நாம் அடிக்கடி பார்க்கும் நோயாளிகளில் “மூச்சிரைப்பு’’ நோயாளிகள் அதிக அளவு இருப்பதை அறிவோம். இந்தியாவில் 3.5 கோடிப் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூச்சிரைப்பு நோய் (Asthma) என்பது மூச்சுவிடும் இயல்பான நிலையில் ஏற்படும் பாதிப்பால் ‘இளைப்பு’ (Wheezing) ஏற்படும் தொல்லை தரும் ஒரு நிலையாகும். இந்த மூச்சிரைப்பு பெரும்பாலும் விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் வரக்கூடிய தொல்லையாகும். ஒரு சிலருக்கு தொடர்ந்து நீண்ட நேரமும் இருக்கக் கூடும். இந்த தொடர் நிகழ்வு, ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலருக்கு அதிகமான பாதிப்பும், அதிக நேரம் சங்கடமும் ஏற்படும். சிலருக்கோ கொஞ்ச நேரத்தில் குறையக்கூடிய வாய்ப்பும் உண்டு. இந்நோய் எப்பொழுது, எப்படி, ஏன் வருகின்றது என்கிற காரணத்தை அறுதியிட்டு இதுவரை கூற முடியவில்லை. இந்நோய் உயிராபத்தை ஏற்படுத்தாவிட்டாலும் மிகவும் தொல்லையை நோயாளிக்குக் கொடுக்கும். இதுவரை இந்நோயிலிருந்து குணமடைய (Cure) மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நோயை அதன் அறிகுறிகளிலிருந்து, கட்டுப்படுத்தி, நோயாளியை இயல்பு நிலைக்குக் கொண்டு வர பல மருந்துகள் உள்ளன. இந்நோயாளிகளின் ஒரே நம்பிக்கை இந்த மருந்துகள்தாம்.
காரணம்: ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்நோய்க்கு என்ன காரணம் என்று அறிய முடியவில்லை. சுற்றுச்சூழல் (Environment Changes), பாரம்பரிய பாதிப்பு (Genes), ஒவ்வாமை காரணிகள் (Allerges). பல நோயாளிகளுக்கு மூச்சிரைப்பைத் தூண்டிவிடும் சிலவகை மகரந்தத் துகள்கள் (Polengrains), காற்றில் கலந்துள்ள ஒவ்வாமை துகள்கள், தூசு, வித்துகள் (Spores), பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகளின் முடி (Pet dander) ஆகியவை ஒவ்வாமையைத் தூண்டி விட்டு மூச்சிரைப்பை ஏற்படுத்தும். கரப்பான் பூச்சி கழிவுகள், தெள்ளுப்பூச்சுக் கடி போன்றவையும் ஒவ்வாமையை உண்டாக்கி, மூச்சிரைப்பை ஏற்படுத்தும். ஒவ்வாமை காரணிகள்கூட ஒவ்வாமை ஏற்படுத்தும் நிலை மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதனால் ஒருவருக்கு ஏற்படும் ஒவ்வாமை காரணிகள், மற்றொருவருக்கு இருக்க வேண்டிய நிலைப்பாடும் இல்லை. சிலருக்கு காலநிலை மாறுபாடுகள் (எடுத்துக்காட்டாக -_ பனிக்காலம்) கூட இந்நோயை உண்டாக்கும்.
வகைகள்: பொதுவாக மூச்சிரைப்பு நோய் மூன்று வகைப்படும்.
1. இரவு நேர மூச்சிரைப்பு: இது இரவுகளில்தான் வரும். நோயாளி, படுக்கையில் படுத்திருப்பதற்குக்கூட கடினமாக இருக்கும். சற்று சாய்வான நிலையில் அமர்ந்து இருந்தால் நோயாளிக்கு மூச்சு விடுதல் எளிதாக இருக்கும். பெரும்பாலான நோயாளிகள், இந்த வகை நோயால்தான் பாதிக்கப்படுவர்.
2. உடற்பயிற்சி உண்டாக்கும் மூச்சிரைப்பு நோய்: சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் பொழுதோ, கடினமான உடல் உழைப்பு செய்யும்பொழுதோ, பல மாடிகள் நடந்து ஏறும்பொழுதோ, பெருமூச்சாகத் துவங்கி, மூச்சிரைப்பாக மாறிவிடும்.
3. ஒவ்வாமை உண்டாக்கும் மூச்சிரைப்பு: ஒவ்வாமை காரணிகளால் ஏற்படும் மூச்சிரைப்பு இது.
அறிகுறிகள்: நோயின் அறிகுறிகள், ஒருவருக்கொருவர் மாறுபடும். சிலருக்கு எப்பொழுதாவது வரும். சிலருக்கு அடிக்கடி இவ்வறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் வரும். சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் வரும். சிலருக்கு உடல் உழைப்பாலோ, உடற்பயிற்சி செய்யும்பொழுதோ வரும். சிலருக்கு மழைக்காலத்தில் வரும். சிலருக்கோ பனிக்காலத்தில் வரும். ஒரு சிலருக்கு கோடைக்காலத்தில் கூட வரலாம். சிலருக்கு அதிகமாக வியர்க்கும் பொழுது கூட வரும் நிலை உண்டு. சிலருக்கு குளிர்ந்த உணவுகள், குளிர்ந்த நீர், குளிர்ந்த பழரசம் கூட மூச்சிரைப்பை உண்டாக்கும். நோய் தாக்குதலின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் தெரியும். சிலருக்கு மிக அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் அறிகுறிகள் தெரியலாம். மூச்சிரைப்பு நோய்க்கு ஆளானவர்களுக்கு பொதுவான அறிகுறிகளாக கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரியலாம். அவற்றைப் பார்ப்போம்.
* குறுகிய மூச்சு (Shortness of Breath) முழுமையாக மூச்சு இழுத்து காற்றை வெளியேற்ற முடியாத நிலை.
* மார்புப் பகுதியில் இறுக்கம்
* மார்பு தசைகளில் வலி. இயல்பு நிலையில் 20 முறை மூச்சு இழுத்து விடுவதற்குப் பதில், குறுகிய மூச்சு விடுவதால், மார்புத் தசைகளும், மார்புக்குக் கீழ் உள்ள “உதரவிதானம்’’ (Diaphragm) பகுதியும் அதிக முறை செயல்படுவதால் மார்புப் பகுதியில் வலி ஏற்படும்.
* மூச்சுக் காற்றை வெளியேற்றும்பொழுது, இளைப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு இது அதிகளவு வெளிப்படும்.
* தூங்கும்பொழுது, இளைப்பு ஏற்பட்டு, உறக்கம் கெடல், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் இளைப்பு அதிகம் ஏற்படும். சற்று சாய்ந்து உட்கார்ந்த நிலை, நோயாளிக்கு வசதியாக இருக்கும்.
* இருமல்.
* இளைப்பு (Wheezing)
* மூச்சுக்குழாய் வைரஸ் தொற்று, இளைப்பை அதிகமாக்கும்.
* சளி பிடித்தல்; ஃபுளு காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால், மூச்சிரைப்பு நோயும் உண்டாகி, நோயாளி அதிகம் தொல்லைப்படுவார்.
* மூச்சிரைப்பும், இளைப்பும் ஏற்படும் பொழுது நோயாளி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொல்லைப்படும் நிலையும், சில நேரங்களில் ஏற்படும்.
* சிலருக்கு கடினமான உடல் உழைப்பினால் ஏற்படும் நோய், ஓய்வு எடுத்து நீண்ட நேரத்திற்குப் பின்பே குறையும்.
* சில தொழிற்சாலைகளில் ஏற்படும் காற்று மாசு ஏற்படுத்தும் இளைப்பு, அந்த வேலையை விட்டால் சரியாகி விடும் (சிமென்ட் விரிப்பு (Asbestoes) தொழிற்சாலை, வண்ணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றவற்றில் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவது மிக அதிகம்.
* திடீரென்று நீண்ட நாள் மூச்சிரைப்பு நோயாளிக்கு, “தொடர் இளைப்பு’’ (Status Asthmaticus) ஏற்படும். நோயாளி மிக அதிகமாகத் தொல்லைப்படுவார். லேசான உடல் உழைப்பில்கூட இந்த நிலை ஏற்படும். உடனடியாக இளைப்பைக் குறைக்கும் மருந்துகளாலும், மூச்சிரைப்பு குறையாது. மிக வேகமாகவும், நோயின்போது, இயல்பாக ஏற்படும் இளைப்பைவிட அதிகமாக இருக்கும். அதிக அளவு குறுகிய மூச்சு ஏற்படும்.
* உடனடியாக அவசரமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இது. மருத்துவம் செய்யாவிடில், நோயாளி மூச்சுத் திணறியே மரணமடையவும் கூடும்.
நோயறிதல்:
* இரத்தப் பரிசோதனை: ஈசனோஃபில் (Eosonophiles) அளவை கண்டுபிடித்தல் ஒரு முக்கிய ஆய்வு.
* மார்பு ஊடு கதிர் (X Ray - Chest)
* சிடி ஸ்கேன் - கதிரியக்க ஊடுருவல் (CT Scan): நுரையீரலின் பாதிப்பை இச்சோதனையால் அறிய முடியும்.
* ஒவ்வாமை காரணிகளை (Allergens) ஆய்வு செய்தல். இதன் மூலம் எந்தக் காரணி மூச்சிரைப்பு ஏற்படுத்துகிறது என கண்டறிய முடியும். “ஒவ்வாமை மருத்துவமனை’’ (Allergy Clinic)யில் இதை ஆய்வு செய்வர். காரணியை அறிந்து, அதைத் தவிர்ப்பதால் இளைப்பை தவிர்க்கலாம்.
மருத்துவம்: மருத்துவர் அறிவுறுத்தலின் படியே மூச்சிரைப்பு நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும். மருத்துவம் நோயாளியின் நிலை, நோயின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுபடும். பெரும்பாலான நோயாளிகள், வீட்டில் இருந்தபடியே இளைப்பு உண்டானவுடன் மருந்துகளை எடுத்துக் கொள்வர். மருந்து எடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் இளைப்பு குறைந்து விடும். நோயாளிகள் பெரும்பாலோனோர் இளைப்பின் அறிகுறிகள் வரும் என்பதை முன்னறிந்தேகூட மருந்துகளை எடுத்துக் கொள்வர். சில நோயாளிகள் இளைப்பு துவங்கியதுமே மருந்துகளை எடுத்துக் கொள்வர். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்து கொண்டால், நோய் முற்றாமல், அதன் விளைவாகநு
நுரையீரல் திசுக்கள் அதிக அளவு அழிவுறாமல் தவிர்க்க முடியும். அதனால் லேசாக இளைப்பு ஏற்படும்பொழுதே மருத்துவ அறிவுரை பெற்று, மருந்துகள் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.
அதனால் நுரையீரல் அதிகம் சேதமடைவதைத் தவிர்க்க முடியும். மூச்சிரைப்பு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அறிகுறிகளைத்தான் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நோயைக் கட்டுப்படுத்த மிகவும் சிறந்த மருந்துகள் உள்ளன. மருத்துவரின் அறிவுரைப்படி அம்மருந்துகளை உண்பது நோய் அறிகுறிகளைக் குறைத்து விடும்.
ஆரம்ப நிலை மருத்துவம், நுரையீரல் பாதிப்பைத் தவிர்த்து, உயிராபத்தைக் கூட தவிர்க்கும். அறிகுறிகள் வழமையான மருந்துகளால் குறையாவிடில், வீட்டிலேயே இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் மூச்சுக்காற்று மருத்துவம் (Oxygen Therapy) கூட தேவைப்படும்.
உயிராபத்து ஏற்படும் வேளைகளில் செயற்கை மூச்சுப்பொறி (Ventilators) இணைத்து மூச்சு விடும் நிலைகூட ஏற்படலாம். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக தொடர் மூச்சிரைப்பு மிகவும் அபாயம் நிறைந்த நிலை. உடனடியாக மருத்துவம் செய்தல் அவசரம். அதன் மூலம் உயிராபத்தைத் தவிர்க்கலாம். புகைப்பிடித்தலை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
மூச்சுப் பயிற்சி (Breathing Exercise) நல்ல பலனைத் தரும். மூச்சுக்குழாய் விரிவாக்க மருந்துகள் (Bronchodialators), அழற்சி முறிப்பான்கள் (Anti Allergic drugs) போன்றவையும், ஸ்டீராய்டு மருந்துகள் (Steroids) நல்ல வண்ணம் நோயைக் கட்டுப்படுத்தும்.
- உண்மை இதழ், அக்டோபர் 1 -15 .20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக