செவ்வாய், 20 மார்ச், 2018

இரவு உணவை 8 மணிக்குள் முடியுங்கள்!

நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத் தியபடி Early To Bed Early To Rise என்பதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆனால், இன்றைய நமது அன்றாட செயல்கள் எல்லாம்  தலை கீழாக மாறிவிட்டன.

அவற்றில் ஒன்றுதான் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கமும். இதனால், வயிற்றை நிரப்புகிறோம் என்பதை தவிர, வேற எந்த பயனும் நமக்கு கிடைப்பது இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

இரவு உணவை இதுபோல் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சினை களும் உண்டாகிறது.

இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்து விட வேண்டும். அதுதான் சரியான நேரம். அதற்கு மேல் தாமதமாகும் போது வயிற்றில் அமிலச்சுரப்பு உண்டாகும். நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட உணவு எதுக்கலிக்கும். பலமணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கியும் விடும்.

மேலும், இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தால் இயல்பைவிட, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். எனவே, உடலில் கலோரி அளவும் அதிகரிக்கும். தூங்கும் நேரம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். இரவில் நேரங்கழித்து சாப்பிடுவதால், உடல் எடை யைக் குறைக்க முடியாது.

இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற் றங்கள் குறையும். ரத்தத்தில் டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதி கரிக்கும். காலை, மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும், உரிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால்தான், நமக்கு அந்த உணவால் பயன் கிடைக்கும்.

அதனால் எந்த வகை உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து, அதனை பின்பற்றி வந்தால் உணவு வேளை மற்றும் உறங்கும் நேரம் சரியான சுழற்சியில் நடைபெறும். இரவில், சீக்கிரமாக சாப்பிடுவதால் செரிமான குறைபாடு, உடல் எடை அதிகரித்தல் போன்ற எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.  இரவு வேளையில் நேரங்கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள். அவ்வாறு செய் வதால் செரிமானமாக போதுமான நேரம் கிடைக்காது.

மேலும், செரிமானம் மெது வாகவும் நடைபெறும். இதனால், குடலுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல், இரவு உணவு தாமதம் ஆகும் போது, காலை உணவு தவிர்க்கப்படுகிறது. தலைவலி வரும். உடலில் கொழுப்பு தங்கி விடுகிறது. ஆகவே, இரவு சாப்பாட்டை எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவும் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

உடலில் மண்ணீரலுக்கு என்ன வேலை? 

இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் ராதா கிருஷ்ணன். மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட பணிகள் உண்டு. அந்த வேலைகள் தடையின்றி நடந்தால்தான் உடலை உயிருடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் மண்ணீரலும் தன் பங்குக்கு சிறப்பான பணிகளைச் செய்கிறது.

மண்ணீரல் அடிவயிற்றின் இடது மேல் திசையில் அமைந்துள்ள உறுப்பாகும். சுமார் 7 சென்டிமீட்டர் வரை  இருக்கும். பிறந்து 5 வயது வரை ரத்த உற்பத்தி பணியை தீவிரமாக பார்க்கிறது. இதனால் குழந்தைகளை வயிற்றில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் இயங்குதல் தன்மையை ஊக்குவிக் கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது.

ரத்தத்தின் மூலமாக வருகிற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.கல்லீரல், இரைப்பை பித்தப்பை, சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் மண்ணீரல் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதி அடிபட்டாலும் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும். மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி யாக அதனை அகற்றிவிடுவார்கள்.

இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வருவதில்லை. மண்ணீரல் பார்த்த பணியை கல்லீரல் பார்க்கத் தொடங்கிவிடும். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் எடை அதிகரிக்கும், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாகும், வாந்தி ஏற்படும். கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள், கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம் போன்ற உணவுகள் மண்ணீரலுக்கேற்ற உணவுகள் ஆகும் என்கிறார்.

- விடுதலை நாளேடு, 19.3.18

வியாழன், 22 பிப்ரவரி, 2018

கருவுற்ற பெண்களுக்குத் தேவை





கர்ப்பிணிப்பெண்கள் குழந்தை உண் டாகிய காலம் முதல் கொழுப்பு நீக்கிய இறைச்சி, மீன், கோழி மற்றும் முட்டை போன்றவற்றை நாளொன்றுக்கும் 450 மிலி கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் சிசுவின் மூளைத்திறன் அதிகரிக்கும்.  பிற்காலத்தில் குழந்தையின் உடல் ஆற்றல் எளிதில் வலுப்பெறும் என்று கர்னில் பல்கலைக்கழக மருத்துவப் பேராசி ரியர் மேரிகுட்டில் தலைமையில் நடந்த நீண்ட கால ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

ஆய்வின் முடிவை உலக உயிரியல் ஆய்வாளர் கூட்டமைப்பு தாங்கள் நடத்தும் பத்திரிகையில் வெளியிட்டு சிறப்பித்துள் ளது. உலக மருத்துவக் கழகமும் அமெரிக்க  உயிராய்வியல் அமைப்பு (திகிஷிணிஙி) இரண் டும் இணைந்து 2017-ஆம் ஆண்டிற்கான எதிர்கால ‘ஆற்றல்மிகு மனித சமூகம்’ என்ற தலைப்பில் உலகம் முழுவதும் நடந்துள்ள பல்வேறு ஆய்வறிக்கைகளை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில் நியூயார்க் கில் உள்ள கர்லின் பல்கலைக்கழக மருத் துவப்பேராசிரியர் மேரிகுட்டில் தலைமை யில் நடந்த ஆய்வறிக்கை ஒன்று வெளி யாகியுள்ளது.

அதில் கோலைன் (நீலீஷீறீவீஸீமீ) என்னும் புரதம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தப் புரதம் அடங்கிய உணவுகளை அன்றாடம் 450 மிலி கிராம் என்ற விகித்தில் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டும்,  இதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவின் மூளைத்திறனும் நரம்புமண்டல் தகவல் கடத்தும் திறனும் அதி கரிக்கும்  என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தவகைப் புரதம் அனைத்து வகை பச்சைக் காய்கறியில் காணப்படுகிறது, ஆனால் அதை வேகவைக்கும் போது அந்தப் புரதங்கள் சிதைந்துவிடுகின்றது. அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, மீன், கோழி,  உலர்பருப்பு வகைகளில் இந்த வகைப்புரதங்கள் அதிகம் உள்ளது, தினசரி இவ்வகை உணவுகளை உட்கொள்ளும் போது சிசுக்களின் மூளைத்திறன் மட்டுமல் லாது, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய் யும் நரம்புகளும், லென்சுகளை உருவாக் கும்  புரோட்டினும் அதிக திறன் பெறும் முக் கியமாக பெண்கள் கர்ப்பமான 5 வாரத்தில் இருந்து இந்தவகை உணவுகளை உட் கொண்டு வரவேண்டும்.

கர்லின் மருத்துவப் பல்கலைக்கழகம் எதிர்கால ஆரோக்கியமான குழந்தைகள் என்ற பெயரில் தொடர்ந்து பல ஆண்டு களாக பல்வேறு பாலூட்டிகளின் கர்ப்ப காலப்பருவம் அதற்கு முந்தைய உணவு முறை, கர்ப்பகாலத்திற்கு பிறகு பிறக்கும் சிசுக்களின் ஆற்றல் திறன் குறித்து ஆய்வு செய்துவருகிறது, இதே போன்று ஆஸ்திரே லியாவின் அடிலைட் பல்கலைக்கழகமும் எதிர்காலக் குழந்தைகள் நலன் குறித்த நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து ஆய்வு நடத்திய மருத்து வக் குழுவின் தலைவர் பேராசிரியர் மேரி குட்டில் கூறியதாவது, “மூளைவளர்ச்சி, நரம்பு மண்டலத்தின் தகவல் கடத்தும் திறன் குறித்த சில முக்கிய வேலைகளை குறிப் பிட்ட வகைப் புரதங்கள் செய்கின்றன இந்தப் புரதங்கள் தாயின் கருவில் வளரும்போதே கிடைப்பது அவசியமாகும், அப்படி கிடைக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைகள் திறமையான ஆற்றலோடு பிறக்கும் வாய்ப் புகள் மிகவும் அதிகம். ஆகையால் கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, மீன், முட்டை கோழி போன்ற உணவுகளை பரிந்துரை செய்கி றோம். இவ்வகை உணவுகளில் குழந்தை களின் மூளைவளர்ச்சிக்கு தேவையான ஆற்றல் புரதங்கள் உள்ளன.

மேலும் கோலைன் புரதங்கள் அடங்கிய உணவுகளை பேறுகாலம் நெருங்கும் போது ஒரு நாளை இரண்டு வேளை சரிவிகிதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் குழந்தைகளில் பார்வைத்திறனும் அதிகரிக் கும் இதுவும் எங்களின் ஆய்வின் மூலம் தெரிவந்துள்ளது.

ஆய்வின் போது 40 கர்ப்பினிப் பெண் களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு குழுவிற்கும் கோலைன் புரதங்கள் அடங் கிய உணவுகளை தினசரி 930 மிகி என்ற விகித்தில் ஒரு குழுவிற்கும் மற்றொரு குழு விற்கு 480 மிகி என்ற விகிதத்திலும் வழங்கி வந்தோம். இரண்டு குழுக்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு பிறந்த குழந்தை கள் ஆற்றல்திறன் பெருக்கம், மூளை வளர்ச்சி, போன்றவை இருந்தது, அதே நேரத்தில் இவ்வகைப் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் அதிக அளவு நோயெதிர்ப்பு சக்தியுடனும் பார்வைத்திறன் பெருக்கம் புத்திகூர்மைத்திறனுடன் பிறந்துள்ளதை எங்கள் ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள் ளோம்” என்று கூறினார்.

இந்திய ஆயுஷ் அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெளியிட்ட கையேட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இறைச் சிகளை உண்ணக்கூடாது, என்றும் கர்ப் பணிப்பெண்கள் இறைச்சிவகை உணவை உண்டுவந்தால் அவர்கள் மந்தமான மற்றும் கோபத்திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுப்பார்கள் என்று சில புராணக் கதையில் வரும் பாத்திரங்களை எடுத்துக் காட்டாக காட்டியிருந்தது, ஆயுஷ் அமைச் சரகத்தின் இந்தக் கையேட்டை இந்திய மருத்துவர் குழுமம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது,

சென்னையைச்சேர்ந்த மருத்துவர் ஒருவர் இறைச்சி உண்ணும் பழக்கமுடைய பெண்கள் அவர்களுக்குப் பிறக்கும் குழந் தைகள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்று 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டு ருந்தார். இந்தக் கட்டுரைக்கும் மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், 10.2.18
 

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பக்கவாதத்திலிருந்து மீண்டு வரலாம்!

முதுமையில் பலரையும் அதிகம் முடக்கிப் போடும் நோய், பக்கவாதம். இதன் பாதிப்பால் செயலிழந்த கை, கால்களை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மன உறுதி தேவை. தசைப் பயிற்சி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகள் தேவை. ஆனால், அதில்தான் பலரும் தவறு செய்கின்றனர். பெரும்பாலோர் அவற்றுக்கு வழி செய்யாமலும், அருகிலிருந்து கவனிக்க வசதிசெய்யாமலும் பாதிக்கப்பட்ட வரைத் தனிமையில் விட்டு விடுகின்றனர். அந்தத் தனிமையே அவர்களுக்குப் பெரும் தண்டனையாகிவிடுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டில் தசைப் பயிற்சிகள் மேற்கொள்ள ஓர் இயன்முறை மருத்துவரை ஏற்பாடுசெய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் இதற்கு ஒதுக்க வேண்டும். தோள், முழங்கை, மணிக் கட்டு, விரல்கள், தொடை, முழங்கால், பாதங்கள் என வரிசையாகத் தசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சில வாரங்களுக்கு இயன்முறை மருத்துவரை வீட்டுக்கே வரச் சொல்லி, பயிற்சி பெறலாம். அதன் பிறகு, நீங்களே அவற்றைச் செய்ய முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு உதவலாம்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு உடல் சமன்பாட்டில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். உதாரணமாக, படுக்கையைவிட்டு எழுந்தி ருக்கும் போது, உடல் ஒரு திசையில் இழுப்பது போன்று இருக்கும். இந்த நிலைமையைத் தவிர்க்கவும் தனிப் பயிற்சிகள் உண்டு. இயன்முறை மருத்துவர் உதவியுடன் இவற் றையும் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், சில வாரங்களில் வாக்கர் கொண்டு நடக்கப் பழகிவிடலாம்.

படுக்கைப் புண்களைத் தடுக்க

பக்கவாதம் வந்தவர்களுக்குப் படுக்கைப் புண்கள் வர வாய்ப்பிருக்கிறது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்குப் படுக்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மெலி தான தலையணையைத் தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முழங்கைவரையிலும் கைக்குத் தலையணை வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காலுக்கும் தலையணை வைத்துக்கொள்ளலாம். தோள்கள் தலை யணைக்கு முன்புறம் இருக்க வேண்டும்.

ஒரே நிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் படுக்கக் கூடாது. படுக்கையைச் சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தண்ணீர்ப் படுக்கை  நல்லது.

சருமம் சிவப்பாகிறதா, சருமத்தில் புண் இருக்கிறதா எனத் தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். எழுந்திருக்கும்போதும் உட்காரும் போதும் மற்றவர் உதவியுடன் செய்வதே நல்லது. அல்லது படுக்கைக்கு அருகில் சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொண்டு, அவற்றைப் பிடித்து எழுந்து உட்காரலாம்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம் இருக்கும். இவற்றுக்கும் தனிப் பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும். இயன்முறை மருத்துவர் தொண் டைத் தசைகள் வலிமை பெறப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். சாப்பிடும்போது உணவு புரையேறிவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். அதற் கேற்ப உணவைத் தேர்வுசெய்ய வேண்டும். மெல்வதற்கு எளிதான உணவு வகைகளைச் சிறிதளவில் அடிக்கடி சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை எழாது.

பேச்சு - மொழிப் பயிற்றுநர் சுலபமாக உணவை விழுங்க வழி சொல்லுவார். உங்கள் பேச்சு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயிற்சிகள் தருவார்.  விழுங்குவதில் சிரமம் ஏற்படும் காரணத்தால் முழு தானியக் கஞ்சி, பருப்புக் குழம்பு, அரைக்கப்பட்ட காய்கறி, கறி, பழம், மசிக்கப்பட்ட கிழங்கு, அரைவேக்காடு முட்டை, பிரக்கோலி, முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ், அவரை, பச்சைத் தேநீர், இலையுள்ள காய்கறிகள், ஓட்ஸ், தயிர், கிரில் செய்த மீன், பாலாடைக்கட்டி ஆகியவை சிறந்த உணவு வகைககள். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல்  தவிர்க்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், காய், பழம் தினமும் சாப்பிடவேண்டும். மலச்சிக்கலை லகுவாக்கும் மாத்திரைகளையும் பயன்படுத் தலாம்.

- விடுதலை நாளேடு -19.2.18

தூக்கத்தை தவிர்த்தால் விளையும் பாதிப்புகள்


தூக்கம் மனிதர்களுக்கு  இன்றியமையாத ஒன்றாகும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டு வந்தி ருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச் சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக் காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கை யறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. 
என்னதான் அதி நவீன அய்போனைப் பார்த்துக்கொண்டே படுத்துக்கொண்டிருந் தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்மு டைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை.

குறையும் எதிர்ப்பு ஆற்றல்

தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதி கரிக்கிறது.

தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார் மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

உடல் பருமனுக்குத் தூக்கமின் மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர் விளைவுகளும் ஏற்படுகின்றன.

தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட் டால் பல விபத்துகள் ஏற் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

கவலையால் வராத தூக்கம்

தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான்  தேவையின்றி கவலைப்படவும் தொடங்கு கிறோம். ஏனென் றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும்.

இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில் லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக் கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலை யால் குடிப்பதைப் போன்றதுதான்

தூங்கவிடாத சிந்தனை

தூக்கம் வரவில்லையே எனக் கவலைப் பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால்  எதிர்மறை யாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும்.

இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர் பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும்,   நாள டைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்து விடும்.

தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்பேசிகளுக்கும் தடை போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை.

இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். 
- விடுதலை நாளேடு, 19.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

வைட்டமின் டி குறைபாடு ஆண்களை என்ன செய்யும்? 

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.  எலும்புகளின் வலுவுக்கு கால்சியம் மிகவும் முக்கியம். அந்த கால்சியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.

எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின் சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்சினை ஏற்பட்டு, வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச் சுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.

இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன. காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும் - எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 5.2.18