திங்கள், 10 அக்டோபர், 2016

இதயத் துடிப்புக் கோளாறுகள்


இதயம் ஒரு தசைக்கோளம்; தானாகவே துடிக்கும் தன்மையுள்ள சிறப்புத் தசைகளால் ஆனது. இதயத்தில் மேற்புறம்  இரண்டு; கீழ்ப்புறம் இரண்டு என மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. இதயத்தின் வலது பக்க அறைகளில் அசுத்த  ரத்தமும், இடது பக்க அறைகளில் சுத்த ரத்தமும் ஓடுகின்றன. இதற்கு இதயத்தின் இயக்கம் உதவுகிறது. அதாவது, மேலறைகள் சுருங்கும்போது கீழறைகள் விரிகின்றன; கீழறைகள் சுருங்கும்போது மேலறைகள் விரிகின்றன.
இப்படி ஒருமுறை இதயம் சுருங்கி விரிவதை இதயத் துடிப்பு  என்கிறோம். இப்படி ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் உடலிலிருந்து அசுத்த ரத்தத்தைப்  பெறுவதும், சுத்த ரத்தத்தை உடலுக்குத் தருவதுமாக இருக்கிறது இதயம். இது ஓய்வில்லாத சுழற்சியாக நிகழ்கிறது.  இதன் பலனால், நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எந்த நேரமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் உயிர்  வாழ்வதற்கு இந்தத் துடிப்பும் ரத்த சுழற்சியும் மிகவும் அவசியம்.
ஓர் இயந்திரம் இயங்கவேண்டுமானால், அதற்கு மின்சக்தி தேவைப்படுவதைப்போல, இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு  மின்னோட்டம் தேவைப்படுகிறது. அதை இதயமே தயாரித்துக் கொள்கிறது என்பதும் வியப்பே! இதயத்தின் வலது மேலறையில் சைனோ ஏட்ரியல் நோட்  என்று ஒரு இதயக் கணு  உள்ளது. இது ஏட்ரியோ வென்டிரிகுலர் நோட் மற்றும் ஹிஸ்-பர்கின்ஜி தசை  நார்க்கற்றைகள் ஆகியவற்றின் வழியாக இதயத் தசை களுடன்  பிணைக்கப்பட்டுள்ளது.
இக்கணுவில்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதுதான் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்த  மின்னோட்டமானது ஒரே சீராகவும், முறையான நேரப் படியும் இதயத்தசைகளுக்கு விநியோகிக்கப்படுவதால், இதயம்  ஒரே சீரான எண்ணிக்கையிலும் இயல்பான லயத்துடனும் துடிக்கிறது.
இதயத்தில் ஏற்படுகிற பிரச்னைகள் காரணமாகவோ, பிற நோய்களின் பாதிப்பினாலோ இந்த மின்னோட்ட உற் பத்தியில்  தடங்கல் ஏற்பட்டாலோ, அதிக அளவு மின்னோட்டம் உற்பத்தி ஆகிவிட்டாலோ, இதன் விநியோகத்தில் தவறு  நேர்ந்தாலோ, இதயத் துடிப்பில் மாற்றங்கள் உண்டாகும். அப்போது, துடிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்...  குறையலாம்... லயத்தில் வேறுபடலாம். இப்படி மாற்றம் காணும் இதயத் துடிப்பே `பிறழ்வுத் துடிப்பு.
தூண்டும் காரணிகள்
சில நோய்களும் நம் வாழ்க்கைமுறைகளும் இதயத்தில் பிறழ்வுத் துடிப்பு ஏற்படக் காரணிகளாக அமைகின்றன. அவை... 1. மாரடைப்பு 2. இதய வால்வு நோய்கள் 3. உயர் ரத்த அழுத்தம் 4. தைராய்டு மிகைச்சுரப்பு  அல்லது குறைச்சுரப்பு 5.  நீரிழிவு 6. இதயத்தசை நோய் 7. பிறவி இதயநோய்கள்
8. நுரையீரல் தமனி ரத்த உறைக்கட்டி 9. நுரையீரல் அழற்சி 10.  நுரையீரல் வெளியுறை அழற்சி நோய் 11. இதயக்கணு நோய். 12. முதுமை 13. பரம்பரை. 14.உடற்பருமன் 15. சில மருந்துகள் 16. புற்று நோய் 17 மிகை மது 18. அதிக காபி குடிப்பது 19. அயனிகளின் அளவு மாறுவது 20.  சுவாசத் தடை உறக்கம்.
பொதுவான அறிகுறிகள்
இதயத் துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாமல் இருக்கலாம். போகப்  போக, லேசாக தலை வலிக்கும். தலை சுற்றும். படபடப்பு வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். நெஞ்சு வலிக்கும். காரணம்  தெரியாமல் அதிகம் வியர்க்கும். சோர்வாகும். 
-விடுதலை,11.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக