செவ்வாய், 5 மார்ச், 2019

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று



குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல் தொடர்பான ஆரோக் கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவ சியத்தை உணர வைக்கிறது சிகெல்லா என்கிற தொற்றுநோய் பற்றி மருத்துவ ஆராய்ச்சியா ளர்கள் கூறுவதைப் பார்ப்போம்...

இளம் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிற சிகெல்லோசிஸ் என்கிற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை  உண்டாக்கும் ஒரு பாக்டீரியா குழுவின் பெயர்தான் சிகெல்லா(Shigella). பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகின்றனர். இருந்தபோதும் யார் வேண்டுமானாலும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.

சிகெல்லா  பாக்டீரியாவில் நான்கு வகைகள் உள்ளன. Shigella sonnei அல்லது Group D Shigella, Shigella flexneri அல்லது Group B Shigella ஆகிய இந்த இரண்டு வகைகளும் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகிறது. Shigella boydii, Shigella dysentariae ஆகிய இரண்டு  வகைகளும் வளர்ந்துவரும் நாடுகளில் மிகவும் பரவலாக காணப்படுகிறது.

இந்நோய் காட்டுத்தீ மற்றும் குறிப்பாக சிறைச்சாலைகள், மருத்துவ இல்லங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் பரவுகிறது. அமெரிக்கர்கள் மத்தியில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வரை இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாவதாக, அமெரிக் காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களின் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு உடல்நலன் சரியாகிவிடுகிறது. ஆனால், சில சமயங்களில் இத்தொற்றினால் உடல் உறுப்பு களில் மோசமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்


இந்த நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு. இது மற்ற வயிற்றுப் பிரச்சினைகளைவிட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு  போன்ற அறிகுறிகள் இருக்கும் என்கிறார் மருத்துவரும் அமெ ரிக்கக் குடல் மற்றும் இரைப்பை அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான Kara Gross Margolis. குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள், பிந்தைய தொற்று வாதம் என்கிற எதிர்வினை வாதம் போன்ற பிற அறிகுறி களும் இந்நோயால் உண்டாகிறது.

இந்த வாதத்தின் அறிகுறிகள் பெரும் பாலும் கணுக்கால், முட்டிகள், பாதம் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிற வடிவங்களிலும் இருக்கின்றன. சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்சினை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

நோய் பரவுவதற்கான காரணிகள்


இந்த நோய்க்குக் காரணமான பாக்டீரியா பொதுவாக அசுத்தமான மலம் வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. நோய்த்தொற்றுடைய நபரிடம் பாலியல்ரீதியாக தொடர்புடைய மற்றொரு நபருக்கோ, தொற்று உடையவரிடமிருந்து தண்ணீர் மூலமோ, பழங்கள், பச்சைக் கீரைகள், வான்கோழி, கோழி, மதிய உணவு, பால் போன்ற பல்வேறு வகையான அசுத்த மடைந்த உணவு வகைகளின் மூலமோ இந்நோய் பரவக்கூடும் என்கிறார், நியூயார்க் கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் குழந்தைகளுக்கான இரைப்பை குடலியல், கல்லீரல் பிரிவுகளின் இணைப் பேராசிரியர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக உள்ள மார்கோலிஸ்.

நோய்த்தடுப்பு முறைகள்


உங்களை சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்வதை கடுமையான முறையில் பின்பற்றுவது மிகவும் அவசியம். இந்த நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு சரியான பின்பும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் இந்நோய்த் தொற்று இருக்கும். எனவே, நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நம் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளின் Diaper-அய் மாற்றிய பிறகு சுத்தமாக கைகளை கழுவுவதோடு அதை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண் டும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத்  தவிர்க்க வேண்டும். இந்த பாக்டீரியா ஒரு வரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இப்பிரச்சினை இருந்தால் அது சரியாகும் வரையில் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் மற்ற குழந்தைக ளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் நாமே சுகாதாரமான முறையில் நமது உணவைத் தயார் செய்து சாப்பிடலாம். இதனால் வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற  உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று பரவுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதார மில்லாத இடங்களில் பயணம் மேற்கொள்வது கூட இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமாக அமையலாம். இதனால்  அதிகளவிலான பயணங்களைத் தவிர்க்கலாம்.  மருத்துவர் ஆலோ சனைப்படி  மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து மீண்டு வருவதைத் துரிதப்படுத்தலாம்.

- விடுதலை நாளேடு, 4.3.19

தூக்கம் குறைந்தால் இதயம் வெடிக்கும்!



மனிதன் உறங்குவதற்குக்கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றான். உறங்க வேண்டிய நேரத்தில் உழைப்பும், உழைக்க வேண்டிய நேரத்தில் உறக்கமும் என்று மனிதனின் வாழ்க்கையில் ஒரு முறையில்லாமல் இருந்து கொண்டிருக் கின்றது.

இந்நிலையில், மனிதனுக்கு தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய நோய்கள் பல இருக்கின்றன. அதில், ஒன்று தான் இதய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர் டேனியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப்பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளார்.

மேலும், போதிய தூக்கமின்மையால் இதய நோயுடன், இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருப் பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால், ஒரு மனிதன் தனக்கு தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால், அவனுடைய இதயம் வெடிப்பதற்குண்டான வாய்ப்புக்கூட இருப்பதாக கூறப்படுகின்றது.

- விடுதலை நாளேடு, 28.2.19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

உடல் நலம் சிறக்க...

இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம். நாளொன்றுக்கு 3 வேளை அதிகமாக உண்பதைவிட, சிறிது சிறிதாகப் பலமுறை உண்பது நல்லது. இரவு உணவைத் தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்குமுன் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும். இரவில் சர்க்கரை, தயிர், தேங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிமுன் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்ப்பது நன்று. பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட்ஃபுட் உணவு வகைகள் இதயத்துக்கு ஆகாது. நாளொன்றுக்குக் குறைந்தது 5 முறை பழங்களையும் காய்கறி களையும் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பப்பாளிப் பழத்தைக் காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முடிந்தால் தினமும் வால்நட் பருப்பைச் சாப்பிடலாம். எண்ணெய்யில் பொரித்த மீனையும் இறைச்சி யையும் தவிர்ப்பது நல்லது.

உப்பு அதிகம் தவறு


உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை உரு வாக்கும். உணவைச் சமைத்த பின், அதாவது சாப்பிடும்போது உப்பைச் சேர்க்கக் கூடாது. ஏற்கெனவே உப்பு அதிகம் சேர்த்துத் தயார் நிலையில் உள்ள நூடுல்ஸ், சிப்ஸ், முட்டை, சாஸ், கெட்ச்அப் போன்றவை உடலுக்குக் கேட்டையே விளைவிக்கும். உப்புக்குப் பதிலாக வெங்காயம், பூண்டு, மிளகு, எலு மிச்சைச் சாறு போன்றவற்றை ருசிக்குப் பயன்படுத்தலாம்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த...


ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊறுகாய், அப்பளங் களைத் தவிர்ப்பது எளிய வழி. இளநீர், வாழைப்பழம், ஆரஞ்சு, எலு மிச்சைச்  சாறு போன்றவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. உடலுக்குத் தேவையான (90ml/dl) பொட்டாசியத்தை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது.

நல்ல கொழுப்பை அதிகமாக்க...


குழம்பு மீன், வால்நட், கிரீன் டீ, காலை உணவில் பப்பாளி, கீரை வகைகள் போன்ற வற்றை வாரத்துக்கு 2 முறையும் பாதாம் பருப்பை வாரத்துக்கு 2-3 முறையும் உட் கொள்வது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மது அருந்துவதைத் தவிர்ப்பது உடல் நலனுக்கும் குடும்ப நலனுக்கும் நன்று. சால்மன் போன்ற ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளைச் சாப் பிட்டால், உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும், ரத்த அழுத்தம் குறையும், ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது தடைபடும், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நீங்கும்.

ரத்த குழாய்களில் அடைப்பு


கொழுப்பால் உண்டாகும் அடைப்புக்கு அத்திரோமா (Atheroma) என்று பெயர். இந்த அத்திரோமா இதயத்துக்கு நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டு மல்லாமல்; மூளை, சிறுநீரகங்களுக்குச் செல் லும் ரத்தக் குழாய்களிலும் அடைப்பை ஏற் படுத்துகிறது. நெய், வெண்ணெய், முட்டை, மாமிசம், மூளை, ஈரல் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நன்று. போதிய உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதே உடலில் கொழுப்பு சேர்வதற்கு முக்கியக் காரணம்.

டிரான்ஸ்பேட் எனும் எதிரி


உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், டிரான்ஸ்ஃபேட்-அய் (Transfat) 
அதிகம் பயன்படுத்துகின்றன. பிஸ்கெட், பொரித்த உணவு, ரஸ்க், ரொட்டி, பன், கேக், மின் அடுப்பில் பொரிக்கப்பட்ட பாப்கார்ன், பீட்சா, பர்க்கர், பிரெஞ்சு பிரை, சாக்லேட், ஐஸ்கிரீம்கள் ஆகியவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ளது. டிரான்ஸ்பேட் உணவால் உடல் பருமன் அதிகமாவதுடன், நல்ல கொழுப்பின் (HDL) அளவு குறைந்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், ரத்தத்தில் triglyceride என்னும் கெட்ட கொழுப்பின் அளவும் அதிகமாகிறது. எனவே, டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ள உணவை அறவே தவிர்ப்பது இதய நலனுக்கு நன்று.

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?


கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்யில் சரிக்குச் சமமாக நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும் உள்ளன. நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது. சூரியகாந்தி எண்ணெய் குறைந்த அடர்த்திகொண்டது. அதில் PUFA வகைக் கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்தக் கொழுப்பு உடலுக்கு நல்லது. பாமாயிலில், அடர் கொழுப்பு உள்ளதால் அறவே தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் (30 கிராம்) அளவு எண்ணெய் போதுமானது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு 3 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வறுவலுக்கு ஏற்ற எண்ணெய்


எண்ணெய்யை அதிகப்படியாகச் சூடு படுத்தும்போது, ரசாயன மாற்றம் ஏற்பட்டு அதனால் புற்றுநோய் ஏற்படச் சாத்தியம் உள்ளது. அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும், நுரையும் புகையும்  ஏற்படுத்தாத நல்லெண் ணெய்யே வறுவலுக்கு ஏற்ற எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய்யையும் வறுவலுக்குப் பயன்படுத்தலாம்.

எண்ணெய்யைப் பாதுகாக்க...


எண்ணெய் பாக்கெட்டில் TFA-வின் அளவு குறிப்பிட வேண்டும் எனச் சட்ட மாக்கப்பட்டுள்ளதால், TFA இல்லாத எண் ணெய்களை வாங்க வேண்டாம். பிளாஸ்டிக், டின்களில் வாங்கப்படும் எண்ணெய்யை உடனடியாக இரும்பு, அலுமினியம் அல்லது கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண் டும். சமையல் எண்ணெய்யைக் குளிர் நிறைந்த, வெளிச்சம், ஈரமில்லாத பாத்திரத்தில் இறுக மூடி (காற்றுப்புகாதவாறு) பாதுகாக்க வேண்டும்.

ஆயுளை நீட்டிப்போம்


இங்கு உள்ள எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், இதயத்தின் நலன் மேம்படும். இதயத்தின் நலனே மனிதனின் நலனுக்கு அடிப்படையானது. இதய நலனை நன்கு பேணினால், உடலின் நலன் மட்டுமல்ல; நமது ஆயுளும் நீடிக்கும்.

-  விடுதலை நாளேடு, 11.2.19

புதன், 6 பிப்ரவரி, 2019

நம்பிக்கை தரும் புதிய புற்றுநோய் சிகிச்சைகள்

இன்று (பிப்ரவரி-4) உலகப் புற்றுநோய்


விழிப்புணர்வு நாள்




இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேலானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள். புற்றுநோய் விழிப்புணர்வின் போதாமைகளும், வரும்முன் காக்கத் தவறுவதும்,  தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறு வதும், அடித்தட்டு மக்களைச் சென்றடையாத புற்றுநோய் சிகிச்சைகளும்தாம் இந்த இறப்புக்குக் காரணங்கள் என ‘இந்தியப் புற்றுநோய்க் கழகம்’ பட்டியலிட்டுள்ளது.

புற்றுநோய்க்கு சிகிச்சை


மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவை புற்றுநோயை மட்டுப் படுத்துகின்றன. முழுமையாகவும் களைகின்றன புற்று நோயின் வகை, இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து இந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கதிர்வீச்சு சிகிச்சை


எக்ஸ்-ரே கருவியின் துணையுடன் கதிர்வீச்சுப் பொருள்களை உடலுக்குள் அனுப்பிப் புற்றுநோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறையே கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy). மனித உடலில் நேரடி விளை வையும் மறைமுக விளைவையும் இந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. நேரடி விளைவால் உடல் செல்களின் ‘டிஎன்ஏ’க்கள் அழிகின்றன. மறைமுக விளைவால் புற்றுநோய் செல்கள் அழிகின்றன. புற்றுநோய் செல்கள் மீண்டும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதே கதிர்வீச்சு சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

கதிர்வீச்சு முறைகள்


கதிர்வீச்சில் வெளிக்கதிர் வீச்சு, உட்கதிர் வீச்சு என இரு உட்பிரிவுகள் உண்டு. வெளிப்புறத்திலிருந்து தோல் வழியாக நோயாளியின் உடலுக்குள் கதிர்களைச் செலுத்தி, புற்றுநோய் செல்களை அழிப்பதே வெளிக்கதிர் வீச்சு. இது ‘டெலிதெரபி’ (Teletherapy) என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணம், நுரையீரல் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சை.

கதிர்வீச்சை உமிழும் அய்சோடோப்புகளை உடலுக் குள் செலுத்தி, அதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பதே ‘பிரேக்கிதெரபி’ (Bracytherapy) எனப்படும் உட்கதிர் வீச்சு. இந்தக் கதிர்வீச்சு தோல் வழியாகச் செல்வ தில்லை. பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிக்கதிர் வீச்சு கொடுக்கப்பட்ட பிறகு, உட்கதிர் வீச்சு தரப்படுகிறது. உதாரணம், உணவுக்குழாய்ப் புற்று, கருப்பைவாய்ப் புற்று.

பழைய கதிர்வீச்சு முறை


பழைய முறை கதிர்வீச்சு சிகிச்சையை ‘2D ரேடியோ தெரபி’ என்பார்கள். இதில் அதிக அளவு கதிர்வீச்சைத் தரவேண்டி இருந்தது. அப்போது அது புற்றுள்ள இடத்தின் அருகில் இருக்கும் திசுக்களையும் அழித்தது. அதனால் நோயாளிக்கு வாயில் புண் ஏற்படுவது, தலைமுடி உதிர்வது போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.

இதைத் தவிர்க்க ‘3D கன்ஃபார்மல் ரேடியோதெரபி’ (3D conformal radiotherapy) வந்தது. இந்த சிகிச்சை முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் நோயுள்ள இடத்தை முப்பரிமாணத்தில் படமெடுத்துக்கொண்டு, கணினி உதவியுடன் நோய்க்குத் தகுந்தவாறு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிட்டு, புற்றுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கும் வகையிலும், அருகில் உள்ள ஆரோக்கிய உறுப்புகளைத் தவிர்க்கும் வகையிலும் சிகிச்சை வடிவமைக்கப்பட்டது. இதில் பக்கவிளைவுகள் குறைந்தன என்றாலும், முழுவதுமாகத் தவிர்க்க முடிய வில்லை.

புதிய கதிர்வீச்சு முறைகள்


நவீனக் கதிர்வீச்சு முறையில் பலவிதம் உள்ளன. அவற்றில் ஒன்று, ‘அய்எம்ஆர்டி’ (Intensity Modulated Radiation Therapy). இதில் கதிர்வீச்சுக் கருவியிலிருந்து புறப்படும் ஒவ்வொரு கதிரின் தன்மையையும் தீவிரத் தையும் மாற்றிக்கொள்ள முடிகிறது. இதன் பலனாக, உடல் உறுப்பு உள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் அமைப்பைப் பொறுத்தும் கதிர்வீச்சின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடிகிறது. அப்போது அது நல்ல உடல் பகுதி களைத் தாக்குவது தடுக்கப்படுகிறது. உதாரணமாக, மூளைக் கட்டிகளுக்கு ‘அய்எம்ஆர்டி’ கதிர்வீச்சைத் தரும்போது, மூளைக்குள் உள்ள நரம்புகளையோ சுரப்பிகளையோ தேவையில்லாமல் அது தாக்குவது இல்லை.

‘அய்ஜிஆர்டி’ (Image Guided Radiotherapy) என்பது அடுத்ததொரு நவீனக் கதிர்வீச்சு சிகிச்சைமுறை. ‘கோன் பீம் சிடி’(CBCT) 
எனும் பிரத்தியேக ஸ்கேன் துணையுடன் நோயுள்ள இடத்தை நேரடியாகப் பார்த்துக்கொண்டே கதிர் வீச்சு தரப்படும் சிகிச்சை இது. இதனால் புற்றுநோயுள்ள இடத்தை மட்டும் மிகவும் துல்லியமாக அழிக்க முடிகிறது. இது பொதுவாக எல்லாப் புற்றுநோய்களுக்கும் பொருந்தக் கூடியது.

‘எஸ்பிஆர்டி’ (Stereotactic Body Radiotherapy) என்பது மற்றொரு நவீனக் கதிர்வீச்சு சிகிச்சைமுறை. மிகவும் அதிக அளவில் கதிர்வீச்சு தேவைப்படும் புற்றுநோய்களுக்கு ‘சைபர் நைஃப்’ (CyberKnife) எனும் கருவி கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை இது. கல்லீரல், சிறுநீரகம், கணையம், புராஸ்டேட், கழுத்து, மூளை, தண்டுவடம் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத அளவுக்குப் புற்றுநோய் ஏற்படு மானால், இந்த சிகிச்சை வழங்கப் படுகிறது. மிகத் துல்லியமான சிகிச்சை மட்டுமில்லா மல் குறுகிய கால சிகிச்சையாகவும் இது கருதப்படுகிறது.

புரோட்டான் சிகிச்சை – அதிநவீன சிகிச்சை!


‘புரோட்டான் சிகிச்சை’ (Proton therapy) என்பது அதி நவீனமானது. ‘புரோட்டான் பீம்’ எனப்படும் பிரத்யேகக் கருவிகொண்டு இந்தக் கதிர்கள் வெளியேற்றப் படுகின்றன. முதலில் ‘சைக்ளோட்ரான்’ எனும் கருவியில் புரோட்டான் கதிர்களின் வேகம், ஆற்றல் செறிவூட்டப் படுகிறது. பிறகு இவை பல்வேறு கட்டங்களில் வடிகட்டப்பட்டு, புற்று நோயுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கவல்ல கதிர்களாக வெளித்தள்ளப்படுகின்றன.

இவை பென்சில் முனை போன்று மிகக் கூர்மையாகப் புற்றுள்ள இடத்தை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடியவை (Cutting-edge pencil-beam scanning technology). இவற்றின் பயணப்பாதையில் முன்னும் பின்னும் உள்ள மற்ற நல்ல உறுப்புகளும் நரம்புகளும் துளியும் தாக்கப்படாமல் தப்பித்துவிடுகின்றன. அதேவேளையில் புற்றுள்ள பகுதி மிகத் துல்லியமாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படுகிறது. நோய் நன்கு கட்டுப்படுகிறது.

கூடுதல் நன்மைகள்


நுரையீரல், குடல், கண், கணையம், மார்பகம், புராஸ்டேட், மூளை, தண்டுவடம், முகத்தில் உள்ள சைனஸ் அறைகள் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் களுக்கு புரோட்டான் சிகிச்சை சிறந்த பலனைத் தருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கும் இது பயன்படுகிறது.  புற்றுநோய்க் கட்டிகளுக்கு மட்டுமன்றி, சாதாரண வகைக் கட்டிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவாக வரக்கூடிய இரண்டாம் நிலைப் புற்றுநோய் (Secondary cancer) 
வருவதும் இதில் தடுக்கப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு 30-க்கும் மேற்பட்ட அமர்வுகள் தேவைப்படும். புரோட்டான் சிகிச்சையில் 10-க்கும் குறை வான அமர்வுகளே போதுமானது. இதனால், நோயாளிக்கு அலைச்சல் மிச்சமாகிறது. இந்த சிகிச்சை முறை தற்போது சென்னையிலும் வழங்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 4.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

இரண்டு கைகளையும் இழந்தவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு

சென்னை, பிப்.3 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் போடிக்காமன்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.  கூலித்தொழிலாளி.    இவ ருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது ஒரே மகன் நாராயணசாமி.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாராயணசாமியால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலவில்லை. மேலும் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நாராயணசாமியின் தலையில் விழுந்தது. இதனையடுத்து பத்தாம் வகுப்பு முடிந்த உடனேயே கட்டட வேலைக்குச் சென்ற நாராணசாமி படிப்படியாக கொத்தனாராக உயர்ந்தார்.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி  சித்தையன்கோட்டை என்ற இடத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கிய போது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இந்த விபத்தில் இவரது இரண்டு கைகளும் முழங்கைக்கு கீழே கருகிப்போனது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய் கொடுத்த ஆலோசனை மற்றும் உதவியுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில்  சேர்ந்தார். அடுத்த நாளே  மூளைச் சாவு ஏற்பட்ட கொடையாளி ஒருவரின் இரண்டு கைகளும் அவருக்குப் பொருத்தப்பட்டன.  கடந்த  ஓராண்டாகத் தொடர் சிகிச்சை, தொடர் கண் காணிப்பில்  இருந்த நாராயணசாமி, திங்கள்கிழமை வீடு திரும்புகிறார். நாராயணசாமிக்கு மேற் கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை குறித்து  கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ரமாதேவி கூறியது:

ஸ்டான்லி மருத்துவமனை கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை இந்திய அளவில் புகழ்பெற்ற முதல்நிலை மய்யம் என்றாலும் மூளைச்சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன் படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவேதான் முதன்முறையாகும்.  உலகம் முழுவதும் 87 மருத்துவமனைகளில் இதுவரை 110 பேருக்கு இவ்வகை அறுவைச் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார் மருத் துவர் ரமாதேவி.

- விடுதலை நாளேடு, 3.2.19