சனி, 24 ஆகஸ்ட், 2019

மருத்துவம்: கருவுற்ற பெண்களுக்கு ஏற்ற உணவுகள்!




கருவுற்றிருக்கும்போது இரத்த சோகை ஏற்படுவது இப்போது மிகவும் பரவலாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே குறைப் பிரசவம், கருக்கலைவது, குழந்தை இறந்து பிறப்பது உள்ளிட்டவையும் நிகழ்கின்றன.

மைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக்கூடிய வைட்டமின் ஏ, ஜிங்க், ஃபோலிக் ஆசிட், அயோடின் சத்து இவையனைத்தையும் ஒரு கர்ப்பிணிப் பெண் சரியான அளவு எடுத்துக்கொண்டால், அவளுடைய பிரசவத்தில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது!

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை:


பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், கருவுற்ற முதல் நாளிலிருந்து முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது, உடலில் உள்ள கால்சியத்தை உடலுக்குப் பயனில்லாமல் வெளியேற்றிவிடும். வனஸ்பதியில் செய்த உணவுகள், ஸ்பைசி உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது, தாய்க்கும் சேய்க்கும் நலம் தரும்.

எந்தவொரு கனமான பொருளையும் தூக்கக்கூடாது. கர்ப்பமாக இருப்பதை வியாதியைப் போன்று நினைத்து, எந்தவித உடல் உழைப்பும் இன்றி உண்பதும் உறங்குவதுமாக இருக்கக்கூடாது. இது, குழந்தைப் பிறப்பை சிக்கலாக்கிவிடக் கூடும்.

அயோடின் அளவோடு தேவை:




கர்ப்ப காலத்தில் தாய், அயோடின் சத்துள்ள உணவுகளை தகுந்த அளவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி குறைந்து, மூளைக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்க வாய்ப்பாகிறது. இதைத் தவிர்க்க, கடல் உணவுகள், குறிப்பாக, மத்தி மீன், சங்கரா மீன், அசைவ உணவுகள், சிறுதானியங்கள்  இவற்றைத் தேவையான அளவு சாப்பிட வேண்டும்.

சமச்சீர் உணவு:


உடலுக்குச் சக்தியைக் கொடுக்கக் கூடியதும், கொழுப்புச் சத்து தரக்கூடிய உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்துள்ள உணவுகள் மற்றும் நுண்சத்துகள் உள்ள உணவுகளைக் கர்ப்ப காலத்தில் சற்று அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஒரு சமச்சீர் உணவு.

சக்தி கொடுக்கும் உணவுகள், உடலை வளர்க்கக் கூடிய உணவுகள், நோய் நொடிகளிடமிருந்து நம்மைக் காக்கும் நுண்சத்துகள் நிறைந்த உணவுகள். தேவையான அளவு ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டும்.

ஒரு நாளைக்கு 300 கிராம் அரிசி அல்லது சிறுதானிய உணவு, 30 கிராம் அளவு எண்ணெய் தேவை. ஆனால், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட இனிப்பு 20 கிராம் போதுமானது. சமச்சீர் உணவைப் பொறுத்தவரை பாலுக்கு, ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அதேபோல் பழங்களும் 200 கிராம் அளவு சேர்க்க வேண்டும். கீரை 130 கிராம் தேவை. மற்ற காய்கறிகள் 120 கிராம் தேவை. சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2,500 கலோரிகள் தேவை எனில், கர்ப்பிணிகளுக்கு இதைவிட 300 கலோரிகள் அதிகம் தேவைப்படும். பாலூட்டும் தாய்மார்கள் எனில் 500 கலோரி அதிகம் தேவை. கவனியுங்கள், இரண்டு உயிருக்குத் தேவை என்கிற நோக்கில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும் சரியல்ல! 60 கிலோ எடையுள்ள ஒரு பெண் கருவுற்றிருக்கிறார் எனில், அவருக்கு கூடுதலாக 10 கிராம் புரதச்சத்து கொடுப்பது ஏற்றது. ஏனெனில், இவை குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உதவும். பருப்பு வகைகள், முட்டை, பால், மீன், நாட்டுக்கோழி, பயறு வகைகள் உள்ளிட்டவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

இரும்புச்சத்து மாத்திரை:




கர்ப்பகாலத்தில் 100க்கு 90 பெண்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை ரத்தசோகை. பொதுவாகவே, பெண்களுக்கு, இரும்புச்சத்து குறைவாக இருக்கும். ரத்தசோகை குறைபாடுள்ளவர்கள் அயர்ன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கவும். இது இரும்புச் சத்து உடலுக்குச் சேருவதைத் தடுக்கும். இயற்கையாகவே இரும்புச்சத்தை அதிகரிக்க நினைப்பவர்கள், மாதுளை முத்துகளைச் சாப்பிட்டுவிட்டு, சிட்ரஸ் பழச்சாறு சிறிதளவுக் குடிக்கலாம். ஏனெனில், இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் சியே உதவும்.

இரும்புச்சத்துக் குறைவாக இருந்தால், சோர்வு, வெளுத்துப்போன சருமம், நாக்கில் புண் வருவதுபோல் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். சீரற்ற இதயத்துடிப்பு, நடந்தாலே மூச்சு வாங்குதல், லேசான தலைசுற்றல், உள்ளங்கை உள்ளங்கால் குளிர்ச்சியடைதல், முடி கொட்டுதல், அடிக்கடி தலைவலி, பசியின்மை, சருமத்தில் அரிப்பு உள்ளிட்டவையும் ஏற்படும். இந்த அறிகுறிகளை வைத்து ரத்த சோகையைக் கண்டறியலாம்.

அரைக்கீரை, முள்ளங்கிகீரை, வெற்றிலை, பருப்புக்கீரை, டர்னிப் கீரை, காலிஃபிளவர் (பூவை விட கீரையில்தான் சத்தே இருக்கிறது), அரிசி தவிடு (அவல்), முளையிட்ட தானியங்கள், முளைவிட்ட கோதுமை, அரிசி பொரி, கம்பு, சோயா பீன்ஸ், கடலைப்பருப்பு, தாமரைத் தண்டு, காளான், சுண்டை வற்றல், சுண்டைக்காய், மஞ்சள்தூள் (2 சிட்டிகை), கொய்யாப்பழம், சீத்தாப்பழம், பனை வெல்லம் உள்ளிட்டவற்றிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது!

உடற்பயிற்சி


கர்ப்ப காலத்தில் தினமும் கட்டாயம் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது, கை காலில் துவங்கி உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் பாய வழிவகுக்கும். இதனால், குழந்தைக்குத் தேவையான ரத்தமும் அதன் ஓட்டமும் சீராக இருக்கும். தவிர, ஹார்மோன்களின் சுரப்பு சமச்சீராக இருக்கும். எலும்புகள் வலுவடையும். நல்ல பசியை உண்டாக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியமும் சிறக்கும்.

குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்கலாம். இவ்வாறு செய்வதால் இடுப்பு எலும்பு நன்றாக வளைந்து கொடுக்கும். இலகுவான சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். பிரசவமும் வலியுன்றி நிகழும்!

மகிழ்வான மனநிலை:


கருவுற்ற பெண் மகிழ்வான மனநிலையில் இருப்பது நல்லது. அதிக அதிர்ச்சி, கவலையளிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும்.

-  உண்மை இதழ்- 1-15.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக