மருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
இரைப்பை அழற்சி (GASTRITIS)
மரு.இரா.கவுதமன்
‘இரைப்பை அழற்சி’ (Gastritis) மிகவும் அதிக அளவில் காணப்படும் ஓர் நோய். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இரைப்பை அழற்சி பல காரணங்களால் ஏற்படும். இரைப்பைச் சுவர்களில் ஏற்படும் அழற்சியையே (Inflammation of the lining of the stomach) இந்நோய்க்குக் காரணம். இரைப்பைப் புண்கள் ஏற்படக் காரணமான நுண்கிருமிகளே இரைப்பை சுவர் அழற்சிக்குக் காரணிகளாக பெரும்பாலும் உள்ளன. வலி மாத்திரைகள் நீண்ட நாள்கள் பயன்படுத்துதல், மதுப் பழக்கம் போன்றவை இந்நோயை ஏற்படுத்தும். இரைப்பை அழற்சி சிலருக்கு திடீரென ஏற்படலாம். (Acute Gastritis) அல்லது லேசான வயிற்று வலியாகத் துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக நாள்பட அதிகமாகலாம் (Chronic Gastritis). சரியான மருத்துவம் உரிய நேரத்தில் செய்யாவிடில், நாளடைவில் இரைப்பையில் புண்கள் ஏற்படும் நிலையிலும் அதுவே பிற்பாடு இரப்பைப் புற்று நோயாகி (Stomach Cancerஷீ) மாறும் நிலைகூட ஏற்படலாம். ஆரம்ப நிலை மருத்துவம் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்தும். புறக்கணிக்கப்பட்ட அறிகுறிகளும், சரியான மருத்துவம் செய்யாமையுமே நோயை, ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லுமே ஒழிய, பெரும்பாலும் ஆரம்ப நிலையில் எளிதாகவும், முழுமையாகவும் இந்நோயைக் குணப்படுத்த முடியும். இனி இந்நோயைப் பற்றிப் பார்ப்போம்.
நோய்க்கூறு: (Pathogenesis): இரைப்பை அழற்சி, இரைப்பைச் சுவரில் ஏற்படும் மாற்றமேயாகும். இரைப்பைச் சுவரில் ஏற்படும் காயங்களோ (Injury), அல்லது தளர்ச்சியோ (Weakness) அழற்சியை ஏற்படுத்தும். நிறைய காரணங்களாலும், சில வகை நோய்களும் அழற்சியை ஏற்படுத்தும். குரோன் நோய் (Crohn’s Disease), இணைப்புத் திசுப் புற்றுநோய் (Sarcoidosis) போன்றவை இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும்.
காரணிகள்:
¨ மன அழுத்தம், இரைப்பை அழற்சிக்கு ஓர் முக்கியமான காரணி.
¨ பெரிய அறுவை மருத்துவம், அடிபடுதல், தீக்காயங்கள், நோய்த் தொற்று இவற்றால் ஏற்படும் மன அழுத்தம்.
¨ புகைபிடித்தல்
¨ தன்னுடல் தாக்கு நோய் (Auto-immune Disease) இதை தன்னுடல் “தாக்கு இரைப்பை அழற்சி’’ (Auto immune gastritis) என்று மருத்துவர்கள் குறிப்பிடுவர்.
¨ நம் உடலில் உள்ள உயிரணுக்கள் (cells), இரைப்பையின் சுவர்களில் உள்ள “புறணி’’ (Lining) களைத் தாக்கும். இரைப்பையின் பாதுகாப்பு வளையம் (Protective Barrier) இதனால் பாதிக்கப்பட்டு, இரைப்பை அழற்சி ஏற்படும்.
¨ வேறு வகையான தன்னுடல் தாக்கு நோய்கள் இருப்பினும், அவை இரைப்பை அழற்சியைத் தூண்டி விடும். எடுத்துக்காட்டாக, “ஹெஸிமோட்டோ’’ (Hashimotto disease) நோய், நீரிழிவு நோய் (ஒன்றாம் வகை) (Type 1 Diabetes Mallitus), வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 deficiency) ஆகியவை இரைப்பை அழற்சியை தூண்டிவிடும்.
¨ மனிதநோய் எதிர்ப்பு குறைபாடு (AIDS) நோய், குரோன்ஸ் (Crohn’s disease), ஒட்டுண்ணி நோய்த் தொற்று (Parasitic Infection) ஆகிய நோய்களும் இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும் தன்மையுடையவை.
¨ மதுப்பழக்கம்: மது, இரைப்பையின் உட்சுவரை அரிக்கும் தன்மை உடையது. இதனால் இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் (Enzymes), இரைப்பையின் வெளிச்சுவர்களில் உள்ள சவ்வுப் படலத்தை (Mucasa) சிதைக்கும். அதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நேரடியாக இரைப்பைச் சுவரில் படிந்து, இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும்.
¨ முதுமை (Old age) யில் இரைப்பைச் சுவர் வழமையை விட மெலிந்து விடும். சுவர்களின் பாதுகாப்பு அரண் மெலிந்து விடும். அதனால் எளிதாக எச்.பைலோரி (H. Pylori) என்கிற நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்படும். முதுமையில் தன்னுடல் தாக்குநோய்களும் எளிதாக வரும் நிலையில் உள்ளதால் இரைப்பை அழற்சி எளிதில் ஏற்படும்.
¨ நோய்த் தொற்று: “ஹெலிகோபேக்டர் பைலோரி’’ (Helicobacter Pylori - H. Pylori) என்ற நுண்கிருமிகள் இரைப்பைச் சுவர்களில் படிவதால், அவை இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும் நிலை உண்டாகும். இந்நோய்த் தொற்று இரைப்பையிலும், உணவுப் பாதையிலும் பெரும்பாலோருக்கு இருந்தாலும், இரைப்பை அழற்சியை ஒரு சிலருக்கே உண்டாக்கும் தன்மை உடையதாக உள்ளது.
¨ உணவு (Diet): அதிகக் காரமான உணவு, மிக அதிகச் சூடாக தண்ணீர், தேநீர், காஃபி குடிப்பவர்களுக்கு நாளடைவில் இரைப்பையின் பாதுகாப்புத் திசுக்கள் சிதைந்து, அழற்சியை உண்டாக்கும்.
¨ வலி குறைப்பு மருந்துகள்: வலி குறைப்பு மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துபவர்கள் இந்நோயைப் பெறும் வாய்ப்பு அதிகம். இதயத் தமனி அடைப்பு நோய், வேறு இரத்தக் குழாய் அடைப்பு நோய்களுக்கு பயன்படுத்தும் “ஆஸ்பிரின்’’ (Aspirin), புரூஃபன் (Brufen), நேப்ரோக்ஸின் (Naproxin) போன்ற மருந்துகளும், ஸ்டீராய்டு, கலவாத அழற்சி எதிர்வினை மருந்துகள் (Non Steroid anti-inflammatory - NSAID) ஆகியவற்றின் நீண்ட காலப் பயன்பாடு, இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்: நோயின் அடிப்படை அறிகுறிகள்:
* மேல் வயிற்றில் மார்பு எலும்புக்குக் (Sternum) கீழ் வலி ஏற்படுதல்.
* அடிக்கடி ஏப்பம்.
* புளித்த ஏப்பம்.
* நெஞ்சு எரிச்சல்.
* வயிற்றுப் பகுதியில் எரிச்சல்.
* வலி உணவு உண்ட பின் சரியாகி விடும்.
* குமட்டல்.
* வாந்தி.
* உணவிற்குப் பின் ஏற்படும் வலி வாந்தி எடுத்த பின்பே சரியாகும்.
* மேல் வயிற்றில் (Epigastirc) உண்டாகும் வலி, வயிற்றுப் பகுதி முழுவதும் பரவும்.
* குறைந்த அளவு உணவு உண்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு.
* நோய் அதிகமாகும் பொழுது, இடைவிடாத வலி.
* இரைப்பையில் புண் ஏற்பட்டுவிட்டால், இரத்த வாந்தி ஏற்படும்.
* மலம் கருப்பாக (இரத்தம் கலந்து) வெளியேறுதல்.
* நோய் அதிகமாகும்போது இரைப்பைப் புண்ணாக மாறும் நிலை ஏற்பட்டால் அறிகுறிகள் மேலும் தீவிரமாகும்.
* புற்று நோயாக மாறினால் அறிகுறிகள் அளவிறந்த தொல்லையாக நோயாளிக்கு உண்டாகும்.
* உணவு உட்கொள்ள முடியாது.
* நாள்பட்ட நோய் அருகில் உள்ள உறுப்புகளுக்குப் பரவும்.
தாங்க முடியாத வலி
* உடல் மெலிவு
* பசியின்மை
* நிமிரக்கூட முடியாத நிலை
* முடிவாக மரணத்தையும் எதிர்கொள்ளல்.
(தொடரும்)