தம்பதியரின் நெருக்கத்தைப் பற்றிப் பேசும் போது ஈருடல், ஓருயிர் என்கி றோம். நீ பாதி, நான் பாதி என்கிறோம். அதையெல்லாம் மெய்யாக்கும் வகையில்தான், ஆணில் பாதியும் பெண்ணில் பாதியுமாகச் சேர்ந்து புதிய உயிர் உலகத்துக்கு வருகிறது. இதுதான் உலக நியதி. பெண்ணின் உடலில் உயிராகி வளர வேண்டிய கருவுக்கு, காரணமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டிய ஆண் அணுக்களே அதற்கு எதிரியானால்? அப்படிக்கூட நடக் குமா என்பதே எல்லோரின் கேள்வி யாகவும் இருக்கும்.
நடக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன். பெண் உடலில் கரு வளர விடாமல் செய்ய, அவளது கணவரின் ரத்தமும், மரபணுக்களுமே எதிராகச் செயல் படுகிற அந்தப் பின்னணி பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். சில பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், கருவானது, கருப்பையில் ஒட்டி வளர்வதில்தான் பிரச்சினை இருக்கும். நல்ல கரு வந்து, தங்காதவர்களுக்கும், குழந்தை இல்லாததற்காக அய்.வி.எஃப் சிகிச்சை மேற்கொண்டு, அதிலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறவர்களுக்கும் மேலே சொன்ன விஷயம்தான் பிரச்சினையாக இருக்கும்.
காரணமே தெரியாமல், மறுபடி, மறுபடி சிகிச்சையைத் தொடர்வதும், சிகிச்சை வெற்றி பெறவில்லையே என்கிற விரக்தியில் வாழ்க்கையை வெறுப்பதுமாக துயரத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கரு என்பது, கணவன் -மனைவி இரண்டு பேரின் ரத்தம் மற்றும் மரபணுக்கள் சேர்ந்தது. சில பெண்களின் உடல், கணவனின் ரத்தத்தையும், மரபணுக்களையும் அந் நியப் பொருள்களாக நினைத்துக் கொண்டு, கருவை ஒட்ட விடாமல் செய்து விடும். அதைப் பரிசோதனை யில் கண்டுபிடித்து, கணவனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக் களை எடுத்து, சில மருந்துகள் கலந்து, மனைவியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்படும்.
அதாவது, அந்த வெள்ளை அணுக்கள், மனைவியின் உடலில் ஊறி, எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சில வகை நோய்கள் வரும் முன், எச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் இல்லையா? அதே டெக்னிக்தான் இதிலும். இதற்கு ஹஸ்பென்ட் லூகோசைட் டிரான்ஸ்ஃபர், அதாவது, ஹெச்.எல்.டி. என்று பெயர். இந்த ஊசியை பெண்களின் சருமத்தின் வழியே செலுத்த வேண்டும்.
வாரம் ஒரு ஊசி வீதம், 8 முதல் 12 ஊசிகள் போட வேண்டியிருக்கும். ஒரு ஊசிக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இந்த சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை இல்லாத பெண்களுக்கு அய்.வி.எஃப். செய்தால், கரு தங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். சென்னைக்கு மிகவும் புதுசான இந்த சிகிச்சை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆறுதலையும், தீர்வையும் கொடுக்கிறது... என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.
- ஆர்.வைதேகி
நன்றி: வசந்தம் 23.6.2013
-விடுதலை ஞா.ம.6.9.14நன்றி: வசந்தம் 23.6.2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக