புதன், 12 ஜூலை, 2017

நீரிழிவால் வரும் மன அழுத்தம்!



நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை... பிரிக்க முடியாதவை... நீண்டகாலமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மனச்சோர்வு நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல மனச்சோர்வு நோயால் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாலும் அது சர்க்கரை நோயில் கொண்டு வந்துவிடும் அபாயமும் இருக்கிறது.மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டு விட்டு, எந்த வேலையும் செய்யாமல் புகை, மது போன்ற பழக்க வழக்கங்களுடன் உடலை குண்டாக்கிக்கொண்டே இருந்தால் பி.எம்.அய். எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் அதிகரிக்கும். பி.எம்.அய் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகம்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பத்து சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அதிலும் 60 வயதை நெருங்குபவர்களாக இருந்தால் சுமார் 23 சதவிகிதம்  பேருக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன் போன்றவை சர்க்கரை நோய் வருவதற்கான காரணிகளாக சொல்லப்பட்டாலும் மேற்சொன்ன ஆய்வில் இன்னொன்றும் தெரியவந்தது. அது மனச்சோர்வு நோயால் சிரமப்பட்டாலும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிற உண்மையே. பெண்களாக இருப்பின் இந்த ரிஸ்க் இன்னும் அதிகம்.

அதாவது, மனச்சோர்வு பாதித்த ஆண்களைக் காட்டிலும் பெண் களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். இதையே மாற்றிப் போட்டு பார்க்கலாம். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து மனச்சோர்வு நோய். சர்க்கரை வியாதி இல்லாத பெண்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் இருக்கும் பெண்களுக்கு மனச்சோர்வு வருவதற்கு 29 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகளின் முடிவுகள்தான் இவை.

எல்லாம் சரி, சர்க்கரை நோய் வந்தால் ஏன் மனச்சோர்வு வருகிறது? சர்க்கரை நோயினால் நமது உடலில் ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றங்கள் ஒரு காரணம். அந்த நோயுடன் நடத்தக்கூடிய வாழ்க்கை இருக்கிறதே... அது இன்னொரு காரணம். பாதிப் பேருக்கு மேல் தனக்கு சர்க்கரை இருக்கிறது என்று தெரியவந்த அந்த நாளில் ஏதோ உயிர்கொல்லி நோய் வந்ததைப் போன்று அதீத மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். நேரத்துக்கு உணவு சாப்பிடலைன்னா குளுக்கோஸ் இறங்கிருது. முன்னாடி மாதிரி தாம்பத்தியத்திலும் ஆர்வம் இல்லை... என்ற ரீதியில் சர்க்கரை நோயாளிகள் புலம்புவதில் ஏகப்பட்ட நடைமுறை உண்மைகள் உண்டு.

-விடுதலை,3.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக