கள் வீதம் குறைந்தது வாரத்துக்கு அய்ந்து நாட்களுக்குத் தொடர்ந்து தீவிர நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது கல்லீரலில் ஹெச்.டி.எல்.லை சுரக்கிற என்சைம்கள் தூண்டப்படுகின்றன. இதன் பலனால் இரண்டு மாதங்களில் 5%, ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். மேலும், நல்ல நடைப்பயிற்சி உடல் எடையையும் குறைக்கும். அப்போது, 3 கிலோ எடை குறைந்தால் 1% ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். நடைப்பயிற்சியின்போது மன அழுத்தம் குறைவதால், சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்துக் கல்லீரல் என்சைம்களைத் தூண்டுகின்றன. அப்போது ஹெச்.டி.எல். அதிகரிக்கிறது. என்றாலும், நல்ல கொழுப்பை அதிகரிக்க இவை மட்டுமே போதாது.

உடல் எடை சரியாக இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. மது ஆகாது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். ஸ்டேட்டின்’ மாத்திரைகளைச் சாப்பிடலாம். செக்கில் ஆட்டப்பட்ட தாவர எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண் ணெய், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்துள்ள பட்டாணி, அகத்திக்கீரை, அவரைக்காய், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழிகளும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்.

முட்டை, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, நெய், வெண்ணெய், பாலாடை, தயிர், இனிப்பு உணவுகள், ஐஸ்கிரீம், பீட்ஸா, பர்கர், கிரீம் கேக், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இவற்றை அடிக்கடி சாப்பிடாதீர்கள். வனஸ்பதி, பாமாயில் பயன்பாட்டைத் தவிருங்கள். வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, மிக்சர், முறுக்கு, காரச்சேவு, சீவல், சிப்ஸ், முட்டை போண்டா போன்ற நொறுக்குத்தீனிகளுக்கும், குக்கீஸ், வேஃபர், நூடுல்ஸ், கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற உடனடி உணவுகளுக்கும் துரித உணவுகளுக்கும் விடை கொடுங்கள். இவற்றில் ஊடுகொழுப்பு அதிகம். அது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.
-விடுதலை,12.6.17

புதன், 7 ஜூன், 2017

வலிப்பு வந்தால் இரும்பைத் தருவது சரியா..?



வலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி அல்லது ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று நம்பி செய்கிறார்கள். அது சரியா?

என்றால் அது அறவே சரியில்லை.

சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.

இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப்பதால், மக்கள் இதை சரியென்று நம்புகின்றனர். பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகும்.

இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை.

வலிப்பு எப்படி வருகிறது?

மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

எதனால் வருகிறது?

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வரக் காரணமாகின்றன.

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக பொய் வலிப்பு (Pseudo seizure) வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு!

குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்?

ஒருவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்ட-வற்றைப் பின்பற்றலாம்:

¨    அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.

¨    சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து 'டை' போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

¨    மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

¨    அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்-படுத்துங்கள்.

¨    மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.

¨    உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

¨    ஒருவருக்கு வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?

¨    அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.

¨    வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

¨    வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.

¨    முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.

¨    மூக்கில் வெங்காயச் சாற்றை ஊத்துவதும் கூடாது. 
-உண்மை,16-31.5.17

சிறுநீரகக் கல் சில விளக்கங்கள்

சிறுநீரகக் கல் என்பது எது?

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சில நேரங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறு வதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புக்கள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

காரணம் என்ன?

சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர்வறட்சி, தவறான உணவு முறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடற்பருமன், பரம்பரை  போன்றவை  சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

கற்கள் என்ன செய்யும்?

விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக, சிறுநீரகப் பாதையில் உருவாகின்ற கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பயப்பட வேண்டாம். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ஆபத்துகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக  வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக்கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளலாம்.

சிறுநீரகக் கல்லின் வகைகள்

கால்சியம் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், சிஸ்டின் கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் என சிறுநீரகக் கற்கள் 4 வகைப்படும். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பெரும்பாலோருக்கு இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட் மற்றும் கால்சியம் பாஸ்பேட் எனும் வேதியமைப்பில் இருக்கும். ஆக்சலேட் என்பது பசலைக்கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப்பருப்பு, மீன், இறைச்சி, சாக்லெட் போன்ற பல உணவுகளில் அதிகமுள்ளது.

கீல் வாதப்பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் உருவாகின்றன. உணவில் உள்ள பியூரின் எனும் சத்து வளர்சிதைமாற்றம் அடையும்போது ஏற்படும் கோளாறு காரணமாக இவ்வகைக் கற்கள் உண்டாகின்றன. மேலும் புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் இறைச்சி உணவுகளையும் அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இவ்வகைக் கற்கள் ஏற்படுவதுண்டு. சிஸ்டின் கற்கள் பரம்பரை வழியாக வருவது. இவர்களுடைய சிறுநீரகங்கள் சிஸ்டின் எனும் அமினோ அமிலத்தைச் சிறுநீரில் ஒழுகவிடும். அப்போது அது சிறுநீரகப் பாதையில் படிகங்களாகப் படிந்து கற்களாக உருவாகிவிடும். ஸ்ட்ரூவைட் கற்கள், சிறுநீரகத்தில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவதன் காரணமாக தோன்றுகின்றன.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையை குறைத்துவிடும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும். அடுத்து கல் உருவாவதும் தடுக்கப்படும். கீரைகளில் முடக்கத்தான் கீரையில் மட்டுமே கால்சியம் இல்லை. இதை உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதை சாப்பிடக் கூடாது?

காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது. உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். பால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. தினமும் 200லிருந்து 400 மல்லி வரை பால் அருந்தலாம். இதுபோல்,   கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. அல்சர் நோய்க்குத் தரப்படும் ஆன்டாசிட் திரவ மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்காமல் சுயமாகச் சாப்பிடாதீர்கள். இவற்றிலும் கால்சியம் உள்ளது.

உப்பைக் குறைக்கவும்!

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்கு தினமும் 2.5 கிராம் உப்பு போதும். சமையல் உப்பு என்பது வேதிப் பண்பின்படி சோடியம் குளோரைடு. சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

வெயிலில் அலையாதீர்கள்!

பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர்வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால், குடை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. வெயிலில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியதிருந்தால், கண்களுக்கு சன் கிளாஸ் அணிந்து கொள்ளலாம்

நிறைய தண்ணீர் அருந்துங்கள்!

வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம் (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்). பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவுகளை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன இதன் மூலம் சிறுநீரகக் கற்கள் சுலபமாகக் கரைந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

 -உண்மை,1-15.5.17