மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [35]
நீரிழிவு நோய்
(DIABETES MELLITLIS)
நீரிழிவு நோய் வெறும் மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியாது. சர்க்கரையின் அளவை இரத்தத்தில் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவையும் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த இரண்டோடும் மருந்துகளும் எடுத்துக் கொண்டால் நோயை முழு அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
உணவுக் கட்டுப்பாடு:
* மீன், தோலற்ற கோழி உண்ணலாம்
* ஆலிவ் ஆயில் கொட்டைகள் உண்ணலாம்.
* இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும்.
* கரையும் கொழுப்பு உணவுகளை உண்ணக்கூடாது.
* பழங்கள் (பப்பாளி, கொய்யா, சாத்துக்குடி, ஆப்பிள்) சாப்பிடக் கூடியவை.
* ஆரஞ்சு, மாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, சப்போட்டா ஆகியவை தவிர்க்க வேண்டியவை.
* காய்கறிகளை (வறுக்காமல்) வேக வைத்துச் சாப்பிடலாம்.
* தானிய உணவுகள்.
* ஒரே நேரம் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவில் அதிக முறைகள் உண்ணவேண்டும்.
* அரிசி, கோதுமை ஆகிய இரண்டிலும் ஒரே அளவில் சர்க்கரை சத்து இருக்கும். அரிசிச் சோற்றை நாம் அதிகம் உண்ணும் இயல்பு உடையவர்கள் ஆனதால், சப்பாத்தியை அந்த அளவு உண்ணமாட்டோம், என மருத்துவர்கள் சொல்வார்கள்.
பொதுவாக குறைந்த கொழுப்பும், சர்க்கரையும் அற்ற, அதிகப் புரதம் கொண்ட குறைந்த அளவு உணவு அதிக முறை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் சூப், பழங்கள், அதிக அளவு வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நலம்.
உடற் பயிற்சி :
வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 30 நிமிட நடை பயிற்சியோ, சைக்கிள் ஓட்டுதலோ வாரம் 6 நாள்கள் செய்வது நோயைக் கட்டுப் படுத்த சிறந்த வழிகளாகும்.
உடல் பருமனோ, வயதிற்கும், உயரத்திற்கும் மேல் அதிக எடை இருப்பவர்கள் 7% எடையைக் குறைத்தல் நலம். நாம் இயல்பாகச் செய்யும் வேலையை விட அதிக அளவில் உடற் பயிற்சி செய்வது நலம். தொப்பையைக் குறைக்க வேண்டும்.
மருந்துகள் :
மருந்துகளை மருத்துவர்கள் அறிவுறுத்தும் போது உங்களின் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பதறிந்து அதற்குத் தக்க மருந்துகளையே தருவர்.
முதல் வகை நீரிழிவு நோய் :
இவ்வகையில் இன்சுலின் சுரப்பதில் தடை ஏற்பட்டுள்ளதால், இன்சுலினையே மருந்தாகத் தருவர். 4 வகை இன்சுலின் மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன.
* வேகமாகச் செயல்படும் இன்சுலின் (Rapid Acting insulin): 15 நிமிடங்களில் செயல்படும் இம்மருந்து 3 முதல் 4 மணிவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
* குறைந்த நேரம் செயல்படும் இன்சுலின் (Short Acting Insulin): லு மணிக்குள் செயல்படும் இம்மருந்து 6 முதல் 8 மணி நேரம் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது.
* இடை நேர இன்சுலின் (Intermediate acting insulin): 1 மணி முதல் 2 மணி நேரத்தில் செயல்படத் துவங்கும் இம்மருந்து 12 முதல் 18 மணி நேரம் நோயைக் கட்டுப்படுத்தும்.
* நீண்ட நேர இன்சுலின் (Long Acting insulin): மருந்தை எடுத்துக்கொண்ட சில மணி நேரம் கழித்து செயல்படும் இது 24 மணி நேரம் செயலாற்றும் வல்லமை உடையது.
இரண்டாம் வகை நீரிழிவு நோய்:
மாத்திரைகள் மூலமே இந்த வகை நீரிழிவு நோயைக் குணப்படுத்தலாம். பல வகை மருந்துகள் உள்ளன. ஒரே வகை மாத்திரையோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளோ உங்களின் நோயின் தன்மையையும், சர்க்கரையின் அளவையும் பொருத்து மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நோய் கட்டுக்குள் வராவிட்டால், இன்சுலின் ஊசியும் தேவைப்படும்.
கருக்கால நீரிழிவு நோய் :
குறைந்த அளவு சர்க்கரை இருப்பின் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் நோயைக் கட்டுப்படுத்தும். சுமார் 10 முதல் 20 சதவிகிதம் தாய்மையுற்ற, கருக்கால நீரிழிவு நோயுற்றவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி இருக்கும்.
எச்சரிக்கை :
நீரிழிவு நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு, மருந்துகளால் திடீரென உடலில் சர்க்கரை குறைந்து விடும். அந்த நிலை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் இந்த ஆபத்தை அதிகம் எதிர் கொள்வர். ஊசி போட்டுக் கொள்பவர்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடும். உடன் கை, கால்கள் நடுக்கம், சோர்வு, தடுமாற்றம், வேர்த்தல், மயக்கம் போன்றவை ஏற்படும். உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் இந்நிலை உயிருக்கே உலை வைத்து விடும். தொடர்ந்து விடாமல் செயல்படும் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயல்பட முடியாமல் முடங்கிவிடும். அதனால் மரணம் நேரலாம். எனவே, நீரிழிவு நோய் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, நேரத்திற்கு உணவை உண்ண வேண்டியது கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதி!
அதே போல் இன்று இனிப்பு சாப்பிட்டுள்ளோம். ஒரு மாத்திரை கூட சாப்பிட்டு விட்டால் சரியாகிவிடும் என பல நோயாளிகள் தவறாகச் செயல்படுகின்றனர். இது உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அணுகுமுறை. நீரிழிவு நோய் மருந்துகளை மருத்துவர் அறிவுரைப் படிதான் சாப்பிடவோ, ஊசியாகவோ போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, நீங்களாகவே, உங்கள் விருப்பப்படி (Self Medication) சாப்பிடக் கூடாது.
நீரிழிவு நோய் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால், இதயம், சிறுநீரகம் எளிதில் பாதிப்படையும். எனவே, உரிய மருத்துவர்களிடம் அறிவுரை பெறுதலும் அவசியம்.
நோயை வெல்ல உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் என மும்முனைத் தாக்குதல் கட்டாயத் தேவை!
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக