வியாழன், 31 ஜனவரி, 2019

நீரிழிவு ஒரு குறைபாடு, நோயல்ல...



உலக அளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நமது கலாச்சாரம், உணவுப் பழக்கம், சமூகப் பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கை முறை போன்ற கார ணங்களால் டைப் 2 நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விடத் தற்போது அதிகமாக உள்ளது.

குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இன்சுலின் எடுத்துச் செல்கிறது. இந்த இன்சுலினை வயிற்றின் பின்பகுதியில் உள்ள கணையம் சுரக்கிறது. இந்தக் கணை யத்தின் செயல்பாடே நம் உடல் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பில் உள்ள குறைபாடுகளே நீரிழிவு வருவதற்கான அடிப்படைக் காரணம்.

உடல் பருமனாலும் அதிக ரத்தக் கொழுப்பாலும் நீரிழிவுக் குறைபாடு ஏற்படு வதற்கு அதிக சாத்தியம் உண்டு. உடலின் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் தேவையும் அதிகரிக்கும்.

இதனால் கணையம் அடிக்கடி இன்சுலின் சுரந்துக் களைத்துப் போய்விடும். இதன் காரணமாக உடல்பருமன் அதிகமுள்ள வர்களுக்கு நீரிழிவுக் குறைபாடு ஏற்படுகிறது.

உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது இன்சுலினால் செல்களுக்குள் நுழைய முடியாது. அப்படியே சிரமப்பட்டு திசுக்களுக்குள் இன்சுலின் போனாலும் கொழுப்பு அடைத்துக்கொள் வதால் இன்சுலின் தனக்கான பணியைச் செய்ய முடியாது. இதனாலும் நீரிழிவு ஏற்படுகிறது. இவை தவிர, நீரிழிவுக் குறைபாடு பரம்பரையாகத் தொடர்வதற்கும் சாத்தியம் உண்டு.

நீரிழிவின் வகைகள்


நீரிழிவுக் குறைபாடு டைப் 1, டைப் 2 என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடு டைப் 1 நீரிழிவு. பொதுவாக, டைப் 1 நீரிழிவுக் குறைபாடு குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும்.

கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் டைப் 2 நீரிழிவு  ஏற்படுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்குக் கர்ப்பகால நீரிழிவுக் குறைபாடு ஏற்படும். இந்தக் குறை பாடு பெரும்பாலும் குழந்தைப் பிறப்புக்குப் பின் சரியாகிவிடும். இவை தவிர, அரிதான நீரிழி வுக் குறைபாடுகளும் உள்ளன.

நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகள்


முறையான சிகிச்சை பெறாவிட்டால், நீரிழிவால் கண்கள், இதயம், சிறுநீரகம், பாதம் ஆகியவை விரைவில் பாதிப்படையும். நீரிழிவால், கண்களில் புரையும் கண் நீர் அழுத்தநோயும் (கிளாகோமா) ஏற்படுகின்றன.

சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான் செல்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் வழியாக புரதம் வெளியேறி சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். உலக அளவில் சிறுநீரகப் பாதிப்புக்கு நீரிழிவுக் குறைபாடு முக்கியக் காரணியாக உள்ளது.

பிரச்சினைகளை எப்படித் தடுக்கலாம்?


பாதங்களின் உணர்வுத் தன்மையை அவ்வப்போது சோதிக்க வேண்டும், பாதத்தில் உணர்வுக் குறைபாட்டை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்கள் கண் பரிசோதனையையும் கண் ரெட்டினா பரிசோதனையையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

ஏ.சி.ஆர் எனப்படும் சிறுநீரகப் பரிசோதனையில் கிரியாட்டின் அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடலில் அதிக அளவு கொழுப்பு, புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உண்டு.

எனவே, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

துன்பம் களைவோம்


உடலை முறையாகப் பராமரிப்பதே நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களின் முதல் கடமை.

முறையான பரிசோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும், நீரிழிவு என்றவுடனே வாழ்வில் இன்பம் எல்லாம் தொலைந்துவிட்டது எனக் கருத வேண்டாம். அதை நோய் என்று கருதாமல், ஒரு குறைபாடாகக் கருதி அதற்கு முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் நீரிழிவின் அவதி விலகும்.

-  விடுதலை நாளேடு, 28.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக