காது, மூக்கு, தொண்டை மருத்துவம்:
காது:
காதில் ஏற்பட்டுள்ள மருத்துவ மாற்றங்களை அறியும் முன், காதின் அமைப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும். காது, புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காது மடல், செவிக்குழாய், செவிப்பறை மூன்றும் புறச்செவியில் அமைந்துள்ளன. நடுச்செவியில் மிகவும் நுண்ணிய சுத்தி எலும்பு, பட்டை எலும்பு, லாட எலும்பு ஆகியவை அமைந்துள்ளன. சுத்தி எலும்பு (Malleus) செவிப்பறையை ஒட்டியிருக்கும். அதை ஒட்டி பட்டை எலும்பும் (Incus), அதை ஒட்டி லாட எலும்பும் (stapes) அமைந்திருக்கும். தொண்டையிலிருந்து காதோடு ஓர் இணைப்புக் குழாய் இருக்கும். ‘ஈஸ்டேஷியன்’ குழாய் என்று அழைக்கப்படும் இக்குழாய், குரல் எழுப்பும்போது வாய் வழியே வரும் காற்றை உள்வாங்கி, காதுக்குள் செலுத்தும். இதன் மூலம் ஒலி சமநிலைப் படுத்தப்படும். உள்செவியில் அரைவட்டக் குல்லியங்கள்(semi circular ducts) மற்றும் நத்தைகூடு எலும்பும்(cochlea) அமைந்திருக்கும். இந்தப் பகுதியிலிருந்து காது நரம்புகள் துவங்கி (Auditory Nerve), மூளைக்குச் செல்லும். காது மடல் மூலம் ஒலி, செவிக்குழாய் வழியே செவிப்பறையில் மோதும். உடன் செவிப் பறை அதிரும். அதை ஒட்டியுள்ள எலும்புகள் மூலம், நடுச்செவியில் ஒலி அதிர்வை உண்டாக்கும். அங்கிருந்து நத்தை ஓட்டு எலும்புமூலம் காது நரம்பின் மூலம், மூளைக்குச் செல்லும். உடனே நம்மால் கேட்க முடிகிறது. இவை அனைத்தும் ஒரு நொடியிலும், பல மடங்கு குறைவான நேரத்திலே நிகழ்வதாகும்.
காது கேளாமை:
காது கேளாமை அதன் தன்மைகேற்ப இருவகைப்படும்.
பிறவிக் குறைபாடு: பிற்காலத்தில் ஏற்படும் குறைபாடு என அது ஏற்படும் காலங்களைப் பொருத்து வகைப்படுத்தலாம். நோய்க் கூறியல்படி “ஒலி கடத்துவதில் குறைபாடு’’, “நரம்பியல் குறைபாடு’’ என மருத்துவர்கள் இருவகையாக வகைப்படுத்துவர் (Conductive defect and Neural Defect). பிறந்த குழந்தைக்கு, காது கேளாமை. அதன் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.
காதுகளைப் பாதுகாப்பது எப்படி?
எக்காரணம் கொண்டும் காதில், எண்ணெய் போன்ற பொருள்களை விடக்கூடாது. காதில் மெழுகு சேர்வது பாதுகாப்பானது. காதில் வரும் நோய் தொற்று, தூசு போன்றவை இம்மெழுகில் ஒட்டிக் கொள்ளும். அதனால் காதில் நோய் தொற்று தடுக்கப்படும். குச்சி, பின்கள் மூலம் கட்டாயம் இதை எடுக்க முயலக் கூடாது. திடீரென செவிப் பறையில் குத்தி, செவிப்பறை கிழிந்து விடும் ஆபத்து ஏற்பட்டுவிடும். காதில் வலி, சீழ் வடிதல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரிடம்தான் காட்ட வேண்டுமே ஒழிய, நாமாக எந்தவொரு கை வைத்தியமும் செய்து கொள்ளக் கூடாது. சில நேரங்களில் மெழுகு அதிக அளவில் சேர்ந்து, காதை அடைத்து விடும். அதனால் காதின் கேட்கும் திறன் குறையும். அதுபோன்ற சமயங்களில் காது மருத்துவரை அணுகினால், அதிகப்படியான மெழுகை வெளியே எடுத்து சரிசெய்து விடுவார். சளி பிடிக்கும்பொழுது, காது அடைத்துக் கொள்ளும். ஈஸ்டேஷியன் குழாயில் சளி சென்று விடுவதால் இது நிகழ்கிறது. பல சமயங்களில் பூஞ்சை தொற்று (Fungal Infection) காதில் ஏற்படும். காதில் நீர் செல்வதால் இது அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, காதில் நீர் போகும் நிலையில், அதை வெளியேற்றுவது நல்லது. காதில் எந்தத் தொல்லை ஏற்பட்டாலும், காது மருத்துவரிடம் செல்ல வேண்டுமே தவிர, நாமாக மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்துதல், கை வைத்தியம் செய்தல் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். சிறு தொல்லைகள் ஏற்படும் பொழுதே மருத்துவ ஆலோசனை செய்து கொண்டால் செவிட்டுத் தன்மை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நாம் குழந்தையிடம் பேசுவதை காது கேளாமை நிலையிருப்பின், பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால் பேச்சு முழுமையாக பாதிக்கப்படும். குழந்தையிடம் “அம்மா’’, “அப்பா’’ என்று நாம் சொல்லச் சொல்ல, அது திருப்பி சொல்லப் பழகும். அப்படித்தான் குழந்தையிடம், பேச்சுப் பயிற்சி வளரும். வளர வளர குழந்தை நாம் பேசுவதைக் கேட்டு, சொற்களை அறிந்து பேசத் தொடங்கும். காது கேட்காத நிலையில் இந்தப் பயிற்சி முழுமையாகத் தடைப்பட்டு, ஊமையாக மாறும் ஆபத்து ஏற்பட்டுவிடும். அதனால்தான் காது கேட்காத குழந்தைகள், ஊமைகளாகவும் மாறி விடுகின்றனர். நாம் ஒலி எழுப்பும் திசையில் குழந்தை திரும்புகிறதா என்று ஓர் எளிய சோதனையிலேயே இதை அறிய முடியும். உடனே காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் கடத்தல் குறைபாடா, நரம்பியல் குறைபாடா என ஆய்ந்து அதற்கான மருத்துவம் செய்வார். பிறந்த பொழுது காது நன்றாகக் கேட்டு, பிற்பாடு செவிட்டுத்தன்மை உண்டாக பல காரணங்கள் உண்டு. முதுமை, அடிபடுதல், திடீரென ஏற்படும் பெரும் சத்தம், நோய்த் தொற்று, மூளைக் காய்ச்சல், அம்மை நோய், சிலவகை மருந்துகள், நீரிழிவு நோய் போன்றவற்றால் காது செவிடாகிவிடும் நிலை ஏற்படும். சில நோயாளிகளுக்கு ஒலி கடத்தல் குறைபாடும், நரம்புக் குறைபாடு இரண்டும் இணைந்த குறைபாடாக சிலருக்கு ஏற்படக் கூடும். எந்த வகைக் குறைபாடும், மருத்துவர் மூலமே அறிய முடியும். ஒலி கடத்தல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என மருத்துவர் கண்டறிவார். பிறகு அதற்கான மருத்துவம் செய்வார். செவிப்பறையில் துளையிருந்தால் சரி செய்து கேட்கும் திறனை ஏற்படுத்துவார்.
நடுச்செவியில் உள்ள நுண்ணெலும்புகளான சுத்தி, பட்டை, லாட எலும்புகளில் குறைபாடு இருந்தால், குறைபாடுள்ள எலும்பை நீக்கி விட்டு, செயற்கைக் கருவியைப் பொருத்துவார். இதனால் ஒலி அதிர்வு, உட்செவிக்குப் பரவி காது கேட்க வைக்க முடியும். ஒலி கடத்தல் குறைபாடு முழுமையாகச் சரியாக்கி, செவிட்டுத் தன்மையை முற்றாக நீக்க முடியும். நரம்பியல் குறைபாடு உள்ளதா என்பதை சில எளிய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இந்தக் குறைபாடு உடையவர்களைச் சரியாக்கவே முடியாது என்கிற நிலை இருந்தது. ஆனால், இதற்கும் இன்று மருத்துவம் வந்துவிட்டது. நரம்புகள் நத்தைக் கூட்டு எலும்பில் துவங்குவதால், அந்த நரம்புகளில் குறைபாடு உண்டானால் காது கேளாமை நிலை ஏற்படும். தற்சமயம் நத்தைக் கூட்டு எலும்பில், செயற்கைக் கருவியை (Cochlear Implant) பொருத்தி, அதன் மூலம் காது கேட்க வைக்க முடியும். காது கேட்கும் நிலைமை குழந்தைகளுக்கு உண்டாக்கிய பின் ‘பேச்சுப் பயிற்சியாளர்’ மூலம் பேச்சுப் பயிற்சி கொடுக்க வேண்டும். அதைச் செய்வதன்மூலம் ‘செவிட்டு ஊமை’ தன்மையை முற்றாக நீக்க முடியும்.
(தொடரும்)
- உண்மை இதழ், 16-31.1.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக