இதயத்தமனி (அடைப்பு) நோய்
(Coronary Artery Disease)
மரு.இரா.கவுதமன்
மாரடைப்பு காரணிகள்: (1) பரம்பரை நோயாக வரலாம். (2) அதிக மன அழுத்தம் (stress) (3) நீரிழிவு நோய் (diabetes) (4) அதிக அளவு கொழுப்பு சேர்தல் (Triglycerides) (5) அதிக குளிர்ச்சியில் தாக்கப்படும் நிலை (உயரமான இடங்களுக்கு செல்லும் நிலையில் - High attitude) (6) கடுமையான அலைச்சல் (7) அதிகமான உடல் உழைப்பு (அ) உடற்பயிற்சி போன்ற காரணங்களால் திடீரென்று மாரடைப்பு ஏற்படும். யாருக்கு அதிகளவில் இந்நோய் வரும் என்று பார்த்தால், புகை பிடிப்போர், மது அருந்துவோர், உயர் இரத்த அழுத்தம் (Hypertension) இதயத் தசை அழற்சி (myocarditis), உடல் உழைப்பே இல்லாமல், சோம்பல் வாழ்க்கை முறை (Sendentary life style) பரபரப்பான வாழ்க்கை முறை (stressful life style) முதியவர்கள், திடீரென செய்கின்ற கடுமையான உழைப்பு ஆகிய காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும்.
இனி மேற்கண்ட காரணிகளால் நோய் ஏற்படுவதை காண்போம். நீரிழிவு நோயாளிகளின் இரத்தக் குழாய்களில் சர்க்கரை, குழாய் சுவர்களில் படிந்திருக்கும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்தக் குழாய் சுவர்களில் கொழுப்பு படிந்திருக்கும். இந்த படிதல்களால் இரத்தக் குழாய்கள் இயல்பாக இல்லாமல் குறுகிவிடும். இதனால் இதயத் தமனிகள் வழியே இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்துவிடும். புகைப்பிடிப்பவர்களின் இதயத் தமனிகளில் ‘நிகோடின்’ படிந்து மேற்சொன்ன குறைபாட்டையே உண்டாக்கும். அதிக உயரமான (high attitude) இடங்களுக்கு (மலை பகுதிகள்) செல்பவர்கள், அங்கு இயல்பாக உள்ள அதிக குளிரால் தாக்கப்படுவர். அதிகக் குளிர்ச்சியில் தமனிகள் சுருங்கும். அதனால் இரத்த ஓட்ட குறைபாடு இதயத்திற்கு ஏற்படும் நிலை, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தமனிகள் சுருங்கி இருக்கும் நிலையில் இந்த பாதிப்பு இன்னும் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும் நிலை ஏற்படும். கடுமையான அலைச்சல், அதிக உடலுழைப்பு போன்றவை இதயத்தின் செயல்பாட்டை அதிக அளவு ஏற்படுத்தி, இதயம் களைப்புற்று நின்று விடும் நிலை ஏற்படலாம்.
சோம்பல் வாழ்க்கை முறை (sedentary life style) இதய இயக்கத்தை குறைத்து, நாளடைவில் இதயம் நின்று விடும் நிலைக்கு தள்ளிவிடும். பரபரப்பான வாழ்க்கை முறை (stressful life)யில் ஏற்படும் அதிக உணர்ச்சி வசப்படுதல், கோபம், பயம், கவலை, விரக்தி (depression) ஆகியவையும் மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும். மேற்கண்ட நிலைகளில் ‘அட்ரினல்’ சுரப்பு ஏற்பட்டு, இரத்தக் குழாய்களில் பாதிப்பை உண்டாக்கி மாரடைப்புக்கு வழி வகுக்கும். முதியவர்களுக்கு இரத்தக் குழாய்களில் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த ஓட்ட பாதிப்பை உண்டாக்கி மாரடைப்பிற்கு வழி வகுக்கும். சில பேர்கள், பரம்பரை, பரம்பரையாக இந்நோயில் பாதிக்கும் நிலையும் ஏற்படும்.
நோய் கூற்றியல்: நீரிழிவு நோயில், இதயத் தமனியின் உட்சுவர்களில் சர்க்கரை, கொழுப்புப் படிவங்கள் படர்ந்து, நாளடைவில் கெட்டிப் பட்டு விடும். அதனுடன் சுண்ணச் சத்தும் (calcium) நாளடைவில் படிந்து அதிகம் கெட்டிப்பட்டு விடும். அதிக இரத்த அழுத்தத்திலும் கொழுப்பு இதே போல் தமனியில் படிந்துவிடும். இதனால் இதயத் தமனி குறுகிவிடும். இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வதும் சிறுக, சிறுக குறைந்து கொண்டே வரும். (மருத்துவர்கள் இதயத் தமனியில் ஏற்படும் குறுகலைத்தான் 20%, 30%, 40%, 50% அடைப்பு என்றெல்லாம் குறிப்பிடுவர்) ஒரு சில நேரங்களில் இரத்த ஓட்ட வேகத்தில், இதயத் தமனியில் படிந்துள்ள இந்த பொருள், பிய்ந்து கொண்டு இரத்த ஓட்டத்தோடு சென்று சிறிய இரத்தக் குழாயை அடைத்து விடும். இந்த குழாய்கள் மூலம் இரத்தம் பெறும் இதயப் பகுதி, செயலிழந்துவிடும். இப்படி பிய்த்துக் கொண்டு செல்லும் “இரத்த உறை கட்டி’’ (thrombus) அளவில் பெரிதாக இருந்தால் பெரிய குழாயையே அடைத்து, உடனடி மரணம் நிகழும் பெரிய இரத்த குழாய் அடைபடும் பொழுது அது பரவும் இதயத்தசை முழுவதும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, அந்த பகுதியில் உள்ள திசுக்கள் அழிந்து விடும். இதையே “இதயத் திசு அழிவு’’ (Myocardial Infarction) என்று மருத்துவர்கள் அளவுக்கு மேல் இரத்த ஓட்டம் தடைபட்டால், மார்பில் வலி ஏற்படும் (Angina Pectoris) உடன் உடல், தன்னை காத்துக் கொள்ளும் வகையில் சில நொதியங்களை சுரக்கச் செய்து, இரத்தக் குழாய்களை விரிவுபடுத்த முயலும். அப்பொழுது வலி விட்டு விடும். இதே போன்ற நிலை பிற காரணங்களாலும் (மன அழுத்தம் போன்றவை) ஏற்பட்டு, இதயத்திற்கு செல்லும் இரத்தம் குறைந்து “மார்பு வலி’’ (Angina Pectoris)யை ஏற்படுத்தும்.
(தொடரும்)
“மாரடைப்பு’’, “இதய முடக்கம்’’: (Heart attack, Cardiac Arrest):
மாரடைப்பு: இதயத்திற்கு, இதயத் தமனி வழியே செல்லும் இரத்த ஓட்டம், திடீரென்று உண்டாகும் அடைப்பினால், முழுமையாக தடைபடும். இதனால் இதயம் செயல்படாமல் நின்றுவிடும். மரணமும் நிகழும். இதையே மாரடைப்பு என்கிறோம்.
இதய முடக்கம்:(Cardiac Arrest): இதயம் சுருங்கி விரிவதாலும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous system) மூலமும் மின்னோட்டம் ஏற்படுகிறது. இம்மின்னோட்டம்தான் இதய செயல்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்துகிறது. இந்த மின்னோட்டத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், இதயத்தின் மேலறைகள், கீழறைகள் சீரான இயக்கத்தில் கோளாறு ஏற்படும். இதே போன்று மற்ற சில இதய நோய்களாலும் இதயம் பலம் குன்றியிருக்கும். அதுபோன்ற நோயாளிகளுக்கு சற்றும் எதிர்பாராமல் இதய முடக்கம் ஏற்பட்டு, இதயம் நின்று விடும். பொது இடங்களில் இது நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவர் திடீரென்று சரிந்து, விழுந்து மயங்கி, மரணமடைவர். மாரடைப்பில், நோயாளி உயிரோடு இருப்பார். உணர்வோடு இருப்பார். இதயம் செயல்படும். மார்பு வலி இருக்கும். ஆனால் இதய முடக்கத்திலோ இதயம் எந்த வலியுமின்றி, திடீரென்று நின்று விடும். அருகில் இருப்பவர்கள் “இதய, மூச்சு மீறுயுர்ச்சி’’ (cardio - Pulmonary resuscitation) முறையை மேற்கொள்ள வேண்டும். இதயத் துடிப்பு நின்று விட்ட ஒருவருக்கு, இதயப் பகுதியில், மார்பின் மேல் இரு கைகளையும், ஒன்றின் மீது ஒன்றை வைத்து அழுத்த வேண்டும், வாயின் மேல் வாய் வைத்து மூச்சு விடுவதை தூண்ட வேண்டும். மூன்று நிமிடங்களுக்கு மேல் மூளைக்கு இரத்தம் செல்லாவிட்டால் மூளையில் உள்ள பகுதிகள் செயலிழந்து இறக்க நேரிடும். மார்புப் பகுதியை நொடிக்கு ஒரு முறை அழுத்த வேண்டும். 20 முறை முதல் 30 முறை அழுத்தியதும், வாய் மூலம் மூச்சு செலுத்த வேண்டும். இதன் மூலம் பல முறை இதயம் மீண்டும் செயல்படத் துவங்கும். நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். விரைவு ஊர்தியிலேயே (ஆம்புலன்ஸ்) “இதய உதறல் நீக்கி’’ (Defibrlator) கருவியை மார்பில் வைத்து, இதயத்தை இயக்க செவிலியர்கள் முயல்வர். மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்படும் நோயாளிகள் பலர் பிழைத்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
- உண்மை இதழ், 16-31.7.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக