மருத்துவம் :
- மரு.இரா.கவுதமன்
தொண்டை:
சிலருக்கு “குரல் மாற்றம்’’ ஏற்படலாம். பெரும்பாலும் “தைராக்சின்’’ (Thyroxine) சுரப்பு, தைராய்டு சுரப்பியில் குறைவு ஏற்படின் இந்த நிலை ஏற்படும். சில நேரங்களில் குரல் நாண்களில் ஏற்படும் அழற்சிகூட குரல் மாறுபாட்டை ஏற்படுத்தும். ஆனால், இது தற்காலிகமானது. சில சமயம் குரல் மாற்றம் மெதுவாகத் துவங்கி, கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி பேச்சே நின்று விடும் நிலைகூட ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தானது. பெரும்பாலும் குரல் நாண்கள், குரல் வளை (Larynx), குரல் வளை மூடி (Epiglottis) இவற்றில் ஏற்படும் அழற்சிகள் மருந்துகள் உட்கொள்வதால் ஓரிரு நாள்களில் சரியாகிவிடும். ஆனால், தொடர்ச்சியான தொண்டை கரகரப்பு, பேச்சில் ஒலி மாற்றம், தொண்டை வலி, நெறிகட்டுதல் போன்றவை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். “பாலிப்’’ (Polyp) எனும் சாதாரண கட்டிகள் குரல்வளையில் ஏற்பட்டால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். சில நேரங்களில் தொண்டையில் ஏற்படும் புற்று நோயால்கூட இந்நிலை ஏற்படலாம். இவற்றை முன்பெல்லாம் பெரிய அறுவை மருத்துவம் செய்தே சரியாக்கக் கூடிய சூழல் இருந்தது. இது ஓர் ஆபத்தான அறுவை மருத்துவம். புற்று நோய்க்காக இம்மருத்துவம் செய்யப்பட்டாலும், நோய் மற்ற பகுதிகளில் பரவி இருக்கும் நிலையும் கூட சில நேரங்களில் ஏற்பட்டிருக்கும். அதனால் புற்று நோய் மீண்டும் வரும் நிலை இருந்தது. இன்றைக்கு உள்நோக்கி அறுவை மருத்துவம் (Endoscopic Surgery) இந்த ஆபத்துகளைப் பெருமளவு குறைத்துவிட்டது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், புற்றுநோய்க் கட்டிகளையும், சாதாரணக் கட்டிகளையும் (Polyps) முழுமையாக இம்மருத்துவத்தின் மூலம் அகற்றி விடுகிறார்கள். ஆபத்தற்ற, எளிமையான இம்மருத்துவம் மிகவும் பயனுள்ள மருத்துவமாக இன்று நிலை பெற்றுள்ளது. இந்த முறையில் மருத்துவம் செய்து கொண்டவர்கள் ஓரிரு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும். ‘விதிவசத்தால்’ வந்ததாக நம்பப்படும் தொண்டைப் புற்றுநோய் உள்நோக்கி அறுவை மருத்துவத்தால் சரிசெய்யப்படுவது மருத்துவ அறிவியலின் அரிய பண்பாகும்.
தைராய்டு சுரப்பு கோளாறுகள்:
இன்றைய மருத்துவ உலகில் அதிகம் பேசும் பொருளாக உள்ளது தைராய்டு சுரப்பு. நம் உடல் வளர்ச்சிக்கும், உடலில் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும் காரணமானவை ‘நாளமில்லா சுரப்பிகள்’ (Ductless Glands) எனப்படும் சுரப்பிகளே ஆகும். இச்சுரப்பிகளில் உள்ள அதிக அளவு இரத்தக் குழாய்களில், சுரப்பிகளில் சுரக்கும் “சுரப்பு’’கள் நேரடியாக கலக்கும். நம் உடலில் பிட்யூட்டரி சுரப்பி (Pitutary Gland) , தைராய்டு சுரப்பி (Thyroid Gland), பாரா தைராய்டு (Para Thyroid Gland), தைமஸ் (Thymus), அட்ரினல் சுரப்பி (Adrenal Gland), கணையத்தின் லாங்கர்ஹான் திட்டுகள் (Laugerhan Isles of Pancreas), அண்டம் (Overies), விந்தகம் (Testes) என அத்தனையும் இணைந்து “நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கும், சுரப்புகளும் இணைந்துதான் நம் உடலின் இயக்கம், சீரான வளர்ச்சிக்கு காரணிகளாகின்றன. இதில் அதிகம் பேசும் பொருளாக இருப்பது தைராய்டு சுரப்பிதான். இன்றைக்கு உலகில் தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்; மிக அதிகம். வருடத்திற்கு 10 மில்லியன் மக்கள் இந்நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
தைராய்டு சுரப்பி கழுத்தின் மேல்புறம், குரல்வளைக்கு கீழே, தைராய்டு குறுத்தெலும்பின் கீழ்புறம், மூச்சுக் குழாயின் (Trachea) இருபுறமும் அமைந்துள்ளது. (Islhmus). தைராய்டு சுரப்பு “தைராக்சின்’’ என்ற சுரப்பை சுரக்கச் செய்யும். இச்சுரப்பு நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம், உடல் வளர்ச்சி, உடல் வெப்பநிலை, இதயத்தை சீராக இயங்க வைத்தல், உடல் இயக்கத்தை சீராக வைத்தல் ஆகிய இன்றியமையாத பணிகளை கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சுரப்பியில் உள்ள அதிக அளவு இரத்தக் குழாய்கள் மூலம் தைராக்சின் உறிஞ்சப்பட்டு உடல் முழுதும் பரவி, உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. தைராக்சின் சுரப்பிக்கு “அயோடின்’’ (Iodine) மிகவும் தேவை. இது சுரப்பிற்கு வரும் இரத்தக் குழாய்களிலிருந்து, தைராய்டு சுரப்பி உறிஞ்சிக் கொண்டு, தைராக்சினை உற்பத்தி செய்யும். அயோடின் உறிஞ்சப்பட்டதும், “டிரைஜயடா தைரேனைன் (T3), தைரோசின் (T4) அமினோ அமிலங்களுடன் இணைந்து தைராக்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் தைராய்டு ஊக்குவிப்பு சுரப்பு வெளிப்படும். (Tyroid Stimulating Hormone - TSH). தைராய்டு சுரப்பியில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் தைராய்டு ஊக்குவிப்பு சுரப்பு அதை சமன் செய்யத் துவங்கும்.
தைராக்சின் குறைபாடு: தைராய்டு நோய்களில் அதிகளவு பாதிப்பு, தைராய்டு குறைபாட்டினாலே ஏற்படுகிறது.
ஆரம்ப அறிகுறிகள்: தசைத் தளர்ச்சி, களைப்பு, குளிர் தாங்க முடியாமை, உளச்சோர்வு, தசை பிடிப்பு, மூட்டுகளில் வலி, முன் கழுத்துக் கழலை, வெளிரிய தன்மை, வியர்வையின்மை, தோல் உளர்தல் (Dry Skin), எடை ஏற்றம், உடலில் நீர் கட்டுதல் போன்றவை ஏற்படும்.
நாள்பட்ட அறிகுறிகள்: நினைவாற்றல் குறைதல், மந்தமான மூளை செயல்பாடு, முடியுதிர்தல், இரத்தசோகை, குரல் கடினமாதல் (கரகரத்து போதல், பெண்களுக்கு ஆண் தன்மையான குரல் போன்றவை, விழுங்குவதில் சிரமம், அதிக உறக்கம், ஆண்களுக்கு மார்பு பெரிதாகல் (Gynoeco Mastia),குறைவான பாலுணர்வு, மந்தமான சிறுநீரக செயல்பாடு, இதயத் துடிப்பு குறைவு, இதய சுருங்கு திறனில் பாதிப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைபாடு போன்றவை ஏற்படும். உடலில், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். நோயாளி ஒருவகை மந்தநிலையில், எதிலும் ஆர்வமின்றி காணப்படுவார்.
மருத்துவம்: பெரும்பாலும் (99%) மருந்துகள் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம். மிகப் பெரிதாக வளர்ந்துவிட்ட முன் கழுத்துக் கழலை (Goitre) யைதான் அறுவை மருத்துவத்தின் மூலம்தான் சரி செய்வர். மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் உட்கொள்ள வேண்டும். மருத்துவர் கூறியுள்ள அளவுக்கு மீறியோ, குறைவாகவோ கட்டாயம் எடுக்கக் கூடாது. அது பின் விளைவுகளை உண்டாக்கும்.
தைராக்சின் அதிகமாதல்: தேவைக்கு அதிகமாக சிலருக்கு தைராக்சின் சுரக்கக் கூடும். இதனால் பதட்டம், அதிக வியர்வை, படபடப்பு, கைகள் நடுக்கம் (Tremors), தூக்கமின்மை, அடிக்கடி மலம் கழித்தல், எடை குறைதல், சரியாக மாதவிடாய் ஆகாமை போன்றவை ஏற்படும்.
காரணங்கள்: “கிரேவ்ஸ் நோய்’’ பொதுவாக தைராக்ஸினை அதிகம் சுரக்கச் செய்யும். தைராய்டு சுரப்பில் ஏற்படும் கட்டிகள், முடிச்சுகள், நோய்த் தொற்று, சில வகை மருந்துகள் தைராக்சின் சுரப்பை அதிகரிக்கும். தைராய்டு புற்றுநோயின் காரணமாகவும் தைராக்சின் அதிக அளவு சுரக்கலாம்.
மருத்துவம்: பல நேரங்களில் மருந்துகள் மூலமும், சில நேரங்களில் அறுவை மருத்துவம் மூலமும் குணமாக்கலாம். தைராய்டு கட்டிகளை அறுவை மருத்துவம் மூலம் சரி செய்யலாம்.
(தொடரும்)
-உண்மை இதழ், 16-29.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக