நலம் காக்கும் கம்பளிப்பூச்சி
வெளிநாடுகளில் மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோ பயன்பாடு இன்று பெரிய அளவில் வந்துவிட்டது. அந்தவகையில் மருத்துவ வசதிக்காக உருவாக்கப்பட்ட சிறிய வகை கேட்டர்பில்லர் ரோபோ (கம்பளிப்பூச்சி ரோபோ) இந்த ஆண்டு கவனம் ஈர்த்தது. ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கைவண்ணம் இது. மனித உடலில் மருந்துகளைச் சரியான இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காக இந்த ரோபோவை உருவாக்கினர். கம்பளிப்பூச்சிக்கு இருப்பதுபோலச் சிறிய கால்கள் இந்த ரோபோவுக்கு இருப்பதால், அந்தப் பெயரில் இது அழைக்கப்படுகிறது. சிறிய கால்களைப் பயன்படுத்தி உடலில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஊர்ந்து சென்று மருந்துகளைச் சரியான இடத்தில் இந்த ரோபோ சேர்த்துவிடுகிறது.
குருத்தெலும்பில் புதுக் காது
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், ஓசை இல்லாமல் புதிய சாதனை ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் படைத்திருக் கிறார்கள். உலகிலேயே முதன்முறையாகக் குருத்தெலும்பு செல்களைக் கொண்டு புதிய காதுகளை உருவாக்கிக் காட்டினார்கள். சில வளரும் குழந்தைகளுக்குக் காதின் வெளிப்பகுதி வளர்ச்சியடையாமல் போய்விடலாம். மைகுரோசியா என்றழைக்கப் படும் இந்தக் குறைபாடு உள்ளவர்களால், மற்றவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வகையில், நோயாளியின் குருத்தெலும்பு செல்களைக் கொண்டு புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சி இந்த ஆண்டு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதயநோய் ஏற்பட காரணம்
இதயநோய் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவதில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா கண்டுபிடித்த அளவீட்டு முறைகளையே இன்றுவரை உலகெங்கும் பயன்படுத்திவருகிறார்கள். இந்த அளவீடுகளின் மூலம் 30 சதவீத இதய நோய் களையே கண்டறிய முடிந்தது. அந்தக் குறையை இந்திய மருத்துவர்கள் போக்கியிருக்கிறார்கள். அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயநோய் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான கூடுதல் அளவீடு களைக் கண்டறிந்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகளாகச் செய்துவந்த ஆய்வின் அடிப்படையில் இது சாத்தியமானது. இந்த அளவீடுகள்மூலம் 67 சதவீத இதய நோய்களைக் கண்டறிந்து விட முடியும்.
புதிய வைரஸ் தாக்குதல்
கேரளத்தில் நிபா என்ற வைரஸ் பரவியதால் மாநிலம் முழுவதும் பீதி நிலவியது. இந்த வைரஸ் தாக்கியதில் கோழிக்கோடு, மலபார் மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பழந்தின்னி வவ்வால்களால் நிபா வைரஸ் பரவியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது. இந்தத் தொற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 1998ஆம் ஆண்டில் மலேசி யாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வைரஸ், 2001ஆம் ஆண்டில் வட இந்தியாவிலும் கண்டுபிடிக்கப் பட்டது.
புது ஆண்டிபயாடிக்
தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. நீண்ட கால மாகவே புதிய ஆண்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முயன்று வந்தார்கள். அந்த முயற்சி இந்த ஆண்டு திருவினையானது. குறிப்பாக, எந்த ஆண்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாத நோயாக எலும்புருக்கி நோய் உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு, மருத்துவ உலகின் மைல்கல் என வர்ணிக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமான புதிய வகை ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்கத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாக்கும் கவசம்
சிகிச்சையின்போதும் பரிசோதனையின்போதும் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு மருத்துவர்களும் ஆய்வகப் பணியாளர்களும் உள்ளாவது தவிர்க்க முடியாதது.
தான் கண்டுபிடித்த புது மேல் அங்கி (ஏப்ரன்) மூலம் அந்தக் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு முடிவுரை எழுதி யிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த அரசு மருத்துவர் செந்தில்குமார். ராஜாஜி அரசு மருத்துவமனை கதிரியக்க இயற்பியல் துறை உதவிப் பேராசிரியரான இவர். பிஸ்மத், ஆன்டிமனி, பேரியம் சல்பேட் (4) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஏப்ரனை உருவாக்கியுள்ளார். அது மனிதனுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை யளிப்பதாக உள்ளது.
- விடுதலை நாளேடு, 7.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக