திங்கள், 17 அக்டோபர், 2022

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் ( மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (39)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (39)

அக்டோபர் 1-15,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

KIDNEYS & INFECTIONS

மரு.இரா.கவுதமன்

மருத்துவம்:

சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்றை எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போது மருத்துவம் செய்து, நோயை எளிதில் குணமாக்கலாம். நோய்க்கு அடிப்படைக் காரணமான நோய்க் கிருமிகளை அழிப்பதன் மூலம் நோயை எளிதில் குணமாக்கலாம். கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) மூலம், நோய்க் கிருமிகளை அழித்தால் நோய் எளிதில் குணமாகும். பொதுவாக, நைட்ரோப்யூரன்டைன், சல்பா, அமாக்ஸிசிலின், செஃபலோஸ்போரின் பாக்டிரிம், டாக்ஸிசைக்ளின், சிப்ரோப்ளாக்ஸின் போன்ற மருந்துகள் நோயை எளிதில் கட்டுப் படுத்துபவை. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒரு மருந்தையோ அல்லது கூட்டாக இரு மருந்துகளோ மருத்துவர் அறிவுரைப்படி உண்ண வேண்டும். அறிகுறிகள் நின்ற உடன், குணமாகி விட்டதாகக் கருதி, மருந்துகள் உண்பதை நிறுத்தி விடக் கூடாது. மருந்துகளை முழுப் பருவமும் முடிய உண்ண வேண்டும். மருத்துவர் அறிவுறுத்திய காலம் முடிய மருந்துகளை தவறாமல் உண்ண வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படும் நிலை இருக்கும். பொதுவாக ஆண்களில் சிலருக்கு, நோய்த் தொற்று இரண்டாம் முறையும் ஏற்படும். ஆனால், பெண்களுக்கு அய்ந்து பேரில் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். பொதுவாக ஒரே வகை நோய்க் கிருமிகள் (ஈ கோலி _ E.Coli) காரணமானாலும், அடுத்தடுத்து வரும் நோய்த் தொற்றுக்கு வேறு நோய்க் கிருமிகளும் காரணமாகக் கூடும். சில நேரங்களில் சில வகை நோய்க் கிருமிகள் இரத்தத்தோடு கலந்து, அதிக அளவில் பெருகி, மீண்டும் சிறுநீர்ப் பாதையைத் தாக்கும். சில வகைக் கிருமிகள் வழக்கமான மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை. பொதுவாக ஒருவருக்கு ஆண்டுக்கு மூன்று முறையும், அதற்கு மேலும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்பட்டால், நோயாளியை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வகை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சற்று நீண்ட நாள்கள் கிருமிக் கொல்லி மருந்துகளை (Anti-biotics) உண்ணச் சொல்வர். உடலுறவு முடிந்தவுடன் ஒரு நேரம் உயிர்க்கொல்லி மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவும். நோய்த் தொற்றின் அறிகுறிகள் தோன்றும் ஆரம்ப நிலைகளிலேயே, ஓரிரு நாள்கள் கிருமிக்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோய் மேலும் வலுவடையாமல் தடுக்கும். சிறுநீர் ஆய்வுகள்  நோய்த் தொற்றை அறிய உதவும்.

நோய்த் தொற்றைத் தவிர்க்கும் வழிகள்:

¨           சிறுநீர்க் கழிக்கும் உணர்வு தோன்றியவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும்.

¨           ஒவ்வொரு முறையும், சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேறும் வரை பொறுமையாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.

¨           சிறுநீர் கழிப்பதை அடக்கி வைக்கும் நிலையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

¨           அதிகம் தண்ணீர் பருக வேண்டும்.

¨           அதிக வீரியமற்ற சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

¨           உடலுறவுக்கு முன், பிறப்புறுப்புகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

¨           உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பது நலம். அதனால் சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் கிருமித் தொற்று இருந்தாலும் அவை சுத்தமாக்கப்பட்டுவிடும்.

¨           கருத்தடைச் சாதனங்கள், ஆணுறைகள் போன்றவை கூட ஒவ்வொரு வகையில் நோய்த் தொற்றை உண்டாக்கக் கூடும். அதை மாற்றி வேறு வகைக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம். மருத்துவரின் அறிவுரையைக் கேட்கலாம்.

¨           உள்ளாடைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

¨           பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்த ஏற்றவை. இறுக்கமான உள்ளாடைகள் அணியக் கூடாது.

¨           இறுக்கமான ஆடைகள் நோய்த் தொற்றை எளிதில் உண்டாக்கும்.

¨           நோயின் அறிகுறிகள் தெரியும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் அறிவுரை பெற வேண்டும்.

¨           அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றைத் தவிர்க்க, சிறிது காலம் தொடர் மருத்துவம் தேவை. மருத்துவர் அறிவுரை பெறுவது கட்டாயத் தேவை.

¨           தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது.

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று – சிக்கல்கள்(Complications)

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றை மருந்துகளால் எளிதில் குணமாக்கலாம். சீரான மருத்துவம் செய்யப்படாத நோய்த் தொற்றே பல சிக்கல்களை உண்டாக்கும். இச்சிக்கல்கள் நாளடைவில் ஆபத்தான அறிகுறிகளை உண்டாக்கும்.

சிறுநீரக நோய்த் தொற்று (Kidney Infection – Pyelonephritis): 

நோய் சீராக மருத்துவம் செய்யப்படாத நிலையில் நோய்க் கிருமிகள், சிறுநீர்ப்பையையும் தாக்கி அழற்சியை (Cystitis) ஏற்படுத்தும். பின் அங்கிருந்து சிறுநீர்க் குழாய்கள் (Ureters) வழியே சிறுநீரகங்களுக்குப் பரவும் நிலையேற்படும். சிறு நீரகங்களில் உள்ள வடிப்பான்களில் அழற்சி (Nephritis) யை உண்டாக்கும். வடிப்பான்களில் அழற்சி பெருகி, வடிநீர்க் குழாய் முடிச்சுகள் அழற்சி (Glomarular Nephritis) யாக மாறிவிடும். முடிவில் சிறுநீரகம் முழுவதும் அழற்சியாக (Pyelonephritis) என்ற நிலை ஏற்பட்டு விடும்.

நோய்க்கிருமிப் பரவல் (Sepsis): 

சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு முற்றிய நிலையில் அங்கிருக்கும் தந்துகிகள் மூலம், கிருமிகள் இரத்தத்தோடு கலந்து உடல் முழுவதும் பரவிவிடும். கிருமிகள் நச்சும் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவும் (Septicemia). இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure): 

பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று, சிறுநீரகத்தில் காயங்களை ஏற்படுத்தும். அது வடிப்பான்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். வடிப்பான்கள் பாதிப்பால், சிறுநீர் வடிப்பது நின்றுவிடும். சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்துவிடும்.

கருவுறுதலும், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றும் (Pregnancy & Urinary Tract Infection): 

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று கருவுற்ற தாய்மார்களையும், கருப்பையில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றால் கருவுற்றவருக்கு மிகு இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்படும். அதனால் குறைமாதப் பிறப்பு (Premature delivery), பேறுகால வலிப்பு (Eclampsia) போன்ற சிக்கல்கள் ஏற்படும் நிலை ஏற்படும்.

இந்நோயை முறையான மருத்துவம் மூலம் எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப நிலையில் மருத்துவம் மூலம் நோயை முழுமையாகச் சீராக்க முடியும்.                 (தொடரும்)

வெள்ளி, 14 அக்டோபர், 2022

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் ( விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (38)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (38)

செப்டம்பர் 16-30,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

(KIDNEYS & INFECTIONS)

மரு.இரா.கவுதமன்

சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று (Urinary Tract Infection – UTI)

சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் (Ureters), சிறுநீர்ப்பை (Cystitis), சிறுநீர்ப் புற வழி (Urithritis) ஆகியவற்றில் ஏற்படும் நோய்த் தொற்றாகும். சிறுநீர் நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள் கரைசலேயாகும். இயல்பான நிலையில் சிறுநீர், கிருமிகள் இல்லாமல் சுத்தமாகத்தான் இருக்கும். நோய்த் தொற்று, நுண் கிருமிகளால் வெளிப்புறத்தில் இருந்துதான் ஏற்படும். நோய்த் தொற்று ஏற்படும் பகுதிகளில் அழற்சியும் ஏற்படும். சிறுநீர்ப் புறவழியில் ஏற்படும் நோய்த் தொற்று, “சிறுநீர்ப் புற வழி அழற்சி’ (Urethritis) யையும், சிறுநீர்ப்பை நோய்த் தொற்று, “சிறுநீர்ப்பை அழற்சி’ (Cystitis) யையும், ‘சிறுநீரக நோய்த் தொற்று’ (Pylonephritis) ‘சிறுநீரக வடிப்பான் அழற்சி’யையும் உண்டாக்கும். இவை ஓர் உறுப்பில் துவங்கினாலும், மற்ற உறுப்புகளிலும் பரவி அழற்சியை ஏற்படுத்தும்.

சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று மிகவும் எளிதாகப் பற்றிக் கொள்ளும் தொற்று நோயாகும். இத்தொற்று நோய் ஆண்களை விட எளிதாக பெண்களுக்கு பற்றிக் கொள்ளும். 5 பெண்களில் ஒருவருக்கு என்ற நிலையில் இந்நோய்த் தொற்று ஏற்படும். பெண்களின் பிறப்புறப்பும் (Vagina),, ஆசனவாயும் (Anus) அருகருகே அமைந்திருப்பதால் ஆசனவாய் மூலம் வெளியேறும் நுண்கிருமிகள் எளிதாக பிறப்புறப்பில் பரவும் நிலை ஏற்படும். அதனால் நோய்த் தொற்று பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சுத்தமற்ற பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அசுத்தமான நீரைக் கொண்டு பிறப்புறுப்பு-களைக் கழுவுவதாலும் இந்நோய்த் தொற்று ஏற்படும். சுத்தமற்ற உறுப்புகளுடன் ஏற்படும் உடலுறவும் நோய்த்தொற்று உண்டாக்கும். ஆண்களுக்கும் இந்நோய்த் தொற்று ஏற்படும். குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்படுவர். ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப் படுகிறார்கள். ஆண்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு இந்நோய் எளிதாகத் தொற்றிக் கொள்ளும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு “விந்து நீர் சுரப்பி’ (Prostate gland) பருமனடைவதால் இந்நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். விந்து நீர் சுரப்பி பருமன் (Enlarged Prostate), சிறுநீர்க் கழிப்பதில் மாறுபாட்டை உண்டாக்கும். சிறுநீர்ப் பையில் (Bladder) உள்ள சிறுநீர் முழுமையாக வெளியேறாமல், தேக்கமடைந்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிறுநீர்ப்பை இறக்கம் (Bladder Prolapse) நோய்த் தொற்று எளிதில் ஏற்படக் காரணமாக அமையும். நீரிழிவு நோய் (Diabetes)உள்ளவர்களுக்கு நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் சரியாகவும் ஆகாது. குழந்தைகளுக்கு சிறுநீரக உறுப்புகளின் அமைப்பு மாறுபட்டிருந்தாலும் எளிதில் இந்நோய் பற்றிக் கொள்ளும். பெரும்பாலும் ‘ஈ.கோலி’ (E.Coli) என்ற நுண்கிருமிகளே இந்த நோய்த் தொற்றுக்குக் காரணியாக அமைகிறது. சிலருக்கு நீண்ட நாள் தொற்று இருப்பின் வேறு நுண் கிருமிகளும் காரணமாகி இருக்கக் கூடும்.

“சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று’ என்பது பொதுவான நோய்த் தொற்றாகும். சிறுநீரகப் பாதை முழுவதும் ஏற்படும் நோய்த் தொற்றையே ‘சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று’ என்று குறிப்பிடுகிறோம். ‘சிறுநீர்ப்பை-யில் மட்டும் சில நேரங்களில் நோய்த் தொற்று ஏற்படக் கூடும். நோய்க் கிருமிகள் சிறுநீர்ப் பையை மட்டுமே தாக்கி, அழற்சியை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) யும் அடிக்கடி ஏற்படக் கூடிய நோய்த் தொற்றாகும். இத்தொற்றில் சிறுநீர்ப்பை (Bladder) மட்டும் பாதிக்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கூடும். எல்லா நேரங்களிலும் சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்று, சிறுநீர்ப்பை நோய் தொற்றாக மாறாது. ஆனால், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்று எளிதாக மற்றப் பகுதிகளில் பரவும். ஆரம்ப நிலையில் எளிதில் கட்டுக்குள் வரும் இந்நோயைப் புறக்கணித்தால், அதிகமாகி சிறுநீர்ப்பையைப் பாதிப்பதோடு, நாளடைவில் சிறுநீரகங்களையும் பாதிக்கும் நிலையேற்படும். சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரியாக்காவிடில், அது சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாகி விடும்.

நோய்க் காரணிகள்:

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று நோய்க் கிருமிகளால்தான் ஏற்படுகிறது. ‘ஈ.கோலி’ (E.Coli) என்ற நோய்க் கிருமிகளே இந்நோய்க்குக் காரணியாகிறது. சிறுநீர்ப் புறவழி (Urethra) வழியேதான் ஏற்படுகிறது. 90% நோய்த் தொற்று இவ்வகை நுண்கிருமிகளால்தான் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:

சிறுநீர்ப் பாதையின் உட்புறச் சவ்வுகளில் நோய்க் கிருமிகள் தாக்கும் பொழுது அழற்சி ஏற்படும். அதன் விளைவாக அப்பகுதியில் சிவப்பாகவும் வீக்கமும் ஏற்படும். நோய்த் தொற்றின் விளைவாக ஏற்படும் அறிகுறிகள்:

=             இடுப்பெலும்பின் பகுதியில் வலி.

=             இடுப்பெலும்பின் கீழ்ப் பகுதியில் அழுத்தம்.

=             அதிக முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.

=             சிறுநீர் கழித்த பின்னும், சற்று சிறுநீர் ஒழுகுதல் (Incontinence)

=             சிறுநீர் கழிக்கும்பொழுது கடுமையான வலி.

=             சிறுநீர்ப் புறவழியில் எரிச்சல், வலி.

=             சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல்.

=             சிறுநீரில் இரத்தம் போதல்.

=             சில நேரங்களில் இரத்தமே வெளியேறுதல்.

=             இரவில் அதிக முறை சிறுநீர் கழித்தல்.

=             சிறுநீர் அடர்த்தியாக இருத்தல்.

=             சிறுநீரின் இயல்பான வண்ணத்தில் மாறுபாடு (Cloudy Urine)

=             நாற்றம் அதிகமான சிறுநீர் (Foul smelling Urine)

=             உடலுறவின்போது பிறப்புறுப்புகளில் வலி.

=             ஆணுறுப்பில் வலி.

=             இடுப்பின் பக்கவாட்டில் வலி.

=             களைப்பு.

=             குளிரெடுத்தல், உடலில் அசதி.

=             காய்ச்சல்.

=             குமட்டல், வாந்தி.

=             பசியின்மை.

=             மனக்குழப்பம்.

ஆகிய அறிகுறிகள் சிறுநீர்ப் பாதைத் தொற்றினால் ஏற்படும்.

நோயறிதல்:

சிறுநீர் ஆய்வு: சிறுநீர்ப் பரிசோதனை ஓர் எளிமையான சோதனையாகும். சிறுநீரில் இயல்பான நிலையில் இரத்த அணுக்கள் இருக்கா. ஆனால், நோய்த் தொற்று ஏற்படும்பொழுது, சிறுநீரில் இரத்தச் சிவப்பணுக்கள் (RBCs), இரத்த வெள்ளணுக்கள் (WBCs) நுண்கிருமிகள் ஆகியவை இருக்கும்.

சிறுநீர் நுண்கிருமி ஆய்வும், மருந்துகள் (அக்கிருமிகளில்) செயல்பாடும்: இச்சோதனை மூலம், எவ்வகை நோய்க் கிருமிகள் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதை எளிதாக அறியலாம். எவ்வகை மருந்துகள் அக்கிருமிகளை அழிக்கும் தன்மையுடையவை என்பதையும் எளிதில் கண்டறிய முடியும். இந்த ஆய்வு, மிகவும் எளிமையான, சரியான, ஒரு முக்கியமான ஆய்வாகும். இவ்வாய்வு நோய்க் கிருமிகளை அறிய உதவுவதுடன், அதை அழிக்கவல்ல, மருந்துகளைக் (Anti-biotics) கண்டறியவும் உதவும்.

மீள்ஒலிப் பதிவு (Ultra sound): வலியற்ற எளிதாகச் செய்யப்படும் சோதனை இது. ஒலி அலைகள் வயிற்றின் மேல் பகுதியிலிருந்து தோல் வழியே செலுத்தி, அதன் ‘மீள் ஒலி’ (எதிரொலி)யை வைத்து ‘இயல்பு’ (normal)நிலையையும், நோய்களில் ஏற்படும் மாறுபட்ட நிலையையும் (Abnormal) எளிதாக இந்த ஆய்வு வெளிப்-படுத்தும். சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்-களை இச்சோதனை வெளிப்படுத்தும்.

சிறுநீர்ப்பை உள்நோக்கி (Cystoscopy): இது ஓர் உள்நோக்கிக் கருவி. சிறுநீர்ப் புறவழி மூலம், உருப்பெருக்கி கண்ணாடி, விளக்குடன் கூடிய கருவியைச் செலுத்தி, சிறுநீர்ப்பையை நேரடியாகப் பார்வையிடலாம். சிறுநீர்ப் பையில் உள்ள குறைபாடுகளை எளிதாக இந்த ஆய்வின்மூலம் கண்டறியலாம்.

கதிரியக்க ஊடுகதிர் படம் (CT scan): சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பையில், நோயினால் ஏற்படும் மாறுபாடுகளை இந்த ஆய்வின் மூலம் எளிதில் அறியலாம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை அறிய பல வழிகள் இருந்தாலும், ‘நுண்கிருமி ஆய்வும், மருந்துகள் செயல்பாடு’ அறியும் சோதனை மிகவும் எளிதானதும், உறுதியான ஆய்வாகும். நோய்க்குக் காரணமான நுண்கிருமிகளைக் கண்டு அறிவதோடு, அவற்றை அழிக்கவல்ல மருந்துகளையும் இந்த ஆய்வு தெளிவாக விளக்குவதால் நோய்த் தொற்றறிய இவ்வாய்வே சிறந்தது என மருத்துவர்கள் முடிவு. சிறுநீரகங்கள் நோய்த் தொற்றால் பாதிப்படையும்பொழுது கதிரியக்க ஊடுகதிர் படங்கள் நோயறிய, நோய் பாதிப்பின் அளவை அறிய உதவும்.

தொடரும்…

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (37)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (37)

செப்டம்பர் 1-15,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

(  KIDNEYS & INFECTIONS )

மரு.இரா.கவுதமன்

சிறுநீரகங்கள் அமைப்பும், பாகங்களும் :

சிறுநீரகங்கள் பக்கத்திற்கு ஒன்றாக, உடலின் முதுகுப் புறம், வயிற்றுப் பகுதியில், விலா எலும்புகளால் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக அமைந்துள்ளது. சிறுநீரகங்கள், இரண்டு வரிசையில் கொழுப்புப் படிவங்களால் ஆன உறை போன்ற அமைப்புகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பின் மார்பு எலும்புகளின் 12ஆம் எலும்பிற்கும் (T12), இடுப்பெலும்பின் 3ஆம் எலும்பு வரை (L3) பரந்துள்ள சிறுநீரகங்கள் சட்டென்று அடிபடாதவாறு பாதுகாப்பான இடத்தில் பொருந்தியுள்ளது. வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தை விட சற்றுக் கீழாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும், 12 செ.மீ நீளமும், 6 செ.மீ அகலமும், 2.5 செ.மீ தடிமனும் உடையதாக இருக்கும். அவரை விதை வடிவில் இருக்கும். சிறுநீரகங்கள் ஆண்களுக்கு 125_170 கிராம் எடையிலும், பெண்களுக்கு 115_155 கிராம் எடையிலும் இருக்கும். இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் பாதுகாப்பாக சிறுநீரக கொழுப்பு உறைகளால் (Perirenal fat) மூடப்பட்டிருக்கும். வெளிப்புறமும் கெட்டியான நார்த்தசைகளால் மூடப்பட்டிருக்கும்.

சிறுநீரகங்களின் உட்புற அமைப்பு:

சிறுநீரகங்கள் உட்புறம் இரு பிரிவுகளாக அமைந்திருக்கும். ‘புறணி’ (Cortex) என்ற சுற்றுப்புற பாகமும், ‘அகணி’ (Medulla) என்ற உள்புற அமைப்பும் கொண்டதாக ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். புறணியில், சிறுநீரக ‘வடிநீர்க்குழாய் முடிச்சு’கள் (Glomerulus) இருக்கும். அதிலிருந்து ‘அருகாமைக் குழாய்கள் (Proximal tubules) துவங்கும். அவை ‘ஹென்லே’ வளையத்தில் (Loop of Henley) முடியும். வளைவான குழாயான ‘ஹென்லேயின் ஒரு பகுதி, சிறுநீரகப் புறணியில் அமைந்திருக்கும். இக்குழாய்கள் ‘தொலைக் குழாய்’களில் (Distal tubules) திறக்கும். இவை சிறுநீர் ‘சேகரிப்புக் குழாய்களில் (Collecting ducts) முடியும். சிறுநீரக அகணி 1 செ.மீ. தடிமன் இருக்கும். சிறுநீரக ‘அகணி’ அதன் உட்புற அமைப்பாகும். அகணிகளில், ‘பிரமிட்’ (Pyramid) போன்ற அமைப்புகள் இருக்கும். அதில் ஹென்லே வளையத்தின் கீழ்ப்புறம் (Medullary portion), தந்துகிகள் (Vasa Recta), அகணிப் பகுதி ‘சேகரிப்புக் குழாய்கள்’ (Collecting ducts) ஆகியவை அமைந்திருக்கும். அனைத்து முக்கோண வடிவ ‘பிரமிடு’களும் கீழ் குறுகி, ‘புல்லி’கள் (Calyx) என்ற பகுதியில் திறக்கும். பல புல்லிகள் (calyces) ஒருங்கிணைந்து ‘பெரும் புல்லி’யாக (Major Calyx) மாறும். பல பெரும் புல்லிகள் ஒன்றிணைந்து, சிறுநீரகத்தின் ‘இடுப்புப் (Pelvis) பகுதியில் திறக்கும். இவை ‘புனல்’ (Funnel) போன்ற அமைப்பில் இருக்கும்.

இப்புனல்களில் சேகரிக்கப்படும் சிறுநீர், (சுமார் 5 முதல் 10 மி.லி. வரை) சிறுநீர்க் குழாயில் வடியும் (Ureter). வடிகின்ற சிறுநீர், சிறுநீர்ப்பையை (Urinary Bladder) அடையும். வடிநீர்க் குழாய் முடிச்சுகள் (Glomerulus) அமைப்பு, அருகாமை (Proximal) குழாய்கள், ஹென்லே வளையம், தொலைக் குழாய்கள் அமைப்புகள் ஆகியவை ‘வடிப்பான்’கள் (Nephrons) என்று அழைக்கப்படும். இந்த வடிப்பான்கள்தான் தேவையற்ற பொருள்-களையும், கழிவுப் பொருள்களையும் இரத்தக் குழாய்களிலிருந்து வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும். மாவுச் சத்துகள் அருகாமைக் குழாய்களால் மீண்டும் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலக்கும். ஹென்லே வளையம், U வடிவத்தில் அமைந்துள்ள குழாயாகும். இறங்கு குழாய் (descending), ஏறு குழாய் (Ascending) என்று இரு பிரிவுகளாக இருக்கும். சேகரிப்புக் குழாய்களும், தொலைக்குழாய்களும் நீரை உறிஞ்சாது.

“பவ்மேன்’’ கிண்ணம்  (Bowman’s Capsule): 

இந்த உறுப்பு ஒரு ‘கிண்ணம்’ போன்ற பையாகும். இதில்தான் வடிப்பான்கள் (Nephrons) அமைந்திருக்கும். வடிப்பான்கள்தான் சிறுநீரகத்தின் அடிப்படையான செயலாக்க உறுப்பாகும். உடலின் நீர்மத்தையும், மற்றைய கரைசல்களையும், இரத்தத்தில் இருந்து வடிகட்டியும், தேவையானவற்றை ‘மீள் உறிஞ்சும்’ (Reapsorption) பணியையும் வடிப்பான்கள் செய்கின்றன. தேவையற்றவற்றை சிறுநீராக வெளியேற்றும் பணியையும் இவை செய்கின்றன. இரத்தத்தை இயல்பான அளவில் வைப்பதும், இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும் நிலையும் வடிப்பான்களின் செயல்பாட்டாலே செம்மைப் படுத்தப்படுகிறது. ஊக்கி நீர்களான (Hormones) ‘நீர்மத் தடுப்பு ஊக்கிநீர்’ (Anti-diuretic hormone), ‘அல்டோஸ்டீரான்’ (Aldosterone), ‘பேராதைராய்ட்’ (Parathyroid) ஊக்கி நீர்கள், வடிப்பான்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கின்றன.

வடிநீர்க் குழாய் முடிச்சுகள் (Glomerulus):

தந்துகிகளால் ஆன ‘முடிச்சு’ போன்ற அமைப்பு. உள் நுழையும் தந்துகிகள் அருகே ‘ரெனின்’ (Renin) என்னும் ஊக்கி நீர் உற்பத்தியாகிறது. இரத்தத்தின் அளவைச் சீராக வைப்பதற்கு இந்த ஊக்கி நீரே முக்கிய காரணியாகும். சிறுநீரகத் தமனி (Renal artery) யின்  மூலம் சுத்த இரத்தம் சிறுநீரகங்களுக்குச் செல்கின்றன. மகா தமனியின் (Aorta) கிளையாக இந்த இரத்தக்குழாய் பிரிகிறது. சுத்தகரிக்கப்படாத இரத்தம் சிறுநீரகச் சிரைகள் (Renal Veins) மூலம், கீழ்ப் பெருஞ்சிரையிலிருந்து, சிறுநீரகங்களுக்கு வந்து, வடிப்பான்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீரகத் தமனி மூலம், மகா தமனியில் சேர்கிறது.

(தொடரும்…)

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!) [36]

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [36]

ஆகஸ்ட் 16-31,2021

சிறுநீரகங்களும்  நோய்த் தொற்றும்

(KIDNEYS & INFECTIONS)

சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளாகும். இவை ஒரு தொழிற்சாலைக்கு நிகரான பணிகளை நம் உடலில் செய்கிறது என்றால் மிகையாகாது. நம் உடலில் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் போன்றவை எப்படி 24 மணி நேரமும் தொடர்ச்சியாக, ஓய்வின்றி இயங்குகின்றனவோ, அதேபோல் உழைக்கும் உறுப்புகள்தாம் சிறுநீரகங்கள். சிறுநீர் பிரிப்பு என்கிற செயலைச் செய்வது மட்டுமன்றி, மேலும் பல செயல்பாடுகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

நம் உடலில் உள்ள நீர்மங்களை ஒரே சீராக வைப்பது சிறுநீரகங்கள்தாம். வளர், சிதை மாற்றங்களால் உண்டாகும் கழிவுகளை (Metabolic Waste Products) வெளியேற்றுவதும், அவற்றை இரத்தத்தில் இருந்து பிரிக்கும் பெரும்பணியை சிறுநீரகங்களே செய்கின்றன. நீர்மச் சத்தைச் சீராக வைப்பதும், உடலில் உள்ள “மின் பகுபொருள்களை’’ (Electrolytes) சமநிலையில் வைப்பதும், உடலில் அமிலங்களை, காரங்களை (Acid-base balance) ஒழுங்குபடுத்துவதும் சிறுநீரகங்களின் முக்கிய பணிகளாக இருக்கின்றன. உடலின் இரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பதும், சிவப்பணுக்கள் உற்பத்தியையும், எலும்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் சிறுநீரகங்கள் செம்மையாகச் செய்கின்றன. உடலின் உயிரணுக்களின் உள் நீர்மங்களையும் உயிரணுக்களின் வெளி நீர்மங்களையும் (Intracellular & Extracellular) சீரான நிலையில் வைப்பவை நம் சிறுநீரகங்களே. அதன் விளைவாகத்தான் உடலின் அனைத்து உயிரணுக்களும் (Cell) சீராகச் செயல்படுகின்றன.

சிறுநீரகங்கள் செயல்பாடுகளில் குறைபாடுகள் நிகழ்ந்தால், நம் உடலின் செயல்பாடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு விடும். இதனால், நம் உடலின் நீர்மத்தன்மை சீராக இருப்பதும், அதன் மூலம் இரத்த அழுத்தத்தை ஒழுங்கான அளவில் வைத்துக் கொள்வதும் பாதிப்படையும். அமிலம், காரம் ஒழுங்கின்மை ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஆபத்து ஏற்படக் கூடும். வளர், சிதை மாற்றங்களில் சிக்கல்கள் ஏற்படும். சிறுநீரகங்கள் செயல்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டால், உடலின் மொத்த சமநிலைகளிலும் சீரின்மை ஏற்பட்டு, உடல் செயல்பாடுகள் முழுமையாகப் பாதிப்படைந்து மரணமே நிகழும் நிலை ஏற்படும்.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும், சிறுநீரகத் தமனியிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்களும், சிறுநீரகச் சிரையில் இணையும் இரத்தக் குழாய்களும், மிக, மிகச் சிறிய தந்துகிகளாகப் பிரிந்தும், இணைந்தும் செயல்படுகின்றன. இச்சிறிய தந்துகிகளே. பவ்மேன் கிண்ணத்தின் உள்ளே அமைந்துள்ள, வடிப்பான்களாக (Nephrons) உள்ளன. உடலின் அனைத்து இரத்தமும் சிறுநீரகத்திற்குச் சென்றே சுத்திகரிக்கப்படுகிறது. வடிப்பான்கள்தான் சிறுநீரகத்தின் செயல்படும் பொறிகளாகும். ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 9,00,000 (ஒன்பது லட்சம்) முதல் 10,30,000 (பத்து இலட்சத்து முப்பதாயிரம்) வடிப்பான்கள் இருக்கும். 24 மணி நேரமும் செல்லும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியினை இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கும். வடிப்பான்களுக்குச் செல்லும் தந்துகிகள் 20  mm அகலம்தான் இருக்கும். இரத்தம் அந்தத் தந்துகிகள் வழியே செல்லும்பொழுது தேவையற்ற பொருள்கள், பவ்மேன் கிண்ணத்தில் உள்ள நீர்ம அழுத்தத்தால், சவ்வூடு பரவல் முறையில் மாவுச் சத்துகள், வேதிப் பொருள்கள் உறிஞ்சப்படுகின்றன. அதில் உடலின் தேவைக்கான நீர்மங்களும், மற்ற வேதிப் பொருள்களும், மாவுச் சத்துகளும் (Carbohydrates) “மீள் உறிஞ்சும்’’ (Re-absorption) முறையில், அருகாமைக் குழாய்கள் மூலம் உறிஞ்சப்படுகின்றன. தேவையான பொருள்கள் உறிஞ்சப்பட்டவுடன், தேவையற்ற பொருள்கள் நீரோடு கரைக்கப்பட்டு, சிறுநீராக வெளியேற்றப்படுகின்றன.

சிறுநீரகத்தின் முக்கியப் பணிகள்:

¨           இதயம் வெளியேற்றும்(Cardiac Output) இரத்தத்தில் 25 சதவிகித இரத்தம் சிறுநீரகத்தின் வழியே சென்று சுத்திகரிக்கப்படுகிறது.

¨           உடலின் நீர்மங்களை சமநிலையில் (Fluid Balance) வைப்பதில் சிறுநீரகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

¨           வளர், சிதை மாற்றங்களின் செயல்பாடுகளில் உண்டாகும், கழிவுகளை வெளியேற்றும் பணியையும சிறுநீரகங்களே செய்கின்றன.

¨           உடலுக்குத் தேவையான நீர்மங்களை மீள் உறிஞ்சும் வேலையையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.

¨           நீர்மங்கள் சமநிலையில் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும் பணியையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.

¨           அமிலங்கள், காரங்கள் சமநிலையில் (Acid-Base Balance) வைக்கும் பணியையும் சிறுநீரகங்களே செய்கின்றன.

¨           தேவையற்ற கழிவுகளை சிறுநீராக வெளியேற்றும் பெரும்பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.

இப்புனல்களில் சேகரிக்கப்படும் சிறுநீர், (சுமார் 5 முதல் 10 மி.லி. வரை) சிறுநீர்க் குழாயில் வடியும் (Ureter), வடிகின்ற சிறுநீர், சிறுநீர்ப்பையை (Urinary Bladder), வடிநீர்க் குழாய் முடிச்சுகள் (Glomerulus) அமைப்பு, அருகாமை(Proximal) குழாய்கள், ஹென்லே வளையம், தொலைக் குழாய்கள் அமைப்புகள் ஆகியவை ‘வடிப்பான்’ (Nephrons) கள்என்று அழைக்கப்படும். இந்த வடிப்பான்கள்தான் தேவையற்ற பொருள்களையும், கழிவுப் பொருள்களையும் இரத்தக் குழாய்களிலிருந்து வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மாவுச் சத்துகள் அருகாமைக் குழாய்களில் மீண்டும் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலக்கும். ஹென்லே வளையம், U வடிவத்தில் அமைந்துள்ள குழாயாகும். இறங்கு குழாய் (descending), ஏறு குழாய் (Ascending) என்று இரு பிரிவாக இருக்கும். சேகரிப்புக் குழாய்களும், தொலைக்குழாய்களும் நீரை உறிஞ்சாது. 

நீரிழிவு நோய் (DIABETES MELLITLIS) பெண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள்: (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!) [34]

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [34]

ஜுலை 16-31,2021

நீரிழிவு நோய்

(DIABETES MELLITLIS)

மரு.இரா.கவுதமன்

பெண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள்:

               ஆண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள் போன்றே, சில தனித்துவ அறிகுறிகள் பெண்களுக்கும் நீரிழிவு நோயில் உண்டாகும். தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, தோல் வறண்டு காணப்படும். அடிக்கடி சிறுநீர்க் குழாய் நோய்த் தொற்று (urinary tract infection) ஏற்படும். சிறுநீர்ப் புறவழி (Urethra), பிறப்புறுப்பு (Vagina) ஆகியவற்றில் பூஞ்சை நோய்த் தொற்று (Fungal Infection) ஏற்படும். அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் அரிப்பு, வெள்ளைப் படுதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் பொதுவான நீரிழிவு நோய் அறிகுறிகள்.

முதல்வகை நீரிழிவு நோய் அறிகுறிகள்: (Symptoms in type 1 Diabetes)

* அதிகப் பசி (Poly Pepsia)

* அதிகத் தாகம் (Poly dypsia)

* உடல் எடை குறைவு (Weight loss)

* அதிகக் களைப்பு (Tired)

* அதிக சிறுநீர் கழித்தல் (Poly urea)

* பார்வைக் குறைபாடு (Diabetic Retinopathy)

இரண்டாம் வகை நீரிழிவு நோய் அறிகுறிகள்: (Symptoms in Type 2 Diabetes)

* அதிகப் பசி (Poly Pepsia)

* அதிகத் தாகம் (Poly dypsia)

* அதிக சிறுநீர் வெளியேறும் (Poly urea)

* பார்வைக் குறைபாடு (Diabetic Retinopathy)

* உடல் மெலிவு

* களைப்பு

* புண்கள் ஆறாமை

* ஈறுகளில் இரத்தம் வடிதல்

* சிறு வயதிலேயே பற்கள் ஆட்டம் கொடுத்தல்

* பற்கள் இழப்பு

கருக்கால நீரிழிவு நோய் :  (Gestational Diabetes)

பல பெண்களுக்கு எந்த அறிகுறிகளும் தெரியாது. இயல்பான பரிசோதனைகளிலே இது வெளிப்படும். பெரும்பாலும் கருவுற்ற 24 முதல் 28 வாரங்களில் இது வெளிப்படும். வெகு அரிதாகவே சில பெண்களுக்கு அதிக தாகமும், அதிகமாகச் சிறுநீர் கழித்தலும் ஏற்படும் பிறப்புறுப்பு நோய்த் தொற்று, இவர்களுக்கு எளிதாகப் பற்றிக் கொள்ளும்.

பல நேரங்களில் நீரிழிவு நோய் அறிகுறிகள் கடுமையாக இருக்காது. ஆனால், நாளடைவில் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும். பல நேரங்களில் வழமையான குருதிப் பகுப்பாய்வில் நோயறியும் நிகழ்வுகளும் ஏற்படும்.

நோய்க்கான காரணிகள்

முதல் வகை நீரிழிவு நோய் (Type 1 diabetes)

சரியான காரணம் தெரியாத நிலை உள்ள இவ்வகை நோயில், நோய் எதிர்ப்புச் சக்தியே, தன்னுடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை (Beta cells of Pancreas) தாக்கி அழிப்பதால், இன்சுலின் சுரப்புக் குறைபாடு உண்டாகி நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவேளை ஏதேனும் வைரஸ்கள் தன்னுடல் நோய் எதிர்ப்பான்களை (Auto – immune) தூண்டுகிறதோ என்கிற அய்யப்பாடும் உள்ளது. மரபணுக்கள் (Genes) ஒருவேளை நோய்க்குக் காரணமோ என்ற அய்யப்பாடும் பல மருத்துவர்களால் உரைக்கப்படுகிறது.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் : (Type 2 diabetes)

மரபணுக் கோளாறுகளும், வாழ்வியல் மாற்றங்களும் (Life style) சேர்ந்து இந்நோயை உண்டாக்கக்கூடும் பருத்த உடல் நோய்க்கான வாய்ப்பை அதிகமாக்கும். தொப்பையும், தொந்தியும் இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கி இரத்தத்தில் சர்க்கரையை அதிகமாக்கும். பாரம்பரிய நோயாகவே, இந்நோய் பெரும்பான்மையோரைப் பாதிக்கிறது.

கருக்கால நீரிழிவு நோய் : (Gestational Diabetes)

பெண்கள் கருவுற்றிருக்கும் பொழுது ஊக்கி நீர் மாற்றங்கள் (Hormonal changes) இயல்பாக நிகழும். இதன் விளைவாக இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் நிகழும். அதேபோல் நஞ்சுக் கொடி ஊக்கி நீர்கள் (Placental Hormones) இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் உண்டாக்கும். கருவுற்ற அனைத்து மகளிருக்கும் இது ஏற்படாது. ஒரு சிலரே பாதிக்கப்படுவர்.

அடிப்படையில் மரபணுக்கள் பாரம்பரியம், வாழ்வியல், சுற்றுச்சூழல் காரணிகளே நீரழிவு நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன. முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது. முதல் வகை நீரிழிவு நோய் உறவினர் திருமண முறை (Sibling) இளம் வயதிலேயே ஏற்படக்கூடும்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய், உடல் பருமன், 45 வயதுக்கு மேற்பட்டோர்  பாரம்பரியம் (பெற்றோர், நெருங்கிய உறவினர் பாதிக்கப்பட்டிருந்தால் நோய் வரும் வாய்ப்பு அதிகம்) சோம்பல் வாழ்க்கை, கருக்கால நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயின் முன் பருவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மிகு இரத்த அழுத்தம் உடையவர்கள், மிகு கொழுப்புச் சத்து, டிரைகிளிசரைடு உள்ளவர்களுக்கு எளிதில் இந்த வகை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

கருக்கால நீரிழிவு நோய் :

அதிக எடையுள்ளவர்கள், 25 வயதிற்கு மேலானவர்கள், முன் பிரசவங்கள் போது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன் பேறுகாலத்தில் பிறந்த குழந்தை 9 பவுண்டிற்கும் கூடுதலான எடை இருந்தால், இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் வீட்டில் இருந்தால் (இரத்த உறவு), பல நீர்க்கட்டி சூலகங்கள் (Poly Cystic overies) உடைய பெண்கள் ஆகியோருக்கு கருக்கால நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள் : (Complications of diabetes)

*             மாரடைப்பு (Heart attack)

*             பக்கவாதம் (Stroke)

*             நரம்புத் தளர்ச்சி (Neuropathy)

*             பார்வைக் கோளாறு (Retinopathy)

*             குருடு (Blindness)

*             செவிடு (hearing loss)

*             பற்கள் இழத்தல் (Lose of teeth)

*             உலர்ந்த தோல் விளைவாக நுண்ணுயிர், பூஞ்சைத் தொற்று (Bacterial of fungal infection)

*             மனத்தளர்ச்சி (Depression)

*             நினைவாற்றல் இழப்பு

போன்றவை நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களாகும் கருக்கால நீரிழிவு நோய் தாயையும், சேயையும் சேர்ந்தே பாதிக்கும். முதிர்வற்ற மகப்பேறு (Pre – Mature Birth) அதிக எடை உள்ள குழந்தை பிறப்பு, பிற்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு, குறைவான சர்க்கரை அளவு (Hypoglysemic) மஞ்சள் காமாலை, குழந்தை இறப்பு(Still birth), மிகு இரத்த அழுத்தம், அதன் விளைவாக பேறுகால வலிப்பு (Eclampsia), தாய்மார்களுக்கு இயற்கை பேறுகால வாய்ப்புக் குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

நோயறிதல் :

இரத்தம், சிறுநீர் பகுப்பாய்வு எளி

 

தாக நோயறிய உதவும், உணவுக்கு முன் (திணீstவீஸீரீ) உணவு உண்டபின் இரண்டு மணி நேர ஆய்வுகள் நோயை துல்லியமாக அறிய உதவும். உடல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளும் நோயறிய உதவும்.

(தொடரும்)

நீரிழிவு நோயின் வகைகள் (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!) [33]

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [33]

ஜுலை 1-15,2021

நீரிழிவு நோய் இன்றைய நிலையில் நடுத்தர வயது மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய நோயாக உள்ளது. இந்நோய் ஒரு வளர்சிதை மாற்றநோய் (Metabolic disease). கணையத்தின், லாங்கர்ஹான் திட்டுக்களில் சுரக்கும் இன்சுலின் சுரப்பு குறைவினாலோ, இன்சுலினை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ இந்நோய் உண்டாகிறது. இன்சுலின் என்ற ‘ஊக்கி நீர்'(Hormone) இரத்தத்தில் உள்ள சர்க்கரையை, செல்களில் செலுத்துகின்ற பணியை செய்கிறது. செல்களுக்கு செலும் சர்க்கரைதான், செல்களுக்கு இயங்கும் சக்தியையும், செல்களில் சேர்த்தும் வைக்கப்படுகிறது நீரிழிவு நோய்க்கு சரியான மருத்துவம் செய்யாவிட்டால் நரம்புகள், கண்கள், சிறுநீரகங்கள், ஈறுகள் போன்ற உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

நீரிழிவு நோயின் வகைகள் :  நீரிழிவு நோய் பொதுவாக 4 வகையாக, வகைப் படுத்தப்படும்.

1. நீரிழிவு நோய் முன் பருவம்: (Prediabetic stage)

இந்த நிலையில், இரத்தத்தில் சர்க்கைரை அளவு இயல்பைவிட அதிக அளவு இருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது.

2. முதல்வகை நீரிழிவு நோய்: (Type 1 diabetes)

“தன்னுடல் தாக்கு நோய் (Auto – immune disease) வகையைச் சேர்ந்தது இந்த நோய் கணையத்தில் உள்ள செல்களை, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே அழித்து விடும். அதனால் இன்சுலின் சுரப்பது தடைப்பட்டுவிடும். இதன் காரணம் தெரியவில்லை. 10% நோயாளிகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes): இன்சுலின் எதிர்ப்பு உடலில் உருவாகும் பொழுது, இந்த வகை நோய் ஏற்படும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.

3. கருக்கால நீரிழிவு நோய்: (Gestational diabetes)

கருவுற்ற காலத்தில் மகளிர்க்கு ஏற்படும் நீரிழிவு நோய் இது. உடல் கருவுற்ற காலத்தில், இன்சுலின் பயன்பாடு சில மகளிர்க்கு குறையும், இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். மகப்பேறுக்கு பின் இந்நோய் இயல்பாகவே குறைந்துவிடும். (கூடுதல் சிறுநீர் கழிப்பு நோய் – இதை வெற்று நீரிழிவு நோய் (Diabetes insipidus) எனவும் அழைப்பர். இந்நோய் வழமையான நீரிழிவு நோய் இல்லை. அதிக அளவு சிறுநீர் வெளியேறும். ஆனால் அதில் சர்க்கரை இருக்காது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் குறைபாட்டால் இந்நோய் உண்டாகிறது) ஒவ்வொரு வகை நோய்க்கும் அறிகுறிகளும், காரணங்களும் மருத்துவமும் மாறுபடும்.

நோயின் அறிகுறிகள் :

இரத்தத்தில் சர்க்கை அளவு அதிகமாவதால் பல அறிகுறிகள் தோன்றும் நீரிழிவு நோயில் உள்ள பொதுவான அறிகுறிகள்:

* அதிகப் பசி எடுத்தல் (Poly Pepsia)

* அதிக தாகம் எடுத்தல் (Poly dypsia)

* அதிக சிறுநீர் கழித்தல்  (Poly urea)

* எடை குறைதல்

*உடல் மெலிதல்

* பார்வை மங்குதல்

*அதிகக் களைப்பு

* புண்கள் எளிதில் ஆறாத நிலை.

இன்சுலின் பயன்பாடு குறைவினால், செல்களுக்குள் சர்க்கரை செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் செல்களின் செயல்பாடு பாதிக்கப்படும். உடலுக்குத் தேவையான, சக்தி (Energy) கிடைக்காது. செல்களில் ஏற்படும் வளர், சிதை மாற்றச்செயல்பாடு (Metabolic activities) கள் பாதிப்படையும். அதனால் உடலில் உள்ள செல்களில் சக்தி தேவை அதிகமாகும். பல செல்களிலும் கூட்டாக இத்தேவை அதிகரிப்பதால், பசியும் அதிகமாகும். உணவு எடுத்துக் கொள்ளும் அவசியம் அதிகரிக்கும். அதனால்தான் அதிகப் பசி எடுக்கும். இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை தேங்குவதால் அதை கரைத்து வெளியேற்ற, திசுக்களிலிருந்து அதிக அளவு நீர் (Interstitial fluid) சவ்வூடு பரவல் மூலம் இரத்தக் குழாய்கள் உறிஞ்சும் நிலை ஏற்படும்.

அதனால் திசுக்களில் தண்ணீர் தேவை அதிகரிக்கும். இதுவே அதிக தாகம் (Polydypsia) எடுக்கக்காரணம். அதே போன்றே இயல்பைவிட அதிகம் நீர்மம் இரத்தக் குழாய்களில் சேர்வதால், சிறுநீரகங்கள் அதிகம் சிறுநீரில் சர்க்கரையிஅ வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். (அதனால்தான் சிறுநீர் பரிசோதனையில் சர்க்கரை இருப்பது தெரியவரும்). அந்த அதிக அளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்ற அதிக அளவு நீர் தேவைப்படும். அந்த அதிக அளவு நீர் சிறுநீரகத்தால், சிறுநீராகப் பிரித்தெடுக்கப்பட்டு வெளியேறும். இதனால்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் சிறுநீர் கழிக்க (Poly urea) வேண்டிய நிலை உண்டாகும். உடலின் செல்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமையால், உடல் மெலியத் துவங்கும் இதன் காரணமாகவே உடலில் அதிக அளவு களைப்பும், சோர்வும் ஏற்படும் நீரிழிவு நோயில் நரம்புகளும் அதிகம் பாதிப்படையும். அதிலும் கண்ணீன் நரம்புகள் எளிதில் பாதிக்கப்படும் (diabetic neuropathy). அதனால் பார்வை மங்கும். சரியாக மருத்துவம் செய்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் கண்கள் குருடாகும் நிலை கூட ஏற்படும் (விழித்திரையில் பார்வை நரம்புகள் இருப்பதால், விழித்திரைப் பாதிப்பு (Diabetic retinropathy)ஏற்படும். நுண்கிருமிகள் பல்கிப் பெருக சர்க்கரை அதிக அளவு இருப்பது வாய்ப்பான நிலை. அதனால் புண்கள் ஏற்பட்டால், நுண்கிருமிகள் பல்கிப் பெருகுவதால் புண்கள் சீக்கிரம் ஆறாது. மேலும், மேலும் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய் தொற்றும் அதிகரிக்கும். அதுவும் புண்கள் ஆறாமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.

ஆண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள்:

ஆண்களுக்கு, நீரிழிவு நோயால் தசைகள் தளர்ச்சி (Muscle weakness) ஏற்படும் ஆண்மைக் குறைவு ஏற்படும். பாலியல் உணர்வு மங்கும் (decreased sex drive) விரைப்பின்மை (Erectile disfunction) ஏற்படும்.

                                                             (தொடரும்..)