மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (104)
மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்
கருவுறுதல் நிகழும்பொழுது அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சிலவோ மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம். கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம்.
இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் முதல் பருவ கருவுற்ற காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் குறைக்க உதவும்.
இரண்டாம் மூன்று மாதப் பருவம் (II Trimester) அறிகுறிகள்:
இரண்டாம் மூன்று மாதப் பருவம் அல்லது இரண்டாம் பருவம் என்பது கருவுற்ற 13 வாரம் தொடங்கி, 26வது வாரம் வரை இருக்கும் காலக் கட்டமாகும். முதல் பருவத்தில் உண்டான பல தொல்லைகள் குறையத் தொடங்கி முழுமையாகவே மறைந்து விடும். ஆரம்ப நிலையில் உண்டான களைப்பு குறைந்துவிடும். ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு மாறிவிடும். குமட்டல், சில நேரங்களில், சிலருக்கு உண்டாகும். வாந்தி போன்றவை நின்று விடும். ஆனால், வேறு சில அறிகுறிகள் தோன்றத் துவங்கும். அவற்றை இங்கு காண்போம்.
கருவுற்றலைப் பற்றிய சந்தேகம்:
இதுபோன்ற உணர்வு பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும். முதல் பருவத்தில் ஏற்பட்ட பல அறிகுறிகள் இரண்டாம் பருவத்தில் மறைந்துவிடும். பெரும்பாலான பெண்கள் எப்பொழுதும் இருப்பதுபோல் இயல்பான நிலைக்குத் திரும்பி விடுவர். குமட்டல் நின்று விடும், வாந்தி வராது. பசி எடுக்கும். களைப்பும், சோர்வும் மாறி கருவுற்ற பெண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவர். முதல் பருவத்தில் ஏற்பட்ட பல சங்கடங்கள், இரண்டாம் பருவத்தில் முற்றிலும் நின்று விடுவதால், கருவுற்ற நிலை பற்றி சந்தேகம்கூட பலருக்கு ஏற்படும். உங்கள் உடல் வாகுக்கேற்ப உடல் வீக்கம் (Bump) போன்றவை ஏற்படாமல் இருக்கும். விரைவிலேயே இரண்டாம் பருவத்தில் படபடப்பு (Flutters) ஏற்படும். இதுவே கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தும் அறிகுறியாக சில நேரங்களில் அமையும்.
இரண்டாம் பருவத்தில் கருப்பையில் குழந்தையும், பெண்களின் உடல் வளர்ச்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். பலருக்கு உடலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. இடுப்புப் பகுதியிலும், வயிற்றின் பக்கவாட்டிலும் இந்த வலி அதிகமாகத் தெரியும். கருப்பையின் விரிவாக்கத்தால், கருப்பையின் சுற்றுத் தசை நார்கள் (Round ligament), மற்ற தசை நார்கள் விரிவடைவதால் இந்த வலி உணர்வு ஏற்படும். படுக்கையிலிருந்தும், உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து வேகமாக எழுந்தாலும், தும்மும்பொழுதும், இருமும்பொழுதும் இந்த வலியைப் பெண்கள் அதிகம் உணரும் நிலை ஏற்படும். இது தவிர முதுகுவலி (Back Pain), இடுப்பு வலி (Hip pain), கால்களில் வலி போன்றவையும் ஏற்படக்கூடும். வெந்நீர் ஒத்தடம் இடுப்புப் பகுதியில் கொடுப்பதன் மூலம் இந்த வலியைக் குறைக்க முடியும். இடுப்புப் பட்டை (Hip support belt) பயன்-படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.
கவட்டையில் மின்னல் போன்ற உணர்வு (Lightning Crotch):
இரு தொடைகள் சேரும் இடத்தில் பிறப்புறுப்பில் இடிப்பது போன்ற ஒரு இனிமையான உணர்வு (Lightning Crotch) சில நொடிகள் தோன்றி மறையும். எந்த நேரத்திலும் இந்த உணர்வு தோன்றும். ஆனால், நீண்ட நேரம் இந்த உணர்வு இருக்காது. சில பெண்களுக்கு அடிக்கடி இந்த உணர்வு ஏற்படும். சிலருக்கு ஏதாவதொரு நேரத்தில் ஏற்படும்.
சிலருக்கு ஏற்படாமல்கூட இருக்கும். எதனால் இந்த உணர்வு ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. இடுப்புப் பட்டை பயன்பாடு இந்த உணர்வைக் குறைக்க உதவும். குழந்தை வளர்ச்சி கூடும்பொழுதும் அது திரும்பும்-பொழுதும், உதைக்கும்பொழுதும் இந்த உணர்வு அதிகரிக்கும்.
தலைச்சுற்றல் (Dizziness):
கருப்பையில் குழந்தை வளர்ச்சியடையும் பொழுது, இரத்தத்தின் அளவும், இரத்த அழுத்தமும் அடிக்கடி மாறுபடும் நிலை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும். இதனால் தலைச்சுற்றல், தலைபாரம், சில நேரங்களில் மயக்கம் கூட ஏற்படலாம். ஆனால், இது தற்காலிகமானது. சில நொடிகளிலிலே இயல்பு நிலைக்கு பெண்கள் திரும்பி விடுவர். இதற்காக அஞ்ச வேண்டியதில்லை.
அடிக்கடி உணவு எடுத்துக் கொள்வதும், அதிகளவு நீர்மப் பொருள்களை உட்கொள்வதன் மூலம், உடலின் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் தலைச்சுற்றல் ஏற்படும்பொழுது குளியல் கூட அதனைப் போக்கும். தலைச்-சுற்றல் சில நேரங்களில், லேசான மயக்கம் உண்டாக்கும் நிலை ஏற்படக் கூடுமாதலால், அருகில் துணை இருப்பது நலம்.
கரு நெளிவு உணர்தல் (Flutters – quickening):
20 முதல் 21 வாரங்களில், தாயின் உடல்நிலைக்கேற்பவும், கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடியின் (Placenta) அமைந்துள்ள நிலைக்கேற்பவும் கரு நெளிவதை (Flutters-quickening) தாயால் உணர முடியும். முதல் பேறு காலத்தில் இதை முதலில் எளிதாக உணர முடியாது. ஆனால், நாளடைவில் தெளிவாக உணர முடியும். இரண்டாம் பேறு காலத்தில் முன் அனுபவம் காரணமாக இதைத் தெளிவாக உணர முடியும். இந்தக் கருவின் நெளிவுகள் கருவுற்ற தாய்மார்களுக்கு ஓர் இன்பமான உணர்வைக் கொடுக்கும். நஞ்சுக் கொடி கருப்பையின் முன்புறம் அமைந்திருப்பின் கரு நெளிவு தெரிய நாளாகும். இயல்பான நிலையில் நஞ்சுக் கொடி இருப்பின் இந்த உணர்வை எளிதில் உணரலாம். நஞ்சுக் கொடி முன் பகுதி அமைப்பில் இவ்வுணர்வு லேசாகக் கூட தெரியலாம்.
ஆரம்ப நாள்களில் இந்த உணர்வு வண்ணத்துப் பூச்சி, சிறகடிக்கும் உணர்வு போன்று வயிற்றுப் பகுதியில் உணர முடியும். சில நேரங்களில் லேசான அரிப்பு உணர்வுபோல்கூட இந்த உணர்வு தோன்றும். ஓர் இனிமையான உணர்வு உண்டாக்கும் (குழந்தை) கருவின் நெளிவுகள் பற்றி கருவுற்ற பெண்கள் “குழந்தைத் துடிப்பு’’ தெரிவதாக மருத்துவரிடம் சொல்லுவார். குழந்தை வளர, வளர இந்தத் துடிப்பு அதிகமாகி வயிற்றில் இடிப்பது போலவும், உதைப்பது போலவும் தெரியும். கருவுற்ற பெண்களுக்கு, அதுவும் முதல் மகப்பேறென்றால், ஓர் இனிமையான மகிழ்ச்சி கலந்த பெருமித உணர்வை உண்டாக்கும்.
(தொடரும்…)