மரு.இரா.கவுதமன்
மருத்துவம்: பொதுவாக இந்நோய்க்கான மருத்துவம், அதன் தன்மைக்கேற்பவே மருத்துவர் முடிவு செய்வார். நெஞ்சு வலி எதனால் வருகிறது என முதலில் முடிவு செய்ய வேண்டும். “வாயுத் தொல்லை’’ என குறிப்பிடும் இரைப்பையில் (stஷீனீணீநீலீ) ஏற்படும் அழற்சியால் (stomach) கூட நெஞ்செரிச்சல், நெஞ்சு வலி வரலாம்.
ஆனால் நெஞ்சுவலி வந்தால், மருந்துக் கடைக்குச் சென்று நாமே மருந்து வாங்கி உண்பது ஒரு தவறான செயல். எதனால் வலி வருகிறது என மருத்துவ ஆலோசனை பெறுவது ஒரு கட்டாயத் தேவை. பல நேரங்களில் மார்பு வலியை, இரைப்பை அழற்சி என ஏமாறும் நிலை ஏற்பட்டு அதனால் உயிரிழக்கும் நிலை ஏற்படக்கூடும். அதனால்தான் நெஞ்சு வலி என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருத்துவம், நோயின் தீவிரத் தன்மையை முன்னிட்டு மாறுபடும்.
நிலையான மார்பு வலிக்கு பெரும்பாலும் மருந்துகள் உட்கொள்வதால் நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் நிலையற்ற மார்பு வலி இருப்பின், அதில் ஆபத்து அதிகம் என்பதால் வேறு மருத்துவம் தேவைப்படலாம். எந்த வகை மருத்துவம் தேவை என்பதை, பரிசோதனைகள் செய்து மருத்துவர்தான் முடிவு செய்வார். நோய்க்கான காரணங்களான, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் கண்டறிந்து, அதற்கான மருத்துவம், மார்பு வலி மருந்துகளுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை நோயின் தீவிரத் தன்மையை அதிகரிக்கும். பொதுவாக மருந்துகளால் சீராக்க முடியாத நிலையில் நிலையற்ற மார்பு வலிக்கும், மாரடைப்பிற்கும் மருத்துவ முறைகள் ஒரே தன்மையுடையவைதான். அவற்றைக் காண்போம்.
குருதிக் குழாய் சீரமைப்பு (Angioplasty) : குருதிக் குழாய் அடைப்பைச் சீராக்கும் இம்மருத்துவ முறை, மாரடைப்பு ஏற்பட்ட உடன் செய்யப்பட்டால், இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம், சீராக இதயத்திற்குச் செலுத்தப்படும் நிலை ஏற்பட்டு, உயிராபத்து நீங்கும். விரைவான மருத்துவம், நல்ல பயனைத் தரும். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி கால்களில் உள்ள தமனி வழியே ஒரு வடி குழாயைச் செலுத்தி, அதை இதயத்தமனியில் அடைப்பு உள்ள பகுதி வரை கொண்டு சென்று, அங்கு வடிகுழாயோடு இணைந்துள்ள “பலூனை’’ ஊதி, அடைப்பை அழுத்தச் செய்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்குவர். “பலூன் சீரமைப்பு’’ (Baloon Angioplasty) என்று இம்முறை அழைக்கப்படும். ஆனால் பெரும்பாலும் “உறைகுழாய்’’ (stent) என்னும் பொருளை அடைப்பு ஏற்படும் இடத்தில் நிலைநிறுத்தி, இரத்த ஓட்டம் தடைபடாமல் இதயத்திற்குச் செல்ல வைப்பர். இதன் மூலம் மரண ஆபத்து விலகும். இந்த உறை குழாய் உலோகத்தாலோ (metal) நெகிழிப் பொருளாகவோ (Biodegradable) இருக்கும். இப்பொழுது மருந்து பூசிய உறை குழாய்கள் (medicated stents) தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. நிலையற்ற மார்பு வலிக்கும், மாரடைப்பு ஏற்பட்ட உடன் செய்யப்படும் மருத்துவத்தில், இந்த உறை குழாய் மருத்துவம் சிறந்த பலனை தரும். பெரும்பாலும், இதயத் தமனிகளில், இரண்டு தமனிகள் (two vessel disease) பாதிக்கப்பட்டிருந்தால் உறை குழாய் மருத்துவம் நல்ல பலனைத் தரும்.
இதயத் தமனி மாற்று வழி அறுவை மருத்துவம் (Coronary Artery Byepass Grafting - CABG) :
மாரடைப்பு நோய்க்கு மிகச் சிறந்த மருத்துவ முறையாக, இம்முறை இன்று கையாளப்படுகிறது. ரெனே பேஃவரோலா என்னும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை இது. “கால் பெருஞ்சிரை’’ (Long Dephanous Vein) யை எடுத்து, பாதிக்கப்பட்ட இதயத் தமனிகளில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் புறமும் கீழ்ப்புறமும், பொருத்தி இதயத்திற்கு இரத்தம் தடைபடாமல் கிடைக்கும் மருத்துவ முறை இது. சில நேரங்களில் “உள்மார்பு தமனி’’ (Long Dephanous Vein) யையும், கால் பெரும் சிரைக்குப் பதில் பயன்படுத்துவர்.
இன்றைக்கு 99% வெற்றிகரமாகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் இது. இதைச் செய்து கொண்டவர்கள் ஒரு சில வாரங்களிலே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். எந்த வித தயக்கமுமின்றி உடல் உழைப்புடன் கூடிய பணிகளையும் செய்ய முடியும். பல ஆண்டுகள் எந்தத் தொல்லையுமின்றி உயிர் வாழ முடியும். இது கண்டுபிடித்து, செய்யத் துவங்கிய கால கட்டத்தில் இதயத்தை சுமார் 40 நிமிடங்கள் செயல் இழக்கச் செய்து, அறுவை மருத்துவம் செய்வர். பின் அறுவை மருத்துவம் முடிந்ததும், மின்சார தூண்டுதலால் மெல்ல இயங்க வைத்து (20 முறை), மருத்துவம் (Internal Thoracic Artery) செய்கின்றனர். இதயத்தை நிறுத்தாமல், மருத்துவம் முடிந்ததும், மருந்துகள் மூலம் இதயத்தை மீண்டும் இயல்பாக இயங்க வைப்பர்.
நுண்துளை இதயத் தமனி மாற்று வழி அறுவை மருத்துவம் (Minimally invasive coronary artery surgery ) :
மார்புக் காம்பின் கீழ் 3 அங்குலம் திறந்து, விலா எலும்புகளின் இடையே இதயத்தை அடைந்து, இதயத் தமனிகளைச் சீராக்கும் மருத்துவ முறை இது. இதில் இரத்தப் போக்கு இல்லை. அதனால் இரத்தம் கொடுக்க வேண்டியதில்லை. காயம் சிறிதானதால் எளிதில் ஆறி விடும். அறுவை மருத்துவம் முடிந்து, ஓரிரு நாள்களிலே வீடு திரும்பலாம்.
* மேற்சொன்ன மருத்துவ முறைகள் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தை முழுமையாக தவிர்த்துவிடும்.
* சரியான நேரத்தில், எடுக்கப்படும் சரியான மருத்துவமுறை நம் வாழ்நாளை நீடிக்கச் செய்யும்.
* நெஞ்சு வலி வந்தால் அலட்சியமாக எண்ணாமல், மருத்துவ ஆலோசனை பெறுதல் சரியான வழிமுறை.
* மாரடைப்பிற்கும், மார்பு வலிக்கும் காரணமான நோய்களை (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்) கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை முழுமையாக நிறுத்த வேண்டும்.
* பரப்பரப்பான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
* சோம்பலான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளல் வேண்டும்.
* நல்ல உணவு, சீரான உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை, மருந்துகள் மூலம் மாரடைப்பு என்னும் கொடிய நோயிலிருந்து தப்பித்து நீண்ட வாழ்வு வாழ முடியும்.
(தொடரும்)
- உண்மை இதழ் செப்டம்பர் 16-31.9.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக