வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மிகு இரத்த அழுத்தம் (HYPERTENSION) - நவீன மருத்துவங்கள் (96)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (96)

மார்ச் 1-15 2022

மிகு இரத்த அழுத்தம்

(HYPERTENSION)

மரு.இரா.கவுதமன்

பேறுகால மிகு இரத்த அழுத்தம் (Preeclampsia):

பேறுகாலத்தில் திடீரென சில மகளிர்க்கு இரத்த அழுத்தம், எந்தக் காரணமும் இன்றி அதிகமாகிவிடும். பொதுவாகக் கருவுற்று, 20 வாரங்கள் கழிந்தாலும் இது ஏற்படலாம். பேறுகால கடைசி மூன்று மாதங்களில் (Trimester) இது ஏற்படக் கூடும். சில மகளிர்க்கு குழந்தை பிறந்த பின் ஏற்படலாம். “பேறுகால பின் மிகு இரத்த அழுத்தம்’’ (Post partum preeclampsia) என மருத்துவர் இதைக் குறிப்பிடுவர்.

நோயின் அறிகுறிகள்: 

மிகு இரத்த அழுத்தம் பல ஆண்டுகள் கூட எந்தவித அறிகுறிகளும் இன்றியே இருக்கும். பல நேரங்களில் உடல் பரிசோதனைகள் செய்யும்பொழுது மருத்துவர்களால் இது கண்டுபிடிக்கப்படும்.

*              சில நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். பெரும்பாலும் தலையின் பின்புறம் இந்த வலி ஏற்படும. காலை நேரத்தில் அதிகமாக நோயாளிகள் உணர்வர்.

*             தலை பாரம் சிலருக்கு உண்டாகும்.

*            தலைசுற்றல் (Vertigo)

*              காதில் (Tinnitus) இரைச்சல்.

*             காதில் ‘ஸ்ஸ்’ என்ற சத்தம்.

*              கண்களில் பார்வை மங்கல்.

*              சில நேரங்களில் மயக்கம்.

*             கண்களில் விழித்திரையில் பாதிப்பு உண்டாக்கும் நிலை.

*              கண்கள் குருடாகக் கூட போகும்.

*             மிகு இரத்த அழுத்தம் கண்களில் விழித்திரையில் உள்ள நுண்ணிய தந்துகிகளைத் திறந்துவிடும். இதனால் கண்களின் விழித்திரையில் இரத்தக் கசிவு ஏற்படும். இரத்தக் கசிவு அதிகமானால், கண்களின் உள்ளேயே சேர்ந்து, உறைந்து-விடும். அதனால், விழிலென்ஸின் வழி ஒளி ஊடுருவுவதில் தடை ஏற்பட்டு, பார்வை தெரியாத நிலை ஏற்படும். இதை “மிகு இரத்த அழுத்த விழித்திரை நோய்’’ (Hypertensive retinopathy) என்று கூறுவர். இதன் தீவிரத்தன்மை அய்ந்து நிலைகளாக வெளிப்-படும். முதல் நிலையையும், இரண்டாம் நிலையையும் வேறுபடுத்தி அறிதல் கடினம். நீண்ட நாள்கள் இருக்கும் மிகு இரத்த அழுத்தத்தால் இந்நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்: (Secondary hypertension)

*             இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம், வேறு நோய்களின் விளைவாக, ஏற்படும் மிகு இரத்த அழுத்தமாகும். அதனால் ஆரம்ப நோய்களின் அறிகுறிகளோடு, மிகு இரத்த அழுத்தமும் உண்டாகும். எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, நாளடை-வில் மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். நாள்பட்ட நீரிழிவு நோயில், இரத்தக் குழாய்களில், மாவுச்சத்து (Carbohydrates) படிதல், அதன் சுவர்களில் ஏற்படும். இது குறுகிய இரத்தக் குழாய்கள் வழியே இயல்பான அதே அளவு இரத்தம் செல்வதால் மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

*             ஊக்கி நீர் (Hormones) சமச்சீரின்மையும் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

*             தைராய்டு ஊக்கி நீர் அதிகம் சுரக்கும் பொழுது, அதிகம் பசி எடுக்கும். அதிகம் உணவு எடுத்தாலும் உடல் மெலியும். இதயத் துடிப்பு அதிகமாகும். முட்டைக் கண்கள் (Bulging Eyes) போன்ற தோற்றம் ஏற்படும். கைகள் நடுங்கும். சிறுநீரகத் தந்துகிகளில் அடைப்போ அல்லது குறுகலோ ஏற்படும். இதன் பக்க விளைவாக, இரண்டாம் நிலையில் மிகு இரத்த அழுத்தம் ஏற்படும்.

*              உடல் பருமன் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணம்.

*              அதிகக் கொழுப்புச் சத்து உணவுகள் இரத்தக் குழாய்களில் படிந்து அதன் பக்க விளைவாக மிகு இரத்த அழுத்தம் ஏற்படும்.

*              நீண்ட நாள் மிகு இரத்த அழுத்தம், சிறுநீரகத் தந்துகிகளில் பாதிப்பை உண்டாக்குவது போலவே மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களிலும் பாதிப்பு உண்டாக்கும். அந்தக் குழாய்களில் படியும் கொழுப்புப் படிவங்கள் இரத்தக் குழாய்களில் குறுகலோ (Narrowing) அடைப்போ அல்லது இரத்தக் குழாய்களில் உடைப்போ உண்டாக்கக்கூடும். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களிலோ குறுகல் ஏற்படும் நிலையில், கைகள் மதமதப்போ, உணர்வுக் குறைபாடோ, தளர்ச்சியோ (Weakness) ஏற்படலாம். அடைப்போ அல்லது உடைப்போ திடீரென்று ஏற்படக் கூடும். அதன் விளைவாக ‘பக்க வாதம்’ (Hemiplegia) ஏற்பட்டுவிடும். மிகவும் ஆபத்தான நிலை இது. மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும் பக்க வாதம், முகக் கோணல் (Facial Palsy) கை, கால் இயக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும். வலது கை பழக்கமுடை யோருக்கு ‘பேச்சு மய்யம்’ (Speech Centre) இடதுபுறமும், இடக்கை பழக்கமுடை யோருக்கு வலதுபுறமும் இருக்கும். மூளையின் இரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பு இடதுகைக்காரர்களுக்கு, வலதுபுறம் ஏற்பட்டால் பேச்சு போய்விடும். அதேபோல் வலதுகைக்காரர்களுக்கு, இடதுபுறம் ஏற்பட்டால் அவர்களும் பேச்சாற்றலை இழந்துவிடுவர். மிகு இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் மிக ஆபத்தான விளைவுகளில் பக்க வாதம் ஒன்று. திடீரென்று ஏற்படும் ஆபத்து இது.

*             மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டால் மண்டைக்குள் இரத்தக்  கசிவு (Cerebal Haemorrage) ஏற்படும். அதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து, மருத்துவம் செய்யாவிட்டால், இரத்தக் கசிவு தொடர்ந்து, மண்டை ஓட்டிற்குள் இரத்தம் தேங்கும். இது மென்மையான மூளைப்-பகுதியை அழுத்தி நோயாளியை ‘ஆழ் மயக்க’த்தில் (Coma) ஆழ்த்தி விடும். ஆழ் மயக்கம் (Coma) நிலை ஏற்பட்டு விட்டால், வலியோ, ஒலி (Sound), ஒளி (Light) ஆகியவற்றுக்கு எந்த எதிர்வினையும் காட்டாமை, தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையும், செயலையும் செய்ய முடியாமையையோ, முழுமையான மயக்க நிலையையோ உண்டாக்கி விடும். பல நேரங்களில் ஆழ் மயக்க நிலையிலிருந்து மீளாமலேயே நோயாளி மரணமடையவும் கூடும். (இதையே ‘மூளைச் சாவு’ என்று அழைக்கின்றனர்.)

*              மிகு இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் கொழுப்புப் படிவங்கள் இதயத் தமனியில் (Coronary Artery) படியும். இதனால் இதயத் தமனிகள் குறுகலடையும். இதயத் தமனி அளவில் மிகவும் சிறியவை. கொழுப்புப் படிவங்கள் நாளடைவில் அதிகமாகி இதயத் தமனி முழுவதும் படியலாம். இதன் விளைவாக திடீரென மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். பல நேரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களிலும் கொழுப்புப் படிவுகள் இருக்கும். மிகு இரத்த அழுத்தத்திற்குக் காரணமான இப்படிவுகள் இரத்த ஓட்டத்தின் விளைவாக, இரத்தக் குழாய் சுவர்களிலிருந்து பிய்த்துக் கொண்டு இரத்த ஓட்டத்தில் நகர்ந்து செல்லும். கொழுப்புப் படிவு சிறியதாக இல்லாமல் சற்று பருமனாகவோ, பெரியதாகவோ இருந்தால், அதன் அளவை விட சிறிய இரத்தக் குழாய் வழியே செல்லும்பொழுது, அதனை அடைத்துவிடும். அதனால் அந்தப் பகுதி இரத்த ஓட்டம் முழுமையாகத் தடைப்பட்டு, அங்குள்ள திசுக்கள் மரணித்துவிடும். இந்த படிவம் இதயத் தமனியை அடைத்துவிட்டால், மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் நிகழும். மிகு இரத்த அழுத்தம் பல காலம் வெளியே தெரியாமல் இருக்கும் நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் நிகழ ஒரு முக்கியக் காரணியாகி விடும் நிலை ஏற்படும்.

*             மிகு இரத்த அழுத்தம் நாளடைவில் உடலின் செயல்பாட்டிற்கு இன்றியமையாத உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகங்களில் பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக