வியாழன், 27 டிசம்பர், 2018

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடில்லி, டிச.21 வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை ஒழுங்கு படுத்துவதற்கான மசோதா, மக்களவையில் 19.12.2018இல் நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதா மூலம், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இதனால், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள் போன் றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது.

வெளிநாடுகளைச் சேர்ந்த தம்பதியர், இந்தியாவுக்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் வாடகைத்தாயாக உதவுவோருக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

மேலும், அதிக தொகை வாங்கித் தருவதாகக் கூறி, பின் னர் இடைத்தரகர்களால் ஏமாற்றப் படுகின்றனர்.

இந்நிலையில், வணிக ரீதியி லான வாடகைத்தாய் முறையை தடுக்க வேண்டும்; வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக் கத்தில் வாடகைத்தாய் முறை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கூடுதலாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்ட இந்த மசோதாவை, மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை தாக்கல் செய்து, விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:

வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையில் உள்ள பிரச்னை களைத் தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், சட்ட ஆணை யமும், அரசியல் கட்சிகளும், சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் குரல் கொடுத்து வரு கின்றனர். அவர்களின் எதிர் பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, இந்த மசோதா உருவாக் கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மஹ்தாப் ஆகியோர் மசோதாவில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சில பிரபலங்கள் தங்களது உடல் அழகு கெட்டு விடக்கூடாது என்பதற்காக, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறு கிறார்கள். வாடகைத்தாய் முறை யில் குழந்தை பெறுவதை நாகரிமாகக் கருதும் இத்தகைய போக்கு தடுக்கப்பட வேண்டும்‘ என்று சுப்ரியா சுலே கூறினார்.

ஒரே பாலின தம்பதிகள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தஸ்திதார் வலியுறுத்தினார்.

கட்டுப்பாட்டு விதிமுறைகள் இல்லாததால் வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை அதிகரித்து வருகிறது’ என்று மஹ்தாப் கூறி னார்.  மேலும், குழந்தை பெறும் தம்பதிக்கு வாடகைத்தாயாக எந்த உறவுகள் எல்லாம் உதவலாம் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். அதற்குப் பதில ளித்து ஜே.பி.நட்டா பேசிய தாவது:

வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். அதே நேரத்தில் நவீன மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தி, குழந் தைப் பேறு இல்லாத தம்பதி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதி அளிக்கப் படுகிறது.

வாடகைத்தாய் முறையில், இந்திய தம்பதி மட்டுமே குழந்தை பெறலாம். வெளி நாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்ச வாளியைச் சேர்ந்தவர்கள் குழந் தைப் பெற முடியாது.

மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வசிப் பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், ஓரினச்சேர்க்கையாளர் போன்றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது. ஏற்கெனவே குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியும் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது.

மேலும், வாடகைத்தாய் முறையை தவறாகப் பயன் படுத்துவோருக்கு தண்டனை விதிப்பதற்கான அம்சங்களும் மசோதாவில் உள்ளன என்றார் அவர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விவாதத்துக்குப் பிறகு மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறை வேற்றப்பட்டது

- விடுதலை நாளேடு, 21.12.18

புதன், 19 டிசம்பர், 2018

நன்றாக உள்ளதா உணவுக்குழாய்?

உங்களுக்குச் சாப்பிட்ட சில நேரத் திலேயே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? எதுக்களிப்புத் தொந்தரவு இருக்கிறதா? இந்தத் தொந்தரவுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். அலட்சியம் தொடர்ந்தால் ஜெர்ட்  என்ற நோய் உங்களுக்கு வந்துவிட லாம். அதென்ன ஜெர்ட் நோய்? உணவுக் குழாயில் வரக்கூடிய பொதுவான பிரச்சினைதான் இது. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்குத் திரும்பி வரு வதைத்தான்  ரிஃப்ளக்ஸ் என்று அழைக் கிறார்கள். ஜெர்ட் எனப்படும் இந்த நோயைப் பேச்சு வழக்கில் எதுக்களிப்பு நோய், நெஞ்செரிவு நோய் என்று அழைப்பதுண்டு. மனித உடலில் இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் சுருக்குத் தசை இருக்கிறது. இதை ஸ்ஃபின்க்டர்  என்று அழைப்பார்கள். இந்தச் சுருக்குத் தசை எப்போதும் மூடியே இருக்கும். இது ஒரு வழிப் பாதையைப் போன்றது.

நாம் உண்ணும் சாப்பாடு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குச் செல்லும். சாப் பாட்டை இரைப்பைக்குச் செல்ல மட்டும் சுருக்குத்தசை அனுமதிக்கும். இரைப்பைக்குள் உணவு சென்றுவிட்டால், திரும்பவும் வெளியே வரவிடாது. இரைப்பையில் உள்ள அமிலம் எக்காரணம் கொண்டும் உணவுக் குழாயைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இயற்கையே செய்த அற்புதமான அம்சம் இது.

ஆனால், மனிதர்களின் தவறான பழக்க வழக்கங்களால் இந்தச் சுருக்குத் தசை பலவீனமடையவும் செய்யலாம். அப்படிப் பலவீனமடைந்தால், எப்போதும் மூடி யிருக்கும் சுருக்குத்தசை திறந்தே இருக்கும். ஒரு வழிப்பாதை என்பது இரு வழிப் பாதை ஆகிவிடும். விளைவு, இரைப்பைக்குச் சென்ற சாப்பிட்ட உணவு, இரைப்பையில் இருந்து உணவுக் குழாய்க்குத் திரும்பி வரத் தொடங்கும். இதற்குப் பெயர்தான்  ரிஃப்ளக்ஸ். இரைப்பையில் இருக்கும் அமிலம், உணவுக் குழாய்க்கு வந்தால், ஹார்ட் பர்ன் எனப்படும் நெஞ்சு எரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வயிறுமுட்ட சாப்பிட வேண்டாம்!


இந்தப் பிரச்சினை குறித்து குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன் விளக்கினார். இது ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உடலமைப்பு. இன்னொன்று பழக்கவழக்க நடைமுறை . மனிதர்கள் உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இந்த நோய் ஏற்பட முக்கியக் காரணம்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கும் இந்த நோய் வர வாழ்க்கை முறைதான் காரணம். கொழுப்பு உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது, காபி, சாக்லெட், மசாலா, வறுத்த உணவு வகைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால் இந்த நோய் வரலாம். இவை தவிர புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் ஒரு காரணம்.

வயிறு முட்டச் சாப்பிட்டாலும் ரிஃப்ளக்ஸ் வர வாய்ப்பு உண்டு. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டு உடனே படுத்துவிட்டாலும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, நடக்கும்போதோ நிற்கும்போதோ இரைப்பை கீழே இருக்கும். உணவுக் குழாய் மேலே இருக்கும். ஆனால், படுக்கும்போது உணவுக் குழாயும் இரைப்பையும் சம நிலைக்கு வந்துவிடும். அந்த நேரத்தில் வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தால், திறந்துவிட்ட குழாயைப் போல சாப்பிட்ட உணவு மேலே வர ஆரம் பித்துவிடும் என்கிறார்.

மாற்றமே சிறந்த சிகிச்சை


உங்களுக்கு ரிஃப்ளக்ஸ் தொந்தரவு இருந்தால், வாழ்க்கை நடைமுறையை முற் றிலும் மாற்றிக்கொள்வதுதான் நல்லது. வெறும் மருந்து மட்டுமே இந்த நோயைக் குணப் படுத்திவிடாது என்று எச்சரிக்கிறார் சந்திர மோகன். எந்த வகையில் வாழ்க்கை முறை மாற்றம் செய்ய வேண்டும்?

இந்தப் பாதிப்பை அறிந்துகொள்ள எண்டோஸ்கோப்பி பரிசோதனை போது மானது. உணவுக் குழாயை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை எண்டோஸ் கோப்பியே சொல்லிவிடும். ரிஃப்ளக்ஸை 50 சதவீதம்தான் மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியும். எஞ்சிய 50 சதவீதம் வாழ்க்கை முறை மாற்றமே சிகிச்சை. மருந்தை நம்பி மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் பாதி அறிகுறிகளைச் சரி செய்துவிடலாம். இதுதான் இதில் முக்கியம் என்கிறார் அவர்.

தடுப்பது எப்படி?


இரைப்பையில் அமிலத்தைக் குறைப்பது, ஒரு வழிப் பாதையை ஒழுங்குபடுத்துவது, அமிலத்தைச் சமநிலைப்படுத்துவது, முகோசா படலத்தைப் பாதுகாப்பதற்கு போன்றவற்றுக்கு மருந்துகள் உள்ளன. மருந்தை மட்டும் உட்கொண்டுவிட்டு வாழ்க்கை முறையை மாற்றாமல் இருந்தால், பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டும் கதைதான் நடக்கும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, காரம் அதிகம் இல்லாமலும் மசாலா கலக்காமலும் சாப்பிட வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது.

மது, புகைப் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.  அசிடிட்டியை உண்டாக்கக்கூடிய சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடாமல் இருப்பது எல்லாமே வாழ்க்கை முறை மாற்றம்தான் என்கிறார் சந்திரமோகன்.

பொதுவாக, எல்லோருக்கும் இரவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சாப்பிட்ட சற்று நேரத்தில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது அல்லது உறங்கச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கமும் இந்த நோய் வருவதற்கான வாசலைத் திறந்துவிடும். உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உண்ணுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவு உணவில் மசாலா கூடவே கூடாது. இரவு உணவைக் குறை வாகவே சாப்பிட வேண்டும். குறைவாக என்றால், இன்னொரு இட்லியைச் சாப்பிட் டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போது நிறுத்திவிடுவது நல்லது என்கிறார் சந்திரமோகன்.

- விடுதலை நாளேடு, 17.12.18

புதன், 12 டிசம்பர், 2018

விஷமே மருந்தாகுமா?

பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்து, பாம்பின் விஷத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பாம்பி லிருந்து அதன் விஷத்தைச் சேகரித்து, வேறு கரைசல்கள் சேர்க்கப்பட்டு, குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படும். குதிரையின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, விஷத்தை முறிப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபயாட்டிக்) உருவாக்கும்.


விஷத்தைச் செலுத்திய குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர், குதிரையின் ரத்தத்தைச் சேகரித்து, அதில் இருந்து விஷ முறிவு மருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சில பூச்சிக்கொல்லிகளுக்கான விஷ முறிவு மருந்து ஊமத்தம் கொட்டையிலிருந்து தயாரிக் கப்படுகிறது. அதேபோல ஒடுவன்தழையிலிருந்து எடுக்கப்படும் மருந்தும் பூச்சிக்கொல்லிகளுக்கான விஷ முறிவுக்கு பயன்படுகிறது. அரளிக்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, இதயச் செயலிழப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.


-  விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

செவ்வாய், 11 டிசம்பர், 2018

மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள் ஆய்வு

பெர்லின், டிச. 11- இருதய நோய் கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்கா மல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.

எனவே, மனித இருதயத் துக்கு பதிலாக பன்றியின் இரு தயத்தை பொருத்தும் ஆராய்ச்சி யில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். ஜெர்மனியின் முனிச் லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.

அவர்கள் பன்றியின் இரு தயத்தை எடுத்து வால் இல் லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தினர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங் குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.

இது ஒரு நல்ல முன் னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருத யத்தை வெற்றிகரமாக பொருத் தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

- விடுதலை நாளேடு, 11.12.18

வியாழன், 29 நவம்பர், 2018

முடங்கிய கைகளுக்கு விடுதலை!

வயது ஆக ஆக, வலியும் அதனால் ஏற்படும் வேதனையும் சொல்லி மாளாது. அதுவும், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையில் விழுவது வரை, நாள் முழுக்க கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு நம்மைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிவிடும். இந்த வலி தரும் பயத்தாலேயே பலரும் வெளியில் செல்வதற்குத் தயங்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். முடக்கு வாதம் என்று இந்த நோய்க்குச் சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்!

ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் அல்லது முடக்கு வாதம் என்பது உடலிலுள்ள நீர்ம மூட்டுகளைப் பிரதானமாக தாக்கும் நாள்பட்ட மூட்டு நோயாகும். இந்த நோய், மூட்டுகளை மட்டுமல்லாது நுரையீரல், இதயம், கண் போன்ற உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக, 40 முதல் 50 வயது கொண்டவர்களை அதிகமாகத் தாக்கினாலும், எந்த வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாகவே இது கருதப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்கள் மூன்று மடங்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கு வாதம் கொண்ட வர்களுக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலை நேர மூட்டு இறுக்கம், மூட்டுச் சீர்குலைவு மற்றும் மூட்டுச் செயல்பாடின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு அன் றாட வேலைகளைச் செய்வதில் மிகுந்த சிரமமும் உடல் அயற்சியும் ஏற்படும்.

வலி குறைக்கும் பயிற்சிகள்


முடக்கு வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை மூலமாக ஓரளவு தீர்வு பெற முடியும். அதோடு சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் கொண்டவர்களில் பெரும்பாலா னோ ருக்குக் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் உள்ள மூட்டுகளில் முழுமை யான மூட்டு அசைவு கள் இல்லாமல் இறுக்கமாக இருக்கும். மேலும், எதையும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் திறன் இருக்காது. இதனால், அவர்களால் பையைத் தூக்குவது, சாவி கொண்டு கதவைத் திறப்பது, பாட்டில் மூடியைத் திறப்பது, டம்ளரைப் பிடிப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதுகூடக் கடினமாக இருக்கும். ஆதலால், கை, மணிக்கட்டு மூட்டுகளில் இத்தகைய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் கண்டிப்பாகக் கைகளுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதற்காக சாரா எனும் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை, உயர்தர மருத்துவ ஆய்வு ஒன்றில், முடக்கு வாதம் கொண்ட மக்களிடையே சோதிக்கப்பட்டு, திறன் மிக்கவை எனக் கண்டறியப்பட்டவை. மேலும், இந்தப் பயிற்சிகள் கை, மணிக்கட்டு மூட்டுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முடக்கு வாதம் பாதிக்கப்பட்ட கைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சாரா பயிற்சிகள் பரிந்துரைப்பதை முடக்கு வாத மருத்துவர்கள் மற்றும் தெரப் பிஸ்ட்டுகள் ஆதரித்து வருகின்றனர்.

மூட்டு அசைவுகளை எளிதாக்கும் 7 பயிற்சிகள் மற்றும்  விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டுகளில் உள்ள தசைகளை உறுதிப்படுத்தும் 4 பயிற்சிகள் என சாரா இரண்டு வகையான பயிற்சிகளைக் கொண்டது.   இவற்றைச் செய்வதால் மூட்டு வலியும் இறுக்கமும் குறைந்து அன்றாடச் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

வைரஸ் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?



மழைக்காலம் வந்தால் வைரஸ் காய்ச்சல்களும் தொடங்கிவிடும். டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், மலேரியா எனப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.  மழைக் காலத்தில் வரக்கூடிய வைரஸ் காய்ச்சல்களை எப்படித் தவிர்ப்பது, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்கள் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி?

டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்குக் கொசுதான் முதல் காரணம். கொசுக் கடி மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ், 3 முதல் 7 நாட்களுக்குள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும். முன்பு கொசுக்கடியால் மலேரியா காய்ச்சல்தான் தீவிரமாக இருந்தது. இப்போது டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் தாக்குகின்றன.

இந்தக் காய்ச்சல்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சென் னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டபோது, டெங்குவும் ஒரு வகையான வைரஸ்தான். கொசுக் கடியால் வருவதுதான். கொசுவைக் கட்டுப்படுத்தினாலே அந்தக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். டெங்கு வால் பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடித்தால், அவர்களுக்கும் டெங்கு தொற்றிவிடும்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசு பகலில்தான் கடிக்கிறது. எனவே, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். முதியவர்கள், குழந் தைகள், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. மழை, குளிர் காலத்தில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த் தாலே, எந்த வைரஸ் காய்ச்சலையும் தவிர்த்துவிடலாம் என்கிறார்.

கைகளை நன்றாகக் கழுவுங்கள்


ஒருவருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தாலோ நுரையீரலில் பிரச்சினை இல்லாமல் இருந்தாலோ அவரை வைரஸ் காய்ச்சல் எளிதில் அண்டாது. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஜூரம் அதிகமா னாலோ ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ வியர்வை, தலைசுற்றல், பசியின்மை போன்ற பிரச்சினைகள் தெரிந்தாலோ மருத்துவரை உடனே அணுக வேண்டும். பொதுவாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் வைரஸ் காய்ச்சல்களுக்கு எளிதில் இலக்காகிவிடுவார்கள்.

பொதுவாக ஃப்ளு, இன்ஃப்ளூயன்சா ஆகியவற்றைத்தான் வைரஸ் காய்ச்சல் என்கிறோம். இந்தக் காய்ச்சல் சுவாச வழியில் மூக்கு முதல்  தொண்டைவரை பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. நுரையீரல் வரையிலும் பாதிப்பு நீளும். வைரஸால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ தும்மும்போதோ பக்கத்தில் மற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கும் காய்ச்சல் வரக்கூடும். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் முகமூடி அணிந்துகொண்டாலோ கர்சீப்பை வைத்து மூடிக்கொண்டாலோ மற்றவருக்குப் பரவாது.

ஒரு வேளை அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால், அவர்களை அணுகுபவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. காய்ச்சல் வந்தவர்களைத் தொட்டாலோ கைக்குலுக்கி னாலோ கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இதைப் பழக்கமாக வைத்துக் கொண்டாலே வைரஸ் காய்ச்சல் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் சிவராம கண்ணன்.

குளியல் மிக அவசியம்!


மழைக்காலத்தில் குழந்தைகளுக்குச் சளி பிடித்தல், இருமல், காய்ச்சல் ஆகியவை அடிக்கடி வரும். மழை பெய்யும்போது தண்ணீரில் விளையாட குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளை இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படிக் காப்பது?

மழைத் தண்ணீரில் குழந்தைகள் விளை யாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, கை, கால், முகம்  முறையாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். அப்படிக் கழுவாமல் உணவு சாப்பிட்டால், அதன் மூலம் குழந்தை களுக்கு வைரஸ் உள்ளே சென்றுவிடலாம். அதனால் வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மழைக் காலத்தில் டெங்குக் காய்ச்சலி லிருந்து குழந்தைகளைக் காப்பது மிகவும் முக்கியம். பள்ளியில் இருக்கும்போதோ வீட்டில் இருக்கும்போதோ கொசுக் கடிக்கு ஆளாகமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மழை நீரில் விளையாடக் கூடாது எனப் பெற்றோர் அறி வுறுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தை களுடைய கையையும் விரல்களையும் பெற்றோர்கள் சுத்தமாகப் பராமரிக்க வேண் டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ரவி.

- விடுதலை நாளேடு, 26.11.18

வியாழன், 22 நவம்பர், 2018

இரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி



ஒளியும் நிறமும் நம் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் படைத்தவை. நீல நிற ஒளியால் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என, பிரிட்டனி லுள்ள சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, தினமும் மூன்று வேளை உயர் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆறுதல் தரக் கூடியது.

சர்ரே ஆராய்ச்சியாளர்கள், ஆரோக்கிய மான, 14 பேரை 30 நிமிடங்கள் நீல நிற ஒளியில் இருக்கவைத்தனர். ஆய்வாளர்கள் பயன்படுத்திய நீல நிற ஒளியின் அலைநீளம் 450 நேனோ மீட்டர்கள் கொண்டது. இது சூரிய ஒளியில் இருக்கும் நீல ஒளியின் தன்மையுடையது. அடுத்த நாள், அதே நபர்களை சாதாரண ஒளியில் 30 நிமிடங்கள் இருக்க வைத்தனர்.

இந்த சோதனைக்கு முன், சோதனைக்கு பின், இரண்டு மணி நேரங்கள் கழித்தும் பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களின் இறுக்கம், இளக்கம், ரத்த பிளாஸ்மாவில் நைட்ரிக் அமிலத்தின் அளவு போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் அளந்து பார்த்தனர். சாதாரண ஒளியில் நனைந்த பின், ரத்த அழுத்தத்தில் எந்த மாற்றமும் தென்பட வில்லை. ஆனால், நீல ஒளியில் நனைந்த பின், இதயம் சுருங்கிய நிலையில் (சிஸ்டாலிக்) ரத்த அழுத்தம் 8 மி.மி மெர்குரி அளவுக்கு குறைந்திருந்தது.

இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும்போது கிடைக்கும் பலன் அளவுக்கு இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர். நீல ஒளி பட்டதும், தோலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியாகி, அது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதனால் இறுகியிருந்த ரத்த நாளங்கள் இளக்க மடைகின்றன.

இதையடுத்து, ரத்த ஒட்டம் அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைகிறது என, ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர். வயதானவர்களின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, நீல ஒளியைப் பாய்ச்சும் கருவிகளை அணிந்தால் அதிக மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே ரத்த அழுத்தத்தை சீராக்கலாம் என, சர்ரே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு,22.11.18

வியாழன், 8 நவம்பர், 2018

டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா காய்ச்சல்கள் எச்சரிக்கை!

பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களின் மருத்துவத்துறை அனுபவ அறிவுரை


டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள்


டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள் வைரசால் ஏற்படுகின்றன. தேங்கியிருக் கும் தண்ணீரிலுள்ள பெண் கொசுக்கள் பகல் நேரத்திலேயே கடிப்பதால் பரவு கின்றன. டெங்கு, சிக்கன் குனியாவால் காய்ச் சல் அதிகமாகும். தோல் வெடிப்புகள், மூட்டு வலிகள் ஏற்படும். டெங்கு காய்ச் சலின்போது இரத்த இழப்பு ஏற்படுவ தால், இரத்த உறைதலுக்கு மூலப் பொருளான இரத்த தட்டுகள் குறைந்து விடுவதால் இரத்த இழப்பு அதிகமாகிறது. பாரசிட்டமால் மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையும், டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் களுக்கு தடுப்பு மருந்தும் இல்லாத நிலையும் உள்ளது.

ஜிகா காய்ச்சல்


ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சுவாசிக்கின்ற காற்றின்மூலமாகவும், பாலியல் உறவுகளின் மூலமாகவும்  பரவுகின்ற வைரஸ் காரணமாக ஜிகா காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி ஏற்படும். தும்மல், மூக்கடைப்பு இராது. தடுப்பு மருந்து இல்லை.

பப்பாளியின் பயன்


பப்பாளி இலைகள் டெங்குவைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. டெங்கு வால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பப்பாளி இலைச் சாறு அளிப்பதன்மூலமாக 5 நாள்களில் குணம் அடைகிறார்கள்.

ஸ்வைன் புளூ காய்ச்சல்


ஸ்வைன் புளூ காய்ச்சலுக்கு மருந்து உள்ளது.


- விடுதலை நாளேடு, 6.11.18