திங்கள், 19 பிப்ரவரி, 2018

பக்கவாதத்திலிருந்து மீண்டு வரலாம்!

முதுமையில் பலரையும் அதிகம் முடக்கிப் போடும் நோய், பக்கவாதம். இதன் பாதிப்பால் செயலிழந்த கை, கால்களை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மன உறுதி தேவை. தசைப் பயிற்சி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகள் தேவை. ஆனால், அதில்தான் பலரும் தவறு செய்கின்றனர். பெரும்பாலோர் அவற்றுக்கு வழி செய்யாமலும், அருகிலிருந்து கவனிக்க வசதிசெய்யாமலும் பாதிக்கப்பட்ட வரைத் தனிமையில் விட்டு விடுகின்றனர். அந்தத் தனிமையே அவர்களுக்குப் பெரும் தண்டனையாகிவிடுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டில் தசைப் பயிற்சிகள் மேற்கொள்ள ஓர் இயன்முறை மருத்துவரை ஏற்பாடுசெய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் இதற்கு ஒதுக்க வேண்டும். தோள், முழங்கை, மணிக் கட்டு, விரல்கள், தொடை, முழங்கால், பாதங்கள் என வரிசையாகத் தசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சில வாரங்களுக்கு இயன்முறை மருத்துவரை வீட்டுக்கே வரச் சொல்லி, பயிற்சி பெறலாம். அதன் பிறகு, நீங்களே அவற்றைச் செய்ய முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு உதவலாம்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு உடல் சமன்பாட்டில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். உதாரணமாக, படுக்கையைவிட்டு எழுந்தி ருக்கும் போது, உடல் ஒரு திசையில் இழுப்பது போன்று இருக்கும். இந்த நிலைமையைத் தவிர்க்கவும் தனிப் பயிற்சிகள் உண்டு. இயன்முறை மருத்துவர் உதவியுடன் இவற் றையும் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், சில வாரங்களில் வாக்கர் கொண்டு நடக்கப் பழகிவிடலாம்.

படுக்கைப் புண்களைத் தடுக்க

பக்கவாதம் வந்தவர்களுக்குப் படுக்கைப் புண்கள் வர வாய்ப்பிருக்கிறது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்குப் படுக்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மெலி தான தலையணையைத் தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முழங்கைவரையிலும் கைக்குத் தலையணை வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காலுக்கும் தலையணை வைத்துக்கொள்ளலாம். தோள்கள் தலை யணைக்கு முன்புறம் இருக்க வேண்டும்.

ஒரே நிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் படுக்கக் கூடாது. படுக்கையைச் சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தண்ணீர்ப் படுக்கை  நல்லது.

சருமம் சிவப்பாகிறதா, சருமத்தில் புண் இருக்கிறதா எனத் தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். எழுந்திருக்கும்போதும் உட்காரும் போதும் மற்றவர் உதவியுடன் செய்வதே நல்லது. அல்லது படுக்கைக்கு அருகில் சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொண்டு, அவற்றைப் பிடித்து எழுந்து உட்காரலாம்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம் இருக்கும். இவற்றுக்கும் தனிப் பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும். இயன்முறை மருத்துவர் தொண் டைத் தசைகள் வலிமை பெறப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். சாப்பிடும்போது உணவு புரையேறிவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். அதற் கேற்ப உணவைத் தேர்வுசெய்ய வேண்டும். மெல்வதற்கு எளிதான உணவு வகைகளைச் சிறிதளவில் அடிக்கடி சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை எழாது.

பேச்சு - மொழிப் பயிற்றுநர் சுலபமாக உணவை விழுங்க வழி சொல்லுவார். உங்கள் பேச்சு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயிற்சிகள் தருவார்.  விழுங்குவதில் சிரமம் ஏற்படும் காரணத்தால் முழு தானியக் கஞ்சி, பருப்புக் குழம்பு, அரைக்கப்பட்ட காய்கறி, கறி, பழம், மசிக்கப்பட்ட கிழங்கு, அரைவேக்காடு முட்டை, பிரக்கோலி, முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ், அவரை, பச்சைத் தேநீர், இலையுள்ள காய்கறிகள், ஓட்ஸ், தயிர், கிரில் செய்த மீன், பாலாடைக்கட்டி ஆகியவை சிறந்த உணவு வகைககள். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல்  தவிர்க்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், காய், பழம் தினமும் சாப்பிடவேண்டும். மலச்சிக்கலை லகுவாக்கும் மாத்திரைகளையும் பயன்படுத் தலாம்.

- விடுதலை நாளேடு -19.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக