செவ்வாய், 24 ஜூலை, 2018

முழங்கால் மூட்டுவலி ஏற்படக் காரணம்




மூட்டுவலி மனிதனை வாட்டி வதைத்து அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பாதிக்கும் அளவிற்கு வேதனையை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். கீல்வாதம், மூட்டுவலி அல்லது மூட்டு தேய்மானம் என அழைக்கப்ப்படும் இந்த நோயானது, பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக, 45 வயதைக் கடந்த இரு பாலினத்தவரும் இந்நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

நோய்க் காரணங்கள்

கீல்வாதமானது மூட்டுகளில் ஏற்படும் நோயானது என்றாலும், குறிப்பாக முழங்கால் மூட்டே அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகிறது.

முழங்கால் மூட்டு எலும்புகளின் அதீத செயல்பாடுகளால் ஏற்படும் உராய்வினால் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு  மற்றும் மூட்டைச் சுற்றியுள்ள தசை நார்கள் பாதிப்படைந்து மூட்டு எலும்புகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இடைவெளி குறைவதால் தேய்கிறது.

மேலும் மூட்டுகளில் உள்ள சைனோவியம் என்ற திரவமானது மூட்டைச்சுற்றித் தேங்கி நீர்க்கோர்த்து வீக்கத் துடன் வலியும் உண்டாகிறது.

இதுபோல், அதிக உடல் எடை, மூட்டுகளில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள், மூட்டுகளில் நோய் தொற்றுப் பாதிப்புகள், மூட்டுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், முழங்கால் மூட்டுகளை அதிகமாக உபயோகித்துப் பணி செய்பவர்கள், விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், பரம்பரையாக ஏற்படும் மூட்டு வலி, முடக்குவாத பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அதீத ஹார்மோன் சுரப்பு என்று பல காரணங்களால் மூட்டு வலி வந்து விடுகிறது.

அறிகுறிகள்

மூட்டு வலி ஏற்படுவதற்கான முதல்நிலை அறிகுறிகளாக;

1. மூட்டுகளில் வலி

2. மூட்டுகளில் இறுக்கம் (குறிப்பாகக் காலை நேரங்களில்)

3. மண்டியிடும் போதோ, முழங்காலை மடக்கும் போதோ கூச்ச உணர்வு

4. அன்றாட நிகழ்வுகள் பாதிப்பு

போன்றவை ஏற்படுகின்றன.

இரண்டாம் நிலை அறிகுறிகளாக..

1. பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இயக்கமற்ற நிலை

2. தசைகள் வலுவிழப்பு

3. மூட்டுகளில் ஸ்திரத்தன்மை

4. மூட்டுகள் அசைவின்போது சத்தம்

போன்றவை ஏற்படுகின்றன.

பரிசோதனைகள்

எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன் போன்ற பரிசோதனைகளின் மூலம் மூட்டுவலி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

பொது மருத்துவ சிகிச்சை

பொது மருத்துவ சிகிச்சையில் ஆரம்ப நிலையில் வலி குறைப்பிற்கான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. அதிகமான மூட்டு பாதிப்பு உள்ளான நோயாளிகளுக்குப் பாதிப்பிற்கு ஏற்ப அறுவை சிகிச்சையோ  அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சையோ  மேற்கொள்ளப்படுகிறது.

இயன்முறை சிகிச்சை

மூட்டு வலிகளுக்கு இயன்முறைச் சிகிச்சை செய்யப் படுவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகளைப் பெற முடியும்.

1. வீக்கம் மற்றும் வலியைக் குறைத்தல்

2. பாதிக்கப்பட்ட மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைத்தல்

3. உடல் எடையைக் குறைக்க அறிவுறுத்துதல்

4. மூட்டுகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல்

5. வலு குறைந்த தசைகளை உடலியக்கப் பயிற்சிகளின் மூலம் வலுப்படுத்துதல்

6. நோயாளிகளின் அன்றாட வாழ்வின் முறையை மேம்படுத்த ஊக்கப்படுத்துதல்

மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க மெழுகு சிகிச்சை மற்றும் பனிக்கட்டி சிகிச்சை போன்ற சில சிகிச்சை களும் இயன்முறை மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.

இதுபோல், வலியைக்குறைக்க குறுக்கலை மின்சிகிச்சை  மற்றும் மின் தூண்டுதல் சிகிச்சை, லேசர் சிகிச்சை மற்றும் நீரியல் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, அல்ட்ராசவுண்ட் சிகிச்சை போன்ற முறைகளும் நோயாளியின் மூட்டுவலிப் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அளிக்கப்படுகின்றன.

மூட்டுகளின் செயல்பாடுகளை எளிமையாக்கவும், அன்றாட நிகழ்வுகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி செய்ய ஏதுவாகவும் எளிய உடலியக்கப் பயிற்சிகளும் இயன் முறை மருத்துவரால் அளிக்கப்படுகிறது. இலகுவான நடைப்பயிற்சி மற்றும் ஏரோபிக் வகை பயிற்சிகளும் வலுக்குறைந்த தசைகளை வலுப்படுத்த உடலியக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

நோயின் பாதிப்பிலிருந்து விடுபட

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் பாதிப்பி லிருந்து விடுபட, இயன்முறை மருத்துவர்களின் ஆலோ சனைப்படி சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள் ளலாம். அவை;

1. உடல் எடையைக்குறைக்க வேண்டும்

2. நடைப்பயிற்சி மற்றும் இலகுவான ஏரோபிக் பயிற்சிகள்

3. பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் இருக்க வேண்டும்

4. உடல் செயல்பாடுகளின்போது உடல் எடை மூட்டுகளில் அழுத்தம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

5. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே வலி குறைப்பு மற்றும் வெளிப்பூச்சு மருந்துகளை நோயாளிகள் பயன்படுத்த வேண்டும்

6. அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பாக நடப்பதற்கும், அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்துவதற்கும் இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடலியக்கப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. மூட்டு வலியைக் குறைக்கவும் ,நோயின் தாக்கத்தைக் குறைக்கவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழங்கால் மூட்டுப்பட்டை, மூட்டு உரைகள்  போன்றவற்றை அணியலாம்.

உங்களுக்காக...

றீ மிக நீண்ட நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்வதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க இடம் பெயருங்கள். எழுந்து நடப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் புதுபிக்கப்படும்.  இது உங்கள் முது கெலும் புகளை அழுத்தில் இருந்து சிறிது நேரம் மீட்டு எடுக்கும்.

றீ கணினி திரையை வேலைப் பளுவால் உற்று நோக்க ஆரம்பித்து விடுகிறோம் மிக விரைவாக இதனை தவிருங்கள், முடிந்த வரை உங்கள் கண்களை 45 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது வலது புறம் திரும்பி பார்வைக் கோட்டை அகலப்படுத்தி விட்டு மீண்டும் திரையில் முழுகலாமே.

- விடுதலை நாளேடு, 16.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக