வியாழன், 15 ஜூன், 2017

கழுத்து வலிக்குத்  தலையணை வைத்துப் படுக்கலாமா?



சுகமான உறக்கத்துக்குப் படுக்கையும் தலையணையும் சரியாக அமைய வேண்டும். முக்கியமாக, கழுத்து எலும்புகளையும் நரம்புகளையும் வளைவுகளையும் சரியான உயரத்திலும் கோணத்திலும் தாங்கும் வகையில் தலையணை இருக்க வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும். அவரவர் விருப்பத்துக்குத் தலையணை வைத்துக்கொண்டால், உறக்கம் வராமல் தவிப்பதற்கு தலையணையும் ஒரு காரணமாகிவிடும்.

பொதுவாக, ஒரு டர்க்கி டவல் அளவுக்கு மென்மை யான துண்டை, நான்காக மடித்தால் வரும் உயரம் போதும். இன்னும் தேவைப்பட்டால், சிறிய துண்டு ஒன்றைத் தலையணையின் மேல் விரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு கையை மடக்கித் தலையணையில் வைத்துக் கொள்ளலாம்.

மிருதுவான தலையணையைப் பயன்படுத்த வேண் டியது முக்கியம். இரண்டு தலையைணைகளை வைத்துக் கொள்வது, உயரம் அதிகம் கொண்ட தலையணை அல்லது கெட்டியான தலையைணையைப் பயன்படுத்துவது போன் றவற்றால் மட்டுமே பிரச்சினைகள் ஏற்படும்.

சிறு குழந்தைகளுக்கு எலும்புகள் மென்மையாக இருக்கும். இவர்களுக்கு உயரமான தலையணையும் ஆகாது. கரடுமுரடான தலையணையும் கூடாது. மிகவும் குறைந்த உயரமுள்ள இலவம் பஞ்சுத் தலைணையைப் பயன்படுத்தினால் நல்லது.

கழுத்துவலி உள்ளவர்கள் தலையணையைத் தவிர்ப் பதே நல்லது. இது எல்லோருக்குமான பொதுவான ஆலோசனை. இதைப் பின்பற்ற முடியாதவர்கள், சிறிய தலையணையைக் கழுத்துக்கு வைத்துக் கொள் வதோடு, சிறிது இறக்கி, தோள்களுக்கும் சேர்த்து வைத்துக் கொண்டால், கழுத்துத் தசைகளுக்கு முழுவதுமாக ஆதாரம் கிடைக்கும். இதனால், கழுத்து வலி குறைய வாய்ப்புண்டு. செர்விகல் தலையணை  என்ற பெயரில் சிறப்புத் தலை யணை உள்ளது. மருத்துவர் ஆலோசனைப்படி அதையும் பயன்படுத்தலாம்.

கழுத்துவலி உள்ளவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால் கழுத்துத் தசைகளுக்கு அழுத்தம் அதிகரித்து கழுத்துவலி கடுமையாகிவிடும். காற்றடைத்த தலையணைகளைக்  கழுத்துவலி உள்ளவர்கள் கண்டிப் பாகப் பயன்படுத்தக்கூடாது. அடுத்து, கழுத்துவலி உள்ள வர்களுக்கு முதுகுவலியும் இருக்குமானால், முழங்காலுக்கு அடியில் சிறு தலையணை ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.

உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.

இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது; கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம்.

உடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலை யணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபட லாம். இதனால் உறக்கம் கெடலாம்.

குறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும் புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது. மற்றவர்கள் தலையணையைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை.

-விடுதலை,12.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக