மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (41)
சிறுநீரகக் கற்கள்
(KIDNEY STONES)
மரு.இரா.கவுதமன்
சிறுநீரகக் கற்களின் வகைகள்:
கால்சியம் ஆக்ஸலேட்: சுண்ணாம்புச் சத்தான கால்சியத்தைக் கரைத்து வெளியேற்றத் தேவையான அளவு நீர்மம் இல்லாத நிலையில் சிறுநீரில் உள்ள ‘ஆக்ஸலேட்’ என்ற வேதிப் பொருளோடு இணைக்கிறது. “கால்சியம் ஆக்ஸலேட்’’ துகள்களாக மாறி, நாளடைவில் கற்களாக உருமாறும். இவ்வகைக் கற்கள் எளிதாக உருவாவதால், அதிகமாக உருவாகும் நிலைமை ஏற்படும்.
யூரிக் ஆசிட்: (Uric Acid): இவ்வகைக் கற்கள் அதிக அளவு தோன்றும் வாய்ப்புடையவை. புலால் உணவுகளில், மீன் உணவுகளில் “ப்யூரின்’’ (Purines) கள் என்ற இயற்கை வேதிப் பொருள்கள் அதிக அளவு இருக்கும். ப்யூரின்கள் அதிகமாக உட்கொள்வதால் (புலால் உணவுகள்) அவை உடலில் வேதி மாற்றமடைந்து, “மானோசோடியம் யூரேட்’’ (Mono sodium Urate) என்னும் வேதிப் பொருளாக மாறும். இவையே யூரிக் ஆசிட் என்ற அமிலமாகவும், பிறகே சிறுநீரகக் கற்களாகவும் உருப்பெறும். இவை பாரம்பரியமாக வரும் வாய்ப்பும் பெற்றவை.
ஸ்ட்ருவைட் (Struvite): இவ்வகை கற்கள் ஒரு சிலருக்கே ஏற்படும். சிறுநீரகப் பாதைகளில் ஏற்படும் நோய்த் தொற்றே இவ்வகைக் கற்கள் தோன்றக் காரணம்.
சிஸ்டைன் (Cystine): மிகவும் அரிதாகவே தோன்றும் இவ்வகைக் கற்கள் பாரம்பரியமாகத் தோன்றும் வாய்ப்பு அதிகம்.
நோயின் அறிகுறிகள்: சிறுநீரகக் கற்கள் சில நேரங்களில் மணலைப்போல் மிகவும் சிறு சிறு துகள்களாக, மெல்லியதாக இருக்கும். சில நேரங்களில் பருமனாக அளவில் பெரிதாக மாறிவிடும். கற்களின் அளவின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் வேறுபடும்.
சிறுநீரகக் கற்கள் பெரிதாகும்பொழுது அறிகுறிகள் தென்படும். ஆரம்ப நிலையில சிறுநீர் கழிக்கும்பொழுது வலி ஏற்படும். சில நேரங்களில் சிறுநீரோடு இரத்தம் கலந்துவரும். முதுகுப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும். அடி வயிற்றில் ஆரம்ப நிலையில் லேசான வலி இருப்பது போல் உணர்வு இருக்கும். திடீரென தாங்க முடியாத வலி முதுகின் பகுதியில் விலா எலும்புகளுக்குக் கீழேயும், அடி வயிற்றிலும் ஏற்படக் கூடும். முதுகில் தோன்றும் வலி, கீழே இறங்குவதுபோல் தோன்றலாம். முதுகில் துவங்கும் அடி வயிற்று வலி கீழ் வரை இறங்கி, அடி வயிறு வரை பரவும். குமட்டல், வாந்தி ஏற்படும். வயிற்றில் சங்கடம் இருக்கும். ஆண்களுக்கு ஆண் குறியின் நுனியில் வலி ஏற்படக் கூடும். பெண்களுக்கு சிறுநீர்ப் புற வழியில் வலி ஏற்படலாம்.
நோயறிதல்: சிறு துகள்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் ஏற்படுத்தாது. ஆனால், வேறு வயிற்றுத் தொல்லைகளுக்கு ஆய்வு மேற்கொள்ளும்பொழுது கற்கள் இருப்பது தெரிய வரும்.
ஊடுகதிர் நிழற்படம் (X-Ray): மிகவும் எளிமையான ஆய்வு. பொதுவான உடல் நல ஆய்வுகள் (Master health check up) செய்யும்பொழுது எதிர்பாராமல் சிறுநீர்க் கற்கள் இருப்பது தெரியவரும். திடீரென ஏற்படும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி ஏற்படும்பொழுது எடுக்கப்படும் ஊடுகதிர் படத்தில் சிறுநீரகக் கற்கள் நன்கு தெரியும்.
மீள் ஒலிப் பதிவு (Ultra Sound): சிறுநீரில் இரத்தம் கலந்து வரும் நிலையிலேயோ, வலி, வாந்தி போன்றவை ஏற்பட்டாலோ உடனே மீள் ஒலிப் பதிவு செய்து பார்த்தால் சிறுநீரகக் கற்கள் இருப்பதை அறிய முடியும். கற்களின் அளவு, அவை இருக்குமிடம் போன்றவற்றை துல்லியமாக இந்த ஆய்வு வெளிப்படுத்தும். இது மிகவும் நம்பிக்கையான உறுதியான, துல்லியமான ஆய்வு. மருத்துவம் செய்வதற்கும், எவ்வகையான மருத்துவம் மேற்கொள்ளலாம் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்து, அதை உடனடியாகச் செய்வதற்கான வாய்ப்பை, மீள் ஒலிப் பதிவு ஆய்வு பெருமளவு உதவி செய்யும்.
கதிரியக்க ஊடுகதிர் படம் (CT Scan): இவ்வகை ஆய்வும், கற்களின் அளவு, கற்கள் இருக்குமிடம் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.
இரத்தம், சிறுநீர் ஆய்வுகள்: இரத்தம், சிறுநீர் ஆய்வுகள் மேலே கூறிய ஆய்வுகள் போன்ற துல்லியமாக இல்லாவிடினும், ஓரளவு நோயைக் கண்டறிய உதவும். மற்ற இணை நோய்கள் காரணமாக சிறுநீர்க் கற்கள் உண்டாகி உள்ளதா என அறிய இரத்த ஆய்வு உதவும். சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று உள்ளதா என அறியவும், அதன் மூலம் சிறுநீர்க் கற்கள் உண்டாகும் வாய்ப்பை அறியவும் சிறுநீர் ஆய்வு உதவும்.
சிறுநீர்க் கற்கள் ஆய்வு: சில நேரங்களில், மிகச் சிறிய கற்கள், சிறுநீரில் வெளியேறும். அவற்றை ஆய்வு செய்து அவை எந்த வகை வேதிப் பொருள்களால் ஆனது என்று கண்டறிய இந்த ஆய்வு உதவும். இதனால் எதிர்வரும் நாள்களில், அந்த வகையான கற்கள் தோன்றாமல் தடுக்க இந்த ஆய்வு உதவும்.
மருத்துவம்: பொதுவாக கற்களில் உள்ள வேதிப் பொருள்கள், அளவு, அவை உண்டாக்கும் (வலி போன்ற) அறிகுறிகளைப் பொறுத்து என்ன வகை மருத்துவம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வர்.
கற்கள் தானாகவே வெளியேற வாய்ப்பு: அளவில் மிகவும் சிறிய கற்கள் பெரும்பாலும் சிறுநீரில் தானாகவே வெளியேற வாய்ப்பு இருக்கும். வயிற்றில் வலி இல்லாமல் இருந்தாலோ, மருந்துகளால் வலி குறைந்தாலோ, வலியை ஓரளவு தாங்கும் திறன் நோயாளிக்கு இருக்கும் நிலையில் நான்கு முதல் ஆறு வாரங்களில் சிறுநீரக சிறு கற்கள் வெளியேறும் வாய்ப்பு அதிகம். இயல்பான நிலையில் குடிக்கும் அளவு குடிநீர் அருந்த வேண்டும். வயிற்றிலோ, முதுகிலோ வலி ஏற்படாமல் தடுக்க வலியைப் போக்கும் மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி ஏற்படும் நிலை இருப்பதால் அதற்கான மருந்துகளையும் மருத்துவர் அறிவுரையைக் கேட்டு உண்ண வேண்டும்.
மருந்துகள்: சில வகை மருந்துகள் கற்களின் ஒரு பகுதியைக் கரைத்து சிறியதாக்கி விடும். அப்பொழுது கற்கள் தானாகவே சிறுநீரில் வெளியேறும் வாய்ப்பு ஏற்படும். சில மருந்துகள் (Tamsulosin – Flomax) சிறுநீர்க் குழாய்களின் இறுக்கத்தைப் போக்கி, தளர்வடையச் செய்யும். அதனால், சிறுநீர்க் குழாய்கள் விரிந்து கொடுக்கும். இந்த விரிவாக்கம் கற்களின் அளவைவிடப் பெரியதாக இருந்தால், கற்கள் தானாகவே சிறுநீர் மூலம் வெளியேறி விடும். இம்மருந்துகளோடு வலி நீக்கி மருந்துகளையும், வாந்தி வராமல் தடுக்கும் மருந்துகளையும் மருத்துவர்கள் கொடுப்பர். வெளியேறும் கற்களின் வேதிப் பொருள் ஆய்வு, மீண்டும் கற்கள் வராமல் தடுக்கும் உணவுகள், சில வேளைகளில் மருந்துகளும் இதற்கு உதவும்.
(தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக