வெள்ளி, 28 அக்டோபர், 2016

முழு உடல் பரிசோதனைகள் என்னென்ன?

நீரிழிவு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு ஒருவர் வந்திருந்தார். அவருடன் துணைக்கு வந்திருந்த நண்பரிடம், நீயும் பரிசோதித்துக் கொள் என்றார்.
நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஒரு நோயும் இருக்காது என நண்பர் மறுத்தார். என்றாலும்  வந்தவர் விடவில்லை. நண்பரைச் சம்மதிக்க வைத்து விட்டார். இருவருக்கும் பரிசோதனை முடிந்தது. நோய் ஏதாவது இருக்குமோ என்ற பதைபதைப்புடன் வந்த வருக்கு எல்லாமே நார்மல். மாறாக, உடன் வந்த நண்ப ருக்கு நீரிழிவு நோய், ரத்தக் கொழுப்பு, சிறுநீரகக் கற்கள் எனப் பல பிரச்சினைகள்.
முன்னெச்சரிக்கை அறிகுறிகளைச் சரியாக உணர்ந்து கொள்ளாத பலரும், தங்கள் உடலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றுதான் நம்புகிறார்கள். ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவை நம்மை அறியாமலேயே பல்வேறு நோய்களை உடலுக்குள் கொண்டுவந்து விடுகின்றன. உள்ளுக்குள் மறைந்துகொண்டிருக்கும் நோய் ஒரு நாளில் திடீரெனத் தாக்கும். அப்போது நோய் முற்றிய நிலையில் இருக்கும் என்பதுதான் சிக்கல். எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்த வரை நம்மில் பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர். நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்தஅழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலைச் சிரமப்படுத்து வதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே கண்டுபிடித்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் புத்தி சாலித்தனம். இதற்கு முழு உடல் பரிசோதனை உதவுகிறது.
கவனிக்க!
பொதுவாகச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை யோடு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூட்டுகள் என ஒவ்வோர் உறுப்புக்கும் தனிப்பட்ட சிறப்புப் பரிசோதனைகளும் உள்ளன.
ஆண்களுக்குப் பிரத்யேகமாகப் பி.எஸ்.ஏ. பரிசோ தனை, பெண்களுக்குப் பிரத்யேகமாகத் தைராய்டு பரிசோதனை, மமோகிராம் மற்றும் பாப் சிமியர் பரிசோதனை, முதியவர் களுக்குப் புற்றுநோய்க்கான டியூமர் மார்க்கர்ஸ் பரிசோதனை, குடல் புற்றுநோய்க் கான கொலோனோஸ்கோப்பி பரிசோதனை மற்றும் எலும்பு வலுவிழப்பு நோய்க்கான டெக்சா ஸ்கேன் , வைட்டமின் டி, கால்சியம் பரிசோதனைகள், மூட்டு வலிக்கான பரிசோதனைகள் செய்யப்படும்.
இப்போது புதிதாக டி.என்.ஏ. பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இவற்றைப் பயனாளி விரும்பினால் மட்டும் செய்து கொள்ளலாம். அல்லது முழு உடல் பரிசோதனையில் ஏதேனும் ஒரு உறுப்புக்குப் பிரச்சினை இருக்கிறது எனத் தெரிந்து, அந்த உறுப்புக்கான சிறப்புப் பரிசோதனை தேவைப்படுகிறது என்று மருத்துவர் பரிந்துரைத்தால் செய்துகொள்ளலாம்.
யாருக்கு அவசியம்?
குடும்ப வழியில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், பிறவிக் கோளாறுகள் போன்றவை இருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்த வர்கள் 20 வயதில் ஒருமுறை முழு உடல் பரி சோதனை செய்துகொள்வது நல்லது. அதற்குப் பிறகு தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைச் செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக 35 வயதைக் கடந்தவர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது.
புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், நோய்த் தடுப்பு மருந்துகள் அல்லது ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப் பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒருமுறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.
என்னென்ன நன்மைகள்?
பிரீ-டயபடிஸ் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயின் முந்தைய நிலையில் உள்ளவர்கள், இதன் மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம். அல்லது நோயைத் தள்ளிப்போடலாம்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், கருப்பை வாய் போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கிற நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.
பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கெனவே நோய் இருந்தால், நோயின் தன்மையை அறிந்து சிகிச்சையை மாற்றியமைத்து, உயிருக்குப் பாதுகாப்பு தர முடியும்.
புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்தி லேயே கண்டுபிடித்துவிட்டால் நோயைக் குணப்படுத்துவது குறித்து யோசிக்க முடியும்.
ஏற்கெனவே புற்றுநோய் இருந்தால், உடலில் மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.
பலரும் முழு உடல் பரிசோதனையை வீண் செலவு என்றுதான் நினைக்கின்றனர். அப்படியில்லை. ஆரோக்கியம் காக்க நீங்கள் செய்யும் முதலீடு இது. பிற்காலச் செலவைத் தடுக்கும் சேமிப்பும்கூட.
என்ன முன்னேற்பாடு?
காலையில் வெறும் வயிற்றில் பரிசோதிக்க வேண்டும்.
முடிவு தெரியக் குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப் படும்.
முன்பதிவு செய்துகொண்டு, எப்படி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பரிசோதனைக்குச் செல்வது நல்லது.
பரிசோதனைக்கு முன்பு அல்லது பின்பு மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும்.
மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்னென்ன பரிசோதனைகள்?
ரத்த அழுத்தப் பரிசோதனை
பொதுவான ரத்தப் பரிசோதனைகள் TC, DC, ESR
ரத்த வகை, ஆர்.ஹெச். வகை
ரத்தச் சர்க்கரை அளவு வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தும்
ரத்தக் கொழுப்புப் புரதங்கள் அளவு
ரத்த யூரியா அளவு
சீரம் கிரியேட்டினின் அளவு
ஹெச்பி.ஏ.ஒன்.சி. அளவு
சீரம் யூரிக் அமிலம் அளவு
ரத்த அயனிகள் பரிசோதனை
ஹெச்.ஐ.வி. பரிசோதனை
ட்ரெட் மில் பரிசோதனை
தைராய்டு சுரப்புப் பரிசோதனை
ஸ்பைரோமெட்ரி பரிசோதனை
கல்லீரலுக்கான பரிசோதனைகள்
பொதுவான சிறுநீர்ப் பரிசோதனைகள்
மலப் பரிசோதனை
மார்பு எக்ஸ்-ரே
இ.சி.ஜி.
எக்கோ
வயிறு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள்
மருத்துவ ஆலோசனை
உணவு மற்றும் வாழ்க்கைமுறை ஆலோசனைகள்
குறிப்பு: மேலே சொல்லப்பட்ட பரிசோதனைகள் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மருத்துவ மனைக்கு மருத்துவமனை வெவ்வேறு பெயர்களுக்கு மாறுவதும் உண்டு. விசாரித்துவிட்டுச் செல்வது நல்லது. அரசு மருத்துவமனைகளில் ரூ. 250-க்கு இது செய்யப் படுகிறது. ஆனால், அங்கே செய்யப்படும் பரிசோதனை களில் சில மட்டும் குறையலாம்.
-விடுதலை,12.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக