ஆதி மருத்துவர்கள் பெண்கள்தான். உணவில் தொடங்கி மகப்பேறுவரை பெண்களே மருத்துவத்தின் ஆணிவேராக அன்றும் இன்றும் திகழ்ந்துவருகின்றனர். நவீன அறிவியலின் ஒரு கூறான அலோபதி மருத்துவத் துறையில் 19ஆம் நூற்றாண்டில் நுழைந்து பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். இந்திய அளவில் அப்படி சாதித்த அய்ந்து பெண்கள் பற்றிப் பார்ப்போம்.
சென்னையின் அடையாளம்
பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலம். இந்தப் பின்னணியில் ஒரு பெண் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டது எங்கே தெரியுமா? சென்னையில்! 1875இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் மருத்துவம் படிக்க முடிந்தது. சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் மேற்படிப்பு படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.
இருபது ஆண்டு சேவை
எடித் பீச்சி, பிரிட்டனின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவர். பெண்ணுரிமைச் செயல்பாட் டாளரும் கூட. ஸ்விட்சர்லாந்தில் 1877இல் மருத்துவப் பட்டம் பெற்றார். 1883ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பம்பாயின் புகழ்பெற்ற காமா மருத்துவமனையின் பெண்கள் பிரிவுக்குத் தலைமை ஏற்று சேவை புரிந்தார். 1896இல் பம்பாயில் பரவிய ஆட்கொல்லி நோயான பிளேக், காலராவைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் பணியாற்றினார். ஆண் பெண் மருத்துவர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டை எதிர்த்து, சம ஊதியம் தர வலியுறுத்தினார். பம்பாய் பல்கலைக்கழக செனட்டின் முதல் பெண் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
நாட்டின் முதல் பெண்
ஆனந்தி பாய், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அமெரிக்காவில் மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்ணும்கூட. குழந்தைத் திருமணம் செய்துகொண் டாலும், பெண்கள் படிக்க வேண்டுமென்பதில் அவருடைய கணவர் கோபால் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக் காவில் மருத்துவம் படிக்க ஆனந்தியைத் தனியாக அனுப் பும் துணிச்சலான முடிவை 1883இல் அவர் எடுத்தார். மேற்கு நாடு ஒன்றுக்கு ஆனந்தி படிக்கச் செல்வதை இந்துப் பழைமைவாதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.
உலகிலேயே இரண்டாவது மகளிர் மருத்துவக் கல்லூரியான பென்சில்வேனியா கல்லூரியில் 19 வயதில் ஆனந்தி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். இளங்கலைப் படிப்பை முடித்தாலும், முதுகலை படிப்பை முடிக்க இயலாத வகையில், அவரை காசநோய் தாக்கியது. 1886இல் ஆனந்தி நாடு திரும்பினார். கோலாப்பூர் அரசவை, அந்த ஊரில் இருந்த ஆல்பர்ட் எட்வர்டு மருத்துவ மனையின் பெண்கள் பிரிவுத் தலைவராக அவரை நியமித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர் காலமானார்.
இந்தியாவில் பயின்ற முதல் பெண்
காதம்பினி கங்குலி. கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் படித்ததன் மூலம் இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் பட்டம் (1878) பெற்றவரும் இவர்தான். 1883இல் பிரம்ம ஞான சபை சீர்திருத்தவாதி துவாரகாநாத் கங்குலியை அவர் மணந்தார். அதற்குப் பிறகு ஆசிரி யர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பினி மருத்துவம் படித்தார்.
இதன்மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பினி பெற்றார். ஆனந்தி பாய் அமெரிக்காவிலும், காதம்பினி கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் ஒரே ஆண்டில் (1886) மருத்துவப் பட்டம் பெற்றனர். 1892இல் பிரிட்டனுக்குச் சென்று தன் மருத்துவப் படிப்பை கூர்தீட்டிக் கொண்டார். இந்தியா திரும்பிய கொஞ்ச காலத்திலேயே தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.
மக்கள் சேவைக்கு வந்த முதல் பெண்
ரக்மா பாய், நாட்டின் மகளிர் மருத்துவமனை ஒன்றில் சேவையாற்றிய முதல் இந்தியப் பெண். அவரது மாற்றாந்தந்தை ஷாகாராம் அர்ஜுன் மருத்துவர் என்பது இதற்கு முக்கியக் காரணம். குழந்தைத் திருமணத்துக்கு ஆட்பட்டாலும், மணமகன் வீட்டுக்குச் செல்ல மறுத்து மருத்துவம் படிக்க முனைந்தார் ரக்மா. அதற்கான சட்டப் போராட்டத்திலும் வென்றார்.
லண்டன் மருத்துவப் பள்ளியில் அவர் படிக்கச் செல்வதற்கான செலவுக்குப் பொது நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்ட ஊக்குவித்தவர் பம்பாய் காமா மருத்துவ மனையின் பெண் மருத்துவர் எடித் பீச்சி. 1889இல் லண்டன் சென்ற ரக்மா, 1895இல் நாடு திரும்பி சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். அந்த வகையில் பொது மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண்ணும் இவரே.
விடுதலை,18.7.17