ஞாயிறு, 27 நவம்பர், 2016

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்



ஏப்ரல் மாதம் முதலே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை  சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப்  பாதிக்கின்றன.
நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப  நோய்களைத் தடுப்பதும் எளிது.
வியர்க்குரு: கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத் தைக் குறைப் பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது  உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.  வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும்.
வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு  வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமைன் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.  இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை,  எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால்,  வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவி லிருந்து விடுதலை  பெறலாம்.
வேனல்கட்டியும் புண்களும்: சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில்  அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா கிருமிகள் தொற்றி அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான்  வேனல்கட்டி.
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடை காலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும்.  ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள்  பயன்படுத்தினால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.  கிருமி நாசினி கொண்ட சோப்பை உபயோகித்தால், மீண்டும் இந்தப் புண்கள் வராது.
தேமல் தொற்று
உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான  மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.  குறிப்பாக,  மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர் எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது  அரிப்புடன் கூடிய  தேமல் தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு  அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும்.
இதன்  தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள்    தேவைப்படும். படர்தாமரை சரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும்   அக்குள், தொடையிடுக்கு போன்ற  உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன்   போன்ற காளான் கிருமிகள் தாக்கி, படர்தாமரை எனும் சரும நோய் வரும்.
இரவு நேரத்தில் அரிப்பும் எரிச்சலும் அதிகத் தொல் லையைக்  கொடுக்கும். கோடை வெப்பத்தால் உண்டாகும் வியர்வை, இந்தத் தொல்லைகளை அதிகப்படுத்தும். உள் ளாடைகளை தினமும்  துவைத்துச் சுத்தமாகப் பயன்படுத் தவும்.
முக்கியமாக, குளித்து முடித்தபிறகு மீண்டும் பழைய ஆடைகளை உடுத்தக் கூடாது.  மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். செயற்கை   இழைகளால்  ஆன ஆடைகளும்  ஆகாது.
சருமத்தில் எரிச்சல்
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற  ஊதாக்கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில் 5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகி அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும்.
இதன் விளைவால்  சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்த பாதிப்புள்ள வர்கள், மருத்துவரை அணுகி வலி நிவாரணி மாத்திரைகள்,  எரிச்சலைக் குறைக்கும் களிம்புகளை பயன்படுத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். வெப்பப் புண் என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்சினையை எளிதில் தடுத்துவிடவும் முடியும்.
வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும்   பகுதிகளில் ஏற்கெனவே சொன்ன  சன்ஸ்கிரீன் லோஷனை  தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழி.
மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை  ஆடைகளை அணிவதும் சருமத்துக்குப் பாதுகாப்பு தரும். கருப்புநிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக்கதிர்களை  அதிகமாக உறிஞ்சி சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு  தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்து விடும்.
இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப் பாதையில் நோய்த்  தொற்றோ, சிறுநீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.
கோடையை வெல்வது எப்படி?
3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென் பானங்களைக்  குடிப்பதைவிட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கை பானங்களை குடிக்கவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு  அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
தர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை,  பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள்.
கோடையில்  வெளியில் செல்லும்போது குடையோடுதான் செல்ல வேண்டும். இயன்றவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகள்,  முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும்.
கண்களுக்கு சூரியக் கண்ணாடியை அணியலாம். கோடையில் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகள்  ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் குறைத்துக் கொள்ளுங்கள்.
-விடுதலை,4.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக