மரு.இரா.கவுதமன்
இதய நோய்கள்:
1. பிறவிக் கோளாறு இதய நோய்கள் (Congenital Heart Diseases)
2. அடைப்பிதழ் (Valvular Diseases) நோய்கள்
3. இதயத் துடிப்பு சீரின்மை (Arhythemia) நோய்கள்
4. இதயத் தமனி அடைப்பு நோய் (Coronary Heart Diseases)
5. இதய செயலிழப்பு (Heart Failure) நோய்
என்று இதய நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
பிறவிக் கோளாறு இதய நோய்கள்:
சில குழந்தைகள் பிறக்கும்போதே, இதயத்தின் அமைப்பில் குறைபாடோடு பிறக்கும். குறைபாடுகள் பலவகையில் இருக்கலாம். பொதுவாக “இதயச் சுவர்களில் குறைபாடு (Defects in heart walls)”, “அடைப்பிதழ் குறைபாடு (Defects in heart valves) ”, “இதய இரத்தக் குழாய்களில் குறைபாடு (Defects in blood vessels) என்று பிரிக்கலாம்.
குறைபாட்டுக்கான காரணங்கள்:
* குடும்பத் தலைமுறை (Families) யாக வரலாம்.
* கருவுற்ற காலத்தில் உட்கொள்ளும் (வேறு நோய்களுக்கு) சில மருந்துகளால் இதயக் கோளாறு ஏற்படலாம்.
* கருவுற்ற காலங்களில் அதிக அளவு மது அருந்துவதால் இந்நோய்கள் வர வாய்ப்புள்ளது.
* கருவுற்ற காலங்களில் அதிக அளவு ‘இரத்த சர்க்கரை அளவு குழந்தைகளின் இதய வளர்ச்சியைப் பாதிக்கலாம்.
அறிகுறிகள்: சில இதயக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, எந்த அறிகுறிகளும் இல்லாமல், வயது ஏற, ஏற அறிகுறிகள் ஏற்படலாம்.
பிறந்த உடன் தெரியும் அறிகுறிகள்:
* கருநீல வண்ண உதடுகள், தோல், விரல்கள், கால் கட்டை விரல்கள்
* மூச்சு விடுவதில் கடினம்.
* பால் குடிப்பதற்கு சிரமப்படுதல்
* எடை குறைவு
*இதயப் பகுதியில் வலியும், அதனால் குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருத்தல்.
* குழந்தையின் தாமதமான வளர்ச்சி.
நாள்பட்ட அறிகுறிகள்:
* இதயத் துடிப்பு குறைபாடு
* தலைச்சுற்றல்
* மூச்சுவிடுவதில் தொல்லை.
* அடிக்கடி மயக்கமடைதல்.
* கால்களில் (பாதங்களில்) வீக்கம்
* களைப்பு
மருத்துவம்:
குறைபாடுகளுக்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். சில குழந்தைகளுக்கு குறைபாடு சிறியதாக இருப்பின் தானாகவே சரியாகிவிடும். குறைபாடுகள் அதிகளவு இருந்தால் மருத்துவமுறை மாறுபடும்.
மருந்துகள்:
மருந்துகள் மூலம் பெரிய அளவு பயனில்லை எனினும் இதய இயக்கத்தைச் சிறப்பாக்கும் மருந்துகள், இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள், இதயத் துடிப்பைச் சீராக்கும் மருந்துகள் எனப் பலவகை மருந்துகளும் மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றன. அவை ஓரளவு இதயத்தின் இயக்கத்தைச் சீராக்கும் தன்மையுடையவையாகும். அதனால் உடனடி ஆபத்தை தவிர்க்கலாம்.
இதயத்தில் பதிக்கும் கருவிகள்: (Heart Implants)
“இதயத் துடிப்பு சீர்மை கருவி’’ (Pacemaker), இதய உதறல் நீக்கி (Defibrillator) கருவி இவை இரண்டையும் தேவைக்கு ஏற்ப உடலிலேயே பொருத்தி இதயத்தின் இயக்கத்தைச் சீராக்கிவிடுவர். சீர்மைக் கருவி இதயத் துடிப்பைச் சீராக்கும். உதறல் நீக்கிகள், ஆபத்து ஏற்படுத்தும் இதயச் செயல்பாடு குறைபாட்டைச் சீராக்கும்.
வடிகுழாய் மருத்துவம்: (Catheterisation Procedure)
ஓரளவு குறைபாடு இருப்பின் இம் மருத்துவ முறை பயனை தரும். இம் முறையில் காலில் உள்ள இரத்தக்குழாய் வழியே ஒரு வடிகுழாயை இதயம் வரை செலுத்தி, சிறு கருவிகளை அதன் வழியே செலுத்தி, குறைபாட்டைச் சரி செய்வர். இதன் மூலம் அறுவை மருத்துவத்தைத் தவிர்க்கலாம்.
இதய அறுவை மருத்துவம்:(Open Heart Surgery)
பெரிய குறைபாடுகளை இம் மருத்துவ முறையின் மூலமே சரியாக்க முடியும். இதயத்தின் ஓட்டைகளைச் சீராக்குதல், அடைப்பிதழ்களைச் சீராக்குதல், இரத்தக் குழாய்களை விரிவாக்குதல் போன்றவை இதன் மூலம் சரியாக்கப்படுகிறது.
மாற்று இதயம்: சில குழந்தைகளுக்கு பல குறைபாடுகள் ஒன்றாக இணைந்து பெரும் கோளாறாக அமைந்துவிடும். இக்குறைபாட்டை மேற்சொன்ன எந்த மருத்துவ முறையாலும் சீராக்க முடியாது. அது சமயங்களில் மூளைச்சாவு அடைந்தவர்களின் (குழந்தைகளின்) இதயத்தைப் பொருத்தி அதன் மூலம் வாழ்வளிக்கலாம்.
பிறவி இதயக் கோளாறு உடைய குழந்தைகளில் பெரும்பாலும் மேற்சொன்ன ஏதாவதொரு மருத்துவ முறை மூலம் முழுமையாகச் சரியாக்கி, நீண்ட நாள் வாழ வைக்க முடியும். “விதி’’ என்று உட்கார்ந்திருந்தால், குழந்தையின் இறப்பைத் தவிர்க்க முடியாது.
அடைப்பிதழ் நோய்கள்: (Valvular Diseases) (பிறவிக் கோளாறால் ஏற்படுபவை)
இதயத்தின் வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடைப்பட்ட மூவிதழ் அடைப்பிதழிலும், இடதுபக்கம் ஈரிதழ் அடைப்பிதழிலும், நுரையீரல் தமனியில், மகாதமனியில் உள்ள அடைப்பிதழ்களில் ஏற்படும் நோய்களையே “அடைப்பிதழ் நோய்கள்’’ என்கிறோம்.
காரணிகள்: 1. பிறவிக் கோளாறு, 2. நோய் தொற்று, 3. நெஞ்சில் அடிபடுதல், 4. மூப்பு.
பிறவிக்கோளாறு: இதயத்தின் நான்கு அடைப்பிதழ்களும் சரியான முறையில் அமைந்திருப்பின், இரத்தம் சரியாக உடலின் பல பாகங்களுக்கும் சீரான முறையில் செலுத்தப்படும். ஆனால், சில குழந்தைகள் பிறக்கும்பொழுதே அடைப்பிதழ்களில் குறைபாட்டோடு பிறந்துவிடும். இது ஒரு அடைப்பிதழிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடைப்பிதழ் கோளாறாகவும் அமையக் கூடும். இந்தக் குறைபாட்டின் காரணமாக அடைப்பிதழ்களில் சரியாக மூடாத நிலை ஏற்படும். அந்த வேளைகளில் மேலறை சுருங்கினாலும், சுருங்காவிட்டாலும் கீழறைக்கு இரத்தம் போய்க் கொண்டே இருக்கும். இதனால் கெட்ட இரத்தமும், நல்ல இரத்தமும் கலக்கும் சூழ்நிலை ஏற்படும். அது மட்டுமின்றி கீழறையிலிருக்கும் இரத்தம் கீழறை சுருங்கும்பொழுது மீண்டும் மேலறைக்கே செல்லும் நிலை ஏற்படும். இதனால் உடலுக்குத் தேவையான இரத்தத்தைச் செலுத்த அதிகமாகச் சுருங்கி விரியும் நிலை ஏற்படும். இதயம் பருத்துவிடும் (Dilated Cardio Myopathy), இதய செயலிழப்பு (Heart Failure), மகா தமனியில் வீக்கம் (Aortic Aneurysms)போன்ற இதய நோய்கள் ஏற்படக்கூடும்.
அறிகுறிகள்: பிறவிக்கோளாறு இதய நோய்கள் பலருக்கு இடைப் பருவ வயதுவரைகூட உணர முடியாமல் போகலாம். அறிகுறிகள் தெரியத் துவங்கும் பொழுதே நோய் பற்றி அவர்களால் அறிய முடியும். நெஞ்சுவலி, தலைசுற்றல், மயக்கம், களைப்பு, மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு மாறுபாடு (Heart Murmers), படபடப்பு போன்றவை ஏற்படும். உடல் உழைப்பு அதிகமாகும்பொழுது மேற்சொன்னஅறிகுறிகள் தீவிரமடையும். இதுபோன்ற அறிகுறிகள் லேசாகத் தெரிந்தாலே இதய நோய் மருத்துவர்கள் (Cardiologist) எளிதாக தெரிந்துகொள்வர். பின் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், இதய மின்னலைப் பதிவு (ஈ.சி.ஜி), ஒலி அலைப் பதிவு (Ultra Sound), வடிகுழாய் ஆய்வு(Catheterization) போன்ற ஆய்வுகளின் மூலம் கோளாறைத் துல்லியமாக மருத்துவர் அறிந்துகொள்வார். கோளாறின் தன்மைக்கேற்ப மருத்துவர், மருத்துவ முறையை முடிவு செய்வார்.
மருத்துவம்: லேசான குறைபாடுகளை மருத்துவம் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். மகாதமனியில் அடைப்பிதழ் கோளாறை வடிகுழாய் வழியே ஒரு பலூனைச் செலுத்தி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைநிறுத்தி, பலூனைப் பெரிதாக்கி தமனியை விரிவடையச் செய்வர். இதன் மூலம் இரத்தம் தடங்கலின்றிச் செல்லும். (Baloon Valvuloplasty) இது எதன் மூலமும் பலன் கிடைக்காதெனில் அறுவை மருத்துவம் செய்து அடைப்பிதழ்களைச் சரியாக்க முயல்வர் அல்லது புதிய அடைப்பிதழ்களை திறந்த இதய அறுவை மருத்துவம் மூலம் செய்து நோயையும், குறைபாட்டையும் சீராக்குவர். இம்மருத்துவ முறையால் ஏராளமானோர் பலனடைந்து, வாழ்வு நீட்டிப்பை பெற்றுள்ளனர்.
அடைப்பிதழ் நோய்கள்: நோய்க் தொற்றால் ஏற்படுபவை:
பிறக்கும்பொழுதும், பின்பும் சரியான முறையில் அடைப்பிதழ்கள் அமைந்திருந்தாலும், பிற்காலத்தில் நோய்த்தொற்றால் அடைப்பிதழ்களில் நோய் தாக்கி, அதன் இயங்கும் தன்மையில் குறைபாடு ஏற்படலாம். வாதநோய் (Rheumatic disease) தாக்குதலில் இதயம் பாதிக்கப்படலாம். “ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’’ (Streptococcus) நோய்த் தொற்றால் தொண்டை, பற்கள், ஈறுகள் பாதிக்கப்படலாம். அந்தப் பகுதியிலிருந்து நோய்க் கிருமிகள், இரத்தத்தின் மூலம் இதயத்திற்குள் ஊடுருவி அடைப்பிதழ்களைத் தாக்கும். அடைப்பிதழ்களில் இயக்கக் குறைபாடு ஏற்பட இந்நோய்த் தொற்று ஒரு முக்கிய காரணியாகும். காரணங்கள் எதுவாகிலும் அறிகுறிகளும், மருத்துவமும் ஒரே வகைதான்.
அடிபடுதல் அடைப்பிதழ் நோய்கள்: (Traumatic Valvular Disease) மார்பு பகுதியில் ஏற்படும் ஊமைக் காயங்கள் (Blunt Injury) இதயத்தைத் தாக்கி அதனால் அடைப்பிதழ்கள் பாதிக்கப்படலாம். ஆழமான வெட்டுக் காயங்களும் இதய அடைப்பிதழ்களைப் பாதிக்கலாம். இது மிகவும் ஆபத்தானது. உடனடியாக மருத்துவம் செய்யாவிட்டால் மரணம் நிகழவே வாய்ப்புகள் அதிகம்.
முதுமை: முதுமையின் காரணமாகவும் அடைப்பிதழ் செயல்பாடுகள் குறையலாம். அறிகுறிகளும், மருத்துவமும் ஒரே வகைதான்!
- உண்மை இதழ், 16-31.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக