வியாழன், 29 நவம்பர், 2018

முடங்கிய கைகளுக்கு விடுதலை!

வயது ஆக ஆக, வலியும் அதனால் ஏற்படும் வேதனையும் சொல்லி மாளாது. அதுவும், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையில் விழுவது வரை, நாள் முழுக்க கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு நம்மைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிவிடும். இந்த வலி தரும் பயத்தாலேயே பலரும் வெளியில் செல்வதற்குத் தயங்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். முடக்கு வாதம் என்று இந்த நோய்க்குச் சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்!

ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் அல்லது முடக்கு வாதம் என்பது உடலிலுள்ள நீர்ம மூட்டுகளைப் பிரதானமாக தாக்கும் நாள்பட்ட மூட்டு நோயாகும். இந்த நோய், மூட்டுகளை மட்டுமல்லாது நுரையீரல், இதயம், கண் போன்ற உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக, 40 முதல் 50 வயது கொண்டவர்களை அதிகமாகத் தாக்கினாலும், எந்த வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாகவே இது கருதப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்கள் மூன்று மடங்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கு வாதம் கொண்ட வர்களுக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலை நேர மூட்டு இறுக்கம், மூட்டுச் சீர்குலைவு மற்றும் மூட்டுச் செயல்பாடின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு அன் றாட வேலைகளைச் செய்வதில் மிகுந்த சிரமமும் உடல் அயற்சியும் ஏற்படும்.

வலி குறைக்கும் பயிற்சிகள்


முடக்கு வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை மூலமாக ஓரளவு தீர்வு பெற முடியும். அதோடு சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் கொண்டவர்களில் பெரும்பாலா னோ ருக்குக் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் உள்ள மூட்டுகளில் முழுமை யான மூட்டு அசைவு கள் இல்லாமல் இறுக்கமாக இருக்கும். மேலும், எதையும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் திறன் இருக்காது. இதனால், அவர்களால் பையைத் தூக்குவது, சாவி கொண்டு கதவைத் திறப்பது, பாட்டில் மூடியைத் திறப்பது, டம்ளரைப் பிடிப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதுகூடக் கடினமாக இருக்கும். ஆதலால், கை, மணிக்கட்டு மூட்டுகளில் இத்தகைய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் கண்டிப்பாகக் கைகளுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதற்காக சாரா எனும் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை, உயர்தர மருத்துவ ஆய்வு ஒன்றில், முடக்கு வாதம் கொண்ட மக்களிடையே சோதிக்கப்பட்டு, திறன் மிக்கவை எனக் கண்டறியப்பட்டவை. மேலும், இந்தப் பயிற்சிகள் கை, மணிக்கட்டு மூட்டுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முடக்கு வாதம் பாதிக்கப்பட்ட கைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சாரா பயிற்சிகள் பரிந்துரைப்பதை முடக்கு வாத மருத்துவர்கள் மற்றும் தெரப் பிஸ்ட்டுகள் ஆதரித்து வருகின்றனர்.

மூட்டு அசைவுகளை எளிதாக்கும் 7 பயிற்சிகள் மற்றும்  விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டுகளில் உள்ள தசைகளை உறுதிப்படுத்தும் 4 பயிற்சிகள் என சாரா இரண்டு வகையான பயிற்சிகளைக் கொண்டது.   இவற்றைச் செய்வதால் மூட்டு வலியும் இறுக்கமும் குறைந்து அன்றாடச் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக