வெளிப்பக்கம் காணப்படும் உடல் பகுதி களில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால் பார்க்கமுடியாத ஒரு முக்கியப் பகுதி முதுகு. தடித்த சருமம், பரந்து விரிந்த தசைகள், நீண்ட தசை நாண்கள், பலதரப்பட்ட எலும்புகள், மூளைத்தண்டுவட நரம்புகள் என்று பல கலவையால் ஆன கூட்டுக் குடும்பம் இது. கழுத்து, தோள்பட்டை எலும்பு, மேல் முதுகு, மத்திய முதுகு, கீழ் முதுகு என்று பல பகுதிகளைக் கொண்டது இது.
பெரும்பாலும் மேல் முதுகில் ஏற்படும் பிரச்சினை தசை சுளுக்கு காரணமாகவே இருக்கும். விபத்தின் மூலம் முதுகெலும்பு களில் அடிபடுதல், தோள்பட்டை வலி, விலா எலும்பு முறிவு, ரத்தம் கட்டுதல், விலா குருத்தெலும்பு வீக்கம் போன்ற பிரச் சினைகளும் வரலாம். மேல் முதுகில் வலி உண்டாகி இருமலும் இருந்து இவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், அது காச நோயாக இருக்கலாம்.
மேல் முதுகெலும்பு களில் பலமாக அடிபட்டு அவை நொறுங்கிப் போனாலோ, அங்கு செல்லும் முதுகுத் தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ, அடிபட்ட உடல் பகுதிக்குக் கீழ் உள்ள பகுதிகள் எல்லாமே செயலிழந்து விடும். அந்த இடங்களில் உணர்ச்சி இல்லாமல் போகும். இந்த பாதிப்பு களை சரி செய்வது மிகவும் சிரமம்.
கீழ் முதுகு மார்பு முள்ளெலும்புத் தொடருக்கும் இடுப்பெலும்புக் கட்டுக்கும் இடையில் உள்ள பகுதியைக் கீழ் முதுகு என்கிறோம். இதில் ஐந்து கீழ் முதுகு முள் ளெலும்புகள் ஒன்றோடொன்றாக கோர்க்கப் பட்டு, சற்று முன்புறமாக வளைந்துள்ளன. மேல் முதுகு சற்றே பின்பக்கமாக வளைந் துள்ளதைச் சரி செய்யவே இந்த எலும்புகள் முன்பக்கமாக வளைந்துள்ளன.
முதுகெலும்பிலேயே அதிக அசைவு உள்ள பகுதி கீழ் முதுகுதான். முன்பக்கம் குனிவது, பின்னால் சாய்வது, வலப்பக்கம் இடப்பக்கம் என உடலைச் சுழற்றுவது. இப்படிப் பல அசைவுகளை நம்மால் எளிதாக செய்ய முடிவதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள எலும்புகள்தான். சர்க்கஸ், நாட்டியம், மலை ஏறுதல், டென்னிஸ் போன்ற விளையாட்டு என பலவற்றுக்கும் இவை தருகின்ற அசைவுகள்தான் மூல காரணம். மேலும், உடல் எடை அதிகமாக இருந்தால் அதையும் இந்த எலும்புகள்தான் தாங்க வேண்டும்.
பரிசோதனையும் சிகிச்சையும்
கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால் முதுகு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். ஜவ்வு வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலியானது வலி நிவாரணிகள், 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசி யோதெரபி மற்றும் ட்ராக்ஷன் சிகிச்சையில் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சில ருக்கு முதுகு தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.
முதுகு வலியைத் தடுக்க
1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும்; கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
2. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகு வலி வராமல் தடுக்கும்.
3. காற்றடைத்த பானங்கள், குளிர் பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப் படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்து விடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
4. மேல் முதுகில் வலி ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம் கொடுத்து, மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும். வெந்நீர் ஒத்தடம் கொடுப் பது, சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் கட்டுவது, கண்ட கண்ட களிம்புளைப் போட்டு தேய்ப் பதை எல்லாம் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.
5. முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில் தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சரியான மெத்தையில் பக்க வாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.
6. பலமாகத் தும்மக்கூடாது. மலம் கழிக்கும் போது அதிகமாக முக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7. அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத் துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.
8. உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது. திடீரெனத் திரும்புதல் கூடாது.
9. குனிந்து தரையைச் சுத்தம் செய்வ தற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.
10.இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற் கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.
11. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.
12. அருகில் உள்ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.
13. நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
14. ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து கொள்வது நல்லது.
15. பருமனைத் தவிர்க்க வேண்டும்.
16. புகை, மது, போதை மாத்திரைகள் கூடாது.
17. மன அழுத்தம் தவிருங்கள்.
-விடுதலை,28.11.16