இதய நோய், புற்றுநோய் போன்றவை மட்டுமே உயிரைப் பறிக்கும் நோய்கள் அல்ல. பேச்சு வழக்கில் பக்கவாத நோய் என்றழைக்கப் படும் ஸ்ட்ரோக்கும் பெரிய நோய்தான். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் ஒன்றரைக் கோடிப் பேரை இந்த நோய் முடக்கிப் போட்டு, வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடுகிறது!
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக் கிறார்கள். உலகம் முழுவதும் சுமார் 8 கோடிப் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 கோடிப் பேர் நிரந்தரமாக ஊனமடைந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் புதிதாக பக்கவாத நோயாளி உருவாவதாகச் சொல்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய்தான், பக்கவாதம். இதை மூளைத் தாக்கு அல்லது மூளை ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல அல்லாமல் முன் அறிகுறிகள் எதையும் வெளிகாட்டாமல் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என்கிறார்கள்.
இரண்டு காரணங்கள்
இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் கூறுகையில்,
பக்கவாத நோய் ஏற்பட இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, ரத்த ஓட்டம் தடைபடுவது. இரண்டாவது, ரத்தக் கசிவு ஏற்படுவது. ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு, கொழுப்புப் படிவுதான் முக்கியக் காரணம். அதாவது, ரத்த நாளங்களின் உட்சுவர்களில் கொழுப்பு படியும்போது நாளங்கள் கடினத் தன்மையை அடைந்துவிடுகின்றன. இப்படி ரத்த நாளங்கள் கடினமாவதால் அதன் உட்புறப் பாதையின் அளவு குறைகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையலாம். இதனால், பக்கவாதம் ஏற்படலாம்.
இரண்டாவதாக ஏற்படும் பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் வருகிறது. இதற்குக் காரணம், உயர் ரத்த அழுத்தம்தான். ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிந்து வெளியேறி மூளைத் திசுக்களுக்குள் பரவும்போது, திசுக்கள் பாதிக்கப்படும். மூளை நாளங்களில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மூளைத் திசுக்களும் ரத்த ஓட்டத்தை இழந்து பாதிக்கப்படலாம். ஆனால், ரத்தக் கசிவுகளால் ஏற்படும் பக்கவாதத்தைவிட ரத்த ஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதங்களே அதிகம் ஏற்படுகின்றன என்கிறார் அலீம்.
- விடுதலை நாளேடு, 5.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக