முகத்தில் உண்டான பெரிய கட்டியை அகற்றி
விலா எலும்பைப் பொருத்தி முகத்தை சீராக்குதல்
முக அறுவை மருத்துவம்:
முக அறுவை மருத்துவம் இன்றைய மருத்துவ உலகின் புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு துறையாகும். விபத்துகளால் ஏற்படும் முக எலும்புகள் முறிவு, முகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகள், கட்டிகள், புற்றுநோய், முகத்தைச் சீரமைக்கும் மருத்துவம் ஆகிய மருத்துவங்கள் இத்துறை அறிஞர்களால் கையாளப்படுகின்றன. பிளவுண்ட அன்னம், பிளவுண்ட உதடுகள் இவர்களால் சீராக்கப்படுகின்றன. நம்மில் பலர் எலும்புகளிலோ, தாடையிலோ அடிபட்டால் எலும்பு மருத்துவர்களிடம் செல்லுகின்றனர். ஆனால், அவர்களும், முக அறுவை மருத்துவர்களிடம் செல்ல அறிவுறுத்துவர் அல்லது அவர்களையே அழைத்து மருத்துவம் செய்வர். (BDS என்னும் பல் மருத்துவம் படித்து முடித்த பின், 3 ஆண்டுகள் MDS படிப்பு படிக்க வேண்டும்.) அடிபட்டு நகர்ந்துவிட்ட முக எலும்புகளால், முக இயக்கம் செயலற்று விடும். பற்களின் இணைப்பு நகர்ந்து விடும்.
அதனால் உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும். வலி, உதிரப் போக்கு, வீக்கம், முகத் தசைகள் செயலிழப்பு, உணர்விழப்பு ஆகியவை ஏற்படக் கூடும். உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்ற நிலை கூட சில நேரங்களில் ஏற்படக் கூடும். இதற்கு உடனடி மருத்துவத் தலையீடு தேவை. முக அறுவை மருத்துவர்கள் வாய் வழியேவோ, முகத்தின் வெளிப்புறத்திலோ அறுவை மருத்துவம் செய்து, அடிபட்ட எலும்புகளை இயல்பான நிலைக்கு நகர்த்தி, கம்பிகள் மூலமோ, உலோகத் தட்டுகள் மூலமோ அசையாமல் பொருத்தி விடுவர். 6 முதல் 8 வாரங்களில் எலும்புகள் நன்கு இணைந்து விடும். இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்புத் தலைக் கவசமின்றி, அதி வேகத்தில் செல்லும் நம் இளைஞர்களே சாலை விபத்துகளில் சிக்கி இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
ஒருபக்கமாகக் கோணிய முகத்தை கால் எலும்பு
பொருத்தி சீராக்குதல்
சில நேரங்களில் முகம் மட்டுமன்றி, தலை எலும்புகளும் உடைந்து உயிரே போகும் நிலையும் ஏற்படும். குழந்தைகள் ஓடி, விளையாடும்பொழுது, கீழே விழுந்து அடிபடுவது இயல்பான நிகழ்வாகும். சில நேரங்களில் கீழ் தாடையின், நாடியில் (முகவாய்கட்டை) அடிபட்டுவிடும். உடனே நாம் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்வோம். அவரும் முதலுதவியும், மருத்துவமும் செய்து அனுப்பி விடுவார். ஆனால், இதில் உள் மறைந்துள்ள ஆபத்து ஒன்றுள்ளது. நம் கீழ்த் தாடையை, மண்டையோடு இணைக்கின்ற மூட்டுகளை ‘கீழ்தாடை மூட்டுகள்’ என்று குறிப்பிடுவர்.
இவை பக்கத்திற்கு ஒன்றாக, காதின் முன்புறம் அமைந்திருக்கும். காதின் முன்புறம், ஒரு விரலை வைத்து, வாயைத் திறந்தால் இந்த மூட்டு நகர்வதை நாம் அறிய முடியும். இந்த மூட்டில் அமைந்துள்ள குறுத்தெலும்புகள்தான் கீழ்த்தாடை வளர்ச்சியடைவதற்குக் காரணமான முக்கிய உறுப்புகள். குழந்தைகளுக்கு, நாடியில் அடிபடும் பொழுது, நாடி எலும்பு பருமனாக உள்ளதால், அங்கே முறிவு ஏற்படாது. ஆனால், மூட்டுகளுக்கு அந்த அழுத்தம் பரவி, குறுத்தெலும்புகள் உடைந்து, தூள் தூளாகி விடும். அந்த மூட்டுக் குழிகளில் இரத்தம் சேர்ந்துவிடும்.
சேர்ந்த இரத்தம், உறைந்து, நாளடைவில் நாரிழைகளால் மாற்றம் பெறும். பிறகு ஒரு சில மாதங்களில் இந்த நாரிழைகள், நார்த்திசுக்களாக உருமாற்றமடையும். நார்த் திசுக்களில் கால்சியம் போன்ற சத்துப் பொருள்கள் சேர்ந்து, சிறிது காலத்தில் முழு வளர்ச்சியடைந்த எலும்புகளாக உருப்பெறும். உருமாற்றம் பெற்ற எலும்புகள் அப்படியே மண்டையோடு இணைந்துவிடும். இதனால் கீழ்த்தாடையை தனியாக இயக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் வாய் திறக்க முடியாமல் போய்விடும். வாயைத் திறக்க முடியாததால் உணவு உண்ண முடியாமல், திரவ உணவு மட்டும் எடுக்கும்படியான நிலை உண்டாகும். கொட்டாவி விடுதல், பேசுதல், இருமுதல் போன்றவை வாயை மூடிக்கொண்டேதான் செய்ய முடியும். கீழ்த்தாடையின் வளர்ச்சி மய்யங்கள் இந்த மூட்டுகளின் குறுத்தெலும்புகளில்தான் அமைந்திருக்கும். குறுத்தெலும்புகள் சிதை வடைவதால் கீழ்த்தாடையின் வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும். அதனால் முக அழகு பாதிக்கப்படும்.
இடுப்பெலும்பை முகத்தில் பொருத்தி பறவை(புறா) முகத்தை சீராக்குதல்
கீழ்த் தாடை வளராத நிலையில் உள்ள முகத்தை மருத்துவர்கள் “பறவை முகம்’’ (Birds Face) என்று குறிப்பிடுவர். காதின் முன்புறம், அறுவை மருத்துவம் செய்து, முக அறுவை மருத்துவர்கள் வாயைத் திறக்க வைப்பர். பின்பு உடலில் வேறு பகுதிகளிலிருந்து, எலும்பை எடுத்து, முகத்தில் தாடையில் பொருத்தி முகத்தை இயல்பாக்குவர். அறுவை மருத்துவம் மூலமே இக்குறை பாடுகளைச் சரியாக்க முடியும். குழந்தைகள் கீழே விழுந்து, நாடியில் அடிபட்டு விட்டால், அது வாய் சரியாகத் திறந்து, மூடுகிறதா என்பதை முக்கியமாகக்
கவனிக்க வேண்டும். இம்மூட்டெலும்புகளின் சிதைவும், விளைவுகளும், உடனடியாகத் தெரியாததால், ஒரு ஆண்டுக்காவது, குழந்தை வாய் திறப்பதையும், மூடுவதையும் கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது குறைபாடு இருப்பின், உடனே முக அறுவை மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் ‘வாயிறுக்கம்’ போன்ற தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
பற்கள் துருத்திக் கொண்டிருக்கும் மேல் நாடியை சிறிதாக்கி சீராக்குதல்
சில குழந்தைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டு, ‘பறவை முகம்’ போன்ற நிலைக்குச் சென்று விடும். பார்க்க அழகில்லாமல் இருப்பர். அவர்களை முக அறுவை மருத்துவரிடம் காட்டினால், அவர் ஓர் அறுவை மருத்துவம் செய்து முகத்தை இயல்பாக மாற்றிவிடுவார். உடலின் இடுப்பெலும்பு, விலா எலும்பு, கால் எலும்பு போன்றவற்றில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து, முகத்தில் பொருத்தி முகத்தை அழகாக மாற்றி விடுவார். சிலருக்கு மேல் தாடையை விட, கீழ்த்தாடை பெரிதாக வளர்ந்து, பார்க்க அழகில்லாமல் அமைந்துவிடும். அவர்களுக்கும் தாடையின் நீளத்தைக் குறைத்து, இயல்பான வடிவத்திற்கு முக அறுவை மருத்துவத்தால் சீராக்க முடியும். சிலருக்கு எலும்புகளில் குறைபாடுகள் இல்லாமல் பற்களின் அமைப்பில் மட்டும் குறைபாடு இருக்கும். பல் சீரமைப்பு மருத்துவத்தின் மூலம் பற்களை நகர்த்தி அழகாக்க முடியும். முதியவர்களுக்கு, எல்லா பற்களும் இழந்துவிடும் சூழ்நிலை ஏற்படும். அவர்களுக்கு பல் மருத்துவர் செயற்கை பற்கள் பொருத்துவார். இவை கழட்டி, மாட்ட வேண்டியதாக இருக்கும். கீழ்த்தாடையில் பொருத்தும் செயற்கைப் பற்கள் இயல்பாக பயன்பாட்டிற்கு வர சிலருக்கு நீண்ட நாள்களாகி விடும். இந்தச் சிக்கலை மாற்ற இப்பொழுது வாயிலேயே இருக்கும்படியான செயற்கைப் பற்களைப் பொருத்தக்கூடிய முறைகள் வழமைக்கு வந்து விட்டன. “இம்ப்ளாண்ட்’’ என்கின்ற சிறிய பொருளை எலும்போடு பொருத்திவிடுவர். அதனோடு செயற்கை பற்களை இணைத்து விடுவர். இந்த வகை மருத்துவம் நோயாளிக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
முகத்தில் ஏற்பட்ட அழகற்ற வடுக்கள், அழகைக் குலைக்கும் புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை எளிதாகக் குணப்படுத்த முடியும். “கடவுள் முகத்தை அழகில்லாமல் படைத்துவிட்டான்’’ என்கின்ற கூற்றை பொய்யாக்கும் வகையில், முக அறுவை மருத்துவத்தால் முகத்தை அழகாக இன்று ‘கடவுள்’ நம்பிக்கைக்குச் சவால் விடும் நிலை எற்பட்டுள்ளது என்பது மருத்துவத் துறையின் சாதனையல்லவா!
குறிப்பு : மேற்கண்ட படங்களில் உள்ள நோயாளிகளுக்கு முக அறுவை மருத்துவம் முழுவதும் கட்டுரையாளரால் செய்யப்பட்டது.
மரு.இரா.கவுதமன்
(தொடரும்)
- உண்மை இதழ், 1-15.1.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக