இதயம் கைப்பிடி அளவிலேயே உள்ள ஓர் இன்றியமையாத - ஓய்வில்லாமல் வேலை செய்யும் - உடல் பொறி. ஆனால் இதயத்தை ஒட்டியுள்ள நுரையீரல் இதயத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிதான, ஓய்வில்லாமல் உழைக்கும் இன்னொரு உடல்பொறி, நமது மார்புப் பகுதி முழுவதும் பரவியுள்ள நுரையீரல், விலா எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. இதயத்தைப் போல் கடுமையான தசைகளால் உருவாகாமல், மிகவும் மென்மையான காற்றழைகளால் உருவானதே நுரையீரல் (Lungs) நுரையீரல் அடிப்படைச் சொல் பல்மோ என்னும் இலத்தின் மொழியிலிருந்து உருவானது. அதே போல் கிரேக்கச் சொல்லானா நியுமோ (Prneumo) என்பது காற்று என்ற பொருளுடன் இணைந்துள்ள உறுப்பான நுரையீரலைக் குறிக்கும். மூக்கின் வழியே நாம் உள்ளிழுக்கும் (Inspiration) காற்று செல்வதும், அதன் வழியே காற்று வெளியேறும் செயல்பாட்டையே மூச்சுவிடுதல் (Respiration) என்கிறோம். மூச்சுக்குழாய் இரண்டாகப் பிரிந்து வலப்பக்க, இடப்பக்க என இரண்டு பக்க நுரையீரல்களுக்கும் காற்றுப் பரிமாற்றத்திற்கு உதவும். இந்த மூச்சுக்குழாய் மேலும் பல நுண்ணிய சிறு, சிறு குழாய்களாக (Bronchioles) மாறும். நுரையீரல் வலப் பக்கம் மூன்றுபிரிவுகளாகவும் (Lobes), இடப் பக்கம் இரண்டு பிரிவுகளாகவும் இருக்கும். நுரையீரல் பல லட்சக்கணக்கான நுண் காற்றறைகளால் (alveolus) ஆனது. மூச்சுக்குழாய், மூச்சுக் கிளைக் குழாயாக (Bronchus) மாறி ஒவ்வொரு நுண்காற்றறையிலும் காற்றுப் பரிமாற்றம் நிகழும். இந்த நுண் காற்றறைகள், நுண் மூச்சுக்குழாய் வழியே வரும் காற்றிலிருந்து உயிர் மூச்சுக் காற்றை (ஆக்சிஜன் - Oxygen) உறிஞ்சு கொண்டு, உடலில் உற்பத்தியாகும் கரியமிலக் காற்றை (Co2) - கார்பன் - டை - ஆக்சைடு) வெளியேற்றும். இதையே மூச்சுவிடுதல் என்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 22000 முறை மூச்சுவிடும் நாம், 9000 கன அடி காற்றை உள்ளிருந்து வெளிவிடுகிறோம். உறங்கும் போதும், இயங்கும் போதும் இடைவிடாமல் இந்தச் செயல்பாடு நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 20 முறை இவ்வாறு நாம் மூச்சு விடுகிறோம். இதயத்தின் வலப்பக்க கீழறையிலிருந்து புறப்படும் நுரையீரல் தமனி, நுரையீரலில் உள்ள இந்தக் காற்றறைகளுக்கு இரத்தத்தைக் கொண்டு வரும். கழிவுப் பொருள்கள் கலந்த கெட்ட இரத்தமே அது. நுரையீரல் தமனி, மேலும், மேலும் சிறிய, சிறிய குழாய்களாக மாற்றி, தந்துகிகளாக (capillaries) மாறி, இரத்தத்தை நுரையீரலில் உள்ள நுண்காற்றறைகளுக்குக் கொண்டு செல்லும். இந்தத் தந்துகளில் வந்த கரியமிலக் காற்று கலந்த இரத்தத்திலிருந்து, அதை வெளியேற்றி, உயிர் மூச்சுக்காற்றை (ஆக்சிஜன்) இரத்தக் குழாய்களுக்குள் செலுத்தி, அதை நல்ல இரத்தமாக மாற்றி அனுப்பும். இதையே காற்றுப் பரிமாற்றம் (Gaseous exchange) என்கிறோம். இப்படி பல லட்சம் நுண் காற்றறைகளிலிருந்து வெளியேறும் கரியமிலக் காற்று மூச்சுக்குழாய்கள் வழியே வெளியேற்றப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட நல்ல இரத்தம் தந்துகளின் வழியே, சிறிய, பெரிய இரத்தக் குழாய்களில் செலுத்தப்பட்டு, முடிவில் நுரையீரல் சிரை வழியே இதயத்தின் இடப்பக்க மேலறைக்கு (Left auricle) வரும். அங்கிருந்து கீழறைக்கு செலுத்தப்படும் நல்ல உயிர் மூச்சுக்காற்று கலந்த (Oxygenated blood) இரத்தம் உடல் முழுவதும் செலுத்தப்படும் . இதன் மூலம் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்கத் தேவையான உயிர்மூச்சுக்காற்றைப் பெறும். குருதியில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients) உயிர் மூச்சுக்காற்று (Oxygen), இயக்கு நீர்கள் (Hormones) இரத்த அணுக்கள் (Blood Cells) கலந்து உடலின் பல பாகங்களிலிருக்கும் உயிரணுக்களுக்கு (Cells) செலுத்தும். இதன் மூலம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் இயக்குதல் நிகழும். இதனால் நோய் எதிர்ப்பாற்றல், உடல் வெப்பநிலை சீரமைத்தல் (Thermoregulation) உடல்நீர்ச் சமநிலை (Homeostasis) போன்றவை சரியான முறையில் நிகழும். எப்படி இதயம் ஓய்வின்றி தன் வேலையைச் செய்யுமோ, அதே போல்தான் நுரையீரலும் தன் வேலையை ஓய்வின்றி நாள் முழுதும் செய்து கொண்டேயிருக்கும்.
நுரையீரலைச் சுற்றி வெளிப்படலம், உள்படலம் என இரண்டு உறைகள் உள்ளன (Pleura). இந்த இரண்டு படலங்களுக்கும் இடையில் ஒரு திரவம் இருக்கும். மூச்சு விடும் பொழுது, நுரையீரல் படலம் நுரையீரலைப் பாதுகாக்கிறது. மூளையில் உள்ள முகுளம் தான் (Medulla Oblongata) இந்த மூச்சு விடுதலை முழுமையாகக் கண்காணித்து, செயல்பட வைக்கிறது.
நம் மூக்கிலிருந்து துவங்கும் மூச்சுக்காற்று மண்டலம், நுரையீரல் செயல்பாட்டின் மூலம் நிறைவடைகிறது. மூக்கில் இருக்கும் முடிகள், மூலம், தூசு, தும்புகள், வடிகட்டப்படுகின்றன. மூச்சுக்குழாய்களில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் தூசுகள், நுண்துகள்கள், நுண்கிருமிகளையெல்லாம் வெளியேற்றும்.
நுரையீரல் அழற்சி (PNEUMONIA)
நுரையீரல் அழற்சி பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளோம். நிமோனியா என்னும் சொல் நம் காதில் அடிக்கடி விழும் சொல்லாகும். இனி அந்நோயைப் பற்றி நோக்குவோம்.
நோய் காரணிகள் : நுரையீரல் அழற்சி 95 சதவிகிதம், நோய்க் கிருமிகளாலும், (Bacterias) நுண்ணியிரியான வைரஸ்களாலும், பூஞ்சான்களாலும் (Fungus) ஏற்படுவதாகும். வெகுஅரிதாக மார்பில் ஏற்படும் காயங்களால், விலா எலும்பு முறிந்து நுரையீரலை பாதிப்பதால் ஏற்படும். நீமோகாக்கஸ் நிமோனியே (Pneumococcas pneumonia) என்ற நோய்க்கிருமியே பெரும்பாலும் இந்நோய்க்குக் காரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது பல வைரஸ்களாலும், பூஞ்சைகளாலும், மருத்துவமனை நோய்த் தொற்றாலும் (Hospital Cross Infection) இந்நோய் வரும் என நிரூபணமாகியுள்ளது.
நோய்க் கூறியியல் : நோய்த் தொற்று, நுரையீரலில் ஏற்படும்போது, நுரையீரலில் உள்ள நுண்ணறைகள் அனைத்திலும் கிருமிகள் பரவும். உடன் அழற்சிக்கான மாற்றங்கள் நுரையீரலில் ஏற்படும். அதன் விளைவாக நுரையீரலின் நுண்ணறைகளில் நீர் சுரக்கும். காற்றைவிட, நீர் அடர்த்தியினால் நீர், நுரையீரலின் கீழறைகளில் சேர்ந்துவிடும். அதனால் மூச்சுவிடுவதில் இடைஞ்சல் ஏற்படும். இதுவே நுரையீரல் அழற்சியால் ஏற்படும் அறிகுறிகளுக்கு அடிப்படை.
நோயின் அறிகுறிகள் : நுரையீரல் அழற்சி, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றில் மிகவும் அதிகளவில் ஏற்படும் நோய்த் தொற்றாகும். மேல் மூச்சு உறுப்புப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றே இதற்குக் காரணம். நாளடைவில் கீழ் மூச்சுப் பாதை வழியே நோய்த் தொற்று, நுரையீரலின் அடிப்பகுதி வரை பரவும். அதனால் நோய்கிருமிகள் ஏற்படுத்தும் விளைவுகளால், நுரையீலின் அடிப்பகுதியில் நீர்சேரும். இதனால் நுரையீரலின் முழு அளவு காற்றுப் பரிமாற்றம் ஏற்பட முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக மூச்சிறை, மூச்சுவிடுவதில் சிக்கல் உண்டாகும். நோய்த் தொற்றினால் மேலும் பல அறிகுறிகளும் தெரியும். றகடும் காய்ச்சல்
*இருமல், தொடர்ச்சியான இருமல்
*தொண்டை கரகரப்பு, தொண்டை வலி றசளி, மூக்கு ஒழுகுதல்
*கெட்டியான சளி
*பசியின்மை
*வாந்தி
*தொடர்ச்சியான இருமலினால், மார்பு வலி
*அடிவயிற்றில் வலி
*மூச்சு விடுவதில் தொல்லை
*அசதி, களைப்பு
*மூச்சுத்திணறல்
*மூச்சுத்திணறலால் படுக்கையில் வசதியாக படுக்க முடியாது
*உட்கார்ந்து இருப்பதே வசதியாகக் தெரியும்
சில வேளைகளில் மூச்சுத்திணறலால், உடனடி மருத்துவம் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும்.
நோய் ஆய்வு : மருத்துவர்கள் சில சோதனைகளை மேற்கொள்வர். இதில் இரத்தப் பரிசோதனை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சளி பரிசோதனை செய்யப்படுகிறது.
*மார்பு எக்ஸ்ரே - ஒரு முக்கிய ஆய்வு
*கணினி ஊடுகதிர் நிழற் வரைவு (C.T.Scan)
*காந்த அதிர்வலை ஊடுகதிர் நிழற் வரைவு (M.R.I) மேற்கண்ட ஆய்வுகள் மூலம் நோயின் தன்மை, பாதிப்பின் அளவு, எவ்வகை நோய்க்கிருமிகள் தாக்கியுள்ளன. அவை எந்த மருந்துகளால் கட்டுப்படுத்தப்படும். மேலும் ஏதாகிலும் ஒவ்வாமை உள்ளதா என்பவற்றை வெகு துல்லியமாக அறிய முடியும். மருத்துவமுறைகளையும், நோயின் அறிகுறிகளுக்குகேற்பவும் அதன் தீவிரத் தன்மைக்கேற்பவும் மருத்துவர்கள் முடிவு செய்வர். ஆரம்ப நிலையிலேயே செய்யப்படும் மருத்துவம் சிறந்த பலனைத் தரும். நாள்பட்ட நோய், தீவிர மருத்துவம் மூலமே குணமாகும்.
மருத்துவம்: இந்நோய் வருமுன் காக்கும் தடுப்பு மருந்துகளும் உள்ளன. ஆனால், எல்லா நோய்களுக்கும் தடுப்பு மருந்து பயன்படாது. வைரஸ்களால் உண்டாகும் மூச்சு நோய்களுக்குத்தான் தடுப்பு மருந்து பயன்படும். பெரும்பாலான நுண் கிருமிகளால் (Bacteria) ஏற்படும் நோய்களுக்கு, நுண்ணுயிர் கொல்லிகள் ..(Anti - Biotics) சிறந்த பலனைத் தரும். நோயின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால் மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிர் மூச்சுக்காற்று (Oxygen Therapy) மருத்துவமும் தேவைப்படலாம். இதன் அளவு (இயல்பாக sPo2) அளவு 85 முதல் 95 வரை இருக்க வேண்டும். சில நேரங்களில் செயற்கை மூச்சுப் பொறியையும் (Ventilator) பயன்படுத்தும் நிலையும் ஏற்படலாம். எந்த வகையான மருத்துவம் என்பதை தேவைக்கேற்ப மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும் இந்நோய் நன்றாகும் வாய்ப்புகளே அதிகம். புகைபிடிப்பவர்கள் அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். புகைப் பழக்கம் நோயின் தொல்லைகளை அதிகமாக்கும்.
(தொடரும்...)
- உண்மை இதழ், 16-31.10.20
Best Bet Kenya: What Is 1XBet? - Legalbet.co.kr
பதிலளிநீக்கு1Xbet betting is available for Kenyan football happyluke fans only. It 1xbet korean is an online betting site that offers betting クイーンカジノ on multiple