மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (91)
சிறுநீரகச் செயலிழப்பு
(Kidney Failure)
மரு.இரா.கவுதமன்
நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic Renal Failure):
உடலின் பிற நோய்கள் காரணமாக சிறுநீரகங்கள் மெதுவாகப் பாதிப்படைந்து கொண்டே வரும். நீரிழிவு நோய் (Diabetes), மிகு இரத்த அழுத்தம் (Hypertension), இரத்தக் குழாய் நோய்கள் (Vascular Diseases), நாளமில்லாச் சுரப்பி நோய்கள் (endocrine glandular disease), கல்லீரல் நோய்கள் (Hepatic Diseases) ஆகிய பல நோய்கள் மெல்ல மெல்ல நீண்ட காலத்தில் சிறு நீரகங்களைச் செயலிழக்கச் செய்துவிடும். ஆரம்ப காலங்களில் சிறுநீரகங்கள் பாதிப்பு என்று எந்த அறிகுறிகளுமே தெரியாது. சிறுநீரகங்கள் பாதிப்பு அளவைத் தாண்டும்பொழுதுதான் மெல்ல, மெல்ல சிறுநீரகங்கள் பாதிப்பு அறிகுறிகளாகத் தெரியத் துவங்கும். அந்த நேரத்தில் மருத்துவம் செய்து முழுமையாக சிறுநீரக நோய்களிலிருந்து வெளியேறினால், சிறுநீரகங்கள் செயலிழப்பைத் தவிர்க்க முடியும். ஆனால், மற்ற உறுப்பு நோய்களை முழுமையாகச் சீராக்காவிட்டால் மீண்டும் சிறுநீரகங்கள் பாதிப்பும், செயலிழப்பும் தவிர்க்க முடியாது.
நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மீது குறுகிய கால நோய்த் தாக்குதல்: (Acute-on-Chronic Renal Failure):
ஏற்கனவே நாள்பட்ட சிறுநீரகங்கள் பாதிப்படைந்த சிறுநீரகங்கள் மேல் திடீரென்று ஏற்படும் உடனடி பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சரியாக சிறுநீரகங்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிந்து மருத்துவம் செய்தல் உடனடி தேவை. ஆரம்ப நிலை மருத்துவம், குறுகிய கால நோய்ப் பாதிப்பைச் சீராக்குவதில் நோய்க்கு மருத்துவம் செய்து கொண்டிருப்பர். உடனடி ஆபத்துகள் சீரான பின்பு, நீண்ட நாள் மருத்துவம் நோயாளியைக் காப்பாற்றும். அப்பொழுதுதான் நீண்ட நாள் சிறுநீரகங்கள் நோய் மருத்துவரால் அறியப்பட்டால் அதற்கான மருத்துவம் தொடங்கப்படும்.
சிறுநீரகங்கள் செயலிழப்புக்கான காரணிகள்:
உடனடிச் சீறுசீரகச் செயலிழப்பு – சிறுநீரகங்கள் திடீரென செயல் இழப்பதற்கான காரணிகள்:
* நஞ்சுகள், நச்சுத் தன்மை உடைய செயற்கை உரங்கள், வேண்டுமென்றோ, (தற்கொலை எண்ணத்துடன்) அல்லது எதிர்பாராமலோ உண்டுவிட்டால் அது நேரடியாக சிறுநீரகங்களைப் பாதிக்கும்.
* விபத்து போன்ற நிகழ்வுகளால் சிறுநீரகங்-களில் அடிபட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடும்.
* சிறுநீரகங்களில் (Poly Cystic Kidney) எளிதில் பல நீர்க் கட்டிகள் அதிகமாவதாலும், பெரியதாவதாலும் அவை சிறுநீரகங்களின் செயல்பாடுகளைத் தடுத்து, செயலிழப்பை ஏற்படுத்தும்.
* சீராகாத நீண்ட நாள் நோய்த் தொற்று, வடிப்பான்களை (Nephrons) அழித்து, சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும்.
* மரபணு (Genetical) மாற்றங்கள் உடைய சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாகிறது என மருத்துவர்கள் கண்டுள்ளனர்.
* HIV (எய்ட்ஸ்) நோய் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும்.
நோயின் அறிகுறிகள்: சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்பவும், துணை நோய்களின் நிலைமைக்கு ஏற்பவும் மாறுபாடாகத் தெரியும். ஆரம்ப நிலை நோயில் பொதுவாக, குறிப்பாக எந்த அறிகுறிகளும் வெளிப்-படையாகத் தெரியாது. சிறுநீரக வடிப்பான்கள் செயலிழப்பு அதிகமாகும் போது, கழிவுகள் வெளியேற முடியாத நிலை ஏற்படும். கழிவுகள் முதலில் இரத்தத்தில் கலந்து தேங்கத் துவங்கும். பிறகு உடலில் தேங்கும். உடலில் தேங்கும் கழிவுகளான நைட்ரஜன், யூரியா போன்றவை நச்சுத் தன்மை உடையவை. நைட்ரஜன் கழிவுகள் வயிற்றில் தேங்கும். வயிற்றில் அதனால் நீர் கோக்கத் துவங்கும். அதனால் வயிறு உப்பத் துவங்கும். (Azotemia) பெருத்த வயிறு, நாளடைவில் மூச்சு விடுவதில் தொல்லை ஏற்படுத்தும். அதேபோன்று யூரியா இரத்தத்தில் கலந்து, கரைய முடியாத நிலை ஏற்படும்பொழுது “யூரியா’’ மிகுந்து “மிகை இரத்த யூரியா’’ (Uremia) நிலைக்குச் சென்று விடும். இதனால் இரத்தத்தில் நச்சுத் தன்மை உண்டாகிவிடும். இது தவிர மேலும் பல அறிகுறிகள் தோன்றத் துவங்கும். யூரியா, இரத்தத்தில் மிகும்பொழுது,
* குமட்டல், வாந்தி
* நீர்மக் குறைபாடு (Dehydration)
* எடைக்குறைவு
* இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Nocturnal Urination)
* இயல்பைவிட அதிகமாக, வெளிர்த்த சிறுநீர் கழித்தல் (Pale Urine)
* சிலருக்கு அடர்த்தியான, குறைந்தளவு சிறுநீர் கழிக்கும் நிலை.
* சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும்.
* சிறுநீர் கழிக்கும் போது வலி, அதிகம் முக்கி வெளியேற்றும் நிலை.
* பாஸ்பேட் நச்சு இரத்தத்தில் சேர்வதால்.
* அரிப்பு.
* எலும்புகள் பாதிப்பு.
* எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் ஒன்று சேராமை.
* தசைப் பிடிப்பு (Cramps) போன்றவை பாஸ்பேட் நச்சு மிகுவதால் ஏற்படும்.
* பொட்டாசியம் இரத்தத்தில் மிகுந்த அளவு சேர்வதால்: (Hyperkalemia) இதயத் துடிப்பு பாதிப்பு (Abnormal heart rhythms)
* நாளடைவில் இதயச் செயலிழப்பு (Heart failure)
(தொடரும்…)