நோயின் அறிகுறிகள் - மார்பு வலி (Angina Pectioris) :
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி ‘மார்பு வலி’, இதயத்திற்கு செல்லும் இரத்தம் குறைவதால் ஏற்படுவதாகும். பொதுவாக மார்பு வலியை, “நிலையான மார்பு வலி’’ (stable angina) “நிலையற்ற மார்பு வலி’’ (unstable angina) என இரு வகைப்படும். நெஞ்சு வலி என்பது நிறைய பேர்கள் அனுபவிக்கும் ஓர் அறிகுறியாகும். ஆனால் எல்லா நெஞ்சு வலியும் (Chest pain) இதயத் தமனிக் கோளாறினால் உண்டாவதற்காக எண்ணக் கூடாது. மார்பு சதை பிடிப்பு, வயிற்று கோளாறு, இரைப்பையழற்சி (Gastritis) ஆகியவை கூட நெஞ்சு வலியை ஏற்படுத்தலாம். அதனால் நெஞ்சு வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுதல் நன்று.
நிலையான மார்பு வலி (stable angina) :
* அதிகளவு உடலுழைப்பு இருக்கும்பொழுது, இதயம் கடுமையாக செயல்படும் நிலை ஏற்படும். அதற்கு அதிக அளவு இரத்த ஓட்டம் தேவைப்படும். இதயத்தமனி குறுகிய நிலையில் உள்ள போது, இதயத்திற்கு (அதிக உழைப்பின் பொழுது) தேவையான இரத்தம் செல்லாததால் மார்பு வலியாக வெளிப்படும்.
* இந்த வலி ஒரு சில நிமிடங்களிலேயே நின்று விடும் (பெரும்பாலும் 5 நிமிடங்கள்).
* வலி சாதாரணமாக ஏற்படும் நெஞ்சு வலி (Chest Pain) போன்றே இருக்கும்.
* வலி வந்த உடன் ஓய்வெடுத்தால் வலி நீங்கி விடும்.
* மன உளைச்சல் (Stress), அதிகக் குளிர்ச்சி, வயிறு புடைக்க உண்பது (அதிலும் இரவு உணவு), புகை பிடித்தல் போன்றவை மார்பு வலியை உண்டாக்கலாம்.
* களைப்பு, தலை சுற்றல், குமட்டல்
* மூச்சு திணறல், வியர்த்தல் போன்றவையும் ஏற்படலாம்.
இவ்வகை நிலையான மார்பு வலி மிகவும் சாதாரணமானது. ஆனால் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நிலையற்ற மார்பு வலி (unstable angina) : பொதுவான மார்பு வலி அறிகுறிகளான
* களைப்பு
* தலைசுற்றல்
* குமட்டல்
* மூச்சுத் திணறல்
* வியர்வை
* நெஞ்சு வலி
* நெஞ்சில் ஏற்படும் வலி இடது கையில் பரவும், வலது கையிலும் பரவலாம்
* முதுகில் வலி பரவும், தோள் பட்டையில் பரவலாம்
* கீழ்த்தாடையில் வலி ஏற்படலாம்
* நெஞ்சை அமுக்குவது போன்ற உணர்வு நெஞ்சில் இருக்கும்
* நெஞ்சு எரிச்சல்
போன்ற அறிகுறிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென தோன்றும். மேற்சொன்ன அறிகுறிகள் அனைத்துமோ, அல்லது ஒரு சிலதோ தோன்றலாம். ஆனால் நிலையற்ற மார்பு வலி ஓய்வில் கூட ஏற்படும் வலியும் அதிகமாக இருக்கும். 30 நிமிடங்களும், அதற்கு மேலும் கூட வலி தொடரலாம். மருந்துகள் உண்பதாலோ, முழு ஓய்வு எடுப்பதாலோ வலி குறையாது. சரியாக மருத்துவம் செய்து கொள்ளா விட்டால் மாரடைப்பு (heart attack) ஏற்படும் நிலை உண்டாகும். நெஞ்சில் இறுக்கம், நெஞ்சை அமுக்குவது போன்ற உணர்வு, நீண்ட நேர நெஞ்சு வலி வியர்வை, மருந்துகளால் அறிகுறிகள் குறையாமை போன்றவை இருப்பின் கட்டாயம் அவசர மருத்துவம் தேவைப்படும். உடனே மருத்துவமனைக்கு சென்றால் உயிர் ஆபத்து ஏற்படாமல், தப்பிப் பிழைக்க முடியும்.
“மாரடைப்பு” (heart attack - இதயத் திசு அழிவு - myocardial infarction):
உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டிய ஓர் அவசர நோய் மாரடைப்பு. இல்லாவிடில் நிமிடங்களில் மரணம் நிகழும். உறைந்த இரத்தத் துகள், இதயத் தமனியை அடைப்பதால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபடும். இரத்தம் ஓட்டம் தடைப்பட்ட இதயப் பகுதி, மூச்சுக் காற்று (ஆக்ஸிஜன்) கிடைக்காமல் செயலிழந்து, மரணித்து விடும். உடன் நோயாளி மரணமடைவார். ஆரம்ப அறிகுறிகள் தோன்றி சற்றேறத்தாழ 20 நிமிடங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார். ஓரளவு இரத்த ஓட்டம் இதயத் திசுக்களுக்கு இருந்தால் 10 நிமிடங்களில் மார்பு வலி குறையலாம்.
நோயின் அறிகுறிகள்:
* மார்பு வலி
* மார்பு இறுக்கம்
* மார்பை கசக்கி பிழிவது போன்ற உணர்வு
* மார்பை அழுத்துவது போன்ற உணர்வு
* மார்பில் தோன்றும் வலி கழுத்து, கைகள், முதுகு, கீழ்த்தாடை போன்ற இடங்களுக்கு பரவுதல்.
* நெஞ்சு எரிச்சல்
* தலைசுற்று
* கிறக்கம்
* குமட்டல்
* அதிக அளவு வியர்த்தல்
* மூச்சுத் திணறல்
* (மார்பு வலி மிகக் கடுமையாக இருக்கும்)
மேற்கண்ட அறிகுறிகளில், சில அறிகுறிகள் தெரிந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுதுல் இன்றியமையாததாகும்.
நோயறிதல் (பரிசோதனைகள் மூலம்):
* இதய மின் பதிவு (ECG)
* எதிரொலி இதய மின்பதிவு (Echocardiogram)
* ஓடுபொறி சோதனை (Treaduil test)
* இதயத் தமனி இரத்த ஓட்ட வண்ணப் பதிவு (Colour doppler)
* குருதிக் குழாய் வரைவி (Angiogram)
போன்ற பரிசோதனைகள் மாரடைப்பு நோய்க்குச் செய்யும் பரிசோதனைகள் ஆகும். இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்பை மிகத் துல்லியமாக இச்சோதனைகள் மூலம் அறிய முடியும்.
1. இதய மின் பதிவு (Electro-cardio-gram) : இதயம் இயங்கும் பொழுது, ஏற்படும் மின்சார செயல்பாட்டை பதிவு செய்தல். மின் பதிவில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நோயை அறிய முடியும்.
2. எதிரொலி இதய மின் பதிவு (Echo Cardiogram) : ஒலி அலைகளை, இதயத் தசைகளில் செலுத்தி, அதன் எதிரொலியை பதிவு செய்யும் முறை. இதயத் தசைகளின் செயல்பாட்டை இப்பதிவின் மூலம் அறிய முடியும்.
3. ஓடு பொறி சோதனை (Treadmill test) : இதயத்தின் செயல் அறிய செய்யப்படும் சோதனை இது. இயல்பான நிலையில் இதயத்தின் செயல்பாட்டில் துவங்கி, உடற்பயிற்சியின் போது இதயம் செயல்படுவதை பதிவு செய்யும் முறை இது. ஓய்வில் இதயம் துடிக்கும் பொழுது, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை விட, பயிற்சியின் போது, இதயம் வேகமாக செயல்படும். அப்பொழுது இதயத்திற்கு அதிக அளவு இரத்தம் செல்லும். உடற் பயிற்சியின் பொழுது, அதிக அளவு இரத்தம் செல்லாமல் (இதயத் தமனிகளில் அடைப்பு இருப்பின்) இருந்தால் இதயத்தின் செயல்பாட்டில் குறை ஏற்படும். அதை வைத்து அடைப்பு உள்ளதா என்று அறிய முடியும்.
4. இதயத் தமனி இரத்த ஓட்ட வண்ணப் பதிவு (Coronary Artery colour doppler study) : இதயத் தமனி வழியே செல்லும் இரத்த ஓட்டத்தை பதிவு செய்யும் முறை. இதயத் தமனிகளில் படிந்துள்ள, படிவங்களை இதன் மூலம் அறியலாம்.
5. குருதிக் குழாய் வரைவு (Angiogram) : இதயத் தமனிகளின் அடைப்பை மிகத் துல்லியமாக பதிவு செய்யும் முறை இது. காலில் உள்ள தமனி வழியே ஒரு நுண்ணிய வடிகுழாயை செலுத்தி, அதை இதயத் தமனிகள் வரை கொண்டு சென்று, ஒரு “நிறமி’’ (Dye) யை செலுத்துவர். அதை வெளியில் கணினி மூலம் கண்காணிப்பர். இதன் மூலம் இதயத் தமனியில் ஏற்பட்டுள்ள அடைப்பை துல்லியமாக அறிந்து, அதற்கு தகுந்த முறையில் மருத்துவ முறைகளை முடிவு செய்வர்.
மேற்சொன்ன பரிசோதனைகள் தவிர, இதய செயல்பாட்டிற்கான புரத நொதியங்களான “டிராபோனின்’’, “கிரியேட்டின் கினேஸ்’’, “எடிபேஸ்’’ ஆகியவற்றின் அளவீடுகளில் மாற்றம் இருந்தாலும், மாரடைப்பை கண்டுபிடிக்க உதவும்.
- உண்மை இதழ், ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15. 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக