வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பேதி மருந்து சாப்பிட்டால் மட்டும் குடல் புழுக்கள் ஒழியுமா?


பேதிக்குக்கொடுக்கப்படும்மாத்திரைக ளும்திரவமருந்துகளும்மலத்தைஎளிதில் வெளியேற்றஉதவுகின்றன.முக்கியமாக, மலச்சிக்கல்ஏற்படும்போதும்,மலத்தை வெளி யேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகளில் பலவிதம் உண்டு. ஒவ் வொன்றும் ஒவ்வொரு வழியில் செயல்பட்டு, குடலியக்கத்தைத் தூண்டி, மலத்தை வெளி யேற்ற உதவுகின்றன. ஆனால், இந்த மருந்து களால் குடல் புழுக்களை வெளியேற்ற முடியாது. இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், புழுக்களின் வளர்ச்சிப் புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

புழுக்கள் வளரும் விதம்

குடல் புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என இரண்டு இனமுண்டு. பெண் புழு இடும் முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில், அவை புகுந்துகொள்ளும். கைகளைச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது, உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, லார்வாக்கள் எனும் தோற்றுவளரிகளைப் பொரிக்கும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல் லீரலுக்குச் சென்று, சுமார் நான்கு நாஷ்யீகள் அங்கே தங்கும். பிறகு, அங்கிருந்து இதயத் துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும். மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து சேரும் இந்தச் சுற்றுலாவுக்கு, மூன்று மாதங்கள் எடுக்கும். அதற்குள் லார்வா கட்டத்தில் இருந் தவை முழுப் புழுக்களாக வளர்ந்துவிடும். அதற்குப் பிறகுதான் உடலுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.

பாதத்தைத் துளைக்கும் புழு

கொக்கிப் புழுவின் லார்வாக்கள் மட்டும் நம் பாதத்தைத் துளைத்துக் கொண்டு நேரடி யாகவே ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து, முழு புழுக்களாக வளர்ந்து பிரச்சினைகளை உரு வாக்குகின்றன.
இப்படிக் குடல் புழுக்கள் முட்டை, லார்வா, புழு என மூன்று பிறப்புகளை எடுத்திருக்கும். நம் குடலில் மட்டுமில்லாமல் உடலின் பல பகுதிகளில் இவை சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றில் முட்டையும் லார்வாவும் குட லின் சுவர்களில் அட்டைப் பூச்சிபோல் ஒட்டிக்கொண்டிருக்கும். கொக்கிப் புழுக்களின் வாயில்கொக்கிபோன்றஅமைப்புகள்இருப்ப தால், சுவரில் ஆணி அடித்துத் தொங்க விட்டதுபோல் குடல் சுவரில் அவை தொங்கிக் கொண்டிருக்கும். ஆகவே, குடல் புழுக்களைப் பேதி மருந்து கொடுத்து ஒழிக்க முடியாது.

என்ன செய்யவேண்டும்?

குடல் புழுவை ஒழிப்பதற்கான மருந்துகள் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும், குழந் தைகளுக்குத் திரவ வடிவ மருந்தாகவும் கிடைக்கின்றன. சுயமாக மருந்து கடைகளில் மாத்திரை வாங்குவதைவிட, எந்தப் புழுவின் பாதிப்புள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத் துவர் பரிந்துரைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 90 சதவீதம் ஒழிந்துவிடும்.
முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இதில் உள்ளது. குடல் புழு பிரச்சினைக்கு முதலில் சாப்பிடும் மாத்திரையோடு பலரும் சிகிச்சையை நிறுத்திக் கொள்கின்றனர். இந்த மாத்திரையின் பலனால், குடலில் முழு வளர்ச்சி பெற்ற புழுக்கள் மட் டுமே இறக்கும். உடலில் லார்வா பருவத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் புழுக்கள் முதலில் சாப்பிட்டமாத்திரையால்அழிவதில்லை. இந்த லார்வாக்கள் புழுக்களாக வளர்ச்சி பெற்று குடலுக்கு வந்ததும் மறுபடியும் தொல்லை கொடுக்கும்.

சுத்தம் மிக முக்கியம்!

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முதலில்ஒருமுறை மாத்திரை/மருந்துசாப் பிட்ட பிறகு, இரண்டிலிருந்து  மூன்று வாரங்களுக்குள் மறுபடியும் ஒருமுறை குடல் புழுவுக்கு மாத்திரை/ மருந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு பின் சிகிச்சையை எடுக்கத் தவறுவதால்தான் பலருக்கும் குடல் புழு தொல்லை நீடிக்கிறது.

மேலும், குடும்பத்தினர் அனைவரும் ஒரே வேளையில் குடல் புழுவுக்குச் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்குக்குடல்புழுவுக்கானஅறி குறிகள் இல்லை என்றாலும்கூட, இப்படி சிகிச்சை எடுக்கலாம். தவறில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமானது: சுயசுத்தம் காப்பது, குறிப்பாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது காலணி அணிந்து கொள்வதுதான் குடல் புழுத் தொல்லைக்கு 100 சதவீதம் முடிவு கட்டும்.
-விடுதலை,31.7.17

மாரடைப்புக்கு பயோமார்க்கர் பரிசோதனை அவசியமா?


ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை முன்னரே தெரிவிக்க பயோமார்க்கர் பரிசோதனை உள்ளது. இது அனைவருக்கும் அவசியமில்லை. முதலில் பயோமார்க்கர் என்றால் என்ன என்று பார்ப்போம்.

பயோமார்க்கர் - எச்சரிக்கை மணி

உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது அல்லது நோய் வர வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலியல் உயிர்ப் பொருளுக்கு ‘பயோமார்க்கர்’ என்று பெயர். இது புரதம், கொழுப்பு, மரபணு, என்சைம் என எதுவாகவும் இருக்கலாம். களவுபோன வீட்டில் கைரேகைகளைப் பார்த்துத் திருடனைக் கண்டுபிடிப்பதுபோல, ஒருவர் ரத்தத்தில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோமார்க்கருக்குரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும். அதன்மூலம் ஆரம்பகட்டத்தில் உள்ள நோய்களைக் கண்டுபிடித்துத் தடுத்துவிடலாம்.

மாரடைப்புக்கான பயோமார்க்கர்கள்  

1. ஹோமோசிஸ்டீன் பயோமார்க்கர்

ஹோமோசிஸ்டீன் என்பது ஓர் அமினோ அமிலப்புரதம். இது 100 மில்லி ரத்தத்தில் 12 மைக்ரோமோல்ஸுக்குக் கீழ் இருந்தால் இயல்பு அளவு. இது 16 மைக்ரோமோல்ஸ் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நான்கு மடங்கு அதிகம் என்று அமெரிக்க இதயநலக் கழகம் உறுதி செய்துள்ளது.

குடும்பத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பால் யாரேனும் மரணம் அடைந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே இந்தப் பரிசோதனையை ஆண்டுதோறும் செய்துகொள்வது நல்லது.

2. லிப்போ புரோட்டீன்  ஏ பயோமார்க்கர்

இது ஒரு வகை கொழுப்புப் புரதம். இதயத்துக்குக் கெட்ட கொலஸ்டிராலைச் சுமந்து செல்கிற ரத்த வாகனம். இது தமனி நாளங்களைப் புண்ணாக்கி ரத்த உறைவை அதிகப்படுத்தும். மற்றவர்களைவிட பரம்பரையில் மாரடைப்பு ஏற்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள், சிறுநீரகப் பிரச்சினை, ஈஸ்ட்ரோஜன் பிரச்சினை, கட்டுப்படாத நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதன் அளவு அதிகரித்து மாரடைப்பை வரவேற்கும். 100 மில்லி ரத்தத்தில் இது 20-லிருந்து 30 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் இதயத்துக்கு ஆபத்து என்கிறது சர்குலேஷன் எனும் மருத்துவ ஆய்விதழ்.

3. அப்போலிப்போ புரோட்டீன்  பி பயோமார்க்கர்

இதில் இரு வகை உண்டு. அப்போலிப்போ புரோட்டீன்  பி 48, அப்போலிப்போ புரோட்டீன்  பி 100. இரண்டாவதுதான் இதயத்துக்கு ஆபத்தைத் தருகிறது. இதன் அளவு அதிகரித்தாலும் மாரடைப்புக்கு வாய்ப்புள்ளது.

4. ஃபைப்ரினோஜன் பயோமார்க்கர்

நம் ரத்தம் உறைவதற்குத் தேவைப்படும் ஃபைப்ரினோஜன் எனும் சத்துப்பொருள் 100 மில்லி ரத்தத்தில் 150-லிருந்து 400 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் இதயத்துக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். எவ்வாறெனில், இயல்பான ரத்த ஓட்டத்தில் தட்டணுக்கள் தனித்தனியாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், ஃபைப்ரினோஜன் அதிகமாக உள்ளவர்களின் ரத்த ஓட்டத்தில் இவை ஒரு திராட்சைப் பழக்கொத்துபோல ஒட்டிக்கொண்டு ஓடும். அப்போது இதயத் தமனி போன்ற மிகச் சிறிய ரத்தநாளங்கள் எளிதில் அடைத்துக்கொள்ளும், இதனால் மாரடைப்பு ஏற்படும்.

5. ட்ரோப்போனின் பயோமார்க்கர்

தற்போது மாரடைப்பை முன்னரே அறியப் பயன்படும் முக்கியமான பரிசோதனை இதுதான். ட்ரோப்போனின் அய் மற்றும் டி  எனும் புரதங்களின் அளவை ரத்தத்தில் அளந்து இதயத்தின் நிலைமையை அறிந்துகொள்ள இது உதவுகிறது. இதன் அளவு பொதுவாக மாரடைப்புக்கான சிறு அறிகுறிகள் ஏற்பட்ட நான்கு மணி நேரத்தில் அதிகரிக்கத் தொடங்கி, இரண்டு வாரங்களுக்கு அதே அளவில் நிலைத்திருக்கும்.

6. கிரியேட்டின் பாஸ்போகைனேஸ் பயோமார்க்கர்

கிரியேட்டின் பாஸ்போகைனேஸ்  எனும் என்சைமை அளந்தும் மாரடைப்பை முன்னரே அறிய முடியும். இதன் இயல்பு அளவு 10 முதல் 120  னீநீரீ/லி.  இந்த அளவு அதிகமானால் மாரடைப்புக்கான சாத்தியம் உள்ளது என அறியலாம்.

யாருக்கு அவசியம்?

மாரடைப்புக்கான பயோமார்க்கர் பரிசோதனைகள் எல்லோருக்கும் பயன்தரக்கூடியதுதான் என்றாலும், பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், நாட்பட்ட புகைப் பழக்கம், கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன்,  அதிக மன அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு உள்ளவர்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்ள, மேற்கண்ட பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருந்து ஆபத்தைத் தவிர்க்கலாம்.
-விடுதலை,31.7.17

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இந்தியாவில் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை

இந்தியாவில் முதன்முதலாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பூனேவில் உள்ள கேலக்சி கேர் லாப்ராஸ்கோபிக் இன்ஸ்டிடுயுட்டில் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை சோலாப்பூரைச் சேர்ந்த 21 வயது பெண்மணிக்குச் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்படாமையால் இதைச் செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டியிருந்தது. 

மகாராஷ்டிர மாநில சுகாதார இயக்ககம் இதற்கான அனுமதியை மிகுந்த காலதாமத்திற்குப் பின் 17.5.2017இல்தான் வழங்கியது. உடனே 18.5.2017இல் மருத்துவர்கள்  இதைச் செய்துள்ளனர். இதைச் செய்வதற்குமுன் அப்பெண்ணின் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்த ஓவரியிலிருந்து 8 கருமுட்டைகளை எடுத்துக் குளிர்பதனம் செய்து வைத்துள்ளனர். 

அறுவை சிகிச்சை முழுமையாக வெற்றிபெற்று அப்பெண்ணின் உடல், புதிதாகப் பொருத்தப்பட்ட கருப்பையை எப்பிரச்சினையும் இன்றி ஏற்றுக் கொள்ளுமானால் 8 மாதங்களுக்குப் பின் இக்கருமுட்டைகள் அக்கருப்பையில் வைக்கப்படும். 

பிறகு இயல்பான கருத்தரித்தலுக்கு வாய்ப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மருத்துவ அறிவியலில் ஒரு சாதனை மைல்கல்தானே. இனி கருப்பை ஏதேனும் காரணத்தால் பழுதுபட்டுவிட்ட பெண்கள் கூட கருப்பைதானம் செய்ய முன் வரக்கூடிய பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வழிபேற்பட்டுள்ளது. 

இது பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்திதானே. வெல்க மருத்துவ அறிவியல் முயற்சிகள்!
-உண்மை இதழ்,1-16.6.17

செவ்வாய், 18 ஜூலை, 2017

ஆரோக்கியம் காக்கப் போராடிய அய்வர்



ஆதி மருத்துவர்கள் பெண்கள்தான். உணவில் தொடங்கி மகப்பேறுவரை பெண்களே மருத்துவத்தின் ஆணிவேராக அன்றும் இன்றும் திகழ்ந்துவருகின்றனர். நவீன அறிவியலின் ஒரு கூறான அலோபதி மருத்துவத் துறையில் 19ஆம் நூற்றாண்டில் நுழைந்து பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். இந்திய அளவில் அப்படி சாதித்த அய்ந்து பெண்கள் பற்றிப் பார்ப்போம்.

சென்னையின் அடையாளம்

பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலம். இந்தப் பின்னணியில் ஒரு பெண் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டது எங்கே தெரியுமா? சென்னையில்! 1875இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் மருத்துவம் படிக்க முடிந்தது. சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் மேற்படிப்பு படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.

இருபது ஆண்டு சேவை

எடித் பீச்சி, பிரிட்டனின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவர். பெண்ணுரிமைச் செயல்பாட் டாளரும் கூட. ஸ்விட்சர்லாந்தில் 1877இல் மருத்துவப் பட்டம் பெற்றார். 1883ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பம்பாயின் புகழ்பெற்ற காமா மருத்துவமனையின் பெண்கள் பிரிவுக்குத் தலைமை ஏற்று சேவை புரிந்தார். 1896இல் பம்பாயில் பரவிய ஆட்கொல்லி நோயான பிளேக், காலராவைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் பணியாற்றினார். ஆண்  பெண் மருத்துவர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டை எதிர்த்து, சம ஊதியம் தர வலியுறுத்தினார். பம்பாய் பல்கலைக்கழக செனட்டின் முதல் பெண் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

நாட்டின் முதல் பெண்

ஆனந்தி பாய், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அமெரிக்காவில் மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்ணும்கூட. குழந்தைத் திருமணம் செய்துகொண் டாலும், பெண்கள் படிக்க வேண்டுமென்பதில் அவருடைய கணவர் கோபால் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக் காவில் மருத்துவம் படிக்க ஆனந்தியைத் தனியாக அனுப் பும் துணிச்சலான முடிவை 1883இல் அவர் எடுத்தார். மேற்கு நாடு ஒன்றுக்கு ஆனந்தி படிக்கச் செல்வதை இந்துப் பழைமைவாதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.

உலகிலேயே இரண்டாவது மகளிர் மருத்துவக் கல்லூரியான பென்சில்வேனியா கல்லூரியில் 19 வயதில் ஆனந்தி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். இளங்கலைப் படிப்பை முடித்தாலும், முதுகலை படிப்பை முடிக்க இயலாத வகையில், அவரை காசநோய் தாக்கியது. 1886இல் ஆனந்தி நாடு திரும்பினார். கோலாப்பூர் அரசவை, அந்த ஊரில் இருந்த ஆல்பர்ட் எட்வர்டு மருத்துவ மனையின் பெண்கள் பிரிவுத் தலைவராக அவரை நியமித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர் காலமானார்.

இந்தியாவில் பயின்ற முதல் பெண்

காதம்பினி கங்குலி. கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் படித்ததன் மூலம் இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் பட்டம் (1878) பெற்றவரும் இவர்தான். 1883இல் பிரம்ம ஞான சபை சீர்திருத்தவாதி துவாரகாநாத் கங்குலியை அவர் மணந்தார். அதற்குப் பிறகு ஆசிரி யர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பினி மருத்துவம் படித்தார்.

இதன்மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பினி பெற்றார். ஆனந்தி பாய் அமெரிக்காவிலும், காதம்பினி கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் ஒரே ஆண்டில் (1886) மருத்துவப் பட்டம் பெற்றனர். 1892இல் பிரிட்டனுக்குச் சென்று தன் மருத்துவப் படிப்பை கூர்தீட்டிக் கொண்டார். இந்தியா திரும்பிய கொஞ்ச காலத்திலேயே தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

மக்கள் சேவைக்கு வந்த முதல் பெண்

ரக்மா பாய், நாட்டின் மகளிர் மருத்துவமனை ஒன்றில் சேவையாற்றிய முதல் இந்தியப் பெண். அவரது மாற்றாந்தந்தை ஷாகாராம் அர்ஜுன் மருத்துவர் என்பது இதற்கு முக்கியக் காரணம். குழந்தைத் திருமணத்துக்கு ஆட்பட்டாலும், மணமகன் வீட்டுக்குச் செல்ல மறுத்து மருத்துவம் படிக்க முனைந்தார் ரக்மா. அதற்கான சட்டப் போராட்டத்திலும் வென்றார். 

லண்டன் மருத்துவப் பள்ளியில் அவர் படிக்கச் செல்வதற்கான செலவுக்குப் பொது நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்ட ஊக்குவித்தவர் பம்பாய் காமா மருத்துவ மனையின் பெண் மருத்துவர் எடித் பீச்சி. 1889இல் லண்டன் சென்ற ரக்மா, 1895இல் நாடு திரும்பி சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். அந்த வகையில் பொது மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண்ணும் இவரே.

விடுதலை,18.7.17

புதன், 12 ஜூலை, 2017

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா?




பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு, பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் உடலின் மற்ற செயல்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

பழம், வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப்பின் பழம் எடுக்கும்போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊத காரணமாகிறது.

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்ளாததுதான்.  பழச் சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, அவ்வப்பொழுது பழச் சாறுகளைப் பிழிந்தே அருந்த வேண்டும்.

டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப் பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டவே வேண்டாம். சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க கூடாது. பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களில் உள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

நமக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கும். பழச்சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பழச்சாறு குடிக்கும்போது, மடமடவென குடிக்காமல், மெதுவாக சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.

ஏனென்றால், பழச்சாற்றை விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ் நீரோடு நன்கு கலக்கச்செய்து பின்னர் உள்ளே அனுப்ப வேண்டும். இப்படி செய்யும் போது, உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.
-விடுதலை,3.7.17

.

எலும்புகள் வலுப்பட உட்கொள்ள வேண்டிய உணவுகள்




உடலுக்குத் தேவைப்படும் சத்துக்களில் கால்சியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலவீனமடைவதோடு ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் உள்ள பெண்களுக்கே கால்சியம் சத்து குறைபாடு வருகிறது என்ற நிலை மாறி, இன்று ஆண்களும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்குத் தேவையான வைட்டமின் டி சத்தும் நமக்கு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிலெல்லாம் கால்சியம் மற்றும் வைட்ட மின் டி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா...

பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நாம் அறிந்ததே. அதனால், தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையின் பேரில் புரோட்டீன் பவுடர் கலந்தும் பால் அருந்தலாம். தயிரிலும் அதே அளவு கால்சியம் இருக்கிறது என்பதால் பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். முட்டை, வெண்ணெய் போன்றவற்றிலும் புரதத்துடன் கால்சியம் நிறைந்திருக்கிறது.

அதேபோல், உலர் அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று அத்திப்பழத் துண்டுகளை சாப்பிடலாம். முக்கியமாக, அனைத்து கடல் உணவுகளும் கால்சியம் சத்துப்பொருளை உள்ளடக்கியவையே.

பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகளும் காணப்படு கின்றன.

சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. அதேபோல் கருப்பு உளுந்து, சோயாபீன்ஸ், கொள்ளு போன்றவைகளிலும் கால்சியம் உள்ளது. 

நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை



இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக     ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப் பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந் தைகள் பாதிக்கப் பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக் கிறது.குழந்தைகளிடம் அதிகரித்திருக்கும் ரத்தசோகை யைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர்.

ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இதுதான் அடிப் படையான பிரச்னை. கருவுற்றவுடன் மருத்துவரை அணுகுவதில் தாமதம், தக்க சிகிச்சை மற்றும் பரிசோதனை எடுத்துக்கொள்வதில் இருக்கும் தொய்வு, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் அலட்சியம் காட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு ரத்த சோகையுடன் குழந்தை பிறக்கிறது. குழந்தை குறை மாதத்திலும் பிறக் கும். எடை குறைவாகவும், அதாவது 2 கிலோவுக்குக் குறைவாக இருக் கும். பிறந்த பிறகு பால் குடிக்கும் திறனும் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் இது அடிப்படையான காரணமாக இருக்கிறது. தவழ்வது, நடப்பது போன்ற செயல்பாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.

அதனால், கருவுற்ற முதல் நாளிலிருந்து மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதை கருவுற்ற தாய்மார்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
-விடுதலை,3.7.17