புதன், 12 ஜூன், 2024

மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…-

 மருத்துவர் இரா. கவுதமன்

2023 மருத்துவம் மார்ச் 1-15,2023

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம்.

பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு முன்பே உணர்ந்துவிட்டார் போலும்’’ என்றெல்லாம் கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால், இதற்கு எந்தவித மருத்துவ, அறிவியலும் அடிப்படையாக இல்லை. எல்லா மதங்களிலும் மரணத்தைப் பற்றி பலவகை
மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.

எல்லா மதங்களிலும் மரணமடைந்தவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதுவும் திடீரென ஏற்படும் மரணங்களில் மரணமடைந்தவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் ஆவியாக மாறி அலைகின்றனர் என்ற நம்பிக்கை பரவலாக அனைவர் மனதில் இருக்கிறது. அதிலும் நல்லவர்கள், நம்மை வழி நடத்திய பெரியவர்கள் நல்ல ஆவிகளாக மரணத்திற்குப் பின்னும் நமக்கு நல்வழி காட்டுவதாகவும், கெட்டவர்கள் கெட்ட ஆவிகளாக மாறி நமக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை. திடீரென மரணமடைந்தவர்கள் தங்கள் ஆசை நிறைவேறும் வரை ஆவியாக அலைந்து மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்புவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

ஆவிகளைப் பற்றிய எண்ணங்களும்,நம்பிக்கைகளும் நாளடைவில் பேய்களாக உருவாகியது. பேய்கள், பிசாசுகள் கற்பனைக்கு, மதம், மத குருமார்கள், அதை வளர்த்ததும் ஒரு முக்கிய காரணம். கடவுள் பற்றிய நம்பிக்கையைப் போலவே “சாத்தானை’’ப் பற்றிய நம்பிக்கையும் பெரும்பாலான மதங்களிலும் உள்ளன. நாகரிகம் வளரும் காலத்தில் ஒரு பேரரசாக உருவாகிய கிரேக்கம் பல கடவுள்களை நம்பி, அவற்றுக்கு உருவம் கொடுத்து, சிற்பங்களாக வடிக்கத் துவங்கினர். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒரு கடவுளைக் கற்பிப்பதும், அதை வணங்கும் பழக்கமும் கிரேக்க நாட்டிலேயே உருவானது. அதற்குப் பிறகு வந்த ரோமப் பேரரசில் அரசனே கடவுள் என்ற நிலைகளில் நம்பிக்கை கொள்ளும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டனர்.

ரோமப் பேரரசு காலத்தில் தோன்றிய ‘செமிடிக்’ மதங்கள் பல உருவ வழிபாடுகளை மாற்றி, ஒரு கடவுள் தத்துவத்தை முன் வைத்தன. ‘பைபிளில் வரும் ஆப்ரகாம் கதைக்குப் பிறகு உருவான மதங்கள் “செமிடிக் மதங்கள்’’ என்றழைக்கப்பட்டன. யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் இவையனைத்தும் ஒரு கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை வைத்தன. யூதர்களின் வேதமான “தோரா’’விலும் அதிலிருந்து கிளைத்த கிறித்துவர்களின் வேதமான “பைபிளி’’லும், அதற்குப்பின் வந்த இஸ்லாமியர்களின் வேதமான “குர்ஆனி’’லும் கடவுளைப் பற்றிக் குறிப்பிடுவது போலவே, “சாத்தானை’’ப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

நன்மை செய்பவர் கடவுள், தீமை செய்பவர் சாத்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நன்மை செய்யும் “பரிசுத்த ஆவி’’களும் தீமை செய்யும் கெட்ட ஆவிகளும், “பிசாசுகள்’’, “இரத்தக் காட்டேரிகள்’’(ஞிக்ஷீணீநீuறீணீ) தோன்றின அதே ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் நன்மை செய்யும் தேவதைகளும், தீமை செய்யும் ஆவிகளும் அவரவர் கற்பனைகளுக்கு ஏற்ப, அப்பகுதியின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.

பயத்தின் விளைவாகவே, அந்த ஆவிகளும், பேய்களும் தம்மைப் பிடித்துக்கொள்ளும் என்ற நிலையில் அவற்றை மனநிறைவடையச் செய்ய, அந்தக் கற்பனை உருவங்களை அமைதிப்படுத்த அவற்றை வணங்குவதும், அவற்றிற்கு வேண்டியதைப் படைக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
கடவுளுக்கும், மக்களுக்கும் தொடர்பு உண்டாக்கும் இடைத்தரகர்களாக, “அர்ச்சகர்களாக’’ வாழ்ந்தனர். கடவுள் ஆவிகள், பேய்கள் இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவர்களாக இவர்கள், மக்களால் நம்பப்பட்டனர். இந்தியாவில் ஆரியர்கள் இந்தத் தரகுப் பணிகளை செய்யத் துவங்கினார்.

அரசர்களே மதகுருமார்களின் கட்டளை-களாக ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்-கொண்டு செயல்படும் பொழுது அவர்கள் கீழ் வாழும் குடிமக்கள் மதகுருக்களின் ஆணைகளை, கடவுளின் ஆணைகளாக, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டு அடங்கிப் போயினர். சர்வ வல்லமை உடைய மனிதர்களாக மதகுருக்கள் மாறிப்போயினர். பல பகுதிகளில் கடவுளின் ஆணைகளை அறிந்தவர்களான இந்த அர்ச்சகர்களே தங்கள் வாரிசுகளுக்கு மதச்சடங்குகளும், அவை தங்கு தடையின்றி தொடரும் முறைகளையும் சொல்லித் தந்தனர். அதன் விளைவாக அர்ச்சகர் பரம்பரை தோன்றியது. புரோகிதர்கள் மட்டுமே தெய்வீக சம்பிரதாயம் அறிந்தவர்களாக பல மதங்களில் மாறிப்போனார்கள்.

புரோகிதனுக்கு மட்டுமே கடவுளை அணுகும் வழிமுறைகள் தெரியும் என்றும், கடவுளின் விருப்பையும், வெறுப்பையும் காட்டும் மந்திரங்கள் அவனுக்கும், அவன் பரம்பரைக்கு மட்டுமே தெரியும் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். பரம்பொருளுக்கும், பக்தனுக்கும் இடையே இந்த இடைத்தரகன் பாதி தெய்வீகத்தன்மை உடையவன் ஆனான். அவன் துணையின்றி ஒருவரும் நேரடியாக தெய்வத்தைத் தொழுவதோ, தெய்வத்துடன் தொடர்புகொள்ளவோ முடியாது என்ற நிலை நாளடைவில் மக்களிடையே பரவச் செய்யப்பட்டது. புரோகிதர்களும், அர்ச்சகர்களும், பூசாரிகளும் சமூகத்தில் அஞ்சத் தக்கவர்களாகவும், அவர்கள் சொற்கள் தெய்வீக அருள்வாக்காகவும் மாறிவிட்டது.
நாட்டை ஆளும் மன்னர்களும் அந்த தெய்வீக அருள்வாக்கிற்குக் கட்டுப்பட்டனர். மன்னர்களையும் மிஞ்சிய அதிகாரம் உடைய அவர்களைப் பார்த்து மக்கள் பயத்துடன் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த கடவுள்களை நெருங்க இந்தப் பூசாரிகள் தேவைப்பட்டனரோ, அவர்களையே மக்கள் பயத்துடனும், பக்தியுடனும் (பய, பக்தி) நெருங்கும் நிலை ஏற்பட்டது.

– தொடரும்

மரணம் (4)

மருத்துவம் – 

2023 பிப்ரவரி 16-28, 2023 உண்மை இதழ் Unmai

மருத்துவர் இரா.கவுதமன்

“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு’’
என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் குறிப்பிட்டதைப் போல்,
“ஆற்றங் கரையின் மரமும் அரசரியவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ’’
என்பதுதான் வாழ்வியலின் உண்மை. உயிருள்ள அனைத்து உயிரிகளும் ஒருநாள் முடிவெய்தித்ததான் தீர வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி.
மனித அறிவு வளர்ச்சியடையும் காலத்திற்கு முன் மரணம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே மனிதர்களிடம் இருந்தது அதனாலேயே ஆரம்ப காலங்களில் பிணத்தைப் புதைத்து வைக்காமல் பாதுகாக்கும் நிலை வளரத் துவங்கியது.

மனித உடலின் அழியும் தன்மையை உணர்ந்தபின் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இறந்தபின் அந்தப் பிணம் மீண்டும் உயிர்பெறாது என்கிற எண்ணம் தோன்றும் வரை அந்தப் பிணத்திற்கு, உயிரோடு இருந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்த உணவுகள், பழங்கள் போன்றவற்றை வைத்து வணங்கும் பழக்கம் ஏற்பட்டது (இன்றும் திதி கொடுப்பது, பிண்டம் வைப்பது. படையலிடுவது போன்ற செயல்பாடுகளின் முன்னோடியே இது).

பிணங்களின் மேல் மலர்கள், வாசனைப் பொருள்களை வைத்து வணங்குதல் போன்றவையே பின்னாள்களில் மரணச் சடங்குகளாயின. எகிப்தில் பழங்காலத்திலேயே இறப்பு என்பதில் நம்பிக்கை இல்லாமல், இறந்த உடலில் உயிர் மீண்டும் வரும் என்று நம்பினர். பிணம் அழுகுவதைக் கண்டதும், அதைப் பாதுகாக்க வேண்டி உடலைப் பதப்படுத்தும் முறைகளைக் கையாளத் துவங்கினர். முதல் கட்டத்தில் தைலங்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் தெரியாதவாறு ஒரு வகை ஆடையால் இறுக்கப் போர்த்திக் கட்டி அவற்றைப் பாதுகாக்கும் வண்ணம் பிரமிடுகளின் உள்ளே உடலை வைத்தனர். அந்த உடல் மீண்டும் உயிர் பெறும் என்கிற நம்பிக்கையில், அவர்கள் பயன்படுத்திய தங்க நகைகளால் உடலை அலங்கரித்து வைத்தனர். மற்றும் உடைகள், காசுகள், உணவு வகைகள் போன்றவையும் அந்தப் பிரமிடுகளில் வைக்கப்பட்டன. நாட்டின் அரசன் இறந்தால், அவன் மீண்டும் உயிர் பெற்றதும், அவனுக்குப் பணிவிடை செய்ய பணியாளர்களையும் உயிரோடு பிரமிடுகளில் அடைக்கும் வழக்கமும் இருந்தது.

திராவிட நாகரிகமான மொகஞ்சதாரோ,ஹரப்பா போன்ற பகுதிகளிலும், இந்தியாவின் தென் பகுதிகளிலும் பெரிய மண் பானைகளில் உடல்களை வைத்துப் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இறந்தவர்களின் ‘ஆவி’ திரும்ப வந்து, உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துமோ என்ற பயத்தின் விளைவாகவே புதைக்கும் பழக்கம் தோன்றியது. ஆனால் மரணமடைந்த பெற்றோர்கள், நண்பர்கள் தீங்கு செய்யமாட்டார்கள் என்கிற நம்பிக்கையால் அவர்களைப் புதைத்த இடத்தை வணங்குவதும், அவர்களுக்கு பிடித்ததைப் படைத்தல் போன்ற வழக்கங்கள் வளர்ந்தன. இறந்த ஆவிகள் மீண்டும் எழுந்து வராமல் இருக்க புதைத்த இடத்தில் பெரும் பாறைகள் வைக்கப்பட்டன. நாளடைவில் அந்த ஆவிகளைத் திருப்திப்படுத்த உயிர் பலி கொடுக்கும் பலிபீடங்களாக அவை மாறிப்போயின.

ஆரம்ப காலகட்டங்களில் தங்கள் தங்குமிடங்களை ஒட்டியே பிணங்களை புதைக்கும் வழக்கம் இருந்தது. தங்கள் குலத்தின் மூத்தவர்கள், (மீண்டு வராத நிலையில்) அவர்கள் நல்வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையே அவர்கள் குலத்தின் தெய்வங்களாயினர். (இன்றும் கூட பூஜை அறையில் குடும்ப மூதாதையர்களின் படங்களை வைத்துக் கும்பிடும் பழக்கம் பல வீடுகளில் காணலாம். ஒரு குழுவின் தலைவன் அக்குழுவிற்கு வழிகாட்டும் நிலையிலிருந்ததால் அவன் இறந்தபின் அவனைப் புதைத்த இடத்தில் அடையாளத்திற்கு கற்களையும்,. கட்டைகளையும் நட்டு வைக்கும்வழக்கம் ஏற்பட்டது. இதையே ‘நடுகல்’ என்று அழைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. அதேபோல் நாட்டை ஆண்ட அரசன் இறந்தபின் அவனை அடக்கம் செய்த இடத்தில் மண்டபம் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன.
அறிவும் கலைத்திறனும் வளர வளர மன்னனைப் போன்ற உருவங்கள், சிற்பமாக வடிக்கும் பழக்கம் ஏற்படத் துவங்கியது. ஆரம்பக் காலகட்டங்களில் இந்தத் தலைவன் அல்லது அரசனுடைய சிலைகளே தெய்வங்களாகவும், வணங்குவதற்குரிய பொருளாகவும் மாறின. அவர்களைப் புதைத்த இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் தோன்றிய விதத்தையும், இறந்தவர்கள் கடவுள்களானதைப் பற்றியும், கோயில்கள் ஏற்பட்ட விதம் பற்றியும் பல அறிஞர்கள் பல பகுதிகளிலும் ஆய்வு செய்து அறிக்கைகள் கொடுத்துள்ளனர்.

திரு பி.ளி. பார்பஸ், திரு. து. வீசல்லு, திரு. ஃபிரேசர், திரு. ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் போன்ற சமூகவியல் ஆய்வாளர்கள் பல பகுதிகளில் வாழ்ந்த பல குழுக்களையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்து, உயிர்களின் மரணம் என்ற இயற்கை நிகழ்வுகளை ஒவ்வொரு இன மக்களும் அணுகிய முறைகளையும் ஆய்வு செய்து பல கட்டுரைகளைத் தந்துள்ளனர். மனிதன் குகைகளில் வசித்த காலம் முதல், நாகரிகமடைந்த காலம் வரை பலவற்றையும் ஆய்வு செய்தே அக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. குகைகளில் வாழ்ந்த மனிதன் இறந்த உடன் அவனைச் சுற்றி இருந்தவர்கள் அந்த உடலை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தனர். இதுவே குகைக்கோயில்கள் தோன்றக் காரணமாயின.

ஆரம்பத்தில் அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகள், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்கள் என்ற எண்ணமும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளை ‘படையல்’ என்கிற பெயரில் வைத்து வணங்குவதும், வணக்கத்திற்குரியவர்களாக அவர்களை நினைத்ததும், அவர்களைப் புதைத்த இடத்தில் நடுகல் போன்றவற்றை நட்டு வணங்குவதும், அந்த உடல்கள் இருந்த இடத்தை வணங்குதல் போன்ற பழக்கங்கள், அறிவு வளர்ச்சியடைந்த இந்தக் காலத்திலும் எல்லா மதங்களிலும் இன்றும் இருப்பதைக் காணலாம். பழங்காலப் பழக்க வழக்கங்கள் எல்லா மதங்களிலும் இன்றும் தொடர்ந்தாலும், “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள மாட்டார்’’ என்னும் உண்மையை மட்டும் மனிதர்கள் இன்று உணர்ந்துள்ளனர் என்பதே ‘உண்மை.’ –

(தொடரும்)


மரணம்(3)


மருத்துவம் : 

மருத்துவர் இரா. கவுதமன்

உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும்.

கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே செல்லாததாலும் மரணத்தின் பிடியில் உள்ளளவர்களுக்கு ஆரம்ப நிலையில் “மலச்சிக்கல்’’ ’ (Constipation) ஏற்படும். ஆனால் மரணம் நிகழும் பொழுது இடுப்புச் சதைகள், சிறுநீர்ப் பைகள், குடல் பகுதிகள் முழுமையாக இளகி விடுவதால் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி சிறுநீர், மலம் முழுவதுமாக வெளியேறிவிடும்.

தோல், தசைகள் தொய்வு: படுத்த படுக்கையாக நீண்ட நாள்கள் இருக்கும் நோயாளிகளின் தசைகள் மெலியும், குரல் சரியாக எழும்பாது. அதனால் நோயாளி தெளிவின்றி மெல்லிய குரலில் பேசுவார். தோலில் புதிய செல்கள் தோன்றும் நிலை நின்று விடுவதால், தோலின் தடிமன் குறைந்து, மெலிதாகி விடும். அதனால் எளிதாக சிராய்ப்புகள், காயங்கள் ஏற்படும். நீண்ட நாள்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் “படுக்கைப் புண்கள்”(Bed Sores) ஏற்படும்.

எதிர்பார்ப்பின்மை, பற்றின்மை(Withdrawal and Detachment):மரணம் நிகழும் பொழுது நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்க வேண்டுமென்றோ, அவர்களிடம் உறவாட வேண்டுமென்ற உணர்வோ ஏற்படாது. களைப்பும், சலிப்பும் உண்டாகும்

உயிரோட்டம் குறைதல் (Declining Vital Signs) : உடலின் உயிரோட்டம் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கும். உடலின் இயல்பான வெப்பநிலையான 98.4குதி யில் இருந்து மெல்ல குறையத் தொடங்கும். குறையத் துவங்கும் உடல் வெப்பம் இறப்பு நிகழும் பொழுது முழுமையாகக் குறைந்து உடல் குளிர்ச்சியடைந்து விடும்.

நாடித் துடிப்பு : நாடித் துடிப்பு, இலகுவாகி, குறைந்து கொண்டே வந்து முழுமையாக நின்றுவிடும் (இயல்பு நிலை 72/நிமிடம்)

மூச்சுவிடுதல்: முதலில் மூச்செடுத்து விடலாம் அல்லது மெலிதாகி நின்றுவிடும். (நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விடுதல் இயல்பு நிலை)

இரத்த அழுத்தம் : இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் 120/80 MM of Hg என்றிருக்கும். மரணம் நிகழ்கையில் இரத்த அழுத்தம் முழுமையாகக் குறைந்து ஒன்றுமே தெரியாத நிலை ஏற்படும்.

இதய மின்னலைப் பதிவு (ECG): இயல்பு நிலையில் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். இதய மின்னலைப் பதிவு, இறப்பு ஏற்படும் பொழுது ஒரே கோடு போல் தெரியும்.

கிளர்ச்சியடைதல் (Agitation): திடீரென நோயாளி பலம் பெற்றவர் போல் கிளர்ந்தெழுவார். இரத்தக் குழாய்களில் செலுத்தப்படும் மருந்துக் குழாய்களைப் பிடுங்கி எறிய முயல்வார். படுக்கையை விட்டு எழுந்து, இறங்க முயல்வார். செவிலிய உதவியாளர்களையும், பிடிக்க வரும் உறவினர்களையும் தள்ளிவிடுவார்.

உணர்விழத்தல் : உயிரோடு இருக்கும் பொழுது இயல்பான நிலையிலிருந்த பார்த்தல், கேட்டல், நுகர்தல் மாறுபடும். தெளிவான ஓசையுடன் வெளிப்படும் பேச்சு, தெளிவின்றி, மெதுவாக, புரிந்து கொள்ள முடியாத நிலையில் வெளிப்படும். எதிரில் இருப்பவர்கள் யார் என்று அறிய முடியாத தெளிவின்மை ஏற்படும். இந்த மாற்றங்கள் பகலைவிட, இரவில் மேலும் மங்கலாகத் தோன்றும். சிலருக்கு இறப்பதற்கு முன்
மூளையில் சில சுரப்புகள் அதிகம் சுரக்கும்.அதன் விளைவாக நோயாளி திடீரென பார்க்கவோ, பேசவோசெய்வார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவை மாறி அனைத்தும் அடங்கிவிடும். “அணைகின்ற விளக்கு பிரகாசிப்பது போல்’’, தொடுதல், கேட்டல் இரண்டுமே கடைசியாக மறையும் உணர்வுகள்.

ஆழ்மயக்கம் ((Coma) :  ஆழ்ந்த தூக்கம், ஆழ்ந்த மயக்கமாக மாறி முடிவில் விழிக்க முடியாத நிலை ஏற்பட்டு மரணம் உறுதிப்படும்.

மரணத்தின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
உடல் உறுப்புகள் இயக்கங்கள்
முழுமையாக நின்றுவிடும்.
இதயம் துடிக்காது
மூச்சு நின்றுவிடும்
மூளை செயல்பாட்டை நிறுத்திக்
கொள்ளும்.
இறப்பின் அறிகுறிகள்:
நாடித்துடிப்பு இருக்காது; நின்றுவிடும்.
மூச்சு நின்றுவிடும்.
உடல் குளிர்ந்து விடும். எந்த இயக்கமும் உடலில் இருக்காது.
கண்களின் பாப்பா (Pupils)வெளிச்சத்திற்கு சுருங்காமல் விரியாமல் நிலைக் குத்தி நின்றுவிடும்.
மரணத்திற்குப் பின் :
மரணம் நிகழ்ந்த உடனே உடலின் தசைப் பகுதிகள் அனைத்தும் இயல்பான இறுக்கம்(Toxe) தளர்ந்து, இளகிவிடும், குடல், வயிற்றுத் தசைகள் இளகுவதால் உடலின் உள் இருக்கும் மலம், சிறுநீர் வெளியேறிவிடும். தோல் இறுக்கம் தளர்ந்து, தொய்வடைந்துவிடும்.
உடல் இயல்பாக இருக்கும் எடையை விட கூடிவிடும்.
உடலின் இயல்பான வெப்பநிலையான 98.40தி முழுவதுமாகக் குறைந்து 1.50தி நிலைக்கு வந்துவிடும். அதனால்தான் உடல் குளிர்ந்துவிடுகிறது.
உடலின் இரத்த ஓட்டம், இரத்தக்குழாய்கள் செயலிழப்பதால் புவி ஈர்ப்பு விசையால் இரத்தம் கீழ்நோக்கித் தேங்கும். இரத்தம் தேங்கும் இடங்களில் தோல் கருஞ்சிவப்பாகத் தென்படும்.

உடல் இறுக்கம் (Stiffness) : உடலின் இயக்கம் நின்றுவிடுவதால் அனைத்துத் தசைகளும் இறுக்கமடையும். முதல் முதல் முகமும், கழுத்துப் பகுதியும் இறுகிவிடும், அவ்விறுக்கம் சிறிது, சிறிதாகக் கிழிறங்கி மார்பு, வயிறு, கை, கால்கள் என்று பரவும். இவ்விறுக்கம் விரல்களின் நுனிவரை பரவும்.
தசைகள் இறுகினாலும், கைகளும், கால்களும் இயக்கமின்மையால் தொய்வடைந்து விடும்.
மரணம் நிகழ்ந்த மூன்று மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை உடல் இறுக்கத்தால் விறைத்துவிடும். இதை “மரண விறைப்பு” (Rigor Mortis)என்று அழைக்கிறோம்.
மரண விறைப்பு பொதுவாக 2 மணி முதல் 4 மணிக்குள் ஏற்படும்,
மரண விறைப்பு நேரம், எதிர்பாராத மரணங்களில் மரணம் நிகழ்ந்த நேரத்தைக் கணிக்க உதவும்.
இதன் மூலம், விபத்துகள், கொலை, தற்கொலை போன்றவற்றின் மரண நேரத்தை மருத்துவர்களால் கணிக்க உதவும்.
மரணவிறைப்பு விலகி, மீண்டும் உடல் தளர்வடையும்.


மரணம் (2)


மருத்துவம் :

உண்மை இதழ்

மருத்துவர் இரா. கவுதமன்

1980இல் ‘மரணம்’ என்பதன் விளக்கம் தெளிவாக்கப்பட்டது.
1. ஒருவர் மீள முடியாத நிலையில் இரத்த ஓட்டம் நின்றுவிடுதல் மூச்சு விடுவது நின்று விடுதல் (Irreversible cessation of circulatory and respiratory function).

2. மீள முடியாத நிலையில் ‘மூளை’யின் செயல்பாடுகள் நின்று விடுதல் (Irreversible cessation of all functions of the entire brain).

மருத்துவ முறையிலும், சட்டத்தின் முறையிலும் இன்று உலகம் முழுவதும் மரணம் குறித்து இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மரணம் நிகழக் காரணங்கள்:
விபத்துகள்
தற்கொலைகள்
கொலைகள்
நோய்கள்
இயற்கை மரணங்கள்
இவற்றில் விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவை எதிர்பாராது திடீரென ஏற்படும் நிகழ்வுகளாகும். இவற்றில் விபத்துகளில், தலையில் அடிபட்டு, தலை எலும்புகள் உடைந்து, மூளையும் பாதிப்படைந்தால் ‘மூளைச் சாவு’ ஏற்பட்டு மரணம் நிகழக்கூடும். மனத் தளர்ச்சி (Depression), சமூகப் பயங்கள், தற்கொலைகள் நிகழக் காரணங்களாக அமைகின்றன. நச்சு மருந்துகள், பூச்சிக்கொல்லிகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளுதல், தூக்கிட்டுக் கொள்வது போன்ற செயல்பாடுகளால் தற்கொலை நிகழ்கிறது. சண்டைகள், பகை, பயம், பழிவாங்குதல் போன்றவை கொலைகள் நிகழக் காரணமாகின்றன.
நோய்வாய்ப்பட்ட மரணங்களும், இயற்கை மரணங்களும் இயல்பான மரணங்களாக நிகழ்கின்றன. மாரடைப்பு, இதய முடக்கம் (Heart attack, Cardiac arrest) முதிர்ச்சியடைந்த புற்றுநோய், சிறு நீரகச் செயலிழப்பு, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம், தோல்வியடைந்த மருத்துவம், மூப்பு போன்றவற்றால் இயற்கை மரணங்கள் நிகழ்கின்றன.

மரணம் நிகழும் பொழுது:
மரணம் என்கிற நிகழ்வு நடக்கும் பொழுது, உடல் திசுக்களின் இயக்கம் முழுமையாக நின்றுவிடுகிறது. இதயம் தன் துடிப்பை நிறுத்திவிடும். மூச்சு நின்றுவிடும். மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிடும். சில ஆய்வுகள், மரணம் நிகழ்ந்த உடன் மூளை முழுமையாகச் செயலை நிறுத்திவிடாமல், மேலும் சில நிமிடங்கள் செயல்படுவதாகக் கூறுகின்றன. ஆனால் அந்தச் செயல்பாடுகளும் உயிரோடு இருக்கும் பொழுது மூளை செயல்படுவதைப் போலில்லாமல் மந்தகதியில் அச்செயல்பாடுகள் இருக்கும் என்பதும் அவ்வாய்வுகளின் முடிவு.

மரணத்தின் முக்கிய நிகழ்வுகள்:
மரணம் நிகழும் பொழுது, இதயம் நின்றுவிடும். இதயம் மெதுவாக நிற்கும் பொழுது, அது வெளியேற்றும் இரத்தமும், இரத்த ஓட்டமும் மெதுவாகி, இரத்த ஓட்டம் நின்றுவிடும். இரத்த ஓட்டம் நிற்பதால் உடல் திசுக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக்காற்று, திசுக்களுக்குச் செல்வது தடைபட்டு அத்திசுக்களின் இயக்கம் நின்றுவிடும். இரத்தத்தின்மூலம் செல்லும் உணவுச் சத்துக்களும் உயிர் மூச்சுக்காற்றும் (Oxygen) நின்று விடுவதால், செல்களில் ஏற்படும் “மூச்சுக்காற்று ஏற்றம்’’ (Oxidation) நின்றுவிடும். அதன் விளைவாக செல்களில் உண்டாகும் வெப்பம் உண்டாகாமல் உடல் சில்லிட்டுப் போகும். இறந்த உடல் சில்லிட்டுப் போக இதுவே காரணம்.
அனைத்துத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் போலவே நரம்பு மண்டலமும், அதன் தலைமையகமான மூளைத் திசுக்களும் செயலிழக்கத் துவங்கி, சில நிமிடங்களில் தன் செயல்பாட்டை முழுமையாக நிறுத்திக்கொள்ளும். “இறப்பு’’ என்பதற்கு “மூளைச்சாவு’’ என்று உறுதியான பின், மூளையின் செயல்பாடுகள் நின்ற பிறகும் இன்றைய மருத்துவ அறிவியல் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்தாமல் பல நாள்கள் செயல்பட வைக்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது.

எதிர்பாராத விபத்துகளால் பாதிக்கப்பட்ட-வர்களின் தலையில் அடிபடும் சூழ்நிலையில் (Head Injury) அடிபட்டவர் முழு மயக்க நிலைக்குச் (Coma) சென்றுவிடும் சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் மூளை மெதுவாகச் செயலிழக்கும் நிலை ஏற்பட்டாலும், மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழக்காமல், நோயாளிக்கு வெளியிலிருந்து, பொறிகள் மூலம் (Mechines) இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளைச் செயல்படுத்த முடியும். இந்த மருத்துவ வளர்ச்சி, உறுப்பு மாற்று (Organ Transplantation) மருத்துவத்தில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி பல்லாயிரக் கணக்கான நோயாளிகள் (உறுப்புகள் செயலிழந்தவர்கள்) வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* இறப்பிற்கு முன் முதல் நாளோ அல்லது
சில நாட்களுக்கு முன்போ உடல் செயல்பாடுகள் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வரும்.
* மரணத்திற்கு முன் நோயாளி மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படும்.
* மரணம் என்பது சில நேரங்களில், சிலருக்கு திடீரென ஏற்பட்டாலும் (எடுத்துக்காட்டாக, இதய முடக்கம் (Cardiac arrest) ஏற்பட்டு இறத்தல்), பெரும்பாலான நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கேற்ப, மெதுவாகவே ஏற்படலாம். மரணம், மருந்துகள் மூலம் அமைதியாகவும், மெதுவாகவும் இறப்பு ஏற்படுத்துவதையே மருத்துவர்கள் செயல்படுத்துவர்.
* நோயாளிகள் வலியின்றி, அமைதியாக, அதிகத் தொல்லைப்படாமல் இயற்கையாக மரணமடையும் நிலையும் சில சமயம் எற்படும்.
* மரணம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில் நிகழும் என்பதே உண்மை.
ஒவ்வொருவருடைய வயது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய், அதனால் ஏற்பட்ட உறுப்புகளின் பாதிப்புகள், அந்நோயினை£ல் பாதிக்கப்பட்ட முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு, மருத்துவம் செய்வதன் நிலைப்பாடுகள் போன்றவை ஒருவரின் மரணம் நிகழும் நேரத்தை நிர்ணயிக்கும் (எடுத்துக்காட்டாக மாரடைப்பு ஒரு சில மணி நேரத்தில் நிகழும் இதய முடக்கம் உடனே நிகழ்ந்துவிடும். விபத்துகளால் ஏற்படும் மரணம் அவர்களுக்குப் படுகின்ற காயங்கள், இரத்தப்போக்கு போன்றவற்றைப் பொருத்து ஏற்படும். வயது மூப்பினால் ஏற்படும் மரணம், உறுப்புகளின் செயலிழப்பைப் பொறுத்து சில மணி நேரம் முதல் சில நாள்கள் வரைகூட மெதுவாக நிகழும்.)
இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், புற்று நோய்கள், சிறு நீரக நோய்கள் மருத்துவம் செய்வதைப் பொறுத்தும், மருத்துவம் பயனின்றிப் போவதைப் பொறுத்தும் மரணத்தைத் தள்ளிப்போடலையும், பின் மரணம் நிகழும் வகையில் அமையும். மரணத்தின் நிகழ்வை இந்த உறுப்புகளுக்குச் செய்யும் மருத்துவம் மெதுவாக நிகழ வைக்கும் (slow down)

மரணத்திற்கு முன் ஏற்படும் மற்ற மாற்றங்கள்:
பெரும்பாலானவர்கள் மரணத்திற்கு முன் ஒரு சில மணிகளோ, ஒரு சில நாள்களோ அமைதியான உறக்க நிலையிலோ (More Sleep) ஆழ்ந்த மயக்கத்திலோ (Coma) ஆழ்ந்துவிடுவர். உடல் இயக்கத்திற்கு தேவையான உணவுகள் உடலில் உள்ளே செல்லாததால் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே வரும். இதயம் மெதுவாக இயங்குவதால் உடலுக்குத் தேவையான இரத்தம் இதயத்திலிருந்து செல்லாது.
இரத்தத்தின் மூலமே செல்களின் இயக்கத்திற்குத் தேவையான உணவு, உயிர்மூச்சுக்காற்று கிடைக்காது. மெதுவாக உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். இறக்கத் துவங்கும் உறுப்புகளுக்கு செயலிழப்பின் விளைவாக பசியோ, தாகமோ எடுக்காது. இந்த பசியின்மை நோயினாலோ, மூப்பினாலோ ஏற்படும் மரணத்திற்கு பல நாள்களாகவோ, பல வாரங்களாகவோ, பல மாதங்களாகவோகூட நிகழக்கூடும்.


மரணம் (DEATH)

மருத்துவம்: 

2023 மருத்துவம்

– மருத்துவர் இரா. கவுதமன்

ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ஏற்பட்டு விட்டாலோ மரணம் நிகழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்வர். பொதுவாக முன்பெல்லாம் இதயமும், நுரையீரலும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டாலே மரணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ‘மூளை’ செயல்பாட்டை இழந்துவிட்டால் மட்டுமே மரணம் நிகழ்ந்துவிட்டதாகவும், அதுவே மீண்டும் உடல் உறுப்புகள் இயக்கத்தை நிறுத்தி, செயல்படாத நிலையை (Irreversible) அடைந்து விட்டதையே மரணம் என்றும் இன்றைய மருத்துவம் விளக்குகிறது. இன்றைய நிலையில் ‘இழப்பு’ அல்லது மரணம் என்பது சுற்றமும், நட்பும் வருந்தக்கூடிய ஒரு நிகழ்வாக மட்டும் இல்லை. மருத்துவ முன்னேற்றம் உறுப்புகள் கொடை, உடற்கொடை, சமூகவியல், சட்டம் சார்ந்த பல கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal code) 46ஆவது பிரிவு _ உயிரோடு இருக்கும் மனிதர், எந்தவித உயிர் இயக்கமும் இல்லாமல் முழுமையாகச் செயலிழப்பதை மரணம் (“The permanent disappearance of all evidence of life at any time after live-birth has taken place)” என்று விளக்குகிறது. இன்றைய நிலையில் மூளைச் சாவையே மரணம் என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.!
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, இதயமும், மூச்சும் செயலிழப்பதையே ‘மரணம்’ என்று மருத்துவ நிலையிலும், சட்டத்தின் நிலையிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிலைப்பாடுதான் நிலவியது. ஒருவர் இறந்து விட்டதை, அவரது நாடித் துடிப்பு நின்று விட்டதை வைத்தும், மூச்சு நின்று விட்டதையும், மூக்கின் அருகே ஒரு கண்ணாடி வைத்து, அதில் படியும் (மூச்சு வெளிப்படும் பொழுது) படிவு (Condensation) மூலமும், கண்ணின் “பாப்பா (Pupil) சுருங்கி, விரியும் தன்மை நின்று விடுவதையும் வைத்து மரணம் நிகழ்ந்ததை மருத்துவர் உறுதி செய்வார். ஆனால், இதயம் செயல்பாட்டை, இதய அறுவை மருத்துவம் செய்யும் பொழுது ஈறத்தாழ 40 நிமிடங்கள் வரை மருத்துவர்கள் நிறுத்தி விடுகின்றனர். இதய மாற்று அறுவை மருத்துவம் (Heart Transplantation), இதயத்தைத் திறந்து செய்யும் (Open Heart Surgery) அறுவை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளில் இதயம் நிறுத்தப்படுகிறது. மிகச் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இதயத்தமனி மாற்றுவழி மருத்துவத்தில் (Coronary Artery Bye pass Grafling – CABG)  கூட இதயம் நிறுத்தப்பட்டே செய்யப்பட்டது. (இப்பொழுது இதயத் துடிப்பைக் குறைத்து, இதயத்தை நிறுத்தாமலேயே (Beating heart Surgery)  இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது). இதயம் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் உடலின் இரத்தக் குழாய்கள் இதய, நுரையீரல் பொறியில் (Heart lung Machine), இணைக்கப்பட்டு, நோயாளி உயிரோடு இருக்க வகை செய்யப்படுகிறது.

மாறிவரும் மருத்துவத்தில் இன்று இதயச் செயலிழப்பு மரணம் இல்லை என்று நிறுவப்பட்டுவிட்டது. அதே போல் மூச்சு விடும் நிலை நின்று விடாமல் தடுக்க மருத்துவ உதவிகள் இன்று வந்து விட்டன. நுரையீரல் பாதிப்பால் செயலிழந்து விடும் நுரையீரல்கள், முழுமையாக மாற்றிப் பொருத்துவதும் இன்று வந்துவிட்டது. வேறு நுரையீரல் கிடைக்கும் வரை, நோயாளி, மரணம் அடையாமல் தவிர்க்க செயற்கை மூச்சுக் கருவியின், (Ventilator) மூலம் பாதுகாக்கப்படுவார். இதுபோன்ற மருத்துவ அறிவியல் முன்னேற்றங்களால், இதயமோ, நுரையீரலோ செயலின்மை (Cardio-Pulmonary failure) மரணம் என்று கூறப்படுவதில்லை.

1960களில் “மரணம்” என்பதற்கு மருத்துவ முறைகளில் முற்றிலும் மாறான விளக்கம் கொடுக்கப்பட்டது. இதைச் சட்டமும் ஏற்றுக் கொண்டது. ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம், மாறிவரும் மருத்துவ வளர்ச்சியை மனதில் கொண்டு மரணம்’ என்பதற்குப் புதிய விளக்கம் கொடுத்தது, அதை அனைத்து மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டது. மூளை முழுமையாகச் செயலின்மை (Permanently non-functioning Brain) அடைந்தால், அதை முழு உணர்விழந்த மயக்க நிலை (Irreversible Coma) என்று மருத்துவம் விளக்கியது.
இந்த நிலைக்கே நாளடைவில் “மூளைச் சாவு” (Brain Death) என்று பெயரிடப்பட்டது. முழுமையான உணர்வின்மை, முழுமையான செயலின்மை (Unreceptivity and responsivity), இயல்பாக மூச்சுவிட முடியாமை, உடல் அசைவின்மை (No Movements),, மூளை மின்னலைப் பதிவில் (Electro encephatogram) மூளையின் செயல்பாடின்மை போன்றவை ஒரு நோயாளிக்கு ஏற்பட்டால் அதுவே “மூளைச்சாவு” என்றழைக்கப்பட்டது. ஆனால் “மூளைச்சாவு” என்றழைக்கப்பட்டு, அவர்கள் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, மற்றவர்களுக்குப் பொருத்தும் நிலைகளில் பல சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்காக ஓர் ஆய்வுக் குழு, அமெரிக்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டது.
மருத்துவ, சட்ட, சமூகவியல் அறிஞர்கள் அடங்கிய இந்தக் குழு அனைவருக்கும் பொதுவான, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விளக்கத்தை “மரணத்திற்கு” அளித்தது. “மூளையின் முழு நிலைப்பாடு’’ (Total brain standard) என்று பெயரிடப்பட்ட இந்த நிலையை இன்று மருத்துவத்துறையும் நீதித்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

பண்டைய காலங்களில் மரணத்திற்குப் பின்னும் உயிர் இருக்கும் என்ற நம்பிக்கையில்
பல நாட்கள் உடல்கள் வைக்கப்பட்டு, அழுகிப்போயின. இறந்தபின் உயிர் வராது என்பது மனித அறிவுக்கு எட்டுவதற்கே பல காலம் தேவைப்பட்டது. எகிப்து நாட்டில் மீண்டும் உயிர் வரும் என்ற நம்பிக்கையிலேயே, அரச, அரசி உடல்கள் பிரமிடுகள் என்று கல்லறைக்குள் வைக்கப்பட்டன. உடலோடு, நகைகள், உணவுகளுடன், அவர்களின் பணிப் பெண்களையும் (உயிரோடு) சேர்த்தே பிரமிடுகளில் வைத்து மூடும் பழக்கம் எகிப்தில் நிலவியது.

மனித இனம் அறிவியல் பாதையில் பயணம் செய்யத் தொடங்கிய பின்னர்தான் மரணம் என்பது ஒரு மீள முடியாத நிலை என்பதை மனிதன் உணர்ந்தான்.உடல் உறுப்புக் கொடை மருத்துவத் துறையால் செய்யத் துவங்கிய இந்தக் காலகட்டத்தில், சட்டமும், நீதியும் அதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டமும், நீதியும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு முறையில் இருந்ததால், மரணத்தை விளக்குவதில் பலவகைக் குழப்பங்கள் நிலவின. முடிவாக, ஒரு வழியாக உடல் உறுப்புக் கொடைக்குப் பல சட்டங்கள் இயற்றப்பட்டு, மூளைச் சாவே (Brain Death) ‘மரணம்’ என்று உலகம் ஒத்துக்கொள்ளக் கூடிய நிலை இன்று அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.


திங்கள், 10 ஜூன், 2024

குடும்ப நலம் (Family Welfare)-2


மருத்துவம்: 

2022 டிசம்பர் 16-31 2022 மருத்துவம்

– மருத்துவர் இரா. கவுதமன்

அளவான குடும்பம் வளமான வாழ்வு என்றும்,’’ நாம் இருவர் நமக்கு இருவர் என்றும்; ஒரு குடும்பம், ஒரு குழந்தை” எனவும், பலவிதமான குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் சுவரெழுத்து, துண்டறிக்கைகள் வெளியிட்டு; ‘திராவிட மாடல்’ அரசுகள் பாமர மக்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பியதன் விளைவாக தமிழ்நாடு குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
“ஆண்டவன் கொடுத்து விட்டான்” என்று குழந்தைப்பேற்றை கடவுள் மேல் போட்டுவிட்டு பிள்ளைகளைப் பெறும் காலம் மாறிப்போய், நமக்கு குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம்; வேண்டாமென்றால் விட்டுவிடலாம்; வேண்டும் பொழுது பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்; தேவையான அளவு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தெளிவு இப்போது மக்களுக்கு வந்துவிட்டது.

கருத்தடை முறைகள்:
* கருவுறும் நாள்
களில் உடலுறவின் போது எச்சரிக்கையோடு இருத்தல். (During Ovulation Day).
* உடலுறவின்போது விந்து பெண்குறிக்
குள் விடாமல் தவிர்த்தல் (Cetus Interruptus).
* கருத்தடை மாத்திரைகள் (Contraceptive Pills), கருத்தடை களிம்பு (Contraceptive Gels), ஆணுறைகள் (Colonus) பயன்படுத்தல்.
* உள்பொருத்திகள் (Implants).
* பட்டைகள் (Patches).
* பெண் குறி வளையங்கள் (Vaginal Rings).
* கருப்பை உள் பொருத்திகள் (Intra latrine devices).
* கருத்தடை அறுவை மருத்துவம் (Sterilization surgery)
கருத்தடை களிம்புகள்: (Contraceptive Gels): உடலுறவிற்குமுன் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கருத்தடையைச் செய்ய முடியும். மருந்துக் கடைகளில், மருத்துவர் மருந்துச் சீட்டு மூலம் இவற்றைப் பெறலாம்.

உள்பொருத்திகள் (Implants): 99 விழுக்காடு உறுதியாக கரு உண்டாவதை இந்த உள்பொருத்திகள் (மினீஜீறீணீஸீts) தடுக்க வல்லவை. ஒருமுறை பொருத்தி விட்டால் குறைந்தது 3 ஆண்டுகள் கரு உருவாவதைத் தடுக்கக்கூடிய கருத்தடைப் பொருள் இது. கருத்
தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையை இவை தவிர்க்கின்றன. கருவுற நினைக்கும் நேரத்தில் எளிதில் அகற்றி விடலாம். பெண்களுக்கு மட்டுமே வைக்கக் கூடிய ஒரு எளிய கருத்தடைச் சாதனம் இது. மாத விலக்கம் வந்த அய்ந்து நாள்களுக்குள் இதைப் பொருத்த வேண்டும். ஒரு தீக்குச்சி அளவே, நெகிழியால் ஆன இந்த உள்பொருத்தி மேல் கையின் தோலில் சிறியதாக ஒருகீறல் எற்படுத்திப் பொருத்தப்படும். இதில் “புரொஜெஸ்ட்ரான்” என்ற ஊக்கி நீர் இருக்கும். இது தேவைப்படும் பொழுது வெளிப்பட்டு, இரத்தத்தில் கலந்து, கரு உண்டாவதைத் தடுக்கும். இதைப் பொருத்த ஒரு சில நிமிடங்களே தேவைப்
படும். ஊசி போடுவதைப் போன்ற உணர்வே பொருத்திக் கொள்பவர்களுக்கு இருக்கும்.
பட்டைகள் (Patches):
இப்பட்டையை உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை கரு உண்டாவதைத் தடுக்கும் இப்பட்டையை, ஒவ்வொரு வாரமும் புதியதாக ஒட்டிக் கொள்ள வேண்டும். 3 வாரங்கள் கழித்து, ஒரு வாரம் ஒட்டத் தேவையில்லை. மிகவும் பயனுள்ள கருத்தடைப் பொருள் இது. ஈஸ்ட்ரஜன், புரொஜெஸ்ட்ரான் போன்ற ஊக்கி நீர்கள் இந்தப் பட்டையில் இருந்து வெளிப்பட்டு, தோலால் உறிஞ்சப்பட்டு, கரு உருவாவதைத் தடுக்கும். மிகவும் எளிமையான கருத்தடைப் பொருள் இது.
பெண்குறி வளையம் (Vaginal Ring): மிகவும் மென்மையான, நெகிழியால் ஆன சிறிய வளையம். இதுவும் ஊக்கி நீர்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி கரு உண்டா
வதைத் தடுக்கிறது. பெண்ணின் குறியினுள் பொருத்தப்படுவது இது. 99 விழுக்காடு வெற்றி-கரகமாகச் செயல்படும் இக்கருவி, ஒரு முறை பொருத்தப்பட்டால் ஒரு மாதம் வரை செயல்படும். இக்கருவி மாதவிலக்கம் ஏற்படும் பொழுது ஏற்படும் இரத்தப் போக்கு, அதிக வலி ஆகியவற்றைக் குறைத்து சில நேரங்களில் தானாகவே கழன்று வெளியே வந்து விடும். ஆனால், பயனாளி அவரே மீண்டும் பொருத்திக் கொள்ளலாம்.

கருப்பை உள்பொருத்திகள் (Intra latrine devices): செம்பால் (Copper) ஆன ஜி வடிவில் ஆன ‘காப்பர்’ ஜி என்றழைக்கப்படும் இக்கருவி, கருப்பையின் உள் பொருத்தப்படும். மருத்துவர் அதற்கான கருவி மூலம் எளிதில் இதைப் பொருத்தி விடுவார். மிகவும் நம்பிக்கையான கருத்தடைக் கருவி இது. எளிமையாக எந்த வலியுமின்றி பொருத்தி விடலாம். எந்தத் தனிக் கவனமும் தேவையில்லை, அதிக செலவு வைக்காத நீண்ட நாள் செயல்படும் கருவி இது. தேவையில்லை என்றால் எளிதில் மருத்துவர் எடுத்து விடுவார். எடுப்பதும் மிகவும் எளிதானது பல ஆண்டுகள் எந்த வித பாதிப்போ, தொல்லையோ கொடுக்காத பாதுகாப்பான கருவி இது.
கருத்தடை அறுவை மருத்துவம்: (Sterilization surgery) கருத்தடை அறுவை மருத்துவம் ஓர் எளிமையான மருத்துவம். ஆண், பெண் இரு பாலரும் செய்து கொள்ளக் கூடிய அறுவை மருத்துவம் இது. ஆண்களுக்கு விந்துக் குழாயைக் கட்டி, வெட்டி விடும் அறுவை மருத்துவம் இது. ஆபத்தில்லாத, பத்து நிமிடங்களில் முடிந்து விடும் மருத்துவம் (Vasectomy).
இந்த அறுவை மருத்துவம் இன்று சிறு கீறல் கூட போடாமல் (No Scalpel Surgery) செய்யப்படும் அறுவை மருத்துவம். நிறைய ஆண்கள் இம்மருத்துவம் செய்து கொண்டால் “ஆண்மைக் குறைவு” ஏற்பட்டு, உடலுறவில் கோளாறு ஏற்பட்டு விடுமோ என்று அச்ச உணர்வு கொள்கின்றனர், குழந்தைப் பேறு உண்டாவதைத்தான் இந்த மருத்துவம் தடுக்குமே ஒழிய, உடலுறவில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. பெண்களுக்குச் செய்வதைவிட, ஆண்களுக்கு மிகவும் எளிமையான அறுவை மருத்துவம் இது.

* பெண்களுக்கும் இதேபோல் கருக்குழாயைக் கட்டி, வெட்டி செய்யப்படும் அறுவை மருத்துவம் (Tubectomy) இது. குழந்தை பிறந்த உடன் ‘கருப்பை முழுமையாகச் சுருங்கி, இயல்புநிலையை அடையும் முன் எளிதாக இம்மருத்துவம் (PS-Past Partum Sterilization) செய்து கொள்ளளாம். மற்ற காலகட்டங்களில் கூட இந்த அறுவை மருத்துவம் செய்து கொள்ளலாம். ஓரிரு நாள் மருத்துவமனையில் இருந்தால் போதும். இப்பொழுது நவீன முறையில் வயிற்று உள் நோக்கி (Laproscopy) முறையில் இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது. முழுமையான குடும்பக் கட்டுப்பாடு முறையாக இருந்தாலும் மீண்டும் குழந்தை வேண்டுமென்றால் மீண்டும் அறுவை மருத்துவம் (Re-Canalisation) மூலம், துண்டாக்கப்பட்ட கருக்குழாய்களை இணைப்பதன் மூலம், குழந்தைப் பேற்றை மீண்டும் பெறமுடியும்.

குடும்ப நலம் (Family Welfare)-1


மருத்துவம் : 

2022 நவம்பர் 16-30 2022 மருத்துவம்

– மரு.இரா. கவுதமன்

‘‘கு டும்ப நலம்’’ என்பது குடும்பத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ‘‘பெண்களின் நலமே’’ என்பதில் இரு வேறு வேறு கருத்துகள் இல்லை.
குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல்
நலத்துடன் இருப்பது மட்டுமன்றி, நல்ல மனவளத்
துடன் இருக்கவேண்டும். எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பமே படித்ததுபோல் ஆகுமோ, அதேபோல் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் நல்ல உடல் நலத்தோடு இருப்பா
ரெனில் அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல உடல் நலத்தோடு பாதுகாக்கும் பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்வார். பெண்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்க ‘மகப்பேறு கட்டுப்பாடு, என்பது ஒரு முக்கியமான காரணமாகும்.

தமிழ்நாட்டில் மகப்பேறு கட்டுப்பாடு என்ற திட்டம் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒரு திட்டமாகும். தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஒரு பதிப்பில் ‘நம் தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட தந்தை பெரியார் அவர்
களின் இடைவிடாத பரப்புரையும், திராவிட இயக்க அரசுகளுமே அடிப்படைக் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது. – தந்தை பெரியார் என்ற இந்த நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனைவாதிதான் பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்த ஒரு தலைவர் என்றால் மிகையாகாது.
தன் வாழ்நாள் முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த, அழுத்தப்பட்டுக் கிடந்த மக்களின் எழுச்சிக்கு உழைத்து அவர்களை “மானமும், அறிவும்” உடையவர்களாக மாற்றுவதே என் முதல் பணி” என்று போராடினாரோ, அதற்கும் சற்றும் சளைக்காமல்” “பெண்ணுரிமைக்கும்” தந்தை பெரியார் போராடினார். தந்தை பெரியாரின் ஒரு கண் “சமூக நீதியென்றால் மறுகண், பாலியல் நீதி என்றே கூறலாம் “ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் பெண்களுக்கும் வேண்டும்” என்று எந்தப் பெண்ணும் கேட்காத காலத்திலேயே அவர்களுக்காக வாதாடியவர் தந்தை பெரியார். வீட்டிற்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கும் காலத்தின் கோலத்தை மாற்றி, பெண்களைப் பொது வாழ்க்கையில் ஈடுபட வைத்தவர் தந்தை பெரியார்.

பெண்ணுரிமையை நிலைநாட்டிட தந்தை பெரியார் எந்த எல்லைக்கும் செல்லவும் ஆயத்த
மாகியிருந்தார். “குடும்ப நலம்” என்று வரும்
பொழுது கருத்தடையை ஆதரித்து பலவாறும் அய்யா அவர்கள் எழுதியும் பேசியும் வந்திருக்
கிறார். கருத்தடையைப் பற்றி அய்யா பேசிய காலக்கட்டங்களில் பெண்கள் ஆறு முதல் பத்துக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருந்தனர். பெண்கள் வீட்டை நிர்வகிப்பதும், உணவு சமைப்பதும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், அவற்றை வளர்ப்பதையுமே கடமையாகக் கொண்டிருந்தனர்.

தந்தை பெரியார் அவர்கள்தான் முதன்முதலாக பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களா?” என்று கேட்ட பெருந்தகை. கருத்தடையைப் பற்றி பெரியார் அய்யா குறிப்பிடும் பொழுது அதை ஆதரித்த மற்றவர்கள்
கருத்துகளுக்கு மாறான கருத்தையே குறிப்-பிடுகிறார். பெண்கள் உடல் நிலையைப் பற்றியும்,
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக கருத்தடை தேவை என அவர்கள் குறிப்பிடும் பொழுது அய்யாவோ, பெண்கள் குழந்தைகள் தொல்லையிலிருந்து விடுதலை பெறவும், சுயேச்சையான வாழ்க்கை அமைத்துக் கொள்ள
வும் கருத்தடை அவசியம் எனக் கூறினார்.

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப் பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் அகால மரணமடைவதற்கும் இந்த கர்ப்பமே காரணமாகிறது. இந்த கர்ப்பத்
தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் எற்படுத்தி அதன்மூலம் துண்டுப் பிரசுரங்
களும், பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளியிடுவதுடன் கர்ப்பத்தடை சம்பந்தமாக ஆங்கிலத்
திலும், பிற பாஷைகளிலும் அரிய நூல்களை
தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதுடன் கருப்பத்தடையால் நம் பெண்களும், நாடும்
நலத்துடனும், சுதந்திரத்தையும் பெறுவதற்கான நாடகம், சினிமா முதலியவைகள் மூலம் பிரச்சாரம் செய்யப் பொது ஜனங்களில் சிலராவது
இது சமயம் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

அய்யா அவர்கள் கூறியபடியே ஒரு ஸ்தாபனம்
ஏற்படுத்த வேண்டும்” என்பதற்கொப்ப, ‘குடும்ப நலத்துறை” என்ற ஒரு துறையும் “மக்கள் நல்வாழ்வுத்துறை என்று ஒரு அமைச்சரின் கீழ் இயங்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அவர்
கூறியபடியே துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை
கள் புத்தகங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையால் வெளியிடப்படுகின்றன. கலைத்துறை மூலமும் வெகு
மக்களிடம் இப்பரப்புரைகள் வெற்றிகரமாகச் செய்யப்படுகின்றன. தமிழ் மக்களிடம் சுவரெழுத்துப் பரப்புரைகள் நல்ல வரவேற்பைப் பெறுவதை முன்னிறுத்தி வெற்றிகரமாகச் செய்யப்பட்டன நாம் இருவர், நமக்கு இருவர்” என்ற மிகவும்.

கவனத்தைக் கவர்ந்த சுவரெழுத்துகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. இரண்டு குழந்தைகள் என்ற நிலைமாறி,இன்று நடக்கும், “திராவிட மாடல்” ஆட்சியில்ஒரு குடும்பம் ஒரு குழந்தை” என்று பரப்புரை மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு குடும்ப நலத்தை அறிவுறுத்திய அதே நேரத்தில், அரசு மருத்துவமனைகள் மூலம் விலையில்லா கருத்தடைக் கருவிகள் அனைவரும் எளிதாகப் பெறும் வகையில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன குடும்பக் கட்டுப்பாடு மருத்துவம் எந்தவிதக் கட்டணமுமின்றி ஆண்_பெண்
இருபாலருக்கும் செய்யப்பட்டன. மிகவும் எளிமையான இந்த சிறிய அறுவை மருத்துவம் கும்ப நலத்தில் செயற்கரிய சாதனைகளை நிகழ்த்தியது. இம்மருத்துவம் செய்து கொண்டவர்-களுக்கு
பணச் சலுகை உட்பட பல சலுகைகள் செய்யப்படுகின்றன.

இரண்டே இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளவர்களுக்கு அக்குழந்தைகள் மேல் வைப்புநிதி அரசால் போடப்படுகிறது. மானமிகு சுயமரியாதைக்காரர், மாண்புமிகு கலைஞர் முதல்வராகவும், இனமானப் பேராசிரியர் மானமிகு அன்பழகன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் இருந்த
பொழுது “கருக்கலைப்பு மருத்துவம்’’ (Abortion) சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு பெரும் புரட்சி
சட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. அனைத்து முயற்சிகளால் கருத்தடைத் திட்டம் வெற்றி பெற்றது. காரணம் தந்தை பெரியார்! காரியம் திராவிடர் ஆட்சி!