வியாழன், 22 நவம்பர், 2018

இரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி



ஒளியும் நிறமும் நம் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் படைத்தவை. நீல நிற ஒளியால் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என, பிரிட்டனி லுள்ள சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, தினமும் மூன்று வேளை உயர் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆறுதல் தரக் கூடியது.

சர்ரே ஆராய்ச்சியாளர்கள், ஆரோக்கிய மான, 14 பேரை 30 நிமிடங்கள் நீல நிற ஒளியில் இருக்கவைத்தனர். ஆய்வாளர்கள் பயன்படுத்திய நீல நிற ஒளியின் அலைநீளம் 450 நேனோ மீட்டர்கள் கொண்டது. இது சூரிய ஒளியில் இருக்கும் நீல ஒளியின் தன்மையுடையது. அடுத்த நாள், அதே நபர்களை சாதாரண ஒளியில் 30 நிமிடங்கள் இருக்க வைத்தனர்.

இந்த சோதனைக்கு முன், சோதனைக்கு பின், இரண்டு மணி நேரங்கள் கழித்தும் பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களின் இறுக்கம், இளக்கம், ரத்த பிளாஸ்மாவில் நைட்ரிக் அமிலத்தின் அளவு போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் அளந்து பார்த்தனர். சாதாரண ஒளியில் நனைந்த பின், ரத்த அழுத்தத்தில் எந்த மாற்றமும் தென்பட வில்லை. ஆனால், நீல ஒளியில் நனைந்த பின், இதயம் சுருங்கிய நிலையில் (சிஸ்டாலிக்) ரத்த அழுத்தம் 8 மி.மி மெர்குரி அளவுக்கு குறைந்திருந்தது.

இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும்போது கிடைக்கும் பலன் அளவுக்கு இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர். நீல ஒளி பட்டதும், தோலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியாகி, அது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதனால் இறுகியிருந்த ரத்த நாளங்கள் இளக்க மடைகின்றன.

இதையடுத்து, ரத்த ஒட்டம் அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைகிறது என, ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர். வயதானவர்களின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, நீல ஒளியைப் பாய்ச்சும் கருவிகளை அணிந்தால் அதிக மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே ரத்த அழுத்தத்தை சீராக்கலாம் என, சர்ரே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு,22.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக