புதன், 7 ஜூன், 2017

சிறுநீரகக் கல் சில விளக்கங்கள்

சிறுநீரகக் கல் என்பது எது?

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சில நேரங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறு வதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புக்கள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

காரணம் என்ன?

சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர்வறட்சி, தவறான உணவு முறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடற்பருமன், பரம்பரை  போன்றவை  சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

கற்கள் என்ன செய்யும்?

விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக, சிறுநீரகப் பாதையில் உருவாகின்ற கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பயப்பட வேண்டாம். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ஆபத்துகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக  வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக்கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளலாம்.

சிறுநீரகக் கல்லின் வகைகள்

கால்சியம் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், சிஸ்டின் கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் என சிறுநீரகக் கற்கள் 4 வகைப்படும். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பெரும்பாலோருக்கு இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட் மற்றும் கால்சியம் பாஸ்பேட் எனும் வேதியமைப்பில் இருக்கும். ஆக்சலேட் என்பது பசலைக்கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப்பருப்பு, மீன், இறைச்சி, சாக்லெட் போன்ற பல உணவுகளில் அதிகமுள்ளது.

கீல் வாதப்பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் உருவாகின்றன. உணவில் உள்ள பியூரின் எனும் சத்து வளர்சிதைமாற்றம் அடையும்போது ஏற்படும் கோளாறு காரணமாக இவ்வகைக் கற்கள் உண்டாகின்றன. மேலும் புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் இறைச்சி உணவுகளையும் அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இவ்வகைக் கற்கள் ஏற்படுவதுண்டு. சிஸ்டின் கற்கள் பரம்பரை வழியாக வருவது. இவர்களுடைய சிறுநீரகங்கள் சிஸ்டின் எனும் அமினோ அமிலத்தைச் சிறுநீரில் ஒழுகவிடும். அப்போது அது சிறுநீரகப் பாதையில் படிகங்களாகப் படிந்து கற்களாக உருவாகிவிடும். ஸ்ட்ரூவைட் கற்கள், சிறுநீரகத்தில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவதன் காரணமாக தோன்றுகின்றன.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையை குறைத்துவிடும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும். அடுத்து கல் உருவாவதும் தடுக்கப்படும். கீரைகளில் முடக்கத்தான் கீரையில் மட்டுமே கால்சியம் இல்லை. இதை உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதை சாப்பிடக் கூடாது?

காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது. உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். பால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. தினமும் 200லிருந்து 400 மல்லி வரை பால் அருந்தலாம். இதுபோல்,   கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. அல்சர் நோய்க்குத் தரப்படும் ஆன்டாசிட் திரவ மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்காமல் சுயமாகச் சாப்பிடாதீர்கள். இவற்றிலும் கால்சியம் உள்ளது.

உப்பைக் குறைக்கவும்!

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்கு தினமும் 2.5 கிராம் உப்பு போதும். சமையல் உப்பு என்பது வேதிப் பண்பின்படி சோடியம் குளோரைடு. சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

வெயிலில் அலையாதீர்கள்!

பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர்வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால், குடை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. வெயிலில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியதிருந்தால், கண்களுக்கு சன் கிளாஸ் அணிந்து கொள்ளலாம்

நிறைய தண்ணீர் அருந்துங்கள்!

வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம் (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்). பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவுகளை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன இதன் மூலம் சிறுநீரகக் கற்கள் சுலபமாகக் கரைந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

 -உண்மை,1-15.5.17


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக