மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (38)
சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்
(KIDNEYS & INFECTIONS)
மரு.இரா.கவுதமன்
சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று (Urinary Tract Infection – UTI)
சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் (Ureters), சிறுநீர்ப்பை (Cystitis), சிறுநீர்ப் புற வழி (Urithritis) ஆகியவற்றில் ஏற்படும் நோய்த் தொற்றாகும். சிறுநீர் நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள் கரைசலேயாகும். இயல்பான நிலையில் சிறுநீர், கிருமிகள் இல்லாமல் சுத்தமாகத்தான் இருக்கும். நோய்த் தொற்று, நுண் கிருமிகளால் வெளிப்புறத்தில் இருந்துதான் ஏற்படும். நோய்த் தொற்று ஏற்படும் பகுதிகளில் அழற்சியும் ஏற்படும். சிறுநீர்ப் புறவழியில் ஏற்படும் நோய்த் தொற்று, “சிறுநீர்ப் புற வழி அழற்சி’ (Urethritis) யையும், சிறுநீர்ப்பை நோய்த் தொற்று, “சிறுநீர்ப்பை அழற்சி’ (Cystitis) யையும், ‘சிறுநீரக நோய்த் தொற்று’ (Pylonephritis) ‘சிறுநீரக வடிப்பான் அழற்சி’யையும் உண்டாக்கும். இவை ஓர் உறுப்பில் துவங்கினாலும், மற்ற உறுப்புகளிலும் பரவி அழற்சியை ஏற்படுத்தும்.
சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று மிகவும் எளிதாகப் பற்றிக் கொள்ளும் தொற்று நோயாகும். இத்தொற்று நோய் ஆண்களை விட எளிதாக பெண்களுக்கு பற்றிக் கொள்ளும். 5 பெண்களில் ஒருவருக்கு என்ற நிலையில் இந்நோய்த் தொற்று ஏற்படும். பெண்களின் பிறப்புறப்பும் (Vagina),, ஆசனவாயும் (Anus) அருகருகே அமைந்திருப்பதால் ஆசனவாய் மூலம் வெளியேறும் நுண்கிருமிகள் எளிதாக பிறப்புறப்பில் பரவும் நிலை ஏற்படும். அதனால் நோய்த் தொற்று பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சுத்தமற்ற பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அசுத்தமான நீரைக் கொண்டு பிறப்புறுப்பு-களைக் கழுவுவதாலும் இந்நோய்த் தொற்று ஏற்படும். சுத்தமற்ற உறுப்புகளுடன் ஏற்படும் உடலுறவும் நோய்த்தொற்று உண்டாக்கும். ஆண்களுக்கும் இந்நோய்த் தொற்று ஏற்படும். குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்படுவர். ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப் படுகிறார்கள். ஆண்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு இந்நோய் எளிதாகத் தொற்றிக் கொள்ளும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு “விந்து நீர் சுரப்பி’ (Prostate gland) பருமனடைவதால் இந்நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். விந்து நீர் சுரப்பி பருமன் (Enlarged Prostate), சிறுநீர்க் கழிப்பதில் மாறுபாட்டை உண்டாக்கும். சிறுநீர்ப் பையில் (Bladder) உள்ள சிறுநீர் முழுமையாக வெளியேறாமல், தேக்கமடைந்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிறுநீர்ப்பை இறக்கம் (Bladder Prolapse) நோய்த் தொற்று எளிதில் ஏற்படக் காரணமாக அமையும். நீரிழிவு நோய் (Diabetes)உள்ளவர்களுக்கு நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் சரியாகவும் ஆகாது. குழந்தைகளுக்கு சிறுநீரக உறுப்புகளின் அமைப்பு மாறுபட்டிருந்தாலும் எளிதில் இந்நோய் பற்றிக் கொள்ளும். பெரும்பாலும் ‘ஈ.கோலி’ (E.Coli) என்ற நுண்கிருமிகளே இந்த நோய்த் தொற்றுக்குக் காரணியாக அமைகிறது. சிலருக்கு நீண்ட நாள் தொற்று இருப்பின் வேறு நுண் கிருமிகளும் காரணமாகி இருக்கக் கூடும்.
“சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று’ என்பது பொதுவான நோய்த் தொற்றாகும். சிறுநீரகப் பாதை முழுவதும் ஏற்படும் நோய்த் தொற்றையே ‘சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று’ என்று குறிப்பிடுகிறோம். ‘சிறுநீர்ப்பை-யில் மட்டும் சில நேரங்களில் நோய்த் தொற்று ஏற்படக் கூடும். நோய்க் கிருமிகள் சிறுநீர்ப் பையை மட்டுமே தாக்கி, அழற்சியை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) யும் அடிக்கடி ஏற்படக் கூடிய நோய்த் தொற்றாகும். இத்தொற்றில் சிறுநீர்ப்பை (Bladder) மட்டும் பாதிக்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கூடும். எல்லா நேரங்களிலும் சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்று, சிறுநீர்ப்பை நோய் தொற்றாக மாறாது. ஆனால், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்று எளிதாக மற்றப் பகுதிகளில் பரவும். ஆரம்ப நிலையில் எளிதில் கட்டுக்குள் வரும் இந்நோயைப் புறக்கணித்தால், அதிகமாகி சிறுநீர்ப்பையைப் பாதிப்பதோடு, நாளடைவில் சிறுநீரகங்களையும் பாதிக்கும் நிலையேற்படும். சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரியாக்காவிடில், அது சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாகி விடும்.
நோய்க் காரணிகள்:
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று நோய்க் கிருமிகளால்தான் ஏற்படுகிறது. ‘ஈ.கோலி’ (E.Coli) என்ற நோய்க் கிருமிகளே இந்நோய்க்குக் காரணியாகிறது. சிறுநீர்ப் புறவழி (Urethra) வழியேதான் ஏற்படுகிறது. 90% நோய்த் தொற்று இவ்வகை நுண்கிருமிகளால்தான் ஏற்படுகிறது.
நோயின் அறிகுறிகள்:
சிறுநீர்ப் பாதையின் உட்புறச் சவ்வுகளில் நோய்க் கிருமிகள் தாக்கும் பொழுது அழற்சி ஏற்படும். அதன் விளைவாக அப்பகுதியில் சிவப்பாகவும் வீக்கமும் ஏற்படும். நோய்த் தொற்றின் விளைவாக ஏற்படும் அறிகுறிகள்:
= இடுப்பெலும்பின் பகுதியில் வலி.
= இடுப்பெலும்பின் கீழ்ப் பகுதியில் அழுத்தம்.
= அதிக முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.
= சிறுநீர் கழித்த பின்னும், சற்று சிறுநீர் ஒழுகுதல் (Incontinence)
= சிறுநீர் கழிக்கும்பொழுது கடுமையான வலி.
= சிறுநீர்ப் புறவழியில் எரிச்சல், வலி.
= சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல்.
= சிறுநீரில் இரத்தம் போதல்.
= சில நேரங்களில் இரத்தமே வெளியேறுதல்.
= இரவில் அதிக முறை சிறுநீர் கழித்தல்.
= சிறுநீர் அடர்த்தியாக இருத்தல்.
= சிறுநீரின் இயல்பான வண்ணத்தில் மாறுபாடு (Cloudy Urine)
= நாற்றம் அதிகமான சிறுநீர் (Foul smelling Urine)
= உடலுறவின்போது பிறப்புறுப்புகளில் வலி.
= ஆணுறுப்பில் வலி.
= இடுப்பின் பக்கவாட்டில் வலி.
= களைப்பு.
= குளிரெடுத்தல், உடலில் அசதி.
= காய்ச்சல்.
= குமட்டல், வாந்தி.
= பசியின்மை.
= மனக்குழப்பம்.
ஆகிய அறிகுறிகள் சிறுநீர்ப் பாதைத் தொற்றினால் ஏற்படும்.
நோயறிதல்:
சிறுநீர் ஆய்வு: சிறுநீர்ப் பரிசோதனை ஓர் எளிமையான சோதனையாகும். சிறுநீரில் இயல்பான நிலையில் இரத்த அணுக்கள் இருக்கா. ஆனால், நோய்த் தொற்று ஏற்படும்பொழுது, சிறுநீரில் இரத்தச் சிவப்பணுக்கள் (RBCs), இரத்த வெள்ளணுக்கள் (WBCs) நுண்கிருமிகள் ஆகியவை இருக்கும்.
சிறுநீர் நுண்கிருமி ஆய்வும், மருந்துகள் (அக்கிருமிகளில்) செயல்பாடும்: இச்சோதனை மூலம், எவ்வகை நோய்க் கிருமிகள் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதை எளிதாக அறியலாம். எவ்வகை மருந்துகள் அக்கிருமிகளை அழிக்கும் தன்மையுடையவை என்பதையும் எளிதில் கண்டறிய முடியும். இந்த ஆய்வு, மிகவும் எளிமையான, சரியான, ஒரு முக்கியமான ஆய்வாகும். இவ்வாய்வு நோய்க் கிருமிகளை அறிய உதவுவதுடன், அதை அழிக்கவல்ல, மருந்துகளைக் (Anti-biotics) கண்டறியவும் உதவும்.
மீள்ஒலிப் பதிவு (Ultra sound): வலியற்ற எளிதாகச் செய்யப்படும் சோதனை இது. ஒலி அலைகள் வயிற்றின் மேல் பகுதியிலிருந்து தோல் வழியே செலுத்தி, அதன் ‘மீள் ஒலி’ (எதிரொலி)யை வைத்து ‘இயல்பு’ (normal)நிலையையும், நோய்களில் ஏற்படும் மாறுபட்ட நிலையையும் (Abnormal) எளிதாக இந்த ஆய்வு வெளிப்-படுத்தும். சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்-களை இச்சோதனை வெளிப்படுத்தும்.
சிறுநீர்ப்பை உள்நோக்கி (Cystoscopy): இது ஓர் உள்நோக்கிக் கருவி. சிறுநீர்ப் புறவழி மூலம், உருப்பெருக்கி கண்ணாடி, விளக்குடன் கூடிய கருவியைச் செலுத்தி, சிறுநீர்ப்பையை நேரடியாகப் பார்வையிடலாம். சிறுநீர்ப் பையில் உள்ள குறைபாடுகளை எளிதாக இந்த ஆய்வின்மூலம் கண்டறியலாம்.
கதிரியக்க ஊடுகதிர் படம் (CT scan): சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பையில், நோயினால் ஏற்படும் மாறுபாடுகளை இந்த ஆய்வின் மூலம் எளிதில் அறியலாம்.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை அறிய பல வழிகள் இருந்தாலும், ‘நுண்கிருமி ஆய்வும், மருந்துகள் செயல்பாடு’ அறியும் சோதனை மிகவும் எளிதானதும், உறுதியான ஆய்வாகும். நோய்க்குக் காரணமான நுண்கிருமிகளைக் கண்டு அறிவதோடு, அவற்றை அழிக்கவல்ல மருந்துகளையும் இந்த ஆய்வு தெளிவாக விளக்குவதால் நோய்த் தொற்றறிய இவ்வாய்வே சிறந்தது என மருத்துவர்கள் முடிவு. சிறுநீரகங்கள் நோய்த் தொற்றால் பாதிப்படையும்பொழுது கதிரியக்க ஊடுகதிர் படங்கள் நோயறிய, நோய் பாதிப்பின் அளவை அறிய உதவும்.
தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக