ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

மகப்பேறு (Pregnency ) - நவீன மருத்துவங்கள் (103)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (103)

2022 மருத்துவம் ஜூன் 16-30 2022

மகப்பேறு
(Pregnency )
மரு.இரா.கவுதமன்


முதல் பருவ (I Trimester) அறிகுறிகள்:
பெண்களின் மாதவிலக்கம் சுழற்சி சரியாக 28 நாள்களில் நிகழும். மிகச் சிலருக்கே இந்தச் சுழற்சி ஒழுங்கின்றி இருக்கும். அதேபோல் சுழற்சியின்பொழுது, அதிக அளவில் வயிற்று வலி, அதிக இரத்தப் போக்கு போன்றவையும் ஒரு சிலருக்கு இயல்பாகவே இருக்கும். இதுபோன்ற நிலைப்பாடு உள்ள பெண்களுக்கு மாதவிலக்கம் தள்ளிப்போவதால் கருவுறுதல் நிகழ்ந்துள்ளதா? என்பதைப் பற்றிக் குழப்பம் ஏற்படும். 28 நாள்கள் சுழற்சி ஒழுங்காக நிகழும் பெண்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்படாது. எப்படி இருந்தாலும் ‘கருவுறுதல் ஆய்வில்’ (Pregnency Test) கருவுற்றதை எளிதில் அறியலாம். எளிய சிறுநீர்ப் பரிசோதனை கருவுறுதல் நடந்துள்ளதை வெளிப்படுத்தும். அதேபோல் இரத்தப் பரிசோதனையிலும் கருவுறுதல் நிகழ்ந்ததை வெளிப்படுத்தும். கருவுற்ற சினை முட்டை, கருப்பையின் சுவரில் ஒட்டிக் கொண்டவுடன் ஹெச்.சி.ஜி (HCG) ஊக்கி நீர் இயல்பு நிலையைவிட ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் சுரக்கும்.
இந்த ஊக்கி நீர் சுரப்பு கருவுற்ற ஆறாம் நாள் முதல் அதிகரிக்கும். இரத்தப் பரிசோதனை மருத்துவ ஆய்வு மருத்துவமனையில்தான் செய்ய முடியும். சிறுநீர் ஆய்வு வீட்டில்கூட செய்து கொள்ளக்கூடிய எளிமையான ஆய்வு. கருவுற்ற ஆறாம் நாளிலிருந்தே (மாதவிலக்கு நின்ற 20ஆம் நாள்) இந்த ஆய்வின் மூலம் கருவுற்றதை அறிய முடியும். HCG சுரப்பு இரத்தத்திலும் இருக்கும். சிறுநீரிலும் வெளிப்படும். அதன் அளவை இரத்தத்தில் இருப்பதை வைத்தும், சிறுநீரில் வெளிப்-படுவதைக் கொண்டும் கருவுற்றதை எளிதில் அறியலாம். பொதுவாக மாதவிலக்கு நிகழாத நிலையில் இந்த ஆய்வுகள் செய்வதே சிறப்பானதாகும். கருவுறுதல் ஆய்வுப் பட்டை (Pregnancy Text Card) யில் ஒருசில துளிகள் அதற்குண்டான குழியில் விட்டால், அந்த ஆய்வுப் பட்டையில் உண்டாகும் கோடுகளை வைத்து கருவுற்றதை உறுதி செய்யலாம். இக்கோடுகள் ஒருசில நிமிடங்களிலே தென்படும். ஒருகோடு மட்டும் வந்தால் கருவுறுதல் நிகழவில்லை என்றும், இரண்டு கோடுகள் அந்தப் பட்டையில் வந்தால் கருவுற்றது உறுதி என்றும் அறியலாம்.

கருவுற்றதின் அறிகுறிகள்: (முதல் பருவம் – I Trimester)
* மாதவிலக்கம் நிற்றல்: உடல் உறவுக்குப் பின் இயல்பான நாள்களில் மாதவிலக்கம் வராதபொழுது, கருவுறுதல் நிகழ்ந்ததைச் சந்தேகிக்கலாம். ஒழுங்கான 28 நாள்கள் சுழற்சியில் இந்நிகழ்வை உறுதி செய்யலாம். ஒழுங்கற்ற மாதவிலக்கச் சூழ்நிலையில் இதை அறிவது கடினம்.
* கருவுற்ற உடன் சுரக்கின்ற ஊக்கி நீர்களால், மார்புகள் மென்மையாகும், லேசான வலி ஏற்படும். ஆனால், இந்த ஊக்கிநீர் சுரப்புகள் தொடர்ச்சியாகச் சுரக்கும்பொழுது, உடல் அதற்கு ஏற்ப மாறுதல்களால் மார்புகள் இயல்பு நிலையடையும்.
* குமட்டல், வாந்தி: ‘மசக்கை’ (Morning sickness) என நம் மக்களால் அழைக்கப்படும் இந்த அறிகுறியும் சருவுற்ற ஆரம்ப நாள்களிலேயே தெரிய ஆரம்பிக்கும். பகல், இரவு என பாகுபாடின்றி எந்த நேரத்திலும் ஏற்படும். பெரும்பாலான பெண்களுக்கு குமட்டல் மட்டுமே இருக்கும். பலருக்கு வாந்தியும் உண்டாகும். சில பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலேயும் இருக்க வாய்ப்புண்டு.
* கருவுற்ற காலத்தில் முதல் பருவத்திலேயே குமட்டலும், வாந்தியும் அதிகம் இருக்கும். நாளாக, நாளாக இது குறைந்துவிடும். இந்த அறிகுறிகள் எதனால் ஏற்படுகிறது, எதனால் குறைகிறது என்பதன் காரணத்தை அறிய முடியவில்லை. ஊக்கி நீர் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகள் இந்த நிலையை உண்டாக்கலாம் என்று நினைக்கப்படுகிறது. முதல் பருவத்தில் இயல்பாக எடுத்துக்-கொள்ளும் உணவுகளில் இருக்கும் ஆர்வம் குறைந்துவிடும். உணவைப் பற்றி நினைத்தா-லேகூட குமட்டலோ, வாந்தியோ வருகின்ற நிலைகூட பலருக்கு ஏற்படும். பல பெண்கள் அதுவரை அதிகம் விரும்பி உண்ணும் உணவைத் தவிர்த்து, அதிகம் பிடிக்காத உணவை விரும்பத் தொடங்குவர். பெரும்பாலான பெண்கள் புளிப்புச் சுவையுள்ள உணவுகளை, பழங்களை, காய்களை (மாங்காய்) விரும்பி, சுவைத்து உண்பர். சில பெண்கள் சாம்பல்; மண் போன்றவற்றைக்கூட விரும்பி உண்பதையும் பார்த்திருப்போம். இவை மட்டுமின்றி பல பெண்களுக்கு லேசான தலைசுற்றல் முதல் மயக்கம்கூட ஏற்படும். இதுபோன்ற குமட்டல், வாந்தி, உணவு உண்பதில் மாறுபாடு, தலைசுற்றல், மயக்கம் போன்ற பல அறிகுறிகள் முதல் பருவத்தில் தோன்றுவதையே ‘மசக்கை’ என்கிறோம்.

அதிகளவில் சிறுநீர் கழித்தல்: (Increased Urination)
* கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக சிறுநீர் கழிப்பதைவிட அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடும். கருவுற்ற காலங்களில் பெண்களின் உடலில் அதிகளவு இரத்தம் சுரக்கும். அதனால் உண்டாகும் அதிகளவு நீர்மம் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படும் நிலையால் அதிகளவு சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.
களைப்பு: உடல் சோர்வும், களைப்பும் முதல் பருவத்தில் அதிகம் தெரியும். மற்றொரு அறிகுறியாகும். தூக்க உணர்வும், சில பெண்களுக்கு ஏற்படும். இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. புரொஜெஸ்ட்ரான் ஊக்கி நீர் சுரப்பு இந்நிலைப்பாட்டிற்குக் காரணமாக இருக்கலாம்.
* மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் பெரும்-பாலான கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படுபவை. இது தவிர கருவுற்ற பெண்-களுக்கு மேலும் சில அறிகுறிகள் தோன்றலாம்.
அதிக அளவு சுரக்கும் ஊக்கி நீர்களால் பெண்களின் மன நிலையிலும் சில மாற்றங்கள் உண்டாகலாம். முதல் பருவத்தில் சில பெண்கள் அதிக அளவு உணர்ச்சி வயப்படுவார்கள். சிலருக்கு அழ வேண்டும் போல் உணர்வுகூட ஏற்படும்.

உடல் பருமன்: சில பெண்களுக்கு உடல் பருத்துவிட்டது போல் உணர்வு ஏற்படும். மாதவிலக்கு ஏற்படும் நேரங்களிலும் இதுபோன்ற உணர்வும் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும். அதேபோன்று இப்பொழுதும் தோன்றக் கூடும்.
* லேசான உதிரப் போக்கு: சில பெண்களுக்கு கருவுற்ற நேரத்தில் மாதவிலக்கு நின்று-விட்டாலும், மிக லேசான உதிரப்போக்கு திடீரென ஏற்படக் கூடும். 10 முதல் 14 நாள்களில் கருவுறுதல் நிகழ்ந்த பின் இது ஏற்படலாம். கருவுற்ற சினை முட்டை கருப்பையின் சுவரில் ஒட்டும்பொழுது இதுபோல் இரத்தக் கசிவு ஏற்படலாம். அதைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. மருத்துவ அறிவுரை பெற்று இரத்தக் கசிவைச் சீராக்கலாம்.
தசைப்பிடிப்பு: சில பெண்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படும். அதனால் பிடிப்பு ஏற்பட்ட தசைப் பகுதியில் வலி ஏற்படலாம். இத்தசைப் பிடிப்பு கருப்பையில்கூட ஏற்படலாம். மாதவிலக்கு ஏற்படும்பொழுது உண்டாகும் வலியைப்போல் (அவ்வளவிற்கு இல்லாவிட்டாலும்) லேசான வலி ஏற்படலாம்.

மூக்கடைப்பு: சில பெண்களுக்கு மூக்கில் இருந்து லேசான இரத்தக் கசிவும், மூக்கடைப்பும் ஏற்படும். கருவுறுதல் நிகழும்பொழுது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சில மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம்.
கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம்.
இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரை-கள் முதல் பருவ கருவுற்ற, காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் குறைக்க உதவும்.ஸீ
(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக