இதய நோயும் மருத்துவமும்
மரு.இரா.கவுதமன்
ஆபத்தான நிலை: இயங்கிக் கொண்டே இருக்கும் இதயத்தில் திடீரென மின்னோட்டம் நின்று விடக்கூடும். இதை “இதயத்துடிப்பு முடக்கம்” (Sudden Cardiac Arrest) என்று கூறுவர். திடீரென ஏற்படும் இந்த நிலையில் இதயம் முழுமையாக நின்றுவிடும். இதனால் இரத்த ஓட்டமும் நின்று, மரணம் நிகழும். தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்கு இரத்தம் செய்யாவிட்டால் மூளை செயலிழந்து விடும். (Brain Death). இதயத் துடிப்பு முடக்கம் மிகவும் ஆபத்தானது. எந்த அறிகுறியும் உண்டாகாமல், பாதிக்கப்பட்டவர் திடீரென மயங்கி தரையில் சாய்ந்து, மயக்கம் அடையலாம். அது போன்ற நிலையில் யாரையேனும் காண நேரிட்டால், முதலில் நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதயத்திலிருந்து இரத்தம் செல்லுவது நின்று விட்டால் நாடித்துடிப்பு இருக்காது. இரண்டு உள்ளங்கைகளையும், பாதிக்கப்பட்டவரின் இடது மார்பில் வேகமாக அழுத்தவும். இரண்டுமுறை அழுத்தியதும், வாயோடு வாய் வைத்து செயற்கை மூச்சை செலுத்த வேண்டும். பின் மீண்டும் மார்பை அழுத்த வேண்டும். மருத்துவ உதவி வரும் வரை தொடர்ச்சியாக இதை செய்ய வேண்டும். (Cardio-Pulmonary Resuscitation) சில நேரங்களில், இந்த மருத்துவ முறையிலேயே, மருத்துவ உதவி வருவதற்குள்ளேயே நோயாளியின் இதயம் மீண்டும் செயல்படத் துவங்கவும் கூடும். இம் முதலுதவி பல பேர் உயிரைக் காப்பாற்றியுள்ளது. தொடர்ந்து தரப்படும். மருத்துவம் மூலம் அவர் முழுமையாக குணமடையும் வாய்ப்பு ஏற்படும். (விதிமுடிந்து இதயம் நின்று போய், ஏறத்தாழ மரணம் அடைந்தவரை, முதலுதவியும், மருத்துவமும் எப்படி காப்பாற்றுகிறது!)
பிற மருத்துவ முறைகள்: இதய மேலறை உதறல் துடிப்பு (Atrial Fibrilation) சிலருக்கு இருக்கும். பெரும்பாலும் மருந்துகள் மூலமே இதை சரியாக்க முடியும். இதைப் போன்றே “கீழறைகள் மிகு இதயத் துடிப்பு” (Ventricular Tachyeardia) சிலருக்கு ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தானது. இதனால் இதயத்தில் “குறு நடுக்கம்” (Fibrillation) ஏற்பட்டு, இதயம் நின்று விடலாம். இதை “குறு நடுக்க தடுப்பு” (Defibrillation) முறை மூலம் சரி செய்ய முடியும். சிலருக்கு அடிக்கடி இந்நோய் வரலாம். அவர்களுக்கு உடலிலேயே இக்கருவியை பொருத்திவிடுவதன் மூலம், இதயத்துடிப்பில் மாறுபாடு உண்டாகும் பொழுது தானாகவே செயல்பட்டு இதயத் துடிப்பை சீராக்கி விடும். இதே போன்று “இதயத் துடிப்பு சீர்மைக் கருவி” (Pace Maker) ஓர் அரிய கண்டுபிடிப்பு. இதயத் துடிப்புக் கோளாறுக்கான அடிப்படைக் காரணிகளை முதலில் கண்டறித்து அதை சீராக்குவர். இதில் நோயை சரியாக்க முடியாவிட்டால், நிரந்தரத் தீர்வாக இக்கருவியை பயன்படுத்துவர். இக்கருவி “மின்கலங்களால்” (Battery) இயக்கப்படுகிறது. இக்கருவியை தேவைக்கேற்ப தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ உடலில் பொருத்திவிடுவர். தற்காலிக கருவி உடலின் வெளிப்புறம் அமைந்திருக்கும். அதிலிருந்து, மின் இணைப்பு இதயத்திற்கு கழுத்துச் சிரை மூலமோ, தொடைச் சிரை வழியோ செலுத்துவர். கருவியிலிருந்து புறப்படும் மின் தூண்டல் இதயத் துடிப்பைச் சீராக்கும். நிரந்தர சீர்மைக் கருவியை காரை எலும்பிற்கு (Clavicle) கீழ் உடலில் நிரந்தரமாக பொருத்திவிடுவர். ஒரு சிறிய அறுவை மருத்துவம் மூலம், தோலுக்கு அடியில் இக்கருவி பொருத்தப்படும். இதிலிருந்து, கழுத்துச் சிரை வழியே இதயத்திற்கு தொடர்பு உண்டாக்குவர். இக்கருவி ஒரு கடிகாரம் போல் இயங்கும். எத்தனை முறை இதயத்தை துடிக்க வைக்க வேண்டும் என்று இதில் முறைப் படுத்தப்பட்டிருக்கும். இதனால் இதயத்துடிப்பு மாறுபாட்டால், உடன் இக்கருவி இயங்கி, இதயத் துடிப்பைச் சீராக்கும். மின் தூண்டல் தொடர்ச்சியாக இக்கருவி செய்வதால், இதயம் சீராக இயங்கும், தேவைக்கேற்ப மின் தூண்டலை வெளியிலிருந்தே மாற்றியமைக்கலாம். ஒரு முறை பொருத்தப்படும் இக்கருவி குறைந்தது 10 ஆண்டுகள் நல்ல நிலையில் இயங்கும். இப்பொழுது கம்பியற்ற சீர்மைக் கருவிகள் வந்துவிட்டது. அறுவை மருத்துவமின்றியே இதை பொருத்த முடியும்.
இதயத் துடிப்பு கோளாறுகளை மருத்துவம் மூலம் முழுமையாகக் கட்டுப் படுத்தலாம். ஆரம்ப நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். நோய் முற்றிய பின்பும் இந்நோயை குணப்படுத்தாவிடில், மெதுவாக “இதயச் செயலிழப்பு” (Heart Failure) “இதயத் துடிப்பு முடக்கம்” (Cardiac Arrest) போன்ற நிலைகள் ஏற்படலாம்.
(தொடரும்...)
பதற்றம்: நான் ஒரு நிமிடம் பதறி விட்டேன் என நாமும் பலமுறை கூறியுள்ளோம். பலர் கூறவும் கேட்டுள்ளோம். பதற்றம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? காண்போமா? தேர்வு எழுதும் முன்போ, நேர்முகத் தேர்வுக்கோ, வேறு ஏதாவது காரணங்களால் பய உணர்வு தோன்றும் போதோ பதற்றம் ஏற்படுவதை நாம் அறிவோம். இது ஏன் நிகழ்கிறது என எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? நம் உடல் ஒரு முக்கிய நிகழ்வை எதிர்நோக்க நம்மை ஆயத்தப்படுத்துகிறது. இத்தனை நடுக்கத்தோடு ஒரு வேளையை தொடங்கும் பொழுது, ஏற்படும் பதற்றம், வேலையில் மூழ்கியதும் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து, நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம். இந்த பதற்றம் நம்மை எச்சரிக்கை செய்து, மேலும் சிறப்பாக பணியாற்றச் செய்கிறது. ஆனால் சிலரோ, தங்கள் கவலைகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே பதற்றமான நிலையில் இருப்பதை நாம் அறிவோம். அவர்களால் தினசரி பணிகளைக் கூட சரியாக செய்ய முடியாமல் இருப்பதையும் நாம் அறியலாம். இது “பதற்றக் குறைபாடு” என்ற நோயாக இருக்கலாம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பதற்றத்திற்கு ஆளாவதுண்டு. ஆனால் எதற்கெடுத்தாலும் பதற்றபடுவதும், பதற்றத்தோடு காலம் கழிப்பதும் ஆன நிலையில் உள்ளவர்கள் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பதற்றக் குறைப்பாட்டின் பொதுவான அறிகுறிகள்: வேகமான இதயத் துடிப்பு, மூச்சிறைத்தல், தசைகள் இறுக்கமாதல், மார்பு இறுகுதல், காரணம் சொல்ல முடியாத கவலைகளும், சமநிலையற்ற உணர்வும் தொடர்ந்து வருதல் தேவையற்ற செயல்களை எண்ணி, எண்ணி கவலைபடுதல் போன்றவை ஏற்படலாம்.
மருத்துவம்: பதற்ற குறைபாடு அறிகுறிகள் யாருக்காவது தொடர்ச்சியாக இருப்பது அறிந்தால் மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் நல்ல பலனைத் தரும். யோகாவும் சிறந்த முறையில் பயனளிக்கும்.
பதற்றக் குறைபாட்டின் காரணிகள்: குடும்ப வரலாறு, பணியிட அழுத்தம், அன்பிற்குரியவரின் திடீர் மரணம், தைராய்டு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்றவற்றால் கூட பதற்றக் குறைபாடு ஏற்படலாம். போதை பொருள்கள், மது போன்றவையும், சமூக பயம் ஆகியவையும் பதற்றக் குறைபாட்டை உண்டாக்கலாம்.
சென்ற (ஏப்ரல் 16 - மே 15) 2020 இதழில் 35ஆம் பக்க மருத்துவரின் நேர்காணலில் எம்.பி.பி.எஸ் எனத் தவறுதலாக வெளியிடப்பட்டது. அதனை எம்.டி.எஸ் என மாற்றிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக